எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் பல நாட்களாக அல்ல, பல ஆண்டுகளாக அல்ல, அவர்கள் பல நூற்றாண்டுகளாக வெறியோடு காத்துக் கிடக்கின்றார்கள். இந்தியாவுக்கே பார்ப்பன பாசிச சனாதன எதிர்ப்பு மரபை கொடையாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கே முன்பே கொடுத்த தமிழ்நாட்டின் மீது இன்றும் பார்ப்பனிய வஞ்சம் நீறுபூத்த நெருப்பாக புழுங்கிக் கொண்டே இருக்கின்றது.

அந்த வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள எத்தனையோ முறை எத்தனையோ வழிகளில் பார்ப்பன குள்ளநரிக் கூட்டமும் அதன் அடிமைகளும் முயன்று வந்தாலும் வலுவான கருத்தியல் போராட்டத்தின் மூலம் தமிழக மக்கள் அதை வீழ்த்தியே வந்திருக்கின்றார்கள்.

தமிழ்நாடு, சனாதன கும்பலுக்கு வள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், பெரியார், அண்ணா காலம் தொட்டே ஒரு கொடுங்கனவாகவே இருந்து வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிறுவப்பட்டு ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகப்போகும் நிலையில் மற்ற வட மாநிலங்களை ஒப்பிடும்போது ஆன்மீக பூமி என சங்கிகள் புளகாங்கிதம் அடையும் தமிழ்நாட்டில் அதன் வளர்ச்சி வேகம் பெரிய அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இங்கிருக்கும் முற்போக்கு அமைப்புகளின் செல்வாக்கும் தீவிரமான பரப்புரையும்தான்.udhayanidhi stalin 467இதை எப்படியாவது உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கில் ஆர்.எஸ்.எஸ் பல தகிடதத்த வேலைகளையும் இங்கே செய்து பார்த்தது. சூத்திரர்களையும் தலித்துகளையும் தமிழ்நாட்டின் பாஜக தலைவர்களாக நியமிப்பது, அவர்களுக்கு எம்பி பதவி வழங்குவது, ஆளுநர் பதவி வழங்குவது என தன்னால் என்ன முடியுமோ அதை எல்லாம் செய்து பார்த்தும் மொத்த வளர்ச்சி மதிப்பீடு பூஜ்ஜியத்துக்கும் கீழேயே இருந்தது.

தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் ஆளுநர் போன்ற டம்மி அடியாட்களின் மூலம் அச்சுறுத்திப் பார்க்கின்றது. தைரியமாக இந்த மண் இத்தனை நூற்றாண்டுகளாக எந்த சித்தாந்தத்தை ஏறி மிதித்து எச்சில் துப்பியதோ அதே சித்தாந்தத்தை இங்கே கடைவிரிக்கப் பார்க்கின்றது. ஆனால் கடைவிரித்தும் கொள்வாரில்லை என்ற நிலையில்தான் அது கொதித்துப் போய் இருக்கின்றது.

அந்த கொதிப்பை எப்படி வெளிக்காட்டுவது என்ற ஏக்கப் பெருமூச்சில் ஏங்கிக் கிடந்தவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கி இருக்கின்றார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர்

“இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதை எல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது” எனக் கூறி இருந்தார்.

அவர் பேசிவிட்டு மேடைவிட்டு இறங்குவதற்கு முன்பே அவர் பேசியது அகில இந்திய செய்தியாக மாற்றப்பட்டு இந்தியா முழுவதும் உதயநிதிக்கு எதிராக மிகப் பெரிய மதவெறிப் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்றவர்கள் உதயநிதி இந்துக்களை இனப்படுகொலை செய்யச் சொல்வதாக நஞ்சைக் கக்கினார்கள்.

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, முன்னாள் நீதிபதிகள், எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 262 சங்கிகள் கடிதம் எழுதி உள்ளார்கள்.

அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் உதயநிதி மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், "சனாதனம் குறித்த அவதூறு கருத்துக்களுக்கு மத்திய அமைச்சர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என்று மோடி அனைவரையும் கொம்பு சீவி விட்டிருக்கின்றார்.

