நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜகவே மீண்டும் உருவெடுத்திருந்தாலும், அந்த கட்சி பெற்றிருக்கிற பின்னடைவு மிகப்பெரியது. பாஜகவின் இந்த பின்னடைவு குறித்து ‘ஆர்கனைசர்’ இதழில் சுட்டிக் காட்டியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ரத்தன் சாரதா, “400 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறிக் கொண்டிருந்த பாஜக தலைவர்கள் - தொண்டர்களுக்கு கள உண்மை என்ன என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது தேர்தல் முடிவுகள். எதிர்க்கட்சிகளின் தைரியத்தை பாஜகவினர் உணராமல், கருத்துக்கணிப்பு மாயையில் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். மோடியின் புகழை மட்டும் ரசித்துக் கொண்டு, களத்தில் ஒலிக்கும் குரல்களை காது கொடுத்துக் கேட்காமல் விட்டுவிட்டனர். கூட்டணி விவகாரங்களில் எடுத்த தவறான முடிவால், பாஜகவின் மதிப்பு குறைந்து விட்டது” என்று கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்.

ராமர் கோயிலை முன்வைத்து 30 ஆண்டு காலமாக பாஜக முன்னெடுத்து வந்த கலவர அரசியல் காலாவதியாகிவிட்டது. மோடி பிம்பமும் மக்களிடம் எடுபடவில்லை என்ற நிலையில், பாஜகவின் கட்டமைப்பிலேயே மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்பதே ஆர்.எஸ்.எஸ். கண்டனத்தின் உள்நோக்கமாக இருக்கிறது. வட இந்தியாவிலேயே எடுபடாமல் போன இந்த கலவர அரசியலை, தமிழ்நாட்டில் முன்னெடுக்க வேண்டுமென்று பேசி சிறைக்குச் சென்றிருக்கிறார் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவரான ‘உடையார்’ என்பவர். அண்ணாமலை தலைமையில் பாஜக மிகப் பெரிய அளவுக்கு வளர்ந்து விட்டதாக வெற்றுத் தோற்றத்தை ஏற்படுத்தி, ஊடகங்களையும் அதையே பேச வைத்து தேர்தலை சந்தித்தாலும் மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 11 தொகுதிகளில் வைப்புத்தொகையை கூட பெறாமல் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்த விரக்தியில் பேசியிருக்கும் உடையார், “கலவரம் செய்தால்தான் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியும்” என்று கூறியிருக்கிறார். நெல்லையைச் சேர்ந்த பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வனுடன் தொலைபேசியில் பேசிய இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி இப்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருக்கிறார் உடையார். இப்படி பேசியதற்காக, இந்து மக்கள் கட்சியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். உத்தரப் பிரதேசத்திலும், அரியானாவிலும் இப்படிப் பேசியிருந்தால் அவர் மீது வழக்குப்பதிவு கூட நடந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இது தமிழ்நாடு. பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளால், திராவிட இயக்கத்தின் அரசியல் எழுச்சியால் பக்குவப்பட்ட மண். இங்கே கலவர சிந்தனைகளுக்கு மக்களும், ஆட்சியாளர்களும் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.

உடையாரின் பேச்சு, தனியொரு நபரின் கருத்து என்ற அளவில் சுருக்கப்பார்க்கப் பட வேண்டியதல்ல. அது ஒரு சித்தாந்தத்தின் சிந்தனை வெளிப்பாடு. கடந்த 3 ஆண்டுகளாக அண்ணாமலை தலைமையிலான பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் அந்த சிந்தனையை ஒட்டித்தான் இருந்திருக்கிறது. 2022ஆம் ஆண்டு தஞ்சையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தின் கட்டாய மதமாற்ற நெருக்கடி இருப்பதாகக் கூறி பெரும் கலவரத்தை தூண்டிவிட இந்துத்துவ அமைப்புகள் திட்டமிட்டன. ஆனால் மக்கள் அப்போதே அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. விசாரணையின் முடிவில் மதமாற்ற முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை என்பது உறுதியானது. 2023ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் இராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை, மிகப்பெரிய சட்டம்- ஒழுங்கு சிக்கல் போல மாற்றி தேசிய அவிலான விவாதமாக்கியது பாஜக. ஆனால் குடும்பப் பிரச்னையால் கொலை செய்யப்பட்டவருக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டுக்கும் என்ன தொடர்பு என்று, மக்கள் பாஜகவின் மலிவு அரசியலை புறந்தள்ளினார்கள்.

ஆளுநர் மாளிகை முன்பு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதை தீவிரவாத செயல் போல ஆளுநர் ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் சித்தரித்தார்கள். ஏற்கெனவே கருக்கா வினோத் சிறையில் இருந்தபோது, அவரை பிணையில் எடுத்ததே பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்தான் என்ற உண்மை தெரிய வந்தது. இப்படி கடந்த 3 ஆண்டுகளாகவே பாஜகவின் முயற்சிகள் அனைத்தின் பின்னணியிலும் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து, வீண் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் அரசியல் பலனைப் பெற வேண்டுமென்பதாகவே இருந்தது. ஆனால் மதத்தையும், அரசியலையும் ஒன்றாகக் கலக்காமல், பக்தியின் பெயரால் மதவாதத்தை திணித்துக் கொள்ளாமல் தெளிவோடு சிந்திக்கிற மக்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அதனால் பாஜகவின் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் தொடக்க நிலையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டன.

எனவே பாஜக கடந்த 3 ஆண்டுகளாக எதை முயற்சித்துக் கொண்டிருந்ததோ, அதைத்தான் இப்போது உடையார் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். பாஜகவின் சாதிய- மதவாத- சனாதன கலவரக் கொள்கைகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றி பெறாது என்பதை இந்துத்துவவாதிகள் இனியாவது உணர வேண்டும். இங்கே பெரியாரின் சமத்துவம் - சம உரிமை என்ற கல(ழ)கக் கொள்கையே வெற்றி பெறும். தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன.

- விடுதலை இராசேந்திரன்

Pin It