• மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஜெயில்சிங், இந்தியாவின் குடியரசுத் தலைவரானபோது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தால் போதும் தகுதி வேண்டாம் என்று இரண்டு கழுதைகள் பேசுவதுபோல ‘துக்ளக்’கில் அட்டைப்பட கார்ட்டூன் போட்டார் சோ. பிறகு, காங்கிரஸ் கட்சியிலிருந்து மத்திய அமைச்சர் பதவி வகித்து, அவசர நிலை காலத்துக்குப் பிறகு காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் காங்கிரசிலிருந்து விலகி, இராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆதரவாளராக அவர் நடத்திய ‘சுயராஜ்யா’ பத்திரிகையிலும் ஆசிரியராகி, பச்சை சந்தர்ப்பவாதியாக செயல்பட்ட ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவரானபோது, ‘துக்ளக்’ கழுதைப் படம் போடவில்லை. ஆர்.வி.க்கு பார்ப்பனர் என்பதைவிட வேறு என்ன தகுதி என்று ‘துக்ளக்’ விழாவில் கேட்டபோது, யாரை கழுதையாகப் போட வேண்டும் என்பது எனது உரிமை என்று பதில் கூறினார் சோ.
• காமராசர் நேர்மையானவர் என்று பேசி வந்த இதே சோ, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தன்னுடைய நாடகத்துக்கு பார்வையாளராக காமராசரை அழைத்து, அதே நாடகத்தில் காங்கிரசையும் காமராசரையும் படு கேவலமாகக் கிண்டல் செய்தார். ஆத்திரமடைந்த காமராசர், பாதியிலேயே நாடகத்தை விட்டு வெளியேறினார். இத்தகைய பண்பாளர் ‘சோ’!
• ‘அவசர நிலை’யை எதிர்த்தவர் சோ என்று கூறுகிறார்கள். அவரது ‘துக்ளக்’ அட்டை கறுப்பு வண்ணத்தில் அச்சிடப்பட்டு அவசர நிலையை எதிர்த்தது. அவசர நிலை காலத்தில் கடும் ஒடுக்குமுறையை சந்தித்தது தி.மு.க. இந்திரா ஆட்சியை வீழ்த்தி, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க காமராசரின் ஸ்தாபன காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அப்போது கடற்கரையில் கூட்டம் போட்டுப் பேசிய சோ, ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர்களை மட்டுமே ஆதரியுங்கள்; அவர்கள் போட்டியிடாத இடங்களில் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள்; நான் தி.முக.வை ஆதரிக்க மாட்டேன் என்றார். இந்திராவின் அவசர நிலை எதிர்ப்பைவிட தி.மு.க. எதிர்ப்பே தான் சோவுக்கு முக்கியமாக இருந்தது. இதுவே அவரது அவசர நிலை எதிர்ப்பின் யோக்கியதை.
• எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் எரி சாராய ஊழல் பரபரப்பாகப் பேசப்பட்டது. இராமசாமி உடையார் என்பவருக்கு சாராய விற்பனை உரிமை வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் சாராயக் கடைகளை முழுமையாக அந்த ‘உடையாரே’ நடத்தினார். ஒரு கட்டத்தில் அவர் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைக் கூட தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வளவு பெரிய ஊழலுக்கு சொந்தக்காரர் நடத்திய அறக் கட்டளைக்கு தலைவராக இருந்தது, சோ-வின் தந்தை. அவர் இறந்தபோது உடையாளர் அறக்கட்டளை வெளியிட்ட விளம்பரங்களில் தான் சோவின் தந்தை படத்தை வெளியிட்டு அறக்கட்டளையின் தலைவர் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதை எல்லாம் மறைத்து எம்.ஜி.ஆர். ஆட்சியை ‘சோ’ தீவிரமாக ஆதரித்தார்.