இன்னும் ஒருபடி மேலே போய் அயோத்தியைச் சேர்ந்த ரவுடி சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்பவன் உதயநிதியின் தலையை வெட்டினால் 10 கோடி பரிசு தருவதாக அறிவித்தான். ஆனால் அந்த ரவுடியின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்படியாக உதயநிதி பேசியதை வைத்து மதவெறியை காட்டுத்தீயாக வளர்க்கப் பார்த்தார்கள். ஆனால் இலைகள் அசைவது போன்ற சலசலப்புகள் கூட ஏற்படவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி போடும் எச்சில் காசில் வயிறு வளர்க்கும் சில அல்லக்கை முண்டங்களையும், கட்சியை பொறுக்கித் தின்பதற்காகவே நடத்தும் புல்லுருவிகளையும் தவிர மற்ற அனைவருமே சங்கிகளுக்கு எதிராக கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துவிட்டார்கள்.

2007-ம் ஆண்டு ராமன் எந்த என்ஜினியரிங் கல்லூரியில் படித்துவிட்டு பாலம் கட்டினான் என்று கேள்வி எழுப்பிய கலைஞரின் தலையை வெட்டி வந்தால் எடைக்கு எடை தங்கம் தருவேன் என்று வி.எச்.பி.யின் சாமியார் பிரிவைச் சேர்ந்த வேதாந்தி என்ற ரவுடி சாமியார் அறிவித்தான். அதற்கு திமுக தொண்டர்கள் ஆற்றிய எதிர்வினையை சங்கிகள் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்போது அதிகாரம் கையில் உள்ளதால் வாலை கொஞ்சம் அதிகமாகவே ஆட்டிக் காட்டுகின்றார்கள். வாயை கொஞ்சம் காதுவரைக்கும் நீட்டிப் பார்க்கின்றார்கள்.

சனாதனம் என்பதற்கு தினம்தோறும் புதிய புதிய விளக்கங்களை புதை குழியில் இருந்து தோண்டி எடுத்து போட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

குறிப்பாக சனாதனத்தை விதந்தோதுவதை மட்டுமே தனது முழு நேர வேலையாக வைத்திருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி “சனாதன தர்மம் என்றால் என்ன? நமது ரிஷிகளும் ஞானிகளும் உலகின் துவக்கமென்ன, படைப்பின் மூலமென்ன என்பதை நாம் எளிய முறையில் புரிந்து கொள்வதற்காக நமது உபதேசங்களின் மூலமாகவும் தத்துவங்களின் மூலமாகவும் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.

சனாதன தர்மத்தைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் படைக்கக்கூடிய ஒரு தலைவன், அவனைப் படைப்பில் அண்டங்களாகவும் பேரண்டங்களாகவும் உயிர்களாகவும் மரங்களாகவும் பூச்சிகளாகவும் வியாபித்திருக்கிறான். அந்தந்த உயிர்களுக்குள்ளாகவும் அவன் தொழிற்படுகிறான் என்பதுதான் சனாதன தர்மம்.

உங்களில் என்னைக் காண்கிறேன். என்னில் உங்களைக் காண்கிறேன். இந்தத் தத்துவத்தை உணர்த்துவதுதான் சனாதன தர்மம். இந்த சனாதன தர்மத்தை யார் ஏற்காவிட்டாலும், மறுத்தாலும் இதற்கு இடையூறு செய்தாலும் அவர்களும் இந்த சனாதன தர்மத்திற்குள் இருப்பார்கள். அவர்களை நாம் அந்நியராகப் பார்ப்பது கிடையாது” என்கின்றார்.

உலகில் எல்லா உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்றால், ஏன் இந்திய சமூகத்தில் அதுவும் குறிப்பாக இந்து மதத்தில் மட்டும் சாதி தீண்டாமை இன்றுவரையிலும் கடைபிடிக்கப்படுகின்றது என்றோ, தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று சொல்லி சக மனிதனை இழிபடுத்தும் போக்கு இருக்கின்றது என்றோ, நாட்டின் குடியரசு தலைவரையே தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கும் அளவுக்கு அது வலிமையாக இருக்கின்றது என்பதைப் பற்றியோ எப்போதாவது வாய் திறந்து இருக்கின்றாரா?

ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட இந்த நூறாண்டுகளில் அது சாதிய தீண்டாமைக்கு எதிராக எப்போதாவது போராடி இருக்கின்றதா? பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக எப்போதாவது போராடி இருக்கின்றதா?. இன்று மோகன் பகவத் இட ஒதுக்கீட்டை ஆதரித்து அறிக்கை விடுக்கின்றார். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட போது நாடு முழுவதும் அதற்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தை நடத்திய குற்றக்கும்பல் யார்?

