பண்டைக்காலம் தொடங்கி தமிழர்கள் பூர்வீக நிலம்விட்டுப் புலம்பெயர்தல், இன்றுவரை இடைவிடாமல் தொடர்கிறது. பொருள், பஞ்சம், போர், வேளாண்மை, வேட்டை போன்றவற்றுடன் உணவு தேடல் இடம் பெயர்தலில் முக்கிய காரணமாகும். ஆங்கிலேயரின் காலனியாதிக்கக் காலகட்டத்தில் வறுமை, தீண்டாமை காரணமாகத் தமிழகத்தைவிட்டு மலேஷியா, மொரிஷியஸ், டச்சுக் கயானா, இலங்கை, பர்மா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த விளிம்பு நிலையினரான தமிழர்களின் அனுபவங்கள் நூல் வடிவம் பெறவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்திற்குள்ளும்  வெளியிலும் பயணித்த கல்வியறிவு பெற்றவர்களின் அனுபவங்கள் கட்டுரைகளாகியுள்ளன. 

இத்தகைய பயணக் கட்டுரைகளுக்கு முன்னோடியாக வடஇந்தியாவிற்குப் பயணித்த கோயம்புத்தூரைச் சேர்ந்த சே.ப. நரசிம்மலு நாயுடு, தனது பயண அனுபவங்களை 'ஆரியர் திவ்ய தேச யாத்திரையின் சரித்திரம்' என்ற பெயரில் 1889 ஆம் ஆண்டு விரிவான நூலாக எழுதியுள்ளார். அந்த நூலின் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 1913 ஆண்டில் வெளியாகியுள்ளது. தமிழில் இதுவரை பிரசுரமாகியுள்ள பயண இலக்கிய நூல்களின் காலத்தை ஒப்பிட்டு ஆராய்ந்தால் ‘ஆரியர் திவ்ய தேச யாத்திரையின் சரித்திரம்' நூல்தான் காலத்தினால் முந்தையது. அந்த வகையில் சே.ப. நரசிம்மலு நாயுடு அவர்களைத் தமிழ்ப் பயண இலக்கியத்தின் தந்தை என்று கவிஞர் சிற்பி குறிப்பிட்டிருப்பது பொருத்தமானது.

arya divya desa yaaththiraiyin sariththiram1885ஆம் ஆண்டில் பம்பாயிலும் 1886ஆம் ஆண்டில் கல்கத்தாவிலும் நடைபெற்ற காங்கிரஸ் சபைகளில் பங்கேற்பதற்காகப் பயணித்த நரசிம்மலு நாயுடு தனது பயண அனுபவங்களைத் தொகுத்து ஆரியர் திவ்ய தேச யாத்திரையின் சரித்திரம் என்ற பயண நூலை 1889ஆம் ஆண்டில் பிரசுரித்துள்ளார்.   1913இல் வெளியான இந்நூலின் இரண்டாம் பதிப்பில் 1911 டிசம்பர் 11-இல் டில்லியில் நடைபெற்ற ஜார்ஜ் சக்கரவர்த்தியின் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகள் விரிவாக இடம் பெற்றுள்ளன. கல்கத்தாவிற்குச் செல்லும் வழியிலும் திரும்பி வரும் வழியிலும் பார்த்த ஊர்களையும் கோவில்களையும் வரலாறு, புராணக் கதைகள் சார்ந்து நரசிம்மலு நாயுடு தந்துள்ள பயணக் குறிப்புகள், தகவல்களின் களஞ்சியமாகும்.

பிறப்பு, பால் அடிப்படையில் மேல் X கீழ் எனப் பிரித்துத் தீண்டாமையை வலியுறுத்துகிற சநாதன தர்மத்தினை ஏற்றுக்கொண்ட நரசிம்மலு நாயுடு எழுதியுள்ள 'ஆரியர் திவ்ய தேச யாத்திரையின் சரித்திரம்'  என்ற பயண நூலினை வாசிக்கும்போது, முதலில் எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. அன்றைய காலகட்டத்தில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் பொருட்படுத்தாமல், நிலவும் சமூகச் சூழலில் பிராமணர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு எழுதியுள்ள பயணக் குறிப்புகள் குறித்து எதிர் மறையான விமர்சனம் தோன்றியது. இன்னொருபுறம் ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சியினைப் புகழ்ந்து விலாவாரியாக எழுதியுள்ள போக்கு, நரசிம்மலு நாயுடுவை ஆங்கிலேயரின் அடிவருடியாகச் சித்திரிக்கிறது.

