தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நவம்பர் 27 அன்று கொளத்தூர் அருகே புலியூர் செல்லும் வழியில் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விடுதலைப் புலிகள் இராணுவப் பயிற்சி எடுத்த இடத்தின் அருகே திறந்தவெளியில் முகாமுக்கு தலைமையேற்று பயிற்சியளித்து வீரமரணமடைந்த பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட புலியூர் ‘நிழற்குடை’ அருகே இதுவரை இந்த நிகழ்வு நடந்து வந்தது. மழை காரணமாக அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஆண்டு நிகழ்வு நடைபெற்றது.
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் 2000 பேர் திரண்டிருந்தனர். உலகம் முழுதும் 6.05 மணிக்கு நிகழ்வு நடத்தப்படுவதை யொட்டி அதே நேரத்தில் மாவீரர் வீரவணக்கப் பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாவீரர் சுடரை ஏற்றினார். தொடர்ந்து குழந்தைகள் முதல் பெண்கள், இளையோர், முதியவர் என்று நீண்ட வரிசையில் நின்று வீரவணக்கம் செலுத்தினர்.
7 மணியளவில் கருத்தரங்கம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது. சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சூரிய குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந் திரனைத் தொடர்ந்து தி. வேல்முருகன் ஒரு மணி நேரம் நிறைவுரையாற்றினார். பங்கேற்ற 2000 பேருக்கும் இரவு உணவை கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்து அரங்கிற்கு வெளியே அரங்கில் உள்ளதைப் போல இரு மடங்கு கூட்டம் கூடியிருந்தது.
‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ - மாவீரர் நாளில் நூல் வெளியீடு
புலியூரில் நடந்த மாவீரர் நாளில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகன் வெளியிட கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். ‘நன்செய் பிரசுரம்’ குறைந்த விலையில் ரூ.10/-க்கு நூலை வெளியிட்டுள்ளது. நிகழ்வுக்கு 800 பிரதிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. அனைத்து நூல்களுமே விற்றுத் தீர்ந்து விட்டன. வெளியீட்டாளர் கவிஞர் தம்பி நிகழ்வில் பங்கேற்றார்.
நூலைப் பெற : 9566331195 / 7373684049
மதுரை மாவட்ட கழகம் சார்பில் மாவீரர் நாள்
மதுரை மாவட்ட திவிக சார்பில் மாவீரர் நாள் நிகழ்வு பத்திரிக்கையாளர் அரங்கில் 27.11.2021 அன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு மாநகர் தலைவர் திலீபன் செந்தில் தலைமை தாங்கினார்.
மாவட்ட கழகக் காப்பாளர் தளபதி மற்றும் மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தனர். வேலு ஆசான் பறை இசை குழுவினரின் பறையாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
கழக அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணை பொது செயலாளர் வெ.கனியமுதன், தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் ஆகியோர் - மாவீரர் சுடரேற்றி மாவீரர் உரை நிகழ்த்தினர்.
ஈழப் போராட்டத்தில் பெரியார் இயக்கத்தின் பங்கை மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி எடுத்துரைத்தார்.
மதிமுக, தமிழ் புலிகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம், விடுதலை சிறுத்தைகள், மக்கள் பாதை, தமுமுக உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட தோழமை அமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.