நடைமுறை வாழ்க்கையில் கொடிய சாதி தீண்டாமையை ஆதரிப்பதோடு, அதை நடைமுறைப்படுத்தும் சக்திகளைத் தூண்டிவிட்டி வேடிக்கை பார்க்கும் தீய சக்திகள் அதை மக்கள் உணராமல் இருக்க மாய்மலமான வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்துகின்றார்கள்.

ஆளுநர் ரவி இப்படி எல்லாம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசும்போதெல்லாம், அதை ரசித்துக் கேட்டதோடு அதற்கு சொம்பும் தூக்கிய தமிழ்நாடு பாஜக தலைவர் கோமாளி அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் உத்தரவிடக் கோரியும், அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் ஆளுநரிடம் மனு அளித்ததாக கூறியிருக்கின்றார்.

ஆளுநரே அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி தன்னிச்சையாக பார்ப்பன சனாதனக் கருத்தியலை பரப்புரை செய்யும் ஒரு கடைந்தெடுத்த சனாதனியாக இருக்கும் போது உதயநிதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவருக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது?.

தமிழ்நாட்டு மக்களிடம் சனாதனப் பீயை தின்னுங்கள் எனச் சொல்ல சங்கிகளுக்கு உரிமை இருக்கும் போது, அதைத் தின்னாதே; இழிவு என சொல்வதற்கு உதயநிதிக்கு உரிமையில்லையா?

நீங்கள் மக்களை நம்பச் செய்ய சொல்லும் சனாதனம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்திற்கும் அதன் உண்மையான பொருளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளதே!

சனாதன தர்மம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'நிலையான தர்மம்' (Eternal law) என்ற அர்த்தம் சொல்லப்படுகின்றது.

அது என்ன நிலையான தர்மம்? மணியாட்டி பிச்சை எடுத்து தர்மம் வாங்கி வயிறு வளர்க்கும் கும்பல் சொல்லும் நிலையான தர்மம் என்ன?

தெய்வத்தின் குரலின் முதல் பகுதியில், "வர்ண தர்மம்" என்ற கட்டுரையில் சனாதன தர்மத்தின் முக்கிய அம்சமே வர்ண தர்மம்தான் என்கிறார் சந்திரசேகர சரஸ்வதி. 

"ஸநாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. அதனால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிட வேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்.

மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே சாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் விதித்திருக்கிறது.

மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி; மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாயிரம் ஆண்டுகளாகப் போகாமல் இருக்கிறதென்றால், அவற்றில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்!

அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரிகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது.

நவீன யுகத்தில் ‘சமத்துவம்’ (equality) என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்துக்கு ரொம்பவும் க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய வர்ண தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது?

அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது."

இதன் மூலம் மக்களை நான்கு வர்ணங்களாகப் பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வர்ண கடமை என்று இருப்பதே வர்ண தர்மம் என்றும் அந்த வர்ண தர்மமே சனாதன தர்மம் என்றும் குறிப்பிடுகிறார் சங்ககராச்சாரியார்.

இதற்கும் சில முரட்டு சங்கிகள் வர்ணம் குணத்தால் தீர்மானிக்கப்படுவது என்பான். ஆனால் அது பிறப்பால்தான் தீர்மானிக்கப்படுகின்றது என்று இவாளே பல நூல்களில் தெளிவாக எழுதி வைத்திருக்கின்றார்கள். ரங்கராஜ் பாண்டேக்கள் தங்களின் குணத்திற்காகவா இன்று பார்ப்பனர்களாக இருக்கின்றார்கள்?

சனாதனம் பேசும் எத்தனை பார்ப்பான்கள் தங்களின் குணத்திற்கு தகுந்தார் போல செருப்பு தைக்கும் வேலையையோ, பிணம் தூக்கும் வேலையையோ, முடிவெட்டும் வேலையையோ, துணி துவைக்கும் வேலையையோ செய்து வருகின்றார்கள்? எத்தனை பார்ப்பான்கள் குணத்திற்கு தகுந்தார் போல பறையர், சக்கிலியர், பள்ளர் கவுண்டர், செட்டியார், முதலியார், வன்னியர் என சாதி சான்றிதழ் வாங்கி தன்னை தலித், சூத்திர நிலைக்கு தாழ்த்திக் கொண்டு இருக்கின்றார்கள்?

அதனால்தான் சொல்கின்றோம், சனாதனம் என்ற போர்வையில் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு சாதி, தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்க வேண்டும் என விரும்பும் கடைந்தெடுத்த பிற்போக்கு சக்திகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் சனாதன ஒழிப்பு மட்டுமே ஒரே வழி என்று.

