temple tamilnaduதமிழ்நாட்டில் அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் இருக்கும் 40,000 இந்துக் கோயில்களை பார்ப்பனர்கள் தங்களது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோவை வெள்ளியங்காடு பகுதியில் சட்ட விரோதமாக வனப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுள்ள ‘கார்ப்பரேட்’ ஈஷா மய்ய சத் குரு ஜக்கி வாசுதேவ், தமிழ்நாட்டில் இதற்கான இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அதிகார பின்புலங்களோடு தமிழ்நாட்டில் இந்த இயக்கம் தொடங்கப்பட் டிருக்கிறது. சுப்பிரமணியசாமி, கோயில்களை பார்ப்பனர் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவே தொடர்ந்து பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடுத்து வருகிறார்.

தமிழ்நாட்டில் தீட்சதர்களின் கட்டுப்பாட்டில் இப்போதும் இருக்கும் தில்லை நடராசன் கோயிலை அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை போய் வழக்கு தொடுத்தவர் சுப்ரமணியசாமி. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. தீட்சதப் பார்ப்பனர்கள் முதலமைச்சரை சந்தித்து அரசு தங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

பார்ப்பன உணர்வுடன் அந்தக் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றத்தில் வலிமையாக தமிழக அரசு சார்பில் வாதாடாமல், தீட்சதர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க ஜெயலலிதா ஆட்சி துணை நின்று துரோகம் செய்தது. அரசு கட்டுப்பாட்டில் சில காலம் தில்லை நடராசர் கோயில் இருந்த போது உண்டியல் வருமானம் அதிகமாக இருந்தது. தீட்சதர்களிடம் வந்தபோது உண்டியல் வருமானம் மிக மோசமாகக் குறைந்து பெயரளவுக்கு கணக்கு காட்டுவதாக மட்டுமே இருந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் திரிவேந்திர சிங் ராவ் முதலமைச்சராக இருந்தபோது பத்ரிநாத், கேதார் நாத் உள்ளிட்ட 51 கோயில்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டிலிருந்து அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார். அங்கு நடக்கும் கொள்ளைகள் பற்றி புகார் வந்த நிலையில் அரசுடைமையாக்கினார். சுப்ரமணியசாமி அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அரசுடைமை சட்டத்தை சரி என்று ஏற்றுக் கொண்டது உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம். தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் தனது தீர்ப்பில் கோயில்கள் தனியார் வசம் போய் விடக் கூடாது; கங்கை, யமுனை நதிகள்கூட  வணங்கப்படுபவை தான்; அதற்காக தனியாரிடம் ஒப்படைக்க முடியுமா என்று கேட்டார்.

வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தபோது உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. பிறகு பா.ஜ.க. தலைமையே பரத்சிங் ராவத் என்பவரை புதிய முதல்வராக்கி மீண்டும் கோயில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைத்தது.

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலத்தில் கோயிலில் பல கோடி மதிப்புள்ள நிலங்கள், கட்டிடங்கள், கோயில் நகைகள் அனைத்தும் பார்ப்பனர்களால் சூறையாடப்பட்டன. பங்கு போட்டுக் கொள்வதில் அடிதடி கலவரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சியில் வடகலை தென்கலைப் பார்ப்பனர்கள் கோயில் உரிமைக்கு அடிதடிகளில் இறங்கி, பகுதியையே போர்க்களமாக மாற்றிய நிலையில், பயந்து போன பக்திப் பிரமுகர்களே கோயிலை இவர்களிடமிருந்து காப்பாற்ற பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.

கோயில்களில் பார்ப்பனர்கள் அடித்த கொள்ளைகளைத் தடுக்க அரசு தலையிட்டு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வந்ததே பக்தர்களிடமிருந்து தான். இதற்காகவே 1863இல் ‘தர்மரட்சண சபை’ என்ற அமைப்பை பக்தி உணர்வாளர்கள் உருவாக்கி, அதிகாரிகளிடம் மனு அளித்தனர். கோயில் வருமானங்களை வேத புரோகிதர் கூட்டம் சுருட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக  உண்டியலை வைக்க வேண்டும் என்று 1860இல் பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது. கோயிலில் உண்டியலே அரசாணைக்குப் பிறகு தான் வந்தது என்பது வரலாறு. 

1912இல் இந்து பக்தர்களே மாநாடு கூட்டி கோயில்களை பார்ப்பனர் கொள்ளையிலிருந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்திய பிறகு தான் வருவாய் வாரியத்தின் கீழ் கோயில்கள் பாதுகாப்புக்கு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்தவரே கோவிந்த ராஜ் அய்யர் என்பவர் தான்.