எனினும், அன்றைய காலகட்டத்தில் பம்பாய் நகருக்குச் சென்று நூற்பாலைகளைப் பார்வையிட்ட நரசிம்மலு நாயுடு, கோவையில் ஆங்கிலேயரின் உதவியுடன் நூற்பாலைகள் நிறுவினார் என்ற தகவல், அவருடைய சமூக அக்கறையின் செயல் வடிவமாகும். சர்க்கரை ஆலை, காகித உற்பத்தி ஆலை போன்ற தொழில்களைத் தமிழகத்தில் நிறுவிட அவருடைய பயண அனுபவங்கள் பயன்பட்டுள்ளன. நரசிம்மலு நாயுடு கொங்கு வட்டார மக்களின் நலனுக்காகச் சிறுவாணி குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயலாற்றியுள்ளார். பத்திரிகைகளின் ஆசிரியர், புத்தகங்களின் ஆசிரியர், பிரம்ம சமாஜி, சமூக சீர்திருத்தவாதி, காங்கிரஸின் ஆதரவாளர் எனப் பல்வேறு நிலைகளில் செயல்பட்ட நரசிம்மலு நாயுடு பன்முக ஆளுமையாளர்.

அன்றைய காலகட்டத்தில் புகைவண்டி என அழைக்கப்பட்ட ரயில் வண்டியிலும், எக்கா என்ற குதிரை வண்டியிலும், கால்நடையாக நடந்தும் பல்வேறு இடங்களுக்குச் சென்ற நரசிம்மலு நாயுடு தனது வடஇந்தியப் பயணத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். சைவ உணவுப் பழக்கம் காரணமாக வங்காளத்தில் மரக்கறி உணவு தேடியலைந்து பட்டினியுடன் தூங்கியுள்ளார். சென்ற இடங்களில் தங்குவதற்கு வசதியான சத்திரங்கள் இல்லாமலும், கழிப்பிட வசதியற்ற சூழலிலும் கடுமையான பனிப் பொழியும் டிசம்பர் மாதக் குளிரில் நடுங்கியவாறு பயணித்துள்ளார். எனினும், எதிர்காலத்தில் பயணிக்கிறவர்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார். பயணம் செல்லும் வழித்தடங்கள், புகை வண்டி புறப்படும் நேரங்கள், ரயில் நிலையத்தின் வசதிகள், ரயில் கட்டணங்கள், எக்கா என்ற குதிரை வண்டிச் சத்தம், தங்கும் சத்திரங்கள், உணவு வகைகள், நகரங்களின் இன்றைய நிலை, முக்கியமான அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், கோவில்களின் கட்டடச் சிறப்புகள், சுற்றுலா தளத்தின் சிறப்புகள் என நூல் முழுக்கத் தகவல்கள்  ததும்பி வழிகின்றன. நகரத்தின் வரலாறு, பூர்வீகக் கதை, புராணச் செய்திகள், தொன்மக்கதைகள், தொழில்வளம், கைவினைப் பொருட்கள், வேளாண்மை, மக்களின் பொருளாதார நிலை போன்ற தகவல்கள் மூலம் நகரம் பற்றிய முழுமையான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நகரத்தின் மக்கள் தொகை, வரிகள் மூலம் கிடைக்கும் வருமானம், கோவில்களின் ஆண்டு வருமானம், குறிப்பிட்ட நகரத்திற்கும், அருகில் இருக்கிற நகரங்களுக்கும் இடையிலான மைல்கள் போன்ற பல்வேறு புள்ளிவிவரங்களைப் பயண நூலில் நரசிம்மலு நாயுடு தாராளமாக அளித்திருக்கிறார்.

