Neet exam 450தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வழக்கமாக சூலை மாதத் தொடக்கத்தில் நடந்து முடிந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு இது எப்போது நடக்கும், எந்த முறையில் நடக்கும் என்பது தெரியாத ஒரு குழப்ப நிலை நீடிக்கிறது. இதனால் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற முனைப்பில் படித்த பல்லாயிரம் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கடுமையான மனஉளைச்சலில் இருக்கின்றனர்.

2007ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில், பனிரெண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களின் தர வரிசைப்படி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இது ஒரு சீர்மை யான நடைமுறையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நரேந்திர மோடி தலை மையிலான நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தின் துணை யுடன் இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு இந்திய அளவில் நடைபெறும் தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வைக் (National Eligibility cum Entrance Test - NEET - நீட்) கட்டாயம் எழுத வேண்டும் என்கிற ஆணை யைப் பிறப்பித்தது.

திடீரென அறிவிக்கப்பட்ட மருத்துவப் பொது நுழைவுத் தேர்வை 2016-2017ஆம் கல்வி ஆண்டில் நடைமுறைப் படுத்த முடியாது என்று தமிழ்நாட்டு அரசும் மற்றும் சில மாநில அரசுகளும் எதிர்த்தன. அதனால் இந்தப் பொது நுழைவுத் தேர்விலிருந்து 2016-2017ஆம் கல்வி ஆண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில் நடுவண் அரசு ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதனால் தமிழ்நாட்டில் 2016-2017ஆம் கல்வி ஆண்டில் வழக்கம் போல் பனி ரெண்டாம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இதையடுத்து தமிழ்நாட்டு அரசு 2017-18ஆம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு நிலையான வலைக்குப் பெறப்படும் என்று உறுதி அளித்து வந்தது. முதலமைச்சராக இருந்த செயலலிதா திடீரென உடல்நலக் குறைவால் 2016 செப்டம்பரில் மருத்துவமனையில் சேர்ந் தார், 5.12.2016 அன்று மருத்துவமனையிலேயே மறைந் தார். இந்த நான்கு மாதங்களில் தமிழ்நாட்டு அரசு முற்றிலு மாகச் செயலிழந்து கிடந்தது. ஆயினும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு நிலையான விலக்கு பெறவேண்டும் என்ற கோரிக்கை வலிமையாக ஒலித்துக் கொண்டே இருந்தது.

செயலலிதாவின் மறைவுக்குப்பின் ஆளும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பங்களுக்குப்பின் கூட்டப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி களில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரி கள் அரசுக்கு ஒப்படைக்கும் இடங்களுக்கும் பனிரொண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வின் மதிப்பெண் தரவரிசைப்படி ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறு வதற்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று 1.2.2017 அன்று ஒரு மனதாகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மருத்துவ மேற்படிப்புக்கு, தமிழ்நாட்டு அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு மூலம் தமிழ்நாட்டின் மருத்து வர்கள் மட்டுமே சேர்க்கப்படும் நிலை 2015ஆம் ஆண்டு வரையில் இருந்தது, 2016ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பிற மாநில மருத்துவர்களையும் தேசிய பொதுத் தேர்வின் மூலம் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பில் சேர்க்க வேண்டும் என்று ஆணையிட்டது. எனவே, 1.2.2017 அன்று சட்டப் பேரவையில் மருத்துவ மேற்படிப்பில் சேர்க்கை முறை 2015ஆம் ஆண்டில் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. இவ்விரண்டு சட்டங்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற் காக நடுவண் அரசுக்கு 2017 பிப்பிரவரி மாதமே அனுப்பப்பட்டன. நடுவண் அரசின் பரிந்துரையின் பேரில்தான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பது என்பது அரசமைப்புச் சட்ட நடைமுறை ஆகும்.

இச்சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் அதிகாரிகளும் தில்லி சென்று நடுவண் அரசின் கல்வி அமைச்சர், மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர், சட்ட அமைச்சர், ஆகியோரைப் பிப்பிரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் சந்தித்து வேண்டினர். முதலமைச்சர் பழனிச்சாமியும் தில்லியில் நரேந்திர மோடியைச் சந்தித்த போது, இக்கோரிக்கையை முன்வைத்தார்.