பார்ப்பனர் கோயில் கொள்ளை, பக்தர்களிடம் கடும் எதிர்ப்புகளை உருவாக்கிய நிலையில் ‘மாண்டேகு சேம்ஸ் போர்டு’ அறிக்கை வழங்கிய உரிமையின் கீழ் தேர்தலை சந்தித்த நீதிக் கட்சி (தென்னிந்திய நல உரிமைச் சங்கம்), தனது தேர்தல் அறிக்கையிலேயே கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் என்று வாக்காளர்களுக்கு உறுதிமொழி தந்து தான் அதிகாரத்துக்கு வந்தது. பனகல் அரசர் சென்னை மாகாண முதல்வரானவுடன் பார்ப்பனப் பிடியிலிருந்து மீட்கும் முயற்சிகளை எடுத்தார். அரசு சார்பில் தனி வாரியம் உருவாக்கப்பட்டு கோயில்கள் அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டன.

அந்த வாரியத்தின் தலைவராக நியமிக்கப் பட்டவர் கூட ஒரு பார்ப்பனர் தான். அவர் தான் நீதிபதி சதாசிவம் அய்யர். பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.  அப்போது காங்கிரஸ் கட்சியிலே இருந்து கொண்டு நீதிக்கட்சியை அரசியல் ரீதியாக எதிர்த்து வந்த பெரியார், பனகல் அரசரின் இந்த முடிவை தீவிரமாக ஆதரித்தார். இந்த சட்டத்துக்கு ஆதரவாக சென்னை கடற்கரையில் கூட்டம் போட்டு பேசினார்.

நாடு ‘சுதந்திரம்’ பெற்ற காலத்தில் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) இந்த சட்டத்தில் மேலும் திருத்தங்கள் கொண்டு வந்து கடுமையாக்கினார். எந்தந்த கோயில்களில் எவ்வளவு செல்வங்கள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன என்ற விவரங்களை ஒரு விரிவான அறிக்கையாக்கி சட்ட மன்றத்திலேயே படித்தார், முதலமைச்சர். இது சட்ட மன்றப் பதிவேடுகளில் இப்போதும் இருக்கிறது.

விசாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை கோயில் சொத்துக்களை கொள்ளையடித்த 65 வழக்கு விவரங்கள் என்னிடம் உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாகப் படிக்கலாம் என்றும் ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) அவர் பிரகடனப்படுத்தினார். பனகல் அரசரும் சரி, ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) ஆனாலும் சரி, ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையாளர்கள்.

பனகல் அரசர் காலத்திலேயே சத்தியமூர்த்தி அய்யரும் இந்து, சுதேசமித்திரன் ஏடு களும் கடுமையாக இந்தச் சட்டத்தை எதிர்த்தன. ‘ஆண்டவனுக்கே சட்டம் போட்டு கட்டுப் படுத்துவதா?’ என்று கேட்டனர்.

பனகல் அரசர் 1927இல் கொண்டு வந்தது ‘இந்து சமய அறநிலைய வாரியம்’. ஓமந்தூரார் ஆட்சியில் இதில் திருத்தங்கள் செய்யப்பட்டு மேலும் கடுமை யாக்கப்பட்டது. கோயில் நகைகள் பட்டியலிடப் பட்டது, அப்போது தான்.

பிறகு 1951இல் வாரியம் அரசு அதிகாரிகள் நிர்வாகத்தின் கீழ்  கொண்டு வரப்பட்டு, ‘இந்து சமயம் மற்றும் அறக் கொடைகள் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. 1954இல் காமராசர் முதலமைச்சரான பிறகு மேலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு அரசுத் துறைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு, அமைச்சர் ஒருவர் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார்.

1959இல் சட்டத்தின் ஓட்டைகள் நீக்கப்பட்டு மேலும் செழுமையாக்கப் பட்டு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் உருவாக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய முன்னோடித் தலைவர்களில் ஒருவரான இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேரனான பரமேஸ்வரன் என்ற பட்டியல் இனப் பிரிவிலிருந்து வந்தவரை இந்து அறநிலையத் துறை அமைச்ச ராக்கினார் காமராசர். கோயில் அறங்காவல் குழுவில் பட்டியல் இனப் பிரிவைச் சார்ந்தவர் உறுப்பினராக் கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது.

இவ்வளவுக்குப் பிறகும் இப்போதும் கோயில் நிர்வாகம் தவிர, பூஜை, சடங்கு, பரிகாரம், உற்சவங்கள் நடத்தும் முறைகள் அனைத்தும் பார்ப்பனர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அறநிலையத் துறை தலையிட முடியாது.