வடஇந்தியாவில் இருக்கிற கோவில்கள், கடவுள்களின் லீலைகள் குறித்துப் புனைந்துரைக்கப்பட்ட கதைகளை உண்மை என்று நம்புகிற நரசிம்மலு நாயுடு, அங்கே கடவுளின் பெயரால் நடைபெறுகிற சம்பவங்களையும் அப்படியே பதிவாக்கியுள்ளார். புனித ஸ்தலங்களில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள், சிரார்த்தம்,  பிதுர் கர்மச் செயல்கள் என்று அங்கே வருகிற பக்தர்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான பிராமணர்கள் சம்பாதிக்கிற பணம் குறித்த பதிவுகள் முக்கியமானவை. வைதிக சமயம் இன்றளவும் பல்வேறு இந்து மத அடிப்படைவாத அமைப்புகளின் மூலம் மீண்டும் மீண்டும் தனது மேலாதிக்கத்தை வலுவாக நிறுவிட முயலுவது, வலுவான பொருளியல் பின்புலம் சார்ந்தது என்பதற்கான ஆதாரங்கள் நரசிம்மலு நாயுடுவின் எழுத்தில் பதிவாகியுள்ளன.

வைதிக சமயம், காலந்தோறும் இந்தியா முழுக்கப் பல இடங்களைப் புனித ஸ்தலங்கள் என்று புராணங்களை முன்வைத்துப் புனைவைக் கட்டமைத்துத் தொன்மக் கதையாடலை உருவாக்கியிருக்கிறது.  19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயக் காலனியாதிக்கக் காலகட்டத்திலும் ஆறுகளில் குளிப்பதைப் புண்ணியமான செயலாகப் போதித்ததுடன், நீர்நிலைக் கரைகளில் இறந்த முன்னோர்களுக்குத் திதி செய்தல் முக்கியமானது என்ற எண்ணம் உயர்சாதி இந்துக்களிடையே ஆழமாகப் பரவியிருந்தது. சுத்தம் X அசுத்தம் என்ற கோட்பாட்டில் உடல்கள்மீது நிகழ்த்தப்பட்ட வினைகளுடன், எதிர்காலத்தில் சொர்க்கம் அடைவதற்கான வழியிடங்களாகக் கோவில்கள், குளங்கள், ஆறுகள் முன்மொழியப்பட்டன. வைதிக சமயம் முன்னிறுத்துகிற பாவம், புண்ணியம், மோட்சம், புராணங்கள் போன்றவைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனோபாவம் நரசிம்மலு நாயுடுவுக்கு இருந்தது. எனினும் இந்து சமய சீர்திருத்த அமைப்பான பிரம்ம சமாஜக் கொள்கையில் ஈடுபாடுகொண்டு செயல் பட்டதனால், நரசிம்மலு நாயுடு பெண் கல்வி, விதவை மறுமணம் போன்றவற்றில் அக்கறை கொண்டிருந்தார். இதனால்தான் கோவிலை முன் வைத்துக் காலங்காலமாகப் பெண்களுக்குச் செய்யப்படுகிற அக்கிரமங்களைத் தனது பயண நூலில் பதிவாக்கியுள்ளார்.

கங்கை நதிக்கு மேற்கில் அமைந்திருக்கிற காசி நகரமானது பத்து மைல்கள் சுற்றளவு கொண்டதாகவும், ஆற்றங்கரையோரம் கணக்கற்ற நீராடும் துறைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கங்கையின்  நீராடு துறை குறித்த விவரிப்புகள் குறிப்பிடத்தக்கன. அசி முதல் வருணை வரைக்கும் ஆயிரம் இரண்டாயிரம் பிராமணர்கள் வரையில் அந்தக் கட்டங்களில் விசுபலகைகளைப் போட்டுக்கொண்டு உபசார திரவியங்களான சந்தன, புஷ்ப, விபூதி, கோபி சந்தனங்களை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களன்னியில் கெங்காபுத்திரர்கள், டானியர் என்ற பஞ்ச திராவிட பஞ்ச கெவுடாள் முதலான பிராம்மண யாசகர்கள் பத்துப்பதினையாயிரம் வரையில் இருக்கிறார்கள். இந்தக் கட்டங்களில் எங்குப் பார்த்தபோதிலும் ஆயிரக்கணக்கான ஸ்நானம் செய்கிறவர்களும், சங்கற்பம் செய்கிறவர்களும், சுவாமி தரிசனத்திற்கு உயர்ந்திருக்கும் படிக்கட்டுகளில் ஏறிப்போகப்பட்டவர்களும் இறங்கிப் போகப்பட்டவர்களுமான ஜனங்களின் காட்சி வெகு விநோதமாக இருக்கிறது. காசியின் சிறப்புகளை விவரிக்கும்போது நரசிம்மலு நாயுடுவின் மனம் பக்தி வெள்ளத்தில் ததும்புகிறது

