‘பகவான் நாராயணமூர்த்தி மீண்டும் தமிழ்நாட்டுக்கு ‘அவதாரம்’ எடுத்து வந்திருப்பதாக மயிலாப்பூரில், ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளர்கள் சங்கத்தில் கார்ப்பரேட் டைரக்டர்கள் கூட்டத்தில் டி.வி.எஸ். அலுவலகங்களில் பிராமணர் சங்கத்தில் எல்லாம் பலமான பேச்சு அடிபட்டு வந்ததாக கூறுகிறார்கள்.

எதற்கு ‘அவதாரம்’ எடுத்திருக்கிறார் தெரியுமோ? தமிழ்நாட்டில் திராவிட இயக்கமான தி.மு.க.வை அழித்து, ‘பிராமண’ தேசமாக்க அவதாரம் எடுத்திருக்கிறாராம்.

நாராயணமூர்த்தி - குருமூர்த்தி என்று பெயர் சூட்டிக் கொண்டு வந்திருக்கிறாராம்! அவா, பல தொழில் அதிபர்களுக்கு கார்ப்பரேட்டுகளுக்கு ‘கணக்குப் பிள்ளை’யாக (ஆடிட்டர் என்றும் சொல்வார்கள்) இருந்து ‘சேவை’ செய்த ‘பிராமண’ குல உத்தமராம்!

‘அசுரர்’கள் என்ற திராவிடர்களை அழிக்க ‘அவதாரங்கள்’ - பல்வேறு ‘மேக்-அப்’களோடு போட்டுக் கொண்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மீன் வேடம், ஆமை வேடம், பன்றி வேடம், பாதி மிருகம் - பாதி மனிதன் வேடம் என்று பல்வேறு வேடம்.

இப்போது அவையெல்லாம் எதற்கு? எப்போதுமே வேடம் போடுவதையே தொழிலாளாகக் கொண்ட ஒரு நடிகரையே இழுத்து வந்தால் என்ன என்று ‘இந்திர லோக’மான ‘நாக்பூர்’ ஆலோசனை சபையில் முடிவெடுக்கப்பட்டதாம். அவ்வளவு தான்!

‘ஆகட்டும் குருஜி; அது அடியேனின் பொறுப்பு’ என்று குருஜியிடம் சபதமேற்று களமிறங்கினார், இந்த நவீன ‘அவதாரம்’.

“படையப்பாவே; அருணாசலமே; பாட்சாவே; மனமிறங்கி வா! இந்த தி.மு.க. என்ற மிச்சமிருக்கும் திராவிட அரசியல் கட்சியான அசுர கூட்டத்தை, நீ தான் அழிக்க வேண்டும். இறுதிப் போரை நீயே முடிக்க வேண்டும் என்று மன்றாடினார்; தண்டனிட்டார்; துரத்திக் கொண்டே இருந்தார்; ‘நான் குருஜிக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்’; எல்லாம் உன் கையில்தான்” என்று மன்றாடினார்.

‘இந்த வேலைக்கு எனது உடல் ஒத்துழைக்காதப்பா; சினிமா வேடம் போடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்; அரசியல் வேடம் சரிப்படாது’ என்று ‘டாட்டா’ காட்டி விட்டார் படையப்பா! இந்த தேவ - அசுரப் போராட்டத்தில் ‘படையப்பா’ மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால் எப்படி எல்லாம் ‘பூணூல் தேவர்கள்’ பூமியில் ‘ருத்ர தாண்டவம்’ ஆடியிருப்பார்கள் என்று கேட்டார், ஒரு தோழர். எப்படி இருந்திருக்கும்? ‘துக்ளக்’ ஆண்டு விழாவை சர்வதேச விழாவாகக் கொண்டாடியிருப்பார்கள். அமீத் ஷா, முப்படை அணி வகுப்போடு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டிருப்பார்.

வேத மந்திர உச்சாடனங்கள், சிறப்பு பூஜைகள் தடபுடலாக நடந்திருக்கும். திராவிட மண்ணை,  வேதபுரியாகி விட்டதாகவே கூடிக் கும்மாள மடித்திருப்பார்கள். எல்லா ஆசையிலும் மண்ணை வாரிப் போட்டு விட்டார் படையப்பா.

‘தேவ-அசுரப்’ போர் தொடங்குவதற்கு முன்பே விபீஷணர்களிடம் தோற்றுப் போய் நிற்கிறார்கள் தேவர்கள். இதுவே திராவிடத் தமிழனுக்குக் கிடைத்த முதல் வெற்றி தான்!

அதன் காரணமாக ‘துக்ளக்’ விழாவில் ‘ஈனஸ்வரத்தில்’ பேசியிருக்கிறது ஆடிட்டர் ‘அவதாரம்’. பெங்களூர் சிறையில் ஊழல் வழக்கில் அடைப்பட்டுள்ள ‘சூத்திரப் பெண்’ணை தனது பரம்பரை எதிரியாகக் கருதி வந்த இந்த ‘அவதாரம்’ குரலை மாற்றிப் பேசியிருக்கிறது.

“தி.மு.க.வை எதைச் செய்தாவது ஒழித்தாக வேண்டும்; வெற்றி பெறவிடக் கூடாது; தீயை அவசரமாக அணைக்க வேண்டும்; அதற்கு கங்கை நீரைக் கொண்டு வந்து தான் அணைக்க வேண்டும் என்று காத்திருக்க முடியாது; சாக்கடை நீர் கிடைத்தாலும் பயன்படுத்த வேண்டியதுதான்; அப்படி சகிகலா ஆதரவையும் பெறலாம்” என்று சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறது.

உதாரணமே படு கேவலம். சாக்கடையைவிட கேவலமாகப் போய்விட்டது கங்கை - சாக்கடை நீருக்காகக் காத்திருக்க முடியாது; கங்கை நீர் கிடைத்தாலும் பயன்படுத்த வேண்டியது தான் என்று பேசியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

ஆனாலும் ‘தூய்மை’, ‘நேர்மை’, ‘ஊழல்’, ‘தர்மம்’ என்பதற்கெல்லாம் இவாள்தான் விளக்கம் தருவார்கள். அதைத்தான் மக்கள் கண்மூடி ஏற்றுக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் ‘தேசத் துரோகி’ என்பார்கள். ‘இந்து துவேஷி’ என்று கூக்குரலிடுவார்கள்.

இப்போதாவது கார்ப்பரேட் கணக்குப் பிள்ளை ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்; இன்றைய ‘திராவிடன்’ வேத காலத்து ஏமாளி அல்ல; இன்றைய ‘தமிழ்நாடு’ வேதகாலத்தை தலைகீழாகப் புரட்டிப் போடத் துடிக்கும் சமூக நீதி மண். இங்கே ‘சம்பூகன்’ சாக மாட்டான்; ‘ராமன்’ தான் தண்டிக்கப்படுவான்.

அவதார சூழ்ச்சிகளை இங்கே மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் படையப்பாவே ‘விபீஷணர்’ வேடம் கட்ட மறுத்து விட்டார்; காலம் மாறிவிட்டது குருமூர்த்தி ‘ஜி’.

- கோடங்குடி மாரிமுத்து

Pin It