நான் படித்தவன் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தில் சேர்ந்தவனல்லன். ஏனெனில், எனது 10 ஆவது வயதிலேயே எனக்குப் படிப்பு வராதென்றும், பள்ளியில் ஒழுங்காய்ப் படிக்க மாட்டேன் என்றும், மிகவும் துஷ்டப் பிள்ளை என்றும் எனது பெற்றோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, என்னை என் தகப்பனார் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதை நிறுத்தி, தனது வியாபாரத்திற்கு அனுகூலமாய் இருக்கும்படி கடையிலேயே வைத்துக் கொண்டார். 

இப்போது எடுத்துக்கொண்ட விஷயமாய் எனக்கு உள்ள எண்ணம் ஏறக்குறைய அந்த வயது முதற் கொண்டே எனக்கு இருந்து வந்தாலும், பள்ளியில் படித்ததாலேயோ, ஆராய்ச்சியினாலேயோ அல்லாமல் பல பெரியோர்களிடம் பேசிப் பேசி அறிந்ததினாலும், உலகானுபவத்தினாலும், ஆலோசனைகளுக்கும் பகுத்தறிவுகளுக்கும் மதிப்புக் கொடுத்ததாலேயே ஆகும். மற்றும், இதுமாதிரி காரியங்களில் இகழ்ந்து பேசுவதும் உண்டு. இம்மாதிரி நான் பேசுங்கால் எனது வீட்டார்கள் உட்பட அநேகர் என்னை அக்காலம் முதற்கொண்டே பலமாய் நாஸ்திகன் என்றும், மதத் துவேஷி என்றும் வெறுப்பார்கள். என்னை வெறுத்தாலும் எனது எண்ணங்கள் இம்மாதிரி விஷயங்களில் ஆலோசிக்க ஒரு சிறிதும் மாறுபடாமல் இருந்து வந்ததோடு, இப்போதுதான் அவற்றை வெகு தாராளமாய் எடுத்துச் சொல்லவும் பலர் கூடிக் கேட்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது. 

பார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்காரம் என்னும் இவ்விஷயம் இதன் பெயரைப் பார்க்கும்போதே பார்ப்பனப் புரோகிதத்தை மாத்திரம் விலக்கிவிட்டு - அந்த இடத்தில் பார்ப்பனரல்லாத புரோகிதரை வைத்து அச்சடங்குகளைச் செய்வது என்பதாகப் பலருக்குத் தோன்றலாம். இச்சங்கத்தின் கருத்து அதுவல்லவென்றே நான் இதில் பேச ஒப்புக் கொண்டிருக்கிறேன். அப்படியில்லையானால் இச்சங்கமே அவசியமில்லை. இவ்விஷயத்தின் கருத்தே மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும் என்பதும், மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடப் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு - தாழ்வு உணர்ச்சி போய், தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்பட வேண்டும் என்பதுதானே அல்லாமல் வேறல்ல. ஆனால், பார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்காரம் என்பதில் அவ்வித அர்த்தம் காண்கிறதே என்று கேட்பார்களானால் அதற்கு நான் சொல்லும் பதில் புரோகிதம் என்று சொல்லும் வார்த்தையும், அதில் பிறக்கும் அச்சடங்கு - அதாவது திவசம், திதி, தடசிரார்த்தம், பிண்டம், புண்ணியாவர்ச்சனம், சாந்தி, கருமம், சங்கல்பம், தானம், பிதிர்தேவதை, பிதிர்லோகம் முதலியவைகள் பார்ப்பனர்களே ஏற்படுத்தியதாலும், இவைகளும் இவை போன்ற பல சடங்குகளும் பார்ப் பனியத்திலிருந்தே தோன்றியதாலும், பார்ப்பனீயம் தான் இம்மாதிரி மூட நம்பிக்கைகளுக்கு தாயகமாகவும், மக்கள் உயர்வு - தாழ்வு முதலிய கற்பனைகளுக்கும் ஆதாரமாகவும் இருப்பதால், பார்ப்பனீயமே முதலில் ஒழிய வேண்டுமென்கிற கருத்தைக் கொண்டு அப்பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது என்றே சொல்லுகின்றேன். 