நரசிம்மலு நாயுடு காசியில் எங்குத் திரும்பினாலும் ராண்டி, சாண்டி, படீல் ஆகிய மூன்று விதமான கஷ்டங்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டு உள்ளார். அவருடைய வரிகள் பின்வருமாறு: 'ராண்டி என்பன விதவைகள். அதாவது இந்தக் காசி சேத்திரம் மஹா புண்ணிய ஸ்தலமாகையால், இவ் விடத்தில் வந்து கங்கா ஸ்நானம் செய்தும், விசுவேசுவரருடைய தரிசனம் செய்தும் காலங்கழித்தால், இன்னுமொரு ஜன்மத்துக்காவது அழியாத சுமங்கலியாக இருக்கலாமென்று புராண விதி இருப்பதால், குவாலியூர், டில்லி, காஷ்மீரம், குஜராத்தி, பூனா, சத்தார் முதலான தேசங்களின் பால்ய விதந்து ஸ்திரீகள் பிதாமாதாக்களிடம் சொல்லிக்கொள்ளாமலும், அண்ணன், தம்பி மனைவிமாருடன் சண்டையிட்டுக் கொண்டும், இந்தக் காசிக்கு ஓடிவந்து விடுகிறார்கள். இப்படி வரும் அனாதரவான ஸ்திரீகள் இந்தக் காசிக்கு வந்தவுடன் பண்டாக்கள் என்னும் கங்கா புத்திரர்கள் கையில் சிக்க, அவர்கள் பிதுர், பர்த்தா சிரார்த்தங்களைச் சிலநாள் வரையில் செய்வித்து, பிறகு கெட்ட நடவடிக்கைகளுட்படுத்தி விபசாரிகளாக்கியும், தமது மனைவி மக்களுக்கு வேலைக்காரிகளாக்கியும் விடுகிறார்கள்...” காசி புண்ணிய சேத்திரமாகையால் விபச்சாரத்தைக் குற்றமாகப் பார்க்கக்கூடாது என்று சொல்வதைக் கேள்விக்குள்ளாக்கிடும் நரசிம்மலு நாயுடு, இந்தக் கெட்ட வழக்கத்தைக் கட்டாயமாகத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இளவயதில் சிறுமிக்குத் திருமணம் செய்துவைத்து, அவளுடைய கணவனான சிறுவன் திடீரென இறந்து போனால், அவளை விதவை என ஒதுக்கி வைத்துக் காலம் முழுக்க அடக்கியடுக்குவது இந்தியாவில் பரவலாக நடைபெற்றது. இயற்கையாக உடலில் தோன்றும் பாலியல் வேட்கையை மறைத்துக் கொண்டு, அமங்கலமாக வாழ்வதைவிட காசி போன்ற இடத்திற்குச் சென்று விபச்சாரியாக வாழ்வது மேல் என்று இளம் விதவைகள் வீட்டை விட்டுக் கிளம்பினரா? யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவாக வைதிக சமயம் உடல், பூமி எல்லாவற்றையும் மாயை எனப் போதித்துக்கொண்டு, பெண்ணுடல்களை ஆண்களுக்கான கேளிக்கையாக மாற்றுவதை ஏற்றுக் கொள்கிறது. இதனால்தான் புண்ணிய சேத்திரங்கள் எனப் போற்றப்பட்ட இடங்களில் எல்லாம் விபச்சாரம் பெரிய அளவில் நடைபெற்றது.  அடுத்த பிறவிக்குப் புண்ணியம் தேடி காசிக்கு வந்த இளம் விதவைகளை விபசாரிகளாக்குகிற அவலநிலை குறித்து வருந்துகிற நரசிம்மலு நாயுடுவின் மனிதநேய நோக்கு, உன்னதமானது.