சனாதனம் குறித்து 1916 ஆம் ஆண்டு பனாரஸில் உள்ள மத்திய இந்து கல்லூரியின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிட்ட ஆய்வு நூலில், சனாதனம் என்பது ஆரியர் மதம் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? அதை தமிழ்நாட்டு மக்கள் மீது தினிக்கும் முயற்சியை எப்படி தடுக்காமல் விட முடியும்?

உதயநிதி மட்டுமா சனாதன ஆரிய மதத்தின் மீது காறி உமிழ்ந்தார்?.சங்கிகள் கொண்டாடும் விவேகானந்தாரே அந்த சனாதன ஆரிய மதத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தினாரே!

Whatever the rascally and wily priests teach them (that is, people) all sorts of mummery and tomfoolery as the very gist of the Vedas and Hinduism - (mind you, neither these rascals of priests nor their forefathers have so much as seen a volume of the Vedas for the last 400 generations) - they follow and degrade themselves. Lord help them from the rakshasas in the shape of the Brahmins of the kali yuga” (Vivekananda: The Complete Works, Volume 8, Page 290, Calcutta, 1971)

“துர்த்தர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆகிய புரோகிதர்கள் எல்லா வகையான மூட நம்பிக்கைகளையும் வேதம் மற்றும் இந்து மதத்தின் சாரம் என்று மக்களுக்குக் கற்பிக்கிறார்கள். இந்தப் போக்கிரித்தனம் மிக்க புரோகிதர்களும், அவர்களுடைய முன்னோர்களும் கடந்த நாநூறு தலைமுறைகளாக வேதத்தின் ஒரு பகுதியைக் கூட பார்த்ததில்லை. மூடத்தனமிக்க ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து அவர்கள் தம்மைத் தாமே இழி நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். கலியுகத்தில் பார்ப்பனர்கள் வடிவில் இருக்கும் ராட்சசர்களிடம் இருந்து மக்களையும் இந்நாட்டையும் அந்த தெய்வம்தான் காப்பாற்ற வேண்டும்.” என்றும்,

The Smritis and the Puranas are productions of men of limited intelligence and are full of fallacies, errors, and the feelings of class and malice.” - Vivekananda: The Complete Works, Volume 6, Page 393

“ஸ்மிருதிகளும் புராணங்களும் குறுகிய சிந்தனைகள் கொண்ட மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் முழுதும் தவறானவைகளும், சாதிப்பெருமைகளும், காழ்ப்புணர்ச்சிகளுமே இடம் பெற்றிருக்கின்றன என்றும்,

“உலகில் உள்ள எந்த ஒரு மதமும் இந்து மதத்தைப் போன்று ஏழைகள் மற்றும் கீழ் மட்டத்தவர்களின் கழுத்தைப் போட்டு மிதிப்பதில்லை.”

(“No religion on earth treads upon the necks of the poor and the low in such a fashion as the Hinduism.” - Vivekananda: The Complete Works, Volume 1, Page 502) என்றும் சொல்லியிருக்கின்றாரே.

இதற்கெல்லாம் சனாதன சங்கிகளிடம் என்ன பதில் இருக்கின்றது?. பொய்களையும் புளுகுகளையும் மட்டுமே சொல்லி இந்திய மக்களை குறிப்பாக இந்து மக்களை ஏமாற்றும் இவர்களுக்கு அந்த நம்பிக்கை எங்கிருந்து வருகின்றது?.

பெரும்பான்மையான இந்து மக்களுக்கு தாங்கள் எழுதி வைத்த புராண, இதிகாச, தர்ம சாஸ்திர நூல்களில் என்ன எழுதி இருக்கின்றது என்பது தெரியாது என்பதுதானே காரணம்.

ஆனால் இப்போது சனாதனம் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. சங்கிகள் என்னதான் மக்களை ஏமாற்ற நினைத்தாலும், இப்போது சனாதனம் என்றால் என்னவென்று மக்கள் இணையத்தில் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் ஒரு செய்தியாகக் கூட வந்திருக்காத ஒன்றை ஊதிப் பெரியதாக்கி மக்களிடம் சனாதனம் குறித்த ஒரு விவாதத்தை சங்கிகள் தங்களின் நச்சு நாக்கால் உருவாக்கி இருக்கின்றார்கள்.

எது எப்படியோ நாம் இந்தப் பிரச்சினையில் உதயநிதிக்கு நன்றிகள் சொல்லிக் கொள்வதோடு அவர் பக்கம் நிற்போம்.

- செ.கார்கி

Pin It