எசமானனின் முன் மண்டியிட்டுக் கண்ணீர் மல்க ஓர் அடிமை விடுக்கும் வேண்டுகோளாகவே தமிழ்நாட்டு அரசின் கோரிக்கை முயற்சி இருந்தது. மக்களவையில் 37 நாடாளு மன்ற உறுப்பினர்களையும் மாநிலங்கள் அவையில் 11 உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்ற வலிமையைப் பெற்றுள்ள அ.தி.மு.க. தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் களைக் காத்திட - மாநில உரிமையை நிலைநாட்டிட நடுவண் அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து நுழைவுத் தேர்விலிருந்து விலக்குப் பெறத் தவறிவிட்டது. மோடி அரசின் மனங் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என்பதில் அ.தி.மு.க. ஆட்சி கண்ணுங்கருத்துமாக இருக்கிறது. ஆயினும் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கிடைத்து விடும் என்கிற பொய்யான நம்பிக்கையை மாணவர்களுக்கு ஊட்டிக்கொண்டே இருந்தது. அரசின் வாக்குறுதியை நம்பி தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருந்தனர்.

இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 470 உள்ளன. இவற்றில் 65,170 இடங்கள் உள்ளன. இதேபோன்று மொத்தம் உள்ள 308 பல் மருத்துவக் கல்லூரிகளில் 25,730 இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,050 இடங்கள் உள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக் கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த குசராத் மாநிலத்தில் நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள்- இருபது கோடி மக்களைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் எட்டு அரசு மருத்துக் கல்லூரி கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றில் மொத்தம் 6,500 இடங்கள் இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) உள்ளன. அதாவது 29 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களை யும் கொண்ட இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவப் படிப் புக்கான இடங்களில் பத்து விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதேபோன்று மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களும் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எனவேதான் தமிழ்நாட்டில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

மருத்துவ நுழைவுத் தேர்வு 7.4.2017 அன்று இந்திய அளவில் நடைபெற்றது. இத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education - CBSE - சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. நுழைவுத்தேர்வின் வினாக்கள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படுகின்றன. மேலும் பதினோராம் வகுப்பு, பனிரெண் டாம் வகுப்பு பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படு கின்றன. 2016-2017ஆம் ஆண்டு இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் நுழைவுத்தேர்வு நடந்தது. இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மராத்தி, குசராத்தி, வங்காளி உள்ளிட்ட பத்து மொழிகளில் தேர்வு நடைபெற்றது. ஆனால் ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு வினாக்கள் இருந்தன.

aripradham neet 450இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை 10,90,085 மாணவர்கள் எழுதினார்கள். இவர் களில் 6,11,539 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் 83,859 மாணவர்கள் நுழைவுத் தேர்வை எழுதினர். 32,570 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பெரும்பாலோர் நுழைவுத் தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் பெற்றனர். இது அம்மாணவர்களை யும் பெற்றோர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. அதே சமயம் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தனர். நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 72 விழுக்காட்டை சி.பி.எஸ்.சி. மாணவர்களின் கைப்பற்றும் நிலை ஏற்படும்.

இந்த நிலையில், மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் பொதுத் தேர்வில் 200க்கு 198, 199, 200 என்கிற அளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ள போதிலும், மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போவது மிகப் பெரிய சமூக அநீதியாகும் என்பதை உணர்ந்த தமிழ்நாட்டு அரசு 22.6.2017 அன்று ஓர் ஆணையைப் பிறப்பித்தது.

அதன்படி மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டு மாணவர்களில், மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 விழுக்காடும் சி.பி.எஸ்.சி.யில் படித்தவர்களுக்கு 15 விழுக்காடும் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அந்த ஆணையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அடிப்படை பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் உயிரியல் பாடப் பிரிவில் மாநிலப் பாடத் திட்டத்தில் 4.2 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் 4,675 பேர் எழுதினர். இவர்களில் 2000 பேர்தான் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினர்.