அயோத்தி பட்டணத்திற்குச் சென்ற நரசிம்மலு நாயுடு அங்கே பெரும்பாலான கட்டடங்களும் வீடுகளும் சேத்திரங்களாக இருக்கின்றன என்கிறார். அதாவது ராமர் பிறந்த இடம், வசித்த இடம், விளையாடிய இடம், குதித்த இடம், தாயைக் கண்ட இடம் எனப் பல்வேறு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒரு கோவிலில் சுமார் ஐந்து முழ நீளமும், நான்கு முழ அகலமும் பூமிக்குமேல் ஐந்தாறு அங்குல உயரமுள்ள கல்லுக்குச் சுண்ணாம்பு அடித்து, அதை ஸ்ரீராமர் பிறந்த இடமாகக்கொண்டு பூஜை செய்து வருகிறார்கள். ராமர் ஜன்ம பூமி என இன்று நடத்தப்படுகிற இந்து மத அடிப்படைவாத அரசியலும், அன்றைய காலகட்டத்திலே ராமர் பிறந்த இடம் என்ற நம்பிக்கையும் வேறுபட்டவை.  

கோவையில் வசித்த நரசிம்மலு நாயுடு, 1985, டிசம்பர் மாதம்27-30 நாட்களில் பம்பாய் நகரில் நடைபெற்ற முதலாவது காங்கிரஸ் சபைக் கூட்டத்தில் தமிழகத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். சென்னையில் இருந்து 1885, டிசம்பர் 24-ஆம் தேதியன்று இரங்கய்ய நாயுடு, இரகுநாத ராயர், எஸ்.சுப்பிரமணிய அய்யர், ராவ் பகதூர் அனந்தாசார்லு உள்ளிட்ட இருபத்தோரு பிரதிநிதிகளுடன் நரசிம்மலு நாயுடுவும் சேர்ந்து பம்பாய் நகருக்குச் சென்றார். அங்கு அவர் காங்கிரஸ் அமைப்பை நிறுவிய ஹெச்.ஹியூம் என்ற ஆங்கிலேயரைச் சந்தித்து உரையாடினார்.

ஹியூமை மகாத்மா எனப் போற்றுகிறவர், பம்பாய்த் தலைவர்களான தாதாபாய் நவரோஜி, காசிநாத் டிம்பத் திலாங்கு பெரோஷ்ஷா மேத்தா போன்ற தலைவர்களையும் சந்தித்துள்ளார். டிசம்பர் 28 ஆம் தேதியன்று உமிஸ் சந்திர பானர்ஜி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட நான்கு தீர்மானங்களைப் பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. தமிழகத்தில் இருந்து பம்பாய் சென்று முதல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், மாநாட்டு நடவடிக்கைகள், கராச்சி, சூரத், பூனா, கல்கத்தா, ஆக்ரா, காசி, லக்னோ, லாகூர் ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகளின்  பெயர்கள் என நரசிம்மலு நாயுடு  தந்துள்ள பட்டியல், அவருடைய வரலாற்று அணுகுமுறைக்குச் சான்றாகும்.

பம்பாய் நகரத்தின் அழகிய கட்டடங்கள், கடைவீதிகள், நாடகசாலைகள் போன்றவற்றைக் கண்டு பிரமிப்பு அடைந்த நரசிம்மலு நாயுடு, அதன் சிறப்புகளைப் பதிவாக்கியுள்ளார்.  கர்மகாத  காகித தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்த நாயுடு அங்கிருக்கிற நூற்பாலைகளையும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. பின்னர் அவர் கோவையில் நூற்பாலை உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடங்குவதற்குப் பம்பாய் பயணம் நிச்சயம் உதவியாக இருந்திருக்கும்.  

