வேத மரபை எதிர்த்த முன்னோடிகளில் ஒருவர் வைகுண்ட சாமிகள். கன்யாகுமரிக்கு அருகே பூவண்டன் தோப்பு எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ‘முடி சூடும் பெருமாள்’. ஆனால் அந்த காலத்தில் மன்னர்கள் அல்லது பார்ப்பன உயர்ஜாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை ‘தாழ்ந்த’ ஜாதியினராக கருதப்பட்டவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே இப்பெயர் வைத்தமைக்காக பார்ப்பனர், உயர்ஜாதியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்களும் பெயரை மாற்ற உத்தரவிட்டனர். வேறு வழியின்றி பெற்றோர்கள், பெயரை ‘முத்துக்குட்டி’ என்று மாற்றினர்.

• 1833இலிருந்து பொது வாழ்வில் இறங்கினார். தொடக்கத்தில் விஷ்ணு பக்தராக இருந்த இவர், தனது பெயரை ‘வைகுண்டர்’ என மாற்றிக் கொண்டார்.

• குமரிப் பகுதி அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது. ஜாதி வெறியோடு ஆட்சி நடத்திய அரசர்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினரை அடிமைகளாக நடத்தினர். அநியாயமாக வரி போட்டனர். மன்னனை எதிர்த்து துணிவோடு போராடினார் வைகுண்டர். 110 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

• நாடார் சமூகம்,  அப்போது ‘தீண்டப்படாதவர்களாக’ கருதப்பட்டது. ஒரு நாடார், நம்பூதிரி பார்ப்பனரிடமிருந்து 36 அடி தூரத்திலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திலும் நின்றுதான் சந்திக்க வேண்டும். பொதுச் சாலையில் நடக்க உரிமை இல்லை.

• கோயில்களில் நுழையும் உரிமை இல்லை. கோயில்களுக்கு அருகே பள்ளிகள், அரசு அலுவலகங்கள் இருந்தால் அங்கேயும் போக முடியாது. குடை பிடிக்கவோ, செருப்பு அணியவோ முடியாது. பெண்கள் ‘ரவிக்கை’ அணியும் உரிமையை மறுத்தார்கள்.

• இந்தக் கொடுமைகளை எதிர்த்து களமிறங்கிய வைகுண்ட சாமிகள், மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த ‘சமத்துவ சங்கம்’ ஒன்றை தொடங்கினார். ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் அதில் உறுப்பினர்களானார்கள். ஊர் ஊராகச் சென்று வேத வைதிக மரபுகளுக்கு எதிராக சமத்துவக் கொள்கைகளை பரப்பினார்.  

• கன்யாகுமரி மாவட்டத்தில் ஊர் தோறும் தனது கொள்கைகளைப் பரப்பிட ‘நிழல்தாங்கல்’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இது வழிபாட்டுத் தலமாகவும், கல்வி நிலையமாகவும், வைகுண்ட சாமிகளின் கருத்துகளைப் பரப்பும் மய்யமாகவும் செயல்பட்டது.

• கடவுளை சிலைகளுக்குள் அடைத்துவிட முடியாது என்று கூறிய அவர், தமது வழிபாட்டு முறையில் அர்ச்சகர்கள், உருவ வழிபாட்டை ஒதுக்கினார்.

• பேய்-பிசாசு-மாந்திரிக நம்பிக்கை - தமது மக்களிடையே தீவிரமாக பரவி இருந்ததை எதிர்த்தார். “பொய்யில்லை பிசாசுமில்லை, பில்லியின் வினைகளில்லை” என்று கூறினார்.

• கோயிலுக்குள்ளே நாடார் சமூகத்தைவிட மறுத்த புரோகிதர்கள், அவர்களின் காணிக்கையை இழக்கத் தயாராக இல்லை. எனவே தொலைவில் நின்று காணிக்கைகளை வீசவேண்டும்; பதிலுக்கு புரோகிதப் பார்ப்பனர்கள் இலையில் கட்டிப் பிரசாதத்தைத் தூக்கி வீசுவார்கள். இந்த இழிவை எதிர்த்து கோயிலுக்கு காணிக்கை வழங்காதீர் என்று வைகுண்டசாமி பரப்புரை செய்தார்.