குருட்டு நம்பிக்கைகளும், மூட வழக்கங்களும் ஒழிய வேண்டுமானால், முதலாவது பார்ப்பனீயம் ஒழிந்தாக வேண்டும். பார்ப்பனன் ஒழிய வேண்டுமானால் - பார்ப்பான் உயர்ந்தவன், நாம் அவனைவிடத் தாழ்ந்தவன் என்கிற உணர்ச்சி ஒழிய வேண்டும். ஆதலால்தான், முதற்படியாக பார்ப்பான் உயர்ந்தவன் என்ற உணர்ச்சி ஒழிய வேண்டும். பார்ப்பான் உயர்ந்தவன் என்று எண்ணுவதற்கும், ஆதாரமாயிருப்பதற்கும் அனுகூலமான பார்ப்பனனைக் கொண்டுதான் புரோகிதம் முதலிய சடங்குகள் செய்வது என்கிற வழக்கமும் உணர்ச்சியும் ஒழிந்து விட்டால், அடுத்தபடியில் அப்புரோகிதம் என்கிற மூட வழக்கங்களின் தத்துவங்களை எடுத்துச் சொல்லி, அதிலிருந்து அர்த்தமற்ற தன்மையையும் எடுத்துக் காட்டி, அவற்றை ஒழிப்பதற்கும் அனுகூலமாயிருக்கும். இல்லாதவரை, பாமர ஜனங்களுக்குள் ஏதோ ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்துவதுபோல் நினைத்து பயப்பட இடமுண்டாகிவிடும். ஏனெனில், அம்மாதிரியான விஷம்தான் நான் முன் சொன்னது போல், பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே நமது மக்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கின்றது. அவ் விஷத்தைப் படிப்படியாகத்தான் கீழிறக்க வேண்டும்,. அவசரப்படுவதும், விதண்டாவாதம் பேசுவதும் காரியத்திற்கு உபயோகப்படாததாய்ப் போய்விடும். எனவே உயர்ந்த சாதி என்று எண்ணுகிற உணர்ச்சி ஒழிந்தவுடன், அதனால் ஏற்பட்ட மற்ற அசம்பாவிதங்களை ஒழிப்பது வெகு சுலபமாகி விடும் என்கிற எண்ணந்தானேயல்லாமல், பார்ப்பனர் வரும்படியைக் கெடுத்து அதை மற்றவருக்குக் கொடுக்க வேண்டுமென்பதல்ல. தவிர, மேற்சொன்ன புரோகிதம் என்கிற சடங்குகள் நமக்கு எதன் மூலமாய்ப் புகுத்தப்பட்டது என்று பார்த்தால், மதம் என்பதை ஆதாரமாய் வைத்துப் புகுத்தப்பட்டிருக்கிறது. 

பொதுவாக, இந்துமதம் என்றால் மக்கள் பிறவியில் உயர்வு - தாழ்வு என்பதைக் கற்பிப்பது. இவைகளைப் பற்றி ஆராய்வோமென்றால் இவைகள், ‘வேதத்தில் உள்ளவை’ என்றும், ‘வேதந்தான் இந்துமதம்’ என்றும் சிலர் சொல்லி விடுகிறார்கள். சரி அந்த வேதத்தையாவது பார்க்கலாம் என்றால், ‘அதை நீ கண்ணால் பார்த்தால் கண்ணைக் குத்த வேண்டும்; காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்’ என்று சொல்லிவிடுகிறார்கள். 

வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுவதற்குக்கூட நமக்கு இடமில்லை யானால், நாம் அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும். எவனாவது நம்மிடம் வந்து, ‘உனக்குக் கொஞ்சம் ரூபாய் தருகிறேன். பெற்றுக் கொண்டதற்காக இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போடு’ என்று சொன்னால், அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்துத்தானே கையொப்பம் இடுவோம். ‘அதை நீ பார்க்கக் கூடாது. நான் காட்டுகிற இடத்தில் கையெழுத்துப் போட வேண்டியதுதான் பணம் பெற்றுக் கொள்ளுகிறவன் கடமை’ என்று யாராவது சொன்னால், பேசாமல் கையெழுத்துப் போட்டு விடுவோமா? அதில் என்ன எழுதியிருக்கிறது? எத்தனை ரூபாய்க்கு எழுதி இருக்கிறது? என்பவைகளைத் தெரிந்து கொள்ளாமல் கையெழுத்துப் போடுவது முட்டாள்தனம் என்று உணர மாட்டோமா? நம்மைப் பார்த்து, நீ இந்து மதஸ்தன் இந்து மதம் என்பது வேதத்தை ஒப்புக் கொள்ளுவது அதிலுள்ள சடங்குகளை நீ ஒப்புக் கொள்ள வேண்டும். ஒப்புக் கொள்வது, என்பது பார்ப்பனனுக்குப் பணம் கொடுப்பதும் அவர்கள் காலில் விழுவதும்தான். ஆதலால், எனக்குப் பணம் கொடு, என் காலில் விழுந்து கும்பிடு, என் காலைக் கழுவித் தண்ணீரைக் குடிப்பது உனக்கு மோட்சம் கிடைக்கச் செய்யும் என்று பார்ப்பனன் சொல்லுவானேயானால், ‘சரி நாம் அப்படியே செய்யலாம். ஆட்சேபம் இல்லை. ஆனால், அந்த வேதத்தைக் கொஞ்சம் காட்டுங்களேன் அதில் அப்படி எழுதியிருக்கிறதா என்பதைக் கொஞ்சம் கண்ணால் காண்போம்’ என்றால், - ‘நீ அதைப் பார்க்கக் கூடாது பார்த்தால் பாவம்’ என்று சொல்லும்போது, நாம் எப்படி அம்மதத்தை ஒப்புக் கொள்ள முடியும்? முன் சொன்னதுபோல், படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போடக்கூடிய அவ்வளவு மூடர்களாய் நாம் இருந்தால் தானே, படித்துப் பார்க்காமல் இந்துமதத்தை ஒப்புக் கொள்ளுவதோ அல்லது அதில் இருக்கிறதாகச் சொல்லுகிறபடி நடப்பதோ முடியும்? 

இந்து மதம் என்கிற ஒரு மதம் தவிர, வேறு மதக்காரன் எல்லோரும் தங்கள் தங்கள் மதங்களையும், கொள்கைகளையும் தங்கள் மதக்காரர்கள் எல்லோரையும் படிக்கச் செய்வதுடன், வேறு மதக்காரர்களும் படிக்கும்படியாக அந்தந்த பாஷைகளில் தங்கள் சொந்தச் செலவில் அச்சிட்டு, இலவசமாக வழங்குகிறார்கள். ஆனால், நம்முடைய மதம் என்கிற இந்துமத சம்பந்தமான வேதம் என்பதையோ, பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கண்ணில் கூடப் பார்க்கக் கூடாது காதால்கூடக் கேட்கக் கூடாது, நெஞ்சினால்கூட நினைக்கக் கூடாது என்கிறார்கள்.  

நமது இந்துமதம் என்பதையாவது சர்க்கார் ஒப்புக் கொண்டிருக்கிறார்களா அல்லது ஒப்புக் கொள்ளும்படி செய்திருக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. 

எப்படியென்றால், அரசியல் சீர்திருத்தம் என்னும் பேரால் பல மதங்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, சட்டசபை ஸ்தானங்களுக்கு ‘கிறிஸ்தவ மதத்தின் பேரால் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவத் தொகுதி என்று சில ஸ்தானங்களும் முகமதிய மதத்தின் பேரால் முகமதியர்களுக்கு முகமதியத் தொகுதி என்று பல ஸ்தானங்களும் ஒதுக்கி வைத்துக் கொடுக்கப்பட்டிக்கின்றன. அப்படியிருக்க, இந்து மதம் என்னும் ஒரு மதம் இருக்குமானால், அதற்கும் ஏதாவது சில ஸ்தானங்களை இந்துத் தொகுதி என்பதாக ஒதுக்கி வைத்திருப்பார்கள் இல்லையா? அப்படி ஏதாவது ஒதுக்கப்பட்டிருக்கின்றதா என்பதை யோசித்துப் பாருங்கள். அல்லாமலும், இந்துக்கள் என்கிற நாம் சட்டசபைக்கு நிற்க வேண்டுமானால், எந்தப் பேரால் நிற்கிறோம் என்பதைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். முகமதியர் அல்லாதார் தொகுதி என்கிற பெயரால் தானே நிற்கிறோம்! முகமதியரல்லாதார் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? முகமதிய மதக் கோட்பாட்டின்படி ‘காபிர்’ என்றும், அல்லது ‘மதம் இல்லாதவன்’ என்றும்தான் பொருள்படும். நாம் மதமற்றவர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? இந்தப் பெயரை வேறு ஒருவரும் நமக்குச் சூட்டவில்லை; நாமே தான் சூட்டிக் கொண்டு, ‘முகமதியரல்லாதார் தொகுதிக்கு நான் நிற்கிறேன்’ என்கிறோம். நமது சட்டசபை மெம்பர்கள் எல்லாம் முகமதியரல்லாதாரே தவிர, இந்துக்களல்லர். 