அறநிலையத் துறை அதிகாரிகள் கூட ‘இந்து’க்களாக மட்டுமே இருத்தல் வேண்டும் என்ற சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்து அறநிலையத் துறை செயல் அலுவலர்களாக இந்துப் பெண்கள் வருவதற்குக்கூட தடை இருந்தது. பெரியார் திராவிடர் கழகம் தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, ‘இந்து’ பெண்கள் உரிமையை மீட்டுத் தந்தது. இப்போதும் பூஜை சடங்குகளில் ‘இந்து’ப் பெண்கள் பங்கேற்கும் தடை அப்படியே நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் அமுலில் உள்ள நில உச்சவரம்புச் சட்டம், குத்தகை விற்பனைச் சட்டம், நகர்ப்புற குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம், வாடகைக் கட்டுப்பாடு சட்டம் போன்ற சட்டங்களிலிருந்து கோயில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டங்கள் கோயில் சொத்துக்களுக்குப் பொருந்தாது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோயில் மனைகளில் நீண்டகாலமாகக் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு நிலப் பட்டா வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்து அரசாணை பிறப்பித்தார். உடனே பார்ப்பனர்கள், பா.ஜ.க.வினர் ஆளுநரிடம் சென்று இந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க வேண்டும் என்றார்கள். பா.ஜ.க. மேலிடம் மிரட்டியது. அவ்வளவுதான், அரசாணையை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார் முதலமைச்சர் பழனிச்சாமி.

கோயில் வருமானத்திலிருந்து கோயில் நிர்வாகத் துக்காக 2 சதவீதம் முதல் 8 சதவிதம் வரை மட்டுமே செலவு செய்ய முடியும் என்ற விதி இருக்கிறது. கோயில் வருமானத்தை சடங்குகளுக்கும், விழாக்களுக்கும் மட்டுமே செலவிடப்பட்டு வருகிறது.

வருமானமே இல்லாத சிறிய கோயில்களில் ஒரு வேளை விளக்காவது ஏற்ற வேண்டும் என்பதற்காக அரசு ஒவ்வொரு சிறிய கோயிலுக்கும் ரூபாய் ஒரு இலட்சம் வங்கியில் வைப்பு நிதி செலுத்தி யிருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஒரு வேளை ‘பூஜை’ உறுதி செய்யப் படுகிறது.

தமிழ்நாட்டில் இப்போது கோயில்களுக்கு 5 இலட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 இலட்சத்துக்கு மேல் வருமானம் வரக் கூடிய 333 கோயில்கள் இருக்கின்றன. 22,600 வீடுகள் கோயில் களுக்கு எழுதி வைக்கப்பட்டுள்ன. பல்லாயிரம் கோடி மதிப்பிலான நகைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் அரசு கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி தனியார் வசம் கொண்டு வர வேண்டும் என்று பார்ப்பனர்கள் இயக்கம் நடத்துகிறார்கள்.

சிலைகளுக்கு ‘மந்திரம்’ ஓதி அதை கடவுளாக்கும் அதிகாரம்; கோயில் தீட்டுகளை விரட்ட ‘யாகம்’ நடத்தும் அதிகாரம்; கோயில்களைப் புனிதப்படுத்த ‘கும்பாபிஷேகம்’ நடத்தும் அதிகாரம்; ‘கருப்ப கிரகத்துக்குள்’ நுழைந்து ‘பகவானிடம்’ நெருங்கும் அதிகாரம்; தான் பேசும் ‘மந்திர உச்சாடனை’ மட்டுமே பகவான் செவிகளில் போய்ச் சேரும் என்ற பிறவி அதிகாரம்; ‘விண்ணுலகத்துக்கு’ ‘படையல்’ களை எடுத்துச் செல்லும் அதிகாரம், எது ‘ஆகம விதி’ என்பதை முடிவு செய்யும் அதிகாரம்; குடியரசுத் தலைவரிலிருந்து பிரதமர் முதல்வர் வரை தங்கள் மந்திர சக்திக்கு அடிமைப்படுத்தும் அதிகாரம் என்று சகல அதிகாரங்களையும் குவித்து வைத்திருப்பவர்கள், கோயில் நிர்வாகம் கோயில் சொத்துக்களின் அதிகாரங்களும் தங்களிடமே வர வேண்டும் என்று போராடக் கிளம்பியிருக்கிறார்கள்.  உண்மையான பக்தர்களேகூட இதை ஏற்க மாட்டார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It