தம்பி பிரபாகரனின் தெளிவான பார்வை
இராமாயண இதிகாசம் - ஆரிய, திராவிடப் போராட்டத்தின் வெளிப்பாடு என்று, தந்தை பெரியார் கூறி வந்தார். அதே கருத்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், ஈழத் தமிழர்களிடையே பரப்பி வருகிறது.
இக்கருத்தை மய்யமாகக் கொண்டு தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான ‘புலிகளின் குரல்’, ‘இலங்கை மண்’ என்ற தொடர் நாடகத்தை - 53 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பியது. கலை இலக்கியவாதியும், பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி எழுதி இயக்கிய இந்த நாடகத் தொடர், ஈழத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில பழமை விரும்பிகள், ராமாயணத்தின் பாதுகாவலர்கள் - இதற்கு எதிர்ப்புக் காட்டவும் தயங்கவில்லை.
ஆனாலும், தமிழர் பண்பாட்டை சிதைத்த ஆரியத்தை அம்பலப்படுத்திய இந்த நாடகத்தைத் தொடர்ந்து பார்த்துவந்த ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன் மீண்டும் இந்த நாடகத்தை மறு ஒலிபரப்புச் செய்யுமாறு பணித்ததைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக நாடகம் ஒலிபரப்பானது. அதைத் தொடர்ந்து, இந்நாடகத்தின் உரையாடலை - ‘புலியின் குரல்’ வானொலி, நூலாகவும் வெளியிட்டு, தமிழர்களிடையே பரப்பி வருகிறது.
அந்நூலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்தப் பொறுப்பாளரும், தமிழ் ஈழக் கல்விக் கழகத்தின் பொறுப்பாளருமான வெ.இளங்குமரன் வழங்கியுள்ள நயப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“தமது வரலாற்று இலக்கியங்களான ஐம்பெரும் காப்பியங்களினால் பண்டைத் தமிழர் தமிழன்னையை அழகுபடுத்தி மகிழ்ந்தனர். தொன்மைச் சிறப்பும் மேன்மையும் மிக்கவர்களாகத் திகழ்ந்த தமிழர்கள் மீது பிற்காலத்தில், ஆரியம் மேற்கொண்ட பண்பாட்டுப் படையெடுப்பினால், தமிழினத்தைப் பெருமைப்படுத்தி வந்த ஐம்பெருங்காப்பியங்கள் மறைக்கப்பட்டு, புனை கதைப் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு கலப்பு மொழி நடையில் ஆக்கப்பட்ட இதிகாசங்கள் தமிழ் மக்களிடையே விதைக்கப்பட்டன.
சிங்கள இனத்தை மேன்மைப்படுத்தி, தமிழினத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு மகாவம்சம் எவ்வாறு படைக்கப்பட்டதோ அது பான்றே, மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் அறநெறி இலக்கியங்கள் மறைக்கப்பட்டு, தமிழர் வரலாறு பண்பாடுகளோடு தொடர்பற்ற இதிகாசங்கள் பல படைக்கப்பட்டன.
இந்த வகையிலே படைக்கப்பட்டதுதான் தமிழ்மன்னன் இராவணனையும் தமிழினத்தையும் இழிவுபடுத்தும் இராமர் கதை.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகப் பொதுமைக்கு வழிகாட்டி வந்த தமிழினத்துக்குள் இவ்விதிகாசங்கள் பகையை மூட்டி உடன்பிறந்தாருக்குள் பிரிவினையை ஏற்படுத்தின.
தமிழர்களை இராக்கதர்கள் என்றும், இரக்கமற்ற அரக்கர்கள் என்றும் திட்டித் தீர்த்தன. தமிழர் தெய்வமெனப் போற்றும் பெண்ணினத்தை இழிவு செய்தன. பகுத்தறிவாளர்களாகத் திகழ்ந்த தமிழர்களை மூடத்தனத்துள் மூழ்க வைத்தன. அறநெறிக்குப் புறம்பான சூழ்ச்சிப் படுகொலைகளுக்கும் இன அழிவுக்கும் வகை செய்தன.
இவை போன்ற நச்சு விதைகளைத் தமிழ் மக்களிடையே விதைக்கும் “திருப்பணி” ஆயிரமாண்டுகளுக்கு மேலாக இன்றும் இடைவிடாது தொடர்கின்றது.
இவற்றை எதிர்த்து தமிழகத்தில் பல போர்க் காவியங்களும் இலக்கியங்களும் தமிழறிஞர் பெருமக்களால் படைக்கப்பட்டன.
இவை போன்றே தமிழினத்துக்கு நாட்டுப் பற்றையும் இனப்பற்றையும் ஊட்டி, வழிகாட்டி நெறிப்படுத்தும் ஓர் அரிய படைப்பு தமிழீழத்திலே நண்பர் பொன்.கணேசமூர்த்தி அவர்களாலே படைக்கப்பட்டது.
“இலங்கை மண்” என்ற பெயரில் புலிகளின் குரல் வானொலியில் ஓராண்டுக்கும் மேலாக, தொடர் நாடகமாக ஒலிபரப்பப்பட்டு வந்த பொன். கணேசமூர்த்தி அவர்களின் வானொலி நாடகம், தமிழ் மன்னன் இராவணனுக்கும், தமிழினத்துக்கும், இலங்கை மண்ணுக்கும் எதிராக ஆரியம் இழைத்த கபடச் சூழ்ச்சிகளைப் புட்டுப்புட்டு வைத்தது.