இந்துமத பரிபாலனச் சட்டம் ஏற்படுத்தியதைப் பார்த்து சப்தம் போட்ட பெரிய பெரிய இந்து மத வருணாசிரம தர்மிகளும், இந்துமதத் தலைவர்களும், இந்து மதத்தைக் காப்பாற்றப் பிரச்சாரம் செய்த பத்திராதிபர்களும் இன்றைய தினம் இந்திய சட்டசபையில், முகமதியரல்லாதாராகத்தான் அங்கம் பெற்றிருக்கின்றார்கள். காரணம் என்ன? முகமதியல்லாதார் ஆக வேண்டுமென்றா? அல்லவே அல்ல. பின் என்னவென்றால் இந்து மதம் என்று ஒரு மதம் இருக்கின்றதையும், அதன் கொள்கைகள் என்ன என்பதையும் ருஜூப்பிக்க முடியாததாலேயே அல்லாமல் வேறல்ல. இப்படிப்பட்டவர்கள் இந்துமத பரிபாலனச் சட்டத்தைப் பார்த்து, ‘மதம் போச்சுது மதம் போச்சுது’ என்று சப்தம் போட்டார்கள் என்றால் நமது பணத்தைத் தின்றுக் கொழுப்பதால் ஏற்படும் அந்த ‘தம்’ போய்விடுமே என்கிற பயத்தினாலேயே அல்லாமல் வேறில்லை. மற்றபடி, அந்தச் சட்டத்தினால் இப்பொழுது இருப்பதாய்ப் பாசாங்கு பண்ணும் மதத்திற்கு என்ன குறைவு, எந்தப் பிரிவினால் ஏற்பட்டுவிட்டது? 

தவிரவும், ‘மதத்தில் சர்க்கார் புகுந்துவிட்டார்கள், சர்க்கார் புக நம் மந்திரிகள் இடம் கொடுத்து விட்டார்கள்’ என்று சப்தம் போட்டார்களே, சர்க்கார் எதில் புகுந்து விட்டார்கள்? எப்பொழுது புகுந்து விட்டார்கள்? இதற்கு முன்பு புகவில்லையா என்பதற்கு இவர்கள் பதில் சொல்ல முடியுமா? இந்துமத சாமியின் நெற்றியில் வைக்கும் நாமம் (குறி) வடகலையா? தென்கலையா? என்பதைக் கண்டுபிடிக்க, நமது மத ஆதாரங்களான நமது வேத சாஸ்திர நூல்களில் நமக்கு முடிவதில்லை. வெள்ளைக்கார ஜட்ஜூ சொன்னால் தான் நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். நமது கோயில் களில் தேவார பாராயணம் செய்யலமா, வேண்டாமா என்பதற்கு வெள்ளைக்கார கோர்ட்டால் முடிவு பெற வேண்டியிருக்கிறது. இப்படி இருக்கும்போது, நமது மதத்திற்கு ஏதாவது பொதுக் கொள்கை உண்டா? சுயமரியாதை உண்டா? ஆகவே,நமது மத அஸ்திவாரமே அதன் தத்துவமே நமக்கு இன்னது என்று சொல்ல முடியாமலிருக்கும்போது, அதிலிருந்து ஏற்பட்ட ஆபாசக் கட்டுப்பாடுகளைப் பற்றியும், அர்த்தமற்ற சடங்குகளைப் பற்றியும் கவலை செலுத்துவது எவ்வளவு முட்டாள்தனமான காரியம் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். மதச் சடங்குகளின் யோக்கியதையே இப்படி இருக்கும் போது இச்சடங்குகளைப் பார்ப்பனர்களைக் கொண்டு செய்வதா அல்லது பார்ப்பனரல்லாதாரைக் கொண்டு செய்வதா என்கிற கேள்விகளுக்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா? ஒருவனைப் பந்தியிலே உட்கார வைக்க வேண்டாம் என்றால், ‘இலை கிழிந்திருக் கிறது!’ என்று சொல்லுவதில் பிரயோஜனமென்ன? அந்தப் பழமொழிபோல் இருக்கிறது யாரைக் கொண்டு புரோகிதம் செய்விக்கிறது என்கிற விஷயம். 