• 1983ஆம் ஆண்டில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளராக இருந்த கி.வீரமணி அவர்களை ‘துக்ளக்’ இதழுக்காக பெரியார் திடலுக்கு பேட்டி எடுக்க வந்தார். பெரியார் அருங்காட்சியகத்தில் பேட்டி எடுத்த ‘துக்ளக்’ சோ, தனது ‘சிகரெட் பைப்பை’ப் பற்ற வைத்துக் கொண்டே பேசினார். ஆசிரியர் வீரமணி, தனக்கு சிகரெட் புகையில் ஒவ்வாமை இருப்பதை சுட்டிக் காட்டிய பிறகு புகைப்பதை நிறுத்தினார். விடைபெற்றுத் திரும்பும்போது, ‘நான் எப்போதும் பிராமணன்தான்’ என்று கூறி சட்டையைக் கழற்றி பூணூலைப் பிடித்துக் காட்டினார். நாகரிகமற்ற ஆணவம் - கொழுப்புடன் நடந்து கொண்ட ‘துக்ளக்’ சோ, உண்மையில் அப்படி முதுகெலும்பு உள்ள மனிதர் தானா என்பது பிறகு தெரிய வந்தது.
• திராவிட இயக்க எழுத்தாளரான சின்ன குத்தூசி, முற்போக்கு சிந்தனையுள்ள ஞாநி, இருவரும் சங்கராச்சாரி அழைப்பை ஏற்று அவருடன் விவாதிக்க காஞ்சிபுரம் போனார்கள். அப்போது, ‘வீரமணியிடம் பேட்டி எடுக்க நான் தான் சோ. ராமசாமியை அனுப்பினேன். அவனுக்கு கேள்விகளையும் நான்தான் தயாரித்தேன்’ என்று கூறினார். இதை ‘எதிரொலி’ நாளேட்டில் (3.4.1983) சின்னக் குத்தூசி பதிவு செய்தார். பதறிப் போன சோ, “சுவாமிகள் அப்படியா சொன்னார்?” என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். சங்கராச்சாரி கூறியது தவறு என்றால், உங்கள் ஏட்டில் மறுப்பு வெளியிடுங்கள் என்று சின்னக் குத்தூசி கூறினார். ‘ஜெயேந்திரர் கூறியது பொய்’ என்று மறுத்தார் சோ. ஆனால், ‘அந்த மடத்தின் மீது எனக்கு மிகவும் மதிப்பு இருப்பதால், மறுத்து எழுதப் போவது இல்லை’ என்று பதில் கூறி விட்டார். மாறாக ‘துக்ளக்’கில் ஞாநியும், சின்னக்குத்தூசியும் சங்கராச்சாரி கூறாத ஒன்றை எழுதி விட்டதாக விளக்கம் தந்தார். இதைக் கண்டித்து சின்னக் குத்தூசி, ‘துக்ளக்’ சோவுக்கு நேரடியாகவே கண்டனக் கடிதம் எழுதி அதை ‘எதிரொலி’யிலும் பதிவு செய்தார் (15.4.193).
• எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் சவுந்தபாண்டியன் என்ற ஒரு அமைச்சர் இருந்தார். அவர் எம்.ஜி.ஆரிடம் கருத்து வேறுபாடு கொண்டு பதவி விலகியபோது, அவரைக் கண்காணிக்கும் உளவு வேலையை ‘துக்ளக்’ சோவிடம் ஒப்படைத்திருந்தார், எம்.ஜி.ஆர். பதவி விலகிய சவுந்திரபாண்டியன், ‘துக்ளக்’ சோ நான் போகிற இடங்களுக்கெல்லாம் ஆட்களை வைத்து என்னை உளவு பார்க்கிறார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். குட்டு உடைந்தவுடன், சோ, ‘துக்ளக்’ ஏட்டின் முதல் பக்கத்திலேயே நான் அப்படி உளவு வேலை பார்த்தது உண்மை என்று ஒப்புக் கொண்டார். “ஒரு பெரிய மனிதருக்காக நல்லவருக்காக நான் அந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டியதாயிற்று” என்று எழுதினார். இதை சோவுக்கு எழுதிய அதே கடிதத்தில் ஞாநியும் பதிவு செய்துள்ளார்.
சோவின் பார்ப்பன நேர்மை குறித்து ஏராளமாக பட்டியலிடலாம். உதாரணத்துக்கு சிலவற்றை மட்டும் குறிப்பிட்டோம்.