கி.வீரமணியின் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ தயாரித்த பெரியார் படம், தெலுங்கில் ‘ராமசாமி நாயக்கர்’ என்ற சாதிப் பெயருடன் வெளியிடப்படுவதை சுட்டிக்காட்டினோம். முதலில் ராமசாமி நாயக்கர் என்ற பெயரில், தெலுங்கில் வெளியிட சம்மதித்த கி.வீரமணி, நாம் எதிர்ப்பை தெரிவித்தவுடன், அதற்கு சமாதானம் கூறினார். இப்போது ‘நாய்க்கர்’ என்று சாதிப் பெயரைப் போட்டு, அந்தப் பெயரை அடித்தல் கோடு போட்டு வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இப்படி நாய்க்கர் பெயர் அடித்தல் குறியோடு வெளியிடப்பட்டிருக்கும் திரைப்பட சுவரொட்டியின் படத்தை ‘விடுதலை’ நாளேடு வெளியிட்டுள்ளது. (அதைத்தான் இங்கு வெளியிட்டுள்ளோம்)

ஒரு காலத்தில் பார்ப்பன பத்திரிகைகள், பெரியாரை ‘நாய்க்கர்’ என்றே குறிப்பிட்டு வந்தன. இதை “பார்ப்பன புத்தி” என்று ‘விடுதலை’ சாடி வந்தது. இப்போது பெரியார் பெயருக்கு அவர்களே சாதிப் பெயரை ஒட்டி வைக்கிறார்கள்.  1927 ஆம் ஆண்டிலேயே தனது பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கிக் கொண்ட தலைவர் பெரியார். (25.12.1927 ‘குடிஅரசு’ இதழிலிருந்து பெரியார் தனது சாதிப் பட்டத்தை நீக்கிக் கொண்டார்). இப்போது சாதிப்பெயரை அடித்தல் குறியோடு போடலாம் என்று சாதி ஒழிப்புக்கு புதிய அத்தியாயத்தை கி.வீரமணி தொடங்கி வைத்துள்ளார்.
 
ஓட்டல்களில் ‘பிராமணாள்’ பெயர் அழிப்புப் போராட்டம் நடத்தினார் பெரியார். இனி, ‘பிராமணாள்’ பெயரையும் அடித்தல் குறியோடு பார்ப்பனர்கள் போட்டுக் கொள்ளலாமா?
 
கி.வீரமணியும் தனது பெயரோடு சாதிப் பெயரை அடித்தல் குறியோடு போட்டு, இதுதான் சாதி ஒழிப்பு என்று கூறுவாரா? தனது தோழர்களும் அவ்வாறு போட்டுக் கொள்ளலாம், அதுவும் சாதி ஒழிப்புதான்; என்று அறிவிப்பாரா?
 
தமிழ்நாட்டில் பார்ப்பான் கூட பெயரோடு சாதி வாலை ஒட்டிக் கொள்ள வெட்கப்படும் காலம் இது!
 
ஆனால் வீரமணி - அதை புதிய பொலிவுடன் பெரியாருக்கே ஒட்ட வைக்கிறார்; வெட்கம்!

Pin It