சித்தராமய்யா கருநாடக முதல்வராக இருந்தபோது மூட நம்பிக்கைகளைத் தடை செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். ‘பேய் ஓட்டுதல்’ ‘பில்லி சூன்யம்’ என்ற பெயரில் ஏமாற்றுதல், தண்டனைக்குரிய குற்றம் என்று அந்தச் சட்டம் கூறியது. ஆனால் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். இந்து மதத்துக்கு எதிரானது என்று கூச்சல் போட்டார்கள். இப்போது இரு நாட்களுக்கு முன் கருநாடகாவில் எடியூரப்பா தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது மூடநம்பிக்கை ஒழிப்பு இந்து விரோதமாக இருந்தது. இப்போது ஆளும் கட்சியான பிறகு இந்து ஆதரவாகி விட்டதுபோலும். எப்படி இருந்தாலும் பா.ஜ.க.வின் ஒப்புதலை நாம் வரவேற்கிறோம்.

இதே கருநாடக மாநிலத்தில் உள்ள குக்கி சுப்ரமணியசாமி கோயிலில் ‘மடேஸ் நானா’ என்ற ஒரு சடங்கு 500 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. பார்ப்பனர்கள் சாப்பிட்டு விட்டு வீசி எறிந்த எச்சில் இலைகளில் மிச்சம் மீதியிருப்பதை, தலித் மற்றும் பழங்குடி மக்கள் சாப்பிட்டு விட்டு, அந்த எச்சில் இலை மீது படுத்து உருள வேண்டும்; அப்படி ‘அங்கப் பிரதட்சனம்’ செய்தால் தோல் நோய் நீங்கும் என்ற நம்பிக்கையை பார்ப்பனர்கள் உருவாக்கியிருந்தனர். இதை உண்மை என்று நம்பி பார்ப்பன எச்சில் இலை மீது ஒடுக்கப்பட்ட மக்கள் விழுந்து புரண்டு வந்தார்கள்.

பார்ப்பனர்களின் மனித விரோத வர்ணத் திமிர் இப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும் கவுரவத்தையும் காவு கேட்டது. 2012 ஆம் ஆண்டு இந்த சடங்கை தடை செய்யக் கோரி மனித உரிமையாளர்கள் கருநாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு சடங்குக்கு தடை விதித்தாலும், சில நிபந்தனைகளுடன் சடங்கை அனுமதித்தது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட ‘பிரசாதம்’ கொண்ட இலையை, பக்தர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து, அதன் மீது ‘அங்கப் பிரதட்சனம்’ செய்யலாம் என்பதே நீதிமன்றத்தின் உத்தரவு. இதை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இப்போது மற்றொரு இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஏற்கனவே விதித்த நிபந்தனகளை நீக்கி, ‘மடேஸ் நானாவின்’ மூல வடிவத்தை மாற்றக் கூடாது; அப்படியே பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளுவதுதான் சடங்கின் நோக்கம். இது மதச் சுதந்திரம் என்று தீர்ப்பளித்தது. இறுதித் தீர்ப்பு வரும் வரை இச்சடங்கை நிறுத்தி வைப்பது பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும் என்றும் கூறி விட்டது.

தீர்ப்பை எதிர்த்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். 2014இல் உச்சநீதிமன்றம் இந்த சடங்குக்கு தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டது. ‘மதச் சுதந்திரம்’ என்ற போர்வையை பார்ப்பன - வேத மதம் தனது மேலாண்மைக்கும் பார்ப்பனரல்லாத மக்களை ஒதுக்கி வைத்து இழிவுபடுத்துவதற்குமே ஒரு கவசமாகப் பயன்படுத்தி வருகிறது.

இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளி வந்த ஒரு கட்டுரை (கவுதம் பாட்டியா - சுஹ்ரித் பார்த்தசாரதி எழுதியது) ஆழமாக விவாதிக்கிறது. மதச் சார்பற்ற நீதிமன்றம், மதம் தொடர்பான நடைமுறைகளை விசாரிக்கும்போது அதன் பார்வை ஒன்றுபோல் இருப்பதில்லை என்று அக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

அரசியல் சட்டத்தின் 25 முதல் 28 வரையிலான கூறுகள் மதச் சுதந்திரத்தை உறுதி செய்தாலும், “பொது ஒழுங்கமைதி, ஒழுக்க நெறி, நல்வாழ்வு ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படுத்தாமல் மதப் பிரச்சினைகளை நிர்வகிக்க வேண்டும் என்று பிரிவு 26 உரிமை வழங்குகிறது. பிரிவு 28, அரசு கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையிலான கட்டளைகளைச் செயல்படுத்த அனுமதி மறுக்கிறது.

மதத்தின் சடங்குகளை பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் வழிபாட்டு முறைகள், சமூகத்தை இழிவு செய்வதாக இல்லாமல் மனித மாண்புகளை மதிப்பதாக இருக்க வேண்டும். ஒரு சமூகம் காலப் போக்கில் அதன் வளர்ச்சிக்கேற்ப பழமைகளைக் கைவிட முன்வருவதே சமூகம் முதிர்ச்சிப் பெறுகிறது என்பதற்கான அடையாளம். அந்தக் கண்ணோட்டத்தில் தான் இந்து மதம் அங்கீகரித்த ‘தீண்டாமை’ சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது. ஜாதியை வாழ்க்கை முறையாக நிலைநிறுத்திவிட்ட இந்து மதம், ஜாதியை மீறுவோரை சமூகத் தலைவர்கள் விலக்கி வைக்கவும் ஜாதியிலிருந்து ஒதுக்கி வைக்கவுமான சமூக அதிகாரங்களை அதன் தலைவர்களுக்கு வழங்குவதை எப்படி ஏற்க முடியும்?.

அனைத்து ஜாதியினரும் முறையாகப் பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை உச்சநீதிமன்றம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ‘ஆகம நடைமுறை’ என்ற பார்வையில் பார்த்ததே தவிர, பார்ப்பனரல்லாத சமூகம் விலக்கி வைக்கப்படுகிறது; இது மனித மாண்புகளுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இதை ஒரு ‘தீண்டாமைக் குற்றமாக பார்க்கத் தயாராக இல்லை. இதே உச்சநீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு பம்பாய் ஹாஜி அலி தர்காவில் பெண்களை அனுமதிக்காதது குறித்த வழக்கில் மத நடைமுறையைப் பார்க்காமல், பெண்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்ற பார்வையில் பெண்கள் நுழைய அனுமதித்து தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கில் பெண்களை அனுமதிக்கலாம் என்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டும், அனுமதிப்பது மத சம்பிரதாயத்துக்கு எதிரானது என்று இந்து மல்ஹோத்ராவும் தீர்ப்பு வழங்கினர். இரண்டு தீர்ப்புகளுமே சபரிமலை கோயில் நடைமுறைகளைப் பற்றி மட்டுமே இருந்ததே தவிர, பெண்களை விலக்கி வைப்பது சரியா, தவறா என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. ‘மதச் சுதந்திரம்’ குறித்த சட்டப் பிரிவுகளில் நீதிபதிகள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தீர்ப்புகள் வழங்கப்படுவதே வழமையாகி விட்டது.

பார்ப்பனர்கள் தங்களுக்கான அதிகாரத்தை எவரும் மறுத்துவிட முடியாது என்ற ஆதிக்கப் பார்வையே பெரும்பாலான தீர்வுகளில் மேலோங்கி நிற்கிறது. அதற்கு சட்டங்கள் துணையாக நிறுவப்படுவதும் வழக்கமாகிவிட்டது. மதச் சுதந்திரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு இப்போது 9 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், நீதிமன்றம் என்ன கூறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Pin It