கோபாலன் பெயரைச் சொன்னால்

நான்குபடி பால் கறக்குது ராமாரி

என்று பாடிய படியே, சிறீ கிருஷ்ணன் அவர்களது Happy Birthdayவுக்கு ‘புரட்சித் தலைவி’ வாழ்த்து தெரிவித்தாலும் தெரிவித்தார். அங்கே ஆரம்பமானது பிரச்சனை. பகவத்கீதை எங்களுக்கு ஏற்புடையது அல்ல. உலகப் பொதுமறை திருக்குறள்தான் எங்களுக்கானது என்றார் ‘கலைஞர்’.

அவ்வளவுதான்...
கண்ட்தேவி கோயில் தேரோட்டம்...
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை...
தமிழகத் கோயில்களில் தமிழ் வழிபாடு...

என்கிற விவாதங்கள் மேலெழும்போதெல்லாம் விடுப்பில் சென்று விடுகிற ‘வீரத்துறவி’ கர்ஜித்தபடி களத்தில் குதித்தார். அறிக்கை விட்டதோடு நின்றிருக்கலாம் தனது பரிவாரங்களோடு நேராகக் கோபாலபுரம் கிளம்பிப் போய் அங்குள்ள வேணுகோபால் சுவாமியிடம்.. ‘கடவுளே இந்தக் கருணாநிதிக்கு புத்திவர வையப்பா..’ எனச் சத்தம் போட்டுக் கும்பிட்டுவிட்டு ‘கலைஞர்’ வீட்டை நோக்கிப் படையெடுத்தார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான்.

Ramagopalan and Karunanidhiபல்லாயிரம் தலித்துகள் ஒன்று கூடி ஆர்ப்பரித்தாலோ பிற்படுத்தப்பட்டோரோ சிறுபான்மையின்ரோ இட ஒதுக்கிடு நியாயங்களுக்காகக் குரல் கொடுத்தாலோ..., தங்களது கண்களையும், காதுகளையும் இன்னபிற துவாரங்களையும் இறுக மூடிக்கொள்கிற பத்திரிகையாளர் வர்க்கம், கோயிலில் நின்று சத்தமாக முணுமுணுத்ததைக்கூடச் செய்தியாக்குகிறது என்றால் ‘வீரத்துறவியின் பெருமூச்சைச்கூட பிரசுரிக்காமல் சாகமாட்டார்களே’ என்பதுதான்.

‘கலைஞரிடம்’ இவர் பகவத்கீதையைக் கொடுக்க் எதிர்பாராத ‘கிளைமேக்ஸ்’ ஆக அவர் பதிலுக்கு ‘ஆசிரியர்’ வீரமணியின் ‘கீதையின் மறுபக்கம்’ நூலைக் கொடுக்க, வாங்கிக்கொண்டு வெளியில் வந்து ‘குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை கருணாநிதி’ என வள்ளுவரின் விருந்தோம்பலுக்கு விளக்கவுரை அளித்துவிட்டுப் போனார் ‘வீரத்துறவி’. மொத்தத்தில் நூல், பத்திரிகைகளில் இடம் பெற்றிருந்தால் விற்றிருக்கக் கூடிய பிரதிகளைவிட முப்பதாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்திருப்பதுதான் சுவாரசியமான செய்தி. சரி, இவைகளெல்லாம் கிடக்கட்டும் ஒரு புறம்...

‘புரட்சித் தலைவி’ ஒரு கருத்தைச் சொன்னால் ‘கலைஞர்’ அதற்கு ஒரு மாற்றைச் சொன்னார். இதில் ‘வீரத்துறவி’ வேறு வந்து குதித்தார். இவைகளை மொத்தமாகக் கிடப்பில் போட்டுவிட்டு.. மாற்றுக் கருத்து உள்ளவர்களிடமெல்லாம் மாற்றுக் கருத்து கொண்ட புத்தகங்களை நாம் அளிக்கலாமெனில் எத்தகைய புத்தகங்களை எவரெவரிடம் அளிக்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன்... அமெரிக்காவை அக்குவேறாக ஆணிவேராக அலசி ஆராய்கிற எழுத்தாளர் நோம் சோம்ஸ்கியின் Rogue states நூலை எடுத்துக்கொண்டு வெள்ளை மாளிகை வட்டாரங்களை அணுகி, ‘ஜார்ஜ் புஷ்ஷிடம் அளிக்க வந்திருக்கிறோம்’ என்பவருக்கு என்ன கதி ஏற்படும் என்பது அமெரிக்க பாணி ‘ஜனநாயகத்’தைப் புரிந்து கொண்டவர்களுக்குத் துல்லியமாகத் தெரியும்.

உலகம் முழுக்க உழைக்கும் மக்களின் வாழ்வுக்கு ‘உலை’ வைக்கிற உளவுத்துறையான சி.ஐ.ஏ.விலேயே பல ஆண்டுகள் (நாச) வேலை செய்து நொறுங்கிய மனதோடு அதைவிட்டு வெளியேறிய ‘பிலிப்அகி’யின் Inside the company என்கிற நூலோடு சி.ஐ.ஏ இயக்குநரைச் சந்திக்க நேரம் கேட்பவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் மட்டுமல்ல ‘சகல’ வசதிகளோடும்’ ஒரு விசாலமான அறை கிடைக்கக்கூடும். ஆனால். மனித உரிமைப் பேர்வழிகள் அதைச் ‘சிறை’ என்று அழைத்தால் அதற்கு நாம் என்ன செய்ய இயலும்?