தமிழக அரசின் 85 விழுக்காடு, 15 விழுக்காடு எனும் உள்இடஒதுக்கீட்டு ஆணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம். இரவிச்சந்திரபாபு 11.7.2017 அன்று தமிழக அரசின் ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தார். அதனால் தமிழக அரசால் திட்டமிட்டிருந்தவாறு மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த முடியவில்லை. தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்காத நிலையில் 17.7.2017 முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதனால் மருத்துவப் படிப்பில்  சேருவதற்கான மதிப்பெண் பெற்றுள்ள போதிலும் பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து வருவதால், பொறியியல் படிப்பில் தாங்கள் விரும்பிய கல்லூரி யில் இடம் கிடைக்காமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.

இக்கேடான நிலைக்கு நடுவண் அரசும் தமிழக அரசும் முழுப் பொறுப்பாவார்கள். 2017 பிப்பிரவரியில் மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்டம் நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டது. அதை ஏற்பது அல்லது தள்ளுபடி செய்வது என்கிற எந்தவொரு நிலைப்பாட்டையும் நடுவண் அரசு இக்கட்டுரை எழுதப்படும் நாள் (25.7.2017) வரையில் எடுக்கவில்லை. சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட-ஏழரைக் கோடித் தமிழர்களின் கருத்தாக உள்ள சட்டத்தை நடுவண் அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தமிழ கத்தின் சுயமரியாதையை, உரிமைகளை எந்த அளவுக்கும் காவு கொடுப்பதற்குத் தயாராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, நுழைவுத் தேர்வி லிருந்து விலக்கு கோரும் சட்டத்துக்குக் குடியரசுத் தலை வரின் ஒப்புதலைப் பெற்றுத்தருமாறு நடுவண் அரசுக்கு உரிய அழுத்தம் தரத் தவறிவிட்டது. மக்களவையில் அ.தி.மு.க. மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்பவர்கள் மோடியின்முன் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலின்போதுகூட, சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ள தங்கள் எண்ணிக்கை வலிமையின் அடிப்படையில் பேரம் பேசி விலக்குச் சட்டத்துக்கு நடுவண் அரசின் ஒப்புதலைப் பெற அ.தி.மு.க. அரசு தவறிவிட்டது.

17.7.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றம், மாநிலத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 85 விழுக்காடு வழங்கும் தமிழக அரசின் ஆணையைச் செல்லாது என்று அறிவித்தவுடன் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயகுமார், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், பி. தங்கமணி ஆகியோர் தில்லிக்குச் சென்றனர். 20.7.2017 அன்று இவர்கள் நடுவண் அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, கல்வி அமைச்சர் ஜவடேகர், சட்ட அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய சட்டத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு வேண்டினர். அதன்பின் மு. தம்பித்துரையின் தலைமையில் தமிழக அமைச்சர்கள் அய்வரும் நரேந்திரமோடியைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். இதுபோன்ற நடவடிக் கையைத் தமிழக அரசு நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே எடுத்து ஒரு திட்டவட்டமான முடிவு நிலையை உண்டாக்கியிருக்க வேண்டும்.

24.7.2017 அன்று தமிழகத்தைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் தில்லியில் பொன். இராதாகிருட்டிணன், மு. தம்பித்துரையுடன் நடுவண் அரசின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சட்ட அமைச்சர் அருண்ஜெட்லியைச் சந்தித்து, தமிழக அரசின் சட்டத்துக்கு ஆதரவு கோரினர். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நரேந்திர மோடியைச் சந்தித்து இதுகுறித்து விண்ணப்பம் அளித்தார். தமிழக அரசு அனுப்பிய சட்டத்தின்மீது நடுவண் அரசின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரையில் எதுவும் தெரியவில்லை.

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு குறித்த சிக்கலுக்கு, தமிழ்நாட்டு அரசின் பாடத் திட்டத்தை சி.பி.எஸ்.இ.யின் பாடத் திட்டத்திற்கு இணையாக மாற்றிய மைப்பதுதான் தீர்வு என்று படித்த மேல்சாதி ஆதிக்கச் சக்திகள் கூறிவருகின்றன. ஆனால் குறைந்தது அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களுக்கேனும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே சரியான தீர்வாகும். அப்போதுதான் ஊரகப் பகுதியிலும் நகரங்களிலும் உள்ள கீழ்தட்டு வகுப்பு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு இருக்கும் நிலையில், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி நிலையங்கள் நகரங்களில் ஏற்படும். இவற்றில் இலட்சக்கணக்கில் பணம் செலுத்திப் படிக்கும் பணக்கார வீட்டுப்பிள்ளைகளே நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். இவ்வாறு மேட்டுக் குடியிலிருந்து மருத்துவம் பயிலும் மாணவர்கள் சிற்றூர் களில் உள்ள அரசின் தொடக்க சுகாதார மய்யங்களில் பணி யில் சேரமாட்டார்கள். தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வார்கள். இதனால் கிராமப்புறங்களில்  குறைந்த அளவி லேனும் அரசு அளிக்கும் மருத்துவ சேவையை மக்கள் பெற முடியாத நிலை ஏற்படும். இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

