சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அரசியல் சாசன பணிகள் மற்றும் நீதிபதி பணியின் செயல்பாடுகள் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் அனுப்பியுள்ளார். பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது மற்ற சமூகத்தினர் உருள விதிக்கப்பட்ட தடையை ஜி.ஆர்.சாமிநாதன் நீக்கியதை ஒட்டி, அவர்மீது நடவடிக்கைகோரி அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை:

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அரசியலமைப்பு தனக்கு தந்துள்ள அதிகாரங்களை பயன்படுத்தி வழங்கிய தீர்ப்பு என்பது நீதித் துறையின் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நோக்கங்களுடன் பொருந்திப் போகவில்லை.

gr swaminathan 359தலித் பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எஸ்.வேலுமணி அடங்கிய அமர்வு 28.04.2015ஆம் ஆண்டு ( வழக்கு எண் 7068/2015) தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதாவது, மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் வாழை இலைகள் மீது பக்தர்கள் உருளுவது என்பது மனித மாண்புக்கும், நாகரீக சமூகத்திற்கும் எதிரானது என்பதால் அதற்கு தடை விதித்தது.

இந்த சமயத்தில் கர்நாடகா மாநில அரசுக்கு எதிராக ஆதிவாசி புத்தகட்டு ஹிதராஷனா வேதிகே தொடுத்த வழக்கில் (வழக்கு எண் 33137/2014) உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவது பயனுள்ளது. பார்ப்பனர்கள் சாப்பிட்டு விட்டுச் சென்ற எச்சில் இலைகள் மீது மனிதர்களை உருள வைக்கும் ‘உருள சேவை’ நடைமுறை என்பது இந்திய அரசியலமைப்பில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கர்நாடகாவாக இருந்தாலும், வேறு எங்கு இருந்தாலும் விஞ்ஞான ரீதியிலான வளர்ச்சியை சீரழிக்கும் விதமான இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நீதித் துறை உத்தரவு இப்படி இருக்க, அந்த தீர்ப்புகளை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளியதோடு, பிறர் சாப்பிட்டு வைத்த எச்சில் இலைகளில் மற்றவர்கள் உருளலாம் என்ற நாகரீகமற்ற நடைமுறையை தனது தீர்ப்பின்மூலம் மீட்டெடுத்துள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், முற்போக்கான சமூக முன்னேற்றத்திற்கும் எதிரானது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனி நீதிபதியாக இருப்பதால், சமூக ஒழுங்கை பராமரிக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அதே விஷயத்தில், உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை புறந்தள்ளியுள்ளார். இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு செல்லாது என அறிவித்ததன் மூலம் ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித் துறை ஒழுக்கத்தையும் மீறியுள்ளார்.

உயர்நீதிமன்றம் போன்ற அரசியல் சாசன நீதிமன்றங்கள், மதப் பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் உணவு சாப்பிட்டு விட்டு எச்சில் இலைகளில் மனிதர்களை உருள வைப்பதை அடிப்படை உரிமை என்று கருதக் கூடாது. ஜி.ஆர்.சுவாமிநாதனின் இந்த நிலைப்பாடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மையான நோக்கத்திற்கும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கும் எதிரானது.

நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையே, இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டினை கட்டமைப்போம் என்றுதான் தொடங்குகிறது. அதாவது, நம் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் எண்ணம் என்னவென்றால், ‘அறிவியல் மனப்பான்மை, இறையாண்மை, சோசலிசம், மதச் சார்பின்மை மற்றும் மக்களாட்சி முறை கொண்ட குடியரசாக இந்தியாவை உருவாக்க வேண்டும்’ என்பதுதான். ஆனால், ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புகளின் மதிப்புகளையே குறைப்பது போல உள்ளது.

சாதி, மத வேறுபாடுகள் அடிப்படையில் ஒற்றைச் சார்பு ஆதரவு நிலை எடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்துள்ள பல தீர்ப்புகளில் இதுவும் ஒன்று. ஆகவே, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர்நீதிமன்ற நீதிபதியாக, குறிப்பாக தமிழ்நாட்டு உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக நீடிப்பது ஏற்புடையது அல்ல.

அதுபோலவே, எதிர் தரப்பினர் பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு கூட வாய்ப்பு அளிக்காமல், அதுவும் ஓரிரு நாட்களில் தேவையற்ற அவசரத்துடன் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். உங்களின் உடனடி நடவடிக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மூலம் நீதித் துறை சீரழிவதை தடுப்பதை உறுதி செய்யும்.

ஆதாரங்கள் : சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் 17.05.2024 தேதியிட்ட W.P(MD) 10496/2024 மனு மீது பிறப்பித்த உத்தரவுகள்.

Pin It