மதத்தின் பேரால் இப்பார்ப்பனர்கள் நம்மிட மிருந்து வாங்கும் வரிப் பணத்திற்கு ஏதாவது ஒழுங்குண்டா? முறையுண்டா? வரவு செலவுக் கணக்குச் சொல்லுவதுண்டா? ஒன்றுமில்லாமல், ஒவ்வொரு மனிதனையும் விடாமல், அதுவும் அவன் கர்ப்பத்தில் தரிக்கும் முன்பே காப்பதான முகூர்த்தம் என்பதாகவும், கர்ப்பம் தரித்தால் சீமந்த முகூர்த்தம் என்பதாகவும், பிறந்துவிட்டால் ஜாதகரணம், நாமகரணம், தொட்டிலில் போடுதல், பாலூட்டுதல், ஆயுசு ஓமம், முடி வாங்குதல் காது குத்துதல், பள்ளியில் வைத்தல், காயலா முதலியவைகளுக்குச் சாந்தி பிறகு, அவனுக்குக் கலியாணம் என்றால் பெண் பார்த்தல், பொருத்தம் பார்த்தல், நாள் வைத்தல், அதன் பின் விவாகம், அதன்பின் மேற்படி சடங்கு அவன் பிள்ளைகுட்டி பெற்றால் அதற்கும் அதன் காயலாவுக்குக் கிரகதோஷம் சாந்தி, கோவில், குளம், யாத்திரை ஆகியவைகள். இவ்வளவும் தவிர, கடைசி காலத்தில் சாவதாயிருந்தால் அதாவது சாக 10 நிமிஷங்களிருக்கும் போதே சுங்கக்காரனுக்குச் சுங்கம் கொடுத்துவிட்டுத்தான் ஒரு ஊருக்குள் நுழைய வேண்டும் என்பதுபோல, பார்ப்பானுக்கு மாடு வாங்கிக் கொடுத்தால்தான் (கோதானம்), இந்த ஜீவன் அந்த மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு மோட்சத்திற்குப் போக முடியும். இல்லாவிட்டால், மேல் லோகத்திலுள்ள நெருப்பாறு, மயிர்ப் பாலம் தாண்ட முடியாது என்று சொல்லி, மாடு கொடுக்க வேண்டியிருக்கிறது.

மாடு கொடுத்துவிட்டாலாவது விடுகிறதா? அப்போதும் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, இழவுக்கு வந்தவர்களைக்கூட விசாரிக்க நேரமில்லாமல் உபத்திரவித்து, வரிசையாக வருஷம் முழுவதும் பிய்த்துப் பிடுங்கித் தின்கிறார்கள். இவ்வளவுடன் தீர்ந்து விடுகிறதா? இல்லவே இல்லை. ஒரு வருஷம் ஆனதும், ‘உன் தகப்பனார் இன்ன வருடம், இன்ன மாதம், இன்ன தினம், இன்ன திதி செத்துப் போனார் வை பணம், அரிசி, பருப்பு, உப்பு, புளி, வகையறா சாமான்கள்’ என்று கேட்பதோடு, சாப்பிட்டு அஜீர்ணம் ஏற்பட்டால் அதற்கு இஞ்சியும் சுக்கும் கேட்டு வாங்கி, ‘இவ்வளவும் கொடுத்து, நீயும் உன் பெண்சாதியும் என் காலில் விழுந்து கும்பிட்டு, கால் கழுவின தண்ணீரைக் குடியுங்கள்’ என்றும் சொல்லி மூட்டை கட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள். அம் மூட்டைகள் அனேகமாகத் தாசிகள் வீட்டிற்கு போய்ச் சேருகின்றன.

(குடிஅரசு - 03.04.1927)

Pin It