நடைபெற்று முடிந்திருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் ஆணவத்தையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துராஷ்டிரக் கனவையும் அடித்து நொறுக்கியிருக்கிறது. “கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை, மோடி கடவுளின் அவதாரம், கடவுளுக்கு தோல்வி ஏது” என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த இந்துத்துவவாதிகளை, ஆட்சியமைக்க அல்லல்படும் நிலைக்கு மக்கள் தள்ளியிருக்கிறார்கள். நானுறு தொகுதிகளுக்கு மேல் மிக எளிதாக வென்று விடலாம் என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அதுதான் மக்களின் தீர்ப்பு என்பதைப் போல பெரும்பாலான ஊடகங்களையும் பேச வைத்தது பாஜக. ஆனால் பாஜக வென்றிருப்பதோ வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான மதவாத வெறுப்புப் பேச்சை நீக்கிவிட்டால் மோடியின் பரப்புரையில் வேறெதுவுமே இருக்கவில்லை. இதன்மூலம் பெரும்பான்மை இந்துக்களை அணிதிரட்டி, அவர்களின் வாக்குகளை அறுவடை செய்து விடலாம் என்பது பாஜகவின் கனவு. ஆனால் மக்கள் அந்த கனவில் மண்ணைத் தூவி பாஜகவை பெரும்பான்மை இல்லாமல் செய்து விட்டார்கள். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டுவது என்ற சபதமெடுத்தது போல செயல்பட்டவர்கள், இப்போது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்காக மாநிலக் கட்சிகளின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்டிவிட்டு அந்த இடத்தில் மனுசாஸ்திரத்தை வைத்து நிரப்ப முயற்சித்தவர்கள், இனி ஒவ்வொரு சட்டத்தை திருத்தும்போதும் மாநிலக் கட்சிகளின் தயவுக்காக ஏங்கி நிற்கும் நிலையில் இருக்கிறார்கள்.

கலவரத்தால் மணிப்பூரை சிதைத்த பாஜகவை மெய்தி மக்களும், குக்கி மக்களும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டார்கள். மீண்டும் வெற்றி பெற்று வரும்போது, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவோம் என்பதை மாபெரும் இலட்சியமாக கூறினார்கள். “உ.பி.-யில் மட்டுமே 200 தொகுதிகளை உருவாக்குவோம், வரும் காலங்களில் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பெரும்பான்மை இடங்கள் கிடைத்துவிடும்” என்றெல்லாம் பாஜகவினர் பேசினார்கள். ஆனால் உத்தரப் பிரதேச மக்களே பாஜகவின் இத்தகைய ஆணவப் போக்கை விரும்பவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல், மக்களவைத் தொகுதிகளை உயர்த்துவது முக்கியமில்லை என்று உ.பி. மக்கள் பாஜகவுக்கு தோல்வியைப் பரிசாகக் கொடுத்து விட்டார்கள்.

வெற்றி பெற்றால் ராமர் கோயிலுக்கு அழைத்துச்செல்வோம் என்று கூறியே நாடு முழுக்க வாக்கு சேகரித்தார்கள். கடைசியில் அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே ராமர் அவர்களை கைவிட்டுவிட்டார். சமூகநீதியைப் பேசும் சமாஜ்வாதிதான் அங்கு வெற்றி பெற்றிருக்கிறது. அந்த விரக்தியில் தேர்தல் முடிந்தவுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வழக்கமான முழக்கத்திற்குப் பதிலாக ‘ஜெய் ஜெகநாத்’ எனக் கூறியிருக்கிறார் நரேந்திர மோடி. ஒடிசாவில் உள்ள புரி ஜெகநாநர் கோயில் கருவூல சாவியை தமிழ்நாட்டிற்கு திருடிச் சென்று விட்டார்கள் என்று பரப்புரையில் மோடி பேசி, இப்போது அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பாஜக. எனவேதான் இப்போது ராமரை கைவிட்டுவிட்டு, ஜெகநாதரை துணைக்கு அழைத்திருக்கிறார் மோடி. அடுத்த தேர்தலில் ஜெகநாதரும் கைவிட்டு விட்டால், வேறு கடவுளைத்தான் தேட வேண்டியிருக்கும்.

அய்தராபாத்தில் பாஜக வேட்பாளர் மாதவி, பரப்புரையின்போது மசூதியை நோக்கி அம்பு எய்வது போல செய்துகாட்டினார். அனுமதிபெறாமல் ராம நவமி பேரணி நடத்தினார். வாக்குப்பதிவு நாளன்று வாக்களிக்கச் சென்ற இசுலாமிய பெண்களிடம் ஹிஜாப்பை கழட்டச் சொல்லி அடாவடியில் ஈடுபட்டார். 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாதவியை தோற்கடிக்கச் செய்திருக்கிறார்கள் மக்கள். அதேபோல தமிழ்நாட்டிலும் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா வெற்றி பெற வேண்டுமென்று அவரது கணவர் சரத்குமார் அங்கபிரதட்சனம் செய்தார். அதே தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வெற்றி பெற வேண்டுமென்று அவரது தாய் பிரேமலதா விஜயகாந்த் தியானம் செய்தார். இருவரில் யாரை வெற்றி பெறச் செய்வது என்று கடவுளே குழம்பிவிட்டார் போல. கடைசியில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி பெற்று விட்டார்.

திமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெல்லாது என்றெல்லாம் பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விட்டார். ஆனால் நாற்பது தொகுதிகளிலும் பாஜகவும், அதிமுகவும் மண்ணைக் கவ்வியிருக்கிறது. பாஜக உடனான கூட்டணியை முறித்து விட்டால் மட்டும் மக்கள் நம்பிவிட மாட்டார்கள், பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிராக வலுவாகச் செயல்பட்டால் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு இத்தேர்தல் முடிவுகள் நன்கு உணர்த்தியிருக்கிறது. மதவாதத்திற்கு எதிரான, சமூகநீதியைக் காக்கிற அரசியல் மட்டுமே தமிழ்நாட்டில் எடுபடும் என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. தமிழ்நாட்டின் இந்த சூத்திரத்தைப் பின்பற்றி, இந்தியா கூட்டணியும் முன்னேறியிருக்கிறது. பாஜக வீழ்த்த முடியாத கட்சியும் இல்லை, இந்துத்துவம் வீழ்த்த முடியாத சித்தாந்தமும் இல்லை என்பதே தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி.

முழுமையாக வீழ்த்தப்படாவிட்டாலும், பல் பிடுங்கப்பட்ட பாம்பின் நிலையில் பாஜக இருக்கிறது. இந்த வெற்றிகரமான தோல்வி பாஜகவுக்கு பாடமாக அமையட்டும். பன்முகத் தன்மையை, கூட்டாட்சியை சிதைக்கிற சிறு முயற்சி கூட, பாஜகவின் அரசியல் அதிகாரக் கனவை தகர்த்துவிடும் என்பதை உணர வேண்டும். இத்தகைய நெருக்கடி நிலைக்கு பாஜகவை தள்ளி, அரசியலமைப்புச் சட்டத்தை காக்க உறுதியோடு களத்தில் நின்ற ஜனநாயக சக்திகளின் பணிகள் தொடரட்டும்.

விடுதலை இராசேந்திரன்