இராவணனின் தம்பி விபீடணனுக்கு அரியணை அவாவினை ஊட்டி, சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைத்து, அவன் துணையோடு மாமன்னர் இராவணனுக்கெதிராக போரியல் நடைமுறைக்கு மாறான கபடப் போர் நடத்தி, அவனைக் கொன்றொழித்த ஆரிய இராமனைப் போற்றியும் இராவணன் மீது வீண்பழி சுமத்தியும் வந்தவர்களுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல அமைந்தது ‘இலங்கை மண்’ வானொலி நாடகம்.
தமிழீழ மக்களிடையே பெருவரவேற்பைப் பெற்ற இலங்கை மண் நாடகத்தை, மக்கள் வேண்டுகோளை ஏற்று புலிகளின் குரல் மீளவும் ஒலிபரப்பியது.
இன்று அந்த அரிய நாடகம், ஒலி வடிவிலிருந்து நு]ல் வடிவுக்குக் கொண்டுவரப்படுவது வரவேற்கத்தக்கது.
ஏனெனில், வானொலியில் நாடகமாக ஒலித்தபோது அதனைக் கேட்டு விழிப்படைந்தவர்களைவிட நூல் வடிவில் வரும் இலங்கை மண்ணை வாசிப்பதனூடாகக் கூடுதலானவர்கள் பயனடைவார்கள்” என்று எழுதியுள்ளார்.
பிரபாகரன் வாழ்த்துரை
இந்த நூலுக்கு - தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வழங்கியுள்ள வாழ்த்துரை - இராமாயணம் பற்றிய அவரது பார்வையை விளக்குகிறது. புலவர் குழந்தையின் நூல்களை கலைஞர் ஆட்சி அரசுடைமையாக்கிய சூழ்நிலையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ஈழத் தமிழ்த் தேசியத் தலைவர் தம்பி. பிரபாகரன் கருத்தை இங்கே பதிவு செய்கிறது:
“மனிதகுல வரலாற்றில் மனிதர் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒத்திசைவாக ஒரு போதும் இருந்ததில்லை. மனிதன் குடும்பமாக, குழுவாக, இனக் குழுவாக வாழ்ந்த நாளிலிருந்து அவனுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின. அவை முற்றி, மோதல்களாக வெடித்தன. அனைத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசை அவனிடம் பிறந்தது. மனிதனே மனிதனுக்கு விரோதியாக மாறும் விந்தை நிகழ்ந்தது.
தான் சாராத பிறரை எதிரியாகக் கண்டான். அவர்களைத் தீண்டத்தகாதோராக விலக்கி வைக்க முயற்சித்தான். மனிதகுல விரோதியாக, கொடியோராக, கொடுமைக்காரராக, மனிதரே அல்லாத ‘அரக்கராக’ முத்திரை குத்திப் பொய்யான கதைகள் கட்டினான். காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஈவிரக்கமின்றிச் சாடினான். அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் எனப் போதனை வேறு செய்தான்.
கடவுட் கோட்பாட்டைத் துணைக்கு அழைத்துத் தன்னைத் தெய்வ அவதாரமாகக் காட்டிக் கொண்டான். பொய்யான விளக்கங்களை வியாக்கியானங்களைக் கொடுத்தான். தான் வாழ்ந்தாற் போதும் என்ற சுயநலத்துடன் தனது எதிரிகள் மீது ஈவிரக்கமின்றிப் போர் தொடுத்தான்.
இப்படியாக ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றிபெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மை வரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப் போனது.
இதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
தலைகீழாகத் திரித்துவிடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் முடிவுறவில்லை. இன்னமும் அது இலங்கை மண்ணை ஆட்டிப் படைக்கிறது. இலங்கைத் தீவின் அரசியல் முகத்தையும் அது சிதைத்து விட்டிருக்கிறது. சிங்கள இனம் வழிதவறிச் சென்று, சிங்கள மண்ணிலேயே, தமிழர் காலம் காலமாக அடிமைகளாக அவலமான வாழ்வு வாழவும் நிர்ப்பந்தித்திருக்கிறது.
இந்த அவலமான வாழ்வுடன் தமிழர் தமது சுயத்தை இழந்து, தமது முகவரியை இழந்து, அடையாளமற்ற வெற்று மனிதர்களாகத் தொடர்ந்தும் வாழ முடியாது. தமது மூலத்தையும் தனித்துவத்தையும் ஆதி வரலாற்றையும் உலகிற்கு உறுதியாக முன்வைக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் தமிழருக்கு இன்று இருக்கிறது.
திரு.பொன்.கணேசமூர்த்தி அவர்கள் இந்தத் தேவைகளையும் கடப்பாடுகளையும் கவனத்திற் கொண்டு, கடந்த காலக் கற்பனைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து, வரலாற்றுத் திரிபுகளுக்குச் சாட்டையடி கொடுத்து, தமிழரின் பண்டைய சரித்திர வரலாற்றை அதன் உண்மைப் பக்கங்களில் இலங்கைமண் என்ற பெயரில் நாடகமாக வடித்து, நூலாக வெளியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது.
என்று மேதகு பிரபாகரன் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார்.