தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத் துறையை ஒழிப்பது தான் முதல் வேலை என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறியுள்ளார். இந்த பேச்சை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்து சமய அறநிலையத் துறையை ஒழிப்பது என்ற பேச்சு, கோவில் சொத்துக்களை தனிநபர்கள் கொள்ளை யடிக்கவே உதவி செய்யும் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுகுறித்து ஆன்மீகப் பேச்சாளரும் அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினருமான சுகி சிவம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகி விடுவார். சித்தப்பா பெண்ணை எப்படி கல்யாணம் முடிப்பது என்று ஒருவன் கேட்டால் எவ்வளவு குழந்தைத்தனமாக இருக்குமோ, அவ்வளவு குழந்தைத்தனமானது பாஜக அண்ணாமலையின் பேச்சு. பாஜக ஆட்சிக்கு வந்தால் என்று அவர் கூறுவது கற்பனையின் உச்சம்.

sugi sivamபாண்டிச்சேரி கூட்டணி அரசில் யார் இருக்கிறார்கள்? அங்குள்ள திருநள்ளாறு கோவில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? முதல்வர் ரங்கசாமி கூட்டணி அரசில்தானே பாஜக உள்ளது. எனவே முதல்வர் ரங்கசாமி இந்துக் கோவில்களை இந்துக்களிடமே விட்டுக் கொடுத்து விட்டு, திருநள்ளாறு கோவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்று பாஜக அறிக்கை வெளியிடுங்களேன். உங்கள் இலட்சியம் நிறைவேறட்டுமே. பாஜக ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநிலத்தில் அரசு அதிகாரிகள் கோவில் நிர்வாக அதிகாரிகளாக இருக்கிறார்களா? இல்லையா? சொல்லுங்கள். கர்நாடகாவிலும் பாண்டிச்சேரியிலும் இந்து சமய அறநிலையத் துறை இருக்கிற போது, அங்கு சென்று பாஜகவினர் போராட்டம் நடத்துங்களேன். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்து சமய அறநிலையத் துறை இருக்கிறபோது,தமிழ்நாட்டில் மட்டும் இருக்கக் கூடாது என்று சொல்வது ஏன்?

இந்து சமய அற நிலையத்துறை எப்போது உண்டானது? எதனால் உண்டானது? இதனை முன் மொழிந்தவர்கள் யார் என்ற வரலாற்றை சரியாகப் படித்திருந்தால், இன்றைக்கு அப்படி பேசியிருக்க முடியாது. கோவில்களில் அரசு தலையிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்தால், முதலில் எழும் கேள்வி என்பது கோவில்களை யாரிடம் ஒப்படைப்பது? இந்து கோவில்களில் துணை ஆணையர், கூடுதல் ஆணையர் என்று அதிகாரிகளை நியமித்து அரசு, கோவில்களை நிர்வகித்து வருகிறது. இந்தக் கோவில்களை யாரிடம் திருப்பிக் கொடுக்கப் போகிறார்கள்? கோவில் குருக்களிடமா? சிப்பந்திகளிடமா? ஊரில் உள்ள பணக்காரர்களிடமா? கோவிலுக்கு நன்கொடை கொடுத்தவர்களைக் கொண்டு ஒரு கமிட்டி அமைத்து அவர்களிடம் கோவில்களை கொடுக்கப் போகிறார்களா? வாய்க்கு வந்தபடி பேசுவது சுலபம். ஆனால் நடைமுறையில் கோவிலை யார் நிர்வகிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

இந்து சமய அறநிலையத் துறையைக் கொண்டு வந்தவர் நாத்திகர் அல்ல. இன்னும் சொல்லப் போனால் நாத்திகர்கள் இயக்கம் மீது கோபம் கொண்ட, முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்தான் இதனை கொண்டு வந்தார். இந்த தகவல் எத்தனைப் பேருக்குத் தெரியும்? கோவில் சொத்துக்களை முதன் முதலில் தனியாரிடம் மாற்றிக் கொடுத்தவர்கள் ஆத்திகர்கள் தான்; நாத்திகர்கள் அல்ல. கோவிலுக்கு மற்றவர்களால் இனாமாக வழங்கப்பட்ட நிலங்களை தவறாகப் பயன்படுத்தியது யார் என்பதை அறிய, கடந்த 200 வருட ஆவணங்களை எடுத்துப் பாருங்கள். நிறைய வழக்குகளை படித்துப் பார்த்த பிறகு இந்த முடிவுக்கு வருகிறேன்.

கோவில் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியது தெரிந்து தான், அதுகுறித்து அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சட்டமன்றத்தில் பேசினார். அதிக தவறுகள் நடந்த பிறகு தான் கோவில் சொத்துக்களை அரசு காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவானது. கோவில் நிர்வாகத்தில் தவறுகள் நடந்தால் அதை சுட்டிக்காட்டி வெளிக்கொண்டு வந்து, சரி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, கோவில்களை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்று பேசுவது முறையானது அல்ல.

திருமலை நாயக்கர் கட்டிய கோவிலை யாரிடம் கொடுக்கப் போகிறீர்கள்? சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கட்டிய கோவிலை இன்று யாரிடம் கொடுக்கப் போகிறீர்கள்? கோவிலை தனியாரிடம் கொடுங்கள் என்ற வாதமே, உணர்வை தூண்டுவதற்கான, வெறியை தூண்டுவதற்கான வார்த்தையே. இது சரியான தீர்வு அல்ல.

திருவண்ணாமலை தீபத்திரு விழாவிற்கு வந்தவர்கள் 32 லட்சம் பேர். இவர்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தது அரசுதான். கோவில் அரசு கட்டுப் பாட்டில் உள்ளதால்தான் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் இவ்வளவு மக்கள் வந்து செல்ல முடிகிறது. இதுவே கோவில் தனியாரிடம் இருந்தால் இதைச் செய்ய முடியுமா? எதையாவது பிரச்சனையை கிளப்பி சண்டை போட நினைக்கிறவர்கள்தான் கோவிலை தனியாரிடம் ஒப்படையுங்கள் என்று பேசுகிறார்கள்.

இந்து சமய அறநிலையத் துறையின் 50 ஆண்டு கால வரலாறு தெரிந்தவர்கள் இப்படி பேச மாட்டார்கள். 

- சுகி.சிவம்

Pin It