கல்கத்தா நகரில் 1886, டிசம்பரில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மகாசபைக்குத் தமிழகத்தின் பிரதிநிதியாக நரசிம்மலு நாயுடு கலந்துகொண்டார். "...கி.பி.1886 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியாகிய பானுவாரம் பகல் (மேட்டுப்பாளையத்திலிருந்து) கோயமுத்தூருக்கு வரும் பகல் இரண்டே முக்கால் மணி மெயில் புகைவண்டியில் சம்சார சமேதராக ஏறினோம்" எனத் தனது பயணம் தொடங்கியதைக் குறிப்பிட்டுள்ளார். 1887 பிப்ரவரி 25 ஆம் நாள் மீண்டும் கோவைக்குத் திரும்பும் வரையில் பயணத்தை முன்வைத்து நரசிம்மலு நாயுடு தனது எண்ணங்களை எழுதியுள்ளார். அவர் தினசரி எதிர்கொண்ட அனுபவங்களையும் சம்பவங்களையும் குறித்து வைக்கிற பழக்கமுடையவராதலால், பின்னர் பயணக் கட்டுரை எழுதும்போது விரிவான தகவல்களைத் தந்துள்ளார். கல்கத்தா காங்கிரஸ் சபையில் தமிழகத்தில் இருந்து  ஜி.சுப்பிரமணிய அய்யர், அரங்கநாத முதலியார், ரங்கய்ய நாயுடு, கனம் சுப்பிரமணிய அய்யர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கனம் ஹியூம், மே.நயிட்டு, காட்டன் போன்ற ஆங்கிலேயர்களும் காங்கிரஸ் செயல்பாடுகளில் ஆர்வத்துடன்  ஈடுபட்டிருந்த தகவலும் பதிவாகியுள்ளது. தாதாபாய் நவரோஜி, ரஜா உசேன்கான், அயோத்தி நவாப், பண்டிட் சிவநாத் சாஸ்திரி, மன்மோஹன் கோஸ், இராஜ இராஜேந்திர நாராயண தேவ், லாகோர் என நீளும் பட்டியல்மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டவர்களை அறிந்திட முடிகிறது. வெள்ளைக்காரத் துரைமார்களும், பங்களா பிரபுக்களும், ஜமீந்தார்களும், படிப்பாளிகளும், பட்டவர்த்தனர்களும் நிரம்பிய காங்கிரஸ்  என்று அறிய முடிகிறது.            .    

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஏழாவது தீர்மானம்தான் மிகவும் முக்கியமானது. அது பின்வருமாறு: கவர்ன்மெண்டு பரி¬க்ஷயில் சம்ஸ்கிருதமும், அரபி பாஷையும் கலந்து இந்த இந்து தேசத்திலேயே, சீமையிலிருப்பது போலவே ஒரே காலத்தில் பரி¬க்ஷ நடத்தித் தேறினவர்களுக்குப் பெரிய உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டுமென்றும், அந்தப் பரி¬க்ஷக்கு 19 - முதல் 23 -வரைக்கும் வயதை உயர்த்த வேண்டுமென்றும் கவர்ன்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் பாபு நரேந்தரநாத் பானர்ஜி அவர்கள் பிரேரேபிக்க ஆனரெபில் சுப்பிரமணியம் ஐயர் அவர்கள் ஆமோதிக்க சர்வசம்மதமாக அங்கீகரிக்கப்பட்டது. மன்னராட்சிக் காலத்தில்  சம்ஸ்கிருத மொழியிலான ‘வேதத்தை ஓதுதல் பார்ப்பனரின் குலத்தொழில்’ என விதி வகுத்த மநு தரும சாஸ்திரத்தின் மூலம்,  சாதிய வரிசையில் முதன்மையிடத்தில் இருந்த பிராமணர்கள், இந்தியாவில்  ஆங்கிலேயக் காலனிய ஆதிக்கம் ஏற்பட்டவுடன், அதற்கு அடிபணிந்ததுடன், அரசு இயந்திரத்தில் உயர்பதவி வகித்திட மீண்டும் சம்ஸ்கிருதத்தை முன்னிறுத்தியது, அரசியல் சூழ்ச்சியாகும்.