தனியார் மருத்துவக் கொள்ளை மேலும் அதிகரிக்கும். இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிருவாக ஒதுக் கீட்டு இடங்களிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் ஒரு கோடி உருபாவுக்கு மேல் செலவு செய்யக்கூடிய அளவுக்கு வசதி படைத்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள்தான் படிக்கின்றனர். தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக் கப்பட்டு, செயல்படுகின்ற அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பணக்கார வீட்டு மாணவர்களே படிக்கும் நிலையை ஏற் படுத்தும் நுழைவுத் தேர்வு முறையை சமூக நீதியில் அக்கறை உடைய அனைவரும் எதிர்த்து ஒழிக்க வேண்டுமல்லவா!

நடுவண் அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92ஆவது அறிக்கை 8.3.2016 அன்று மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் வைக் கப்பட்டது. அதில் இந்தியா முழுவதற்கும் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன், பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்றும் அதில் கூறப் பட்டிருந்தது. எனவே நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரிட மாநில அரசுக்கு உரிமை உள்ளது.

neet exam checking 450உச்சநீதிமன்றத்தில் அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, “மார்டன் பல் மருத்துவமனை” வழக்கில் 2016 மே 2 அன்று அளித்த தீர்ப்பில், “மாநிலங்களில் நிலவும் சமமற்ற வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, எல்லோருக்கும் சமமான வாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் மருத்துவக் கல்விக் கான மாணவர் சேர்க்கை நடைமுறையை வகுத்து, அதற் கான சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டமன்றங்களுக்கு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாட்டு அரசு 2017இல் இயற்றிய சட்டத் திற்கு நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரும் பொறுப் பைத் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால் இந்துத்துவ மோடி அரசின் நோக்கம் நடுவண் அரசின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமின்றி, மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் மேல்சாதி பணக்கார மாணவர்களே இடம் பெறவேண்டும் என்கிற தீயநோக்கத்துடன்தான் தேசிய பொது நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்குகிறது.

மாநிலங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி களிலிருந்தும் 15 விழுக்காடு  இடங்களை நடுவண் அரசு பறித்துக் கொள்கிறது. இந்த இடங்களுக்கு நுழைவுத் தேர்வின் தரவரிசைப்படி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்திய போது பிற்படுத்தப்பட்டோர் 27 விழுக்காடு, தாழ்த்தப் பட்டோர்  15 விழுக்காடு, பழங்குடியினர் 7.5 விழுக்காடு என 49.5 விழுக்காடு போக மீதி உள்ள 50.5 விழுக்காடு இடங் களுக்கு முற்றிலும் மேல்சாதி மாணவர்களையே சேர்த்த கொடுமை நிகழ்ந்துள்ளது. இதே நடைமுறையை மாநிலங் களிலும் செயல்படுத்த வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கமாகும்.

2018-2019ஆம் கல்வி ஆண்டில் ஆயுர்வேதா, யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்பு களுக்கும் தேசிய நுழைவுத் தேர்வை நடத்த நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் பொறியியல் படிப்புக்கும் இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்திட தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசு தமிழக மாணவர்களின் பெற் றோர்களின் கடும் சினத்தைத் தணிப்பதற்காக மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு பெற்றிட நடுவண் அரசிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஏழை எளிய, நடுத்தர வகுப்புகளின் மாணவர்களின் நலனைக் காத்திடவும், கல்வியில் மாநில அரசின் உரிமையை நிலை நாட்டிடவும் மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து நிலையான விலக்கு பெறும் வரையில் தொடர்ந்து போராடுவோம்.

Pin It