மோடியின் நடுவண் ஆட்சி இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை முற்றாக ஒழித்துவிட்டு ஒற்றை ஆட்சி முறையாக மாற்றியமைத்திடும் சட்டபூர்வ முயற்சிகளைத் தொடங்கிவிட்டது. மொழி வழியிலமைக்கப்பட்ட மாநிலங்களும் மாநிலங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள இறையாண்மையும் இந்தியாவை ‘இந்துத்துவா’ நாடாக்கும் முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பதை உணர்ந்து ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலோடு இந்த ஆபத்தான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கிவிட்டனர்.

பொதுப் பட்டியலில் கல்வி உரிமை இருப்பதைப் பயன்படுத்தி தேசிய கல்விக் கொள்கையும் நீட் தேர்வுகளும் வந்து விட்டன. உணவு உரிமைப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் மாநிலங்களின் உணவு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. மும்மொழித் திட்டம் திணிக்கப்படுகிறது. மாநில உரிமைகளின் கீழ் வரும் கால்நடைத் துறையிலும் தலையிட்டு மாட்டு விற்பனையை ஒழுங்குப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வந்தனர்.  மருத்துவ சுகாதார சேவைகளையும் முடக்குகிறார்கள். இப்போது மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனையின் சில பகுதிகளை தனியே பிரித்து, தனியாருக்கு குத்தகைக்கு விடும் ஒரு ஆபத்தான யோசனையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். ‘நிதி அயோக்’ அமைப்பு இப்படி ஒரு விபரீத பரிந்துரையை வழங்கியிருக்கிறது. மாநில அரசுக்கு அரசியல் அமைப்பு வழங்கியுள்ள மறைமுக வரி விதிப்பு உரிமைகளையும் சரக்கு - சேவை வரி விதிப்பு சட்டத்தின் கீழ் பறித்து விட்டார்கள்.

இந்த ஆபத்துகளை எதிர்த்து கருநாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு திருப்பம். இந்தியா என்ற பார்ப்பன - பனியா அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தமிழ்நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்று குரல் கொடுத்த தலைவர் பெரியார். திராவிட முன்னேற்றக் கழகம் தென்னக மாநிலங்களின் கூட்டமைப்பை முன் வைத்து இனவழி கூடி மொழி வழி பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய திராவிடக் குடியரசு கூட்டாட்சியை வலியுறுத்தியது. இவை கடந்தகால வரலாறு. இந்தக் கோரிக்கைகள் கைவிடப்பட்டாலும் அதற்கான நியாயங்கள் அப்படியே இருக்கின்றன என்று அண்ணா கூறினார். பெரியார் தனது இறுதி உரையிலும் ‘தனித் தமிழ்நாடு’ என்ற இலட்சியத்தை வலியுறுத்தினார்.

ஆனாலும் வரலாற்றுச் சூழல் ‘தனி நாடு’ இலட்சியங்களை நேரடியாக முன் வைக்க முடியாமல் அதற்கான மாற்றுத் தீர்வுகளை முன் வைக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கின. இப்போது பா.ஜ.க.வின் ஒற்றை ஆட்சியை நோக்கிய நகர்வுகள் தீவிரமடையும் போது குறைந்தபட்சம் ‘மாநிலங்களின் தன்னாட்சி’ என்ற இலட்சிய முழக்கத்தை முன் வைக்கும் கடமையை வரலாறு தமிழர்கள் மீது சுமத்தியிருக்கிறது. அண்ணாவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி, நீதிபதி இராஜமன்னார் தலைமையில் மாநில சுயாட்சி பற்றி ஆராய ஒரு குழுவை நியமித்தார். அக்குழுவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரா ரெட்டி, சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் இலட்சுமண சாமி (முதலியார்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மாநிலத்துக்கு சுயாட்சி, மத்தியில் மாநிலப் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டாட்சி என்ற பரிந்துரையை 1969ஆம் ஆண்டு அக்குழு வழங்கியது மட்டுமல்ல, தமிழக சட்டமன்றத்திலும் அது ஏற்கப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தின் கல்வி, சுகாதாரம், வரி விதிப்பு உள்ளிட்ட உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தோடு தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்பதற்கான அடிப்படையான இலட்சியங்களையும் முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கென அரசியல் சட்டம்; தமிழ்நாட்டுக்கென தனிக் கொடி தமிழ்நாட்டுக்கான கல்வி, பண்பாட்டுக் கொள்கைகள் போன்ற முழக்கங்களை முன்னெடுக்க வேண்டும். கர்நாடக முதல்வர் தங்கள் மாநிலத்துக்கு தனிக் கொடி வேண்டும் என்று கேட்பதுபோல் தமிழகத்திலும் மாநிலத்துக்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் கலைஞர் கருணாநிதி 1969இல் வலியுறுத்தியிருக்கிறார். மாநில முதல்வர்களிடம் இது குறித்து கலந்து ஆலோசிப்பதாக 1970இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இதே இந்திரா காந்தி மத்திய மாநில உறவுகளில் நெருக்கடிகள் உருவாகியபோது சர்க்காரியா ஆணையம் ஒன்றை நியமித்தார். அதன் அறிக்கையும் மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமைகளையே பரிந்துரை செய்தது.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழ்நாடு தன்னாட்சிக்கான கொள்கைகளை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல வண்டிய தேவையும் கடமையும் இருக்கிறது. தமிழ்நாட்டை இந்து பார்ப்பனியம் விழுங்கி விடும் ஆபத்துகளை முறியடிக்கும் மாற்று, இது மட்டுமே!

Pin It