சமூக அடுக்கின் உச்சியில் தங்களுடைய இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்த பிராமணர்களின் தந்திரமும் கபடமும் தான், சம்ஸ்கிருத மொழியில் அரசாங்க உயர் அலுவலர் தேர்வுகளை நடத்திட வேண்டுமெனத் தீர்மானத்தைக் காங்கிரஸ் மாநாட்டில்  நிறைவேற்றி, இங்கிலாந்து மகாராணியாருக்கு அனுப்பியதன் அடிப்படையாகும். இந்தியாவில் மக்களிடையே வழக்கினில் இருக்கிற தமிழ், வங்காளம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைப் புறந்தள்ளிவிட்டு, வழக்கொழிந்த சம்ஸ்கிருத  மொழியில் அரசின் தேர்வுகள் நடத்திட 1886 ஆம் ஆண்டில் தீர்மானம் இயற்றிய பிராமணர்களின் வாரிசுகள், இன்றளவும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அடிப்படைவாத அமைப்புகளின் வடிவில் வெளிப்படுகின்றனர். சம்ஸ்கிருதம் என்ற மொழியை வைத்துக்கொண்டு பிராமணர்கள் இரண்டாயிரமாண்டுகளாக இந்தியாவெங்கும் செய்துவருகிற ஆதிக்க அரசியலின் வெளிப்பாடுகள், வெவ்வேறு வழிகளில் தொடர்கின்றன.

1911 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று டில்லி நகரில் ஆங்கிலேய ஜார்ஜ் சக்கரவர்த்தி மகுடாபிஷேகம் செய்துகொண்டபோது, இந்தியாவின் தலைநகரமானது கல்கத்தாவிலிருந்து டில்லி என மாற்றப்பட்டது. டில்லியில் நடைபெற்ற தர்பார் காட்சிகளை நேரில் கண்டு வியந்த நரசிம்மலு நாயுடு, ஒவ்வொரு சின்ன நிகழ்வையும் முக்கியமானதாகக் கருதிப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து வந்து, இந்தியாவைக் காலனியாக்கி, அரசாண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள், தங்களுடைய பொருளியல் நலனுக்காகக் கொண்டாடிய மகுடாபிஷேக விழாவை நரசிம்மலு நாயுடு தனது எழுத்தின் மூலம் போற்றியுள்ளார்... ஐரோப்பாவில் இருந்துவந்த இந்தியர்களை அடிமைகளாக்கி ஆள்கிற ஆங்கிலேயரின் அதிகாரத்தை அப்படியே ஏற்கிற நரசிம்மலு நாயுடுவுக்கு ஏன் சிறிய அளவில்கூட முரண் தோன்றவில்லை என்பது முக்கியமான கேள்வி. டில்லி தர்பார் என நரசிம்மலு நாயுடு உணர்ச்சிவயப்பட்டு எழுதியதற்கான காரணம் புலப்படவில்லை. அன்றைய கால கட்டத்தில் சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்களும் ஜமீந்தார்களும், பெரிய நிலப்பிரபுக்களும், மிட்டாமிராசுதாரர்களும் ஆங்கிலேயருக்குத் துதி பாடிய வழியில் சென்றுள்ள நரசிம்மலு நாயுடுவை, இராஜ விசுவாசி என்று குறிப்பிடுவது பொருத்தமானது.

நரசிம்மலு நாயுடு தான் சென்ற இடங்களில் அங்கு வாழ்கிற மக்களின் நடை, உடை, பாவனைகள் போன்றவற்றைப் பதிவு செய்துள்ளார். பிரயாகை என்னும் அலகாபாத் நகரில் வசிக்கிற மக்களின் தோற்றம், ஆடைகள் பற்றிய நரசிம்மலு நாயுடுவின் வருணனை குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில் ஹிந்துக்கள், மகம்மதியர்கள் என்னும் வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டம். பஞ்ச கவுட பிராமண புருஷர்களுடைய நடையுடை பாவனைகள் மகம்மதியர்களைப் போலவே இருக்கிறதன்றியில், இந்துஸ்தானி பாஷையையே பொதுவாக வழங்கி வருகிறார்கள். இந்தப் பஞ்ச கவுடர்களுடைய ஸ்திரீகள் ரவிக்கைகளைப் போடாவிட்டாலும், முக்காடு இல்லாமல் வெளியே வருகிறதில்லை. ஆறு முழ நீளமும் நான்கு முழ அகலமுள்ள செங்காவித் துணிகளைக் கட்டிக்கொள்கிறார்கள்.

