நாங்கள் ஆரியத்துக்கு எதிரிகளே தவிர ஆன்மீகத்துக்கு அல்ல என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தகவல் தொழில்நுட்ப அணியினரிடம் பேசும் போது தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆரியத்தின் ஆன்மீகம் திராவிடத்தின் ஆன்மீகத்திற்கு நேர் எதிரானது. ஆரியம் – ஆன்மீகம் என்ற கருத்தியலை பார்ப்பனிய மேலாண்மைக்கு வெகுமக்களை தங்களுக்கு அடிமைப்படுத்தி வைக்கவும், வர்ணாசிரம கட்டமைப்பை நிலநாட்டவுமே பயன்படுத்துகிறது.

சொல்லப்போனால் ஆன்மீகம் என்ற வடமொழிச் சொல் தமிழருடைய வாழ்வியலோடு தொடர்புடையது அல்ல. மட்டுமின்றி ஆன்மீகம் மதத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல, வள்ளலாரின் ஆன்மீகம், சைவம், வைணவம், சாதியம் மற்றும் உருவ வழிபாடுகளை எதிர்த்த திராவிட ஆன்மீகம் தான். “கடவுளை” கேள்விக்குட்ப்படுத்திய சித்தர்களும் ஆன்மீகவாதிகள் தான். பார்ப்பனிய வேத சடங்குகளை எதிர்த்த புத்தரும் ஆன்மீகவாதி தான். வேத காலத்திலேயே சார்வாகர், பிரகஸ்பதி போன்ற வேத எதிர்ப்பாளர்களும் இருந்திருக்கிறார்கள். வேதமதம் தான் அதற்கு எதிராக தோன்றிய சமணம், புத்தம், சைவம், வைணவ மதங்களை விழுங்கி ‘இந்து’ மதம் என்ற குடைக்குள் ஒளிந்துகொண்டது. இதற்கு பிரிட்டிஷார் உதவினார்கள். அதை இறந்து போன காஞ்சி சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகர் சரஸ்வதியும் பெருமையுடன் ஒப்புக் கொண்டார்.

ஆன்மீகத்தை தனதாக்கிக் கொண்ட ஆரியம், சனாதனம் என்று கோட்பாட்டையும் தனதாக்கிக் கொண்டு விட்டது. ஆரிய சனாதன எதிர்ப்பாளர்களை இந்து மத எதிர்ப்பாளர்கள் என்று முத்திரை குத்துகிறது. இவ்வளவுக்கும் பின்னால் பதுங்கி நிற்பது பார்ப்பனியம். பார்ப்பனர்கள் இல்லாமல் பார்ப்பனியம் என்ற சமூகக் கருத்தாக்கம் உருவாகி இருக்க முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு (10.10.2023) தனது ஆன்மீக கட்டுரைத் தொடர் பகுதியில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையை சுட்டிக் காட்ட வேண்டும். சனாதன தர்மத்தை இந்துக்களுக்கான தர்மம் என்று ஆரியம் உரிமைக் கோருவது தவறு என்று சுட்டிக் காட்டுகிறது அந்த கட்டுரை. அதற்கு பெரியாரையே உதாரணமாக சுட்டிக் காட்டி உள்ளது. பெரியார் நாத்திக சிந்தனை கொண்டவர், புரோகித வர்க்கத்தின் சமூகக் கொடுமைகளை அவர் கேள்வி கேட்டார், மதத்தின் அடிப்படையில் ஒழுக்கங்கள் கட்டமைக்கப்படுவதை எதிர்த்தார்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்று முழங்கிய அவர், மாபெரும் சிந்தனையாளர். சமூகத்தில் சில பிரிவுகளை இழிவாக ஒதுக்கி வைப்பதை எதிர்த்து ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்க விரும்பினார்.அவரை எப்படி சனாதன எதிர்ப்பாளர்கள் பட்டியலில் கொண்டுவர முடியும் என்று கேட்கிறது அந்த கட்டுரை.

ஆன்மீகம் என்ற வடமொழிக் கருத்தாக்கம், சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையை குறிக்கிறது என்கிறார்கள். பெரியார் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை வாழ்க்கை முறையையும், சமத்துவ அறிவியல் சிந்தனையையும் வளர்த்தெடுக்க விரும்பினார். அனைத்து ஜாதியினருக்கும் அரச்சகராகும் உரிமை, கோயில் வழிபாட்டு உரிமை, தமிழில் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தினார். இதற்கு நேர்மாறாக ஆரிய பார்ப்பனியம் சூத்திரர்கள் என்று பெரும்பான்மை மக்களை அடிமைகளாக்கி அவர்கள் மீது திணித்த கல்வி மறுப்பு, உத்தியோகம் மறுப்பு, சம உரிமை மறுப்புகளை பெரியார் எதிர்த்தார். திராவிட உரிமைக்கு குரல் கொடுத்த பெரியார் சிந்தனைகளும் திராவிட ஆன்மீகம் தானே.

மக்களின் வாழ்வியலை பகுத்தறிவு, சுயமரியாதை, பெண், ஆண் சமத்துவம் என்ற பார்வையில் கட்டமைக்கிறது திராவிட ஆன்மீகம். குன்றக்குடி அடிகளார் அதைத்தான் செய்தார். பெரியாரும் அடிகளாரும் இந்த அடிப்படையில் தான் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டார்கள். ஆரிய ஆன்மீகம் பெரும்பான்மை மக்களை பிளவுபடுத்தி வெறுப்பை விதைத்து சமூக ஒற்றுமையை சீர்குலைக்கிறது. சமூக சமத்துவத்தைக் கோரும் திராவிட ஆன்மீகமே நமக்கானது. ஆரிய ஆன்மீகமான பாசிசம், மக்கள் விரோத கொள்கைகளை உள்ளடக்கியது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It