ஈழ மக்களது இனப் படுகொலைகளை விளக்கும் எண்ணற்ற நூல்களுள் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டுபோய் பண்டாரநாயகாவின் புதல்வி சந்திரிகாவிடம் படிக்கச் சொல்லி அளிக்க முடியுமா? அளிக்கலாம் தாம். ஆனால்... அடுத்த ஆண்டு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தயாரிக்கும் நாடுகள் குறித்த ஆண்டறிக்கையில் ‘காணாமல் போனோர்’ பட்டியலில் நூல் கொடுப்பவரது எண்ணிக்கையையும் மற்றவர்கள் சேர்த்து வாசிக்க வேண்டியதுதான்.

அவ்வளவு ஏன்...

“மக்கள் கலை இலக்கியத் கழகத்தின் ‘காவி இருள்’ ஒலிநாடாவைப் போட்டுக் காட்டுகிறேன்” என்று காவல் துறையின் அனுமதியையும் வாங்கி... காஞ்சி மடத்தின் ஒப்புதலையும் பெற்று... உள்ளே நுழைந்துவிட முடியுமா எவராவது..?

பகவத்கீதை சரி...
பகவத் கீதை சரியில்லை...
திருக்குறள் சரி...
திருக்குறள் சரியில்லை...
புத்தகம் கொடுப்பது...
புத்தகம் வாங்குவது...

என்கிற எல்லாவற்றையும் தாண்டி இதனுள்ளே வேறு சில விஷயங்கள் ஒளிந்திருப்பதாகத்தான் கருதத் தோன்றுகிறது. நமது கேள்வியெல்லாம் ஒரு நூலோ அல்லது அந்த நூலுக்கு எதிரான மாற்றுக் கருத்தோ குறித்ததல்ல. காவல் துறையினருக்கு வெறுமனே ஒரு தகவலைச் சொல்லிவிட்டு முன்னாள் முதல்வர் ஒருவரது வீட்டுக்குள் ஒருவர் நெடுநெடுவென நுழைந்துவிட முடிகிறது என்றால் அது எதனால் சாத்தியமாகிறது என்பதுதான்.

இப்படி ‘கலைஞரும்’ தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு ‘விடுதலை’ ராசேந்திரனது ‘ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயம்’ நூலோடு ‘வீரத்துறவியின்’ வீட்டுக்குள் நுழைந்துவிட முடியுமா? நுழைந்தாலும் அவ்விடம் ‘தீட்டுப்பட்டு’ விட்டதற்கு என்ன பரிகாரம்? ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவர் சிறீரங்கம் கோயிலின் கருவறைக்குள் இப்படி நெடுநெடுவென நுழைந்துவிட முடியுமோ? அப்படி அறிவித்துவிட்டு சில ஆண்டுகளுக்கு முன் உள்ளே நுழைந்தவர்களுக்கு எத்தகைய ‘இரத்தினக்கம்பள வரவேற்பை’ அளித்தது காவல்துறை?

ஆக இங்கு பகவத்கீதை ஏற்பு - பகவத்கீதை மறுப்பு என்பதெல்லாம் பிரச்சனை அன்று.

ஒருவரது வீட்டுக்குள் ‘பிறப்பின் பால்’ பெற்ற ‘உரிமைகளோடு’ ஒருவர் அலட்சியமாக நுழைந்து விடுகிறதும்.. மற்றவர்கள் அவ்விதம் அப்படி எல்லா இடங்களிலும் நுழைந்துவிட முடியாமல் தடைபோடுகிற அணைகளாக ‘ஆகம’ நந்திகள் முன் நிற்கின்றன என்பதும் தான் பிரச்சனை.

இவை அனைத்தையும்விட- நூலை வாங்கியபடியும் நூலைக் கொடுத்தபடியும் புகைப்படத்தில் ஒரு சிரிப்பு சிரிக்கிறாரே ‘கலைஞர்’... அந்தச் சிரிப்புக்கு ‘அர்த்தம்’ என்னவாக இருக்கும்...?

முப்பதுகளில் மொழிப் போராட்டங்களில்... நாற்பதுகளில் திராவிட நாடு முழக்கங்களிலும்... கழித்த அந்த மனிதரது சிரிப்புக்கு என்ன அர்த்தம்?...

பள்ளிப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் உணர்வுகளோடு பங்கேற்ற போராட்டங்கள்... மூர்க்கத்தோடு எதிர்த்த சமூக அநீதிக் கோட்பாடுகள்... எல்லாம் இன்றைக்கு பன்றித் தொழுவ ஜனநாயகத்திற்குப் பலியாகிவிட்டதே என்கிற விரக்தியின் சிரிப்பாகக்கூட இருக்கலாம் அந்தச் சிரிப்பு.

- பாமரன் 

Pin It