“காணிக்கையிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ

வீணுக்குத் தேடு முதல் விருதாவில் போடாதுங்கோ”

- என்று காணிக்கைத் தருவதை ‘விருதா வேலை’ என்று பாமரர் மொழியில் எடுத்துச் சொன்னார்.

• அந்த காலங்களில் ஒரு நாடார் சமூக இளைஞனுக்கு 16 வயதில் தலையில் தலைப்பாகைக் கட்டி கையில் பிச்சுவா கத்தி கொடுப்பார்கள். பல இடைநிலை ஜாதியினரிடம் இந்த வழக்கம் உண்டு. அதேபோல் குடும்பத் தலைவர் இறந்ததும் அவரது மகனுக்கு தலைப்பாகைக் கட்டுவார்கள். இதற்கு ‘உறுமால் கட்டு’ என்று பெயர். இடைக்காலத்தில் பார்ப்பனர்கள் உயர்ஜாதியினர் இந்த உரிமையை நாடார் சமூகத்துக்கு மறுத்தனர். சுமை தூக்கக்கூட தலைப்பாகை அணிய அனுமதிக்க வில்லை. ‘சுடுமாடு’ எனும் பெயரில் வைக்கோலை மட்டும் தலையில் வைக்க அனுமதிக்கப்பட்டனர். வைகுண்டர் வெகுண்டெழுந்தார். தன்னை சந்திக்க வருவோர் தலைப்பாகையுடன் தான் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். இப்போதும் அவரது இயக்கத்தினர் தலைப்பாகை அணிந்து வழிபடும் முறையை பின்பற்றுகிறார்கள்)

• ஒடுக்கப்பட்ட ஜாதியினர் ஓட்டு வீடு, மாடி வீடு கட்ட வேத புரோகித கூட்டம் அனுமதி மறுத்தது. வைகுண்ட சாமிகள் ஒரே திசையில் முன் கதவு வைத்த வீடுகளை அடுத்தடுத்து கட்டுமாறு கூறி, ‘சமதர்ம குடியிருப்பை’ உருவாக்கினார்.

• தனது சீடர்களை பல்வேறு ஊர்களுக்கு  அனுப்பி, ‘தீண்டப்படாத’ ஜாதியினர் வீட்டில் உணவு அருந்த பணித்தார். தனது சொந்த ஊரில் அனைத்து ஜாதியினரும் பயன்படுத்தும் பொதுக் கிணற்றை வெட்டினார்.

• முகாம் நடத்தி, மக்களுக்கு சமத்துவ-வேத மறுப்பு கருத்துகளைப் பயிற்றுவித்தார். அங்கு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. ‘துவையல் பந்தி’ என்று அதற்குப் பெயர்.

• பார்ப்பனப் புரோகிதர்களையும் மன்னர்களையும் ஒரே நேரத்தில் துணிவுடன் எதிர்த்து நின்றவர். வைகுண்ட சாமிகள், “பிராமணர்களை பயம் காட்ட நாம் வருவோம்” என்று அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். புரோகிதத்தை ‘வேடம்’ என்றார். “பிராமண வேசம் போட பக்தன்மாரே நீங்கள் உண்டு” என்று துணிவுடன் கூறினார். கிறிஸ்துவ மதமாற்றத்துக்கு இவரது இயக்கம் தடையாக இருந்ததால் கிறிஸ்துவ நிறுவனங்களும் இவரை எதிர்த்தன.

• தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்களை துணிவாக ஜாதித் தடைகளை எதிர்த்து தோள் சேலை (ரவிக்கை) அணியுமாறு வற்புறுத்தினார். அவரது மறைவுக்குப் பிறகு இந்து, கிறிஸ்துவ நாடார் இரு பிரிவினர் இணைந்து, ‘தோள் சீலை’ உரிமைப் போராட்டத்தை நடத்தினர். 1859இல் நாடார் பெண்களுக்கு ‘தோள் சீலை’ அணியும் உரிமையை திருவிதாங்கூர் அரசு வழங்கியது. மக்களின் தொடர் போராட்டம் காரணமாக 1865இல் ஏனைய ஒடுக்கப்பட்ட ஜாதி பெண்களுக்கும் இந்த உரிமை கிடைத்தது. 1851இல் வைகுண்டசாமி காலமானார்.

Pin It