பெரும்பான்மையான ஸ்திரீகள் சுந்தரவதிகளாய் அதிக அழகாக இருந்தாலும், அவர்களுடைய உடைகளை அழுக்கு இல்லாமல் சுத்தமாக வைப்பது அபூர்வமாகையால், அவர்களுடைய அழகை அழுக்குத் துணிகள் கெடுத்து விடுகின்றன. கல்கத்தாவில் வசிக்கிற வங்காளிகளின் தோற்றம் பற்றிய வருணனை சுவாரசியமானது: வங்காள பாபுகள் பார்வைக்கு அழகும் சுத்தியானவர்களுமல்ல, பெரும்பான்மையோர் தென்தேசத்துச் சட்டைக்காரரைப்போல பூட்சும் சல்லடமும் ஒரு அரைச் சொக்காயும் மாட்டிக்கொண்டும் தலைமயிரை கத்திரித்துக்கொண்டும் தாடி மீசைகளை வைத்துக் கொண்டும் விகாரமாக இருக்கிறார்கள். ஸ்திரீகள் உயரத்தில் குறைந்து குண்டு (எலுமிச்சம்) பழங்களைப் போல ஒருவித அழகாக இருந்தாலும் அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் புடவை பன்னிரண்டு முழமுடையதாகையால், அந்தப் பன்னிரண்டு முழமுள்ள வெள்ளைப் புடவையை இடுப்பிற் கட்டி முக்காடு போட்டுக்கொண்டால் இயற்கையாக இருக்கும் அழகும் குறைந்து விகாரமாகக் காணப்படுகிறார்கள்.

கல்கத்தா நகரில் ஸ்டார் தியேட்டர்  நடனத்துக்குச் சென்றுவிட்டு தங்குமிடத்திற்குத் திரும்புகிற வழியில் நரசிம்மலு நாயுடு சென்ற வண்டி, களிங்க பஜார் ரோடு வழியாக வந்தது. சுமார் இரண்டு மைல்  நீளமுள்ள அந்த ரோட்டில் அவர் கண்ட காட்சி பின் வருமாறு: அந்த ரோட்டில் வங்காள, நேபாள, பர்மா, மஹாராஷ்டிர, குஜராத்தி முதலான இத்தேசத்து தாசிவேசிகள் பொம்மைகளைப் போலச் சிங்காரித்துக் கொண்டும்; இட்டாலி, துர்க்கி, பிரான்ஸ், இங்கிலீஷ் முதலான தேசங்களின் கெட்டுப்போன வேசிஸ்திரீகள் தேவலோக ரம்பைகளைப்போல் சிங்காரித்துக் கொண்டும்; தங்களுடைய ஐந்தடுக்கு மெத்தை வீடுகளில் பலவித விளக்குகளையும், துணிமணிகளையும், சோப்பா, டீப்பாய்களையும் போட்டுக் கொண்டும், வீதி வாசல்களில் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டும். அந்த வீதியில் நடக்கப் பட்டவர்களைப் பார்த்து 'பாஞ்சுரூபியா ஆவ்’ என்று கூப்பிட்டும், ஒண்டிசண்டியாகப் போகப்பட்டவர்களைக் கைப்பிடித்து இழுத்தும், வம்புகள் செய்து வருகிறார்கள். இந்த வீதியில் நடப்பதற்கும் வண்டி சவாரி செய்வதற்கும் எப்படிப்பட்டவர்களும் பயப்படுவது சகஜமாம். இந்த வீதியில் போகப்பட்டவர்களுடைய மனது கெட்டுப் புத்திமயங்கிப் போவார்களென்பதற்குச் சந்தேகமேயில்லை. ஆங்கிலேயரின் காலனியாதிக்க காலகட்டத்தில் இந்தியப் பெண்கள் மட்டுமின்றி, அந்நிய தேசத்தில் இருந்து சீரழிந்துபோன பெண்களும் இரண்டு மைல் நீளமுள்ள வீதியில் தாராளமாக