அமெரிக்காவில் ‘ஹவ் டி மோடி’ என்றால், இந்தியாவில் ‘நமஸ்தே ட்ரம்ப்’. இருவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அமெரிக்காவில் அவரும், இந்தியாவில் இவரும் இந்தியர்களை நசுக்குகின்றனர் என்பதுதான் அது!

trump modi 600ஒருவரை ஒருவர் போற்றிப் புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் வேளையில், தன் பேச்சுக்கிடையில் ட்ரம்ப் ஒன்றைக் குறிப்பிடுகிறார். "இந்தியாவும், அமெரிக்காவும் இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்" என்கிறார் ட்ரம்ப். 

மத அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தி, ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அழிப்பதற்கு இருவரும் முடிவெடுத்து விட்டனர் என்பதையே இது காட்டுகின்றது. தீவிரவாதத்திற்கும், மதத்திற்கும் என்ன தொடர்பு? எந்த மதத்தில் தீவிரவாதம் இல்லை? ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறிவைக்கின்றனர்? 

இப்படி வெளிப்படையாக மத வெறி அரசியல் குஜராத்தில் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான், தில்லியில் மக்களின் மீது ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 

தில்லியில் ஷாஹின் பாக் என்னுமிடத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர், அந்தப் போராட்டம் இன்று நாடு முழுவதும் பரவிக் கொண்டுள்ளது. அது குறித்து மக்களை அழைத்துப் பேசாமல், "உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நீங்கள் எதிர்த்துப் பாருங்கள்" (Oppose as much as you can) என்கிறார் அமித்ஷா. எவ்வளவு ஆணவம்! 

நேற்று தில்லியில், ஜாபராபாத் என்னும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக, பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா (அந்த ஊர் ஹெச். ராஜா போலிருக்கிறது) என்பவரின் தலைமையில் ஒரு கும்பல் சிஏஏ ஆதரவுப் போராட்டம் நடத்தியுள்ளது. (ஆதரவுக்கு ஏன் போராட்டம்!) அப்போது அங்கு ஏற்பட்ட மோதலைத் தடுப்பதாகச் சொல்லி அங்குவந்த காவல்துறை, தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. ஒரு காவலர் உள்பட ஐவர் இறந்து விட்டனர். 

இங்கே இரண்டு செய்திகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் படு பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், அது குறித்துக் கவலைப்படாமல், மதத்தின் பெயரால் மக்களை ஒடுக்கும் வேலையை அரசு செய்து வருகின்றது. இன்னொன்று, இஸ்லாமிய மக்களைத் தனிமைப்படுத்த முயல்கிறது. 

இது இஸ்லாமிய மக்களின் போராட்டம் அன்று. மதச் சார்பின்மையை ஆதரிக்கும் ஒவ்வொருவரின் போராட்டமும் ஆகும். ஈழத்தமிழருக்கான குடியுரிமைப் போராட்டமும் ஆகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு எதிரான போராட்டமும் ஆகும்! 

மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, 2 கோடிப் பேர்களிடம் கையொப்பம் பெற்ற திமுக தலைமையிலான கூட்டணியும், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் பேரணியைத் திருச்சியில் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பாராட்டிற்குரியன. 

இஸ்லாமியர்களும், ஈழத்தமிழர்களும் நம் ரத்தம், நம் உறவு, நம் சொந்தச் சகோதரர்கள். ஆரியப் பார்ப்பனர்கள் மட்டுமே நமக்கு அந்நியர்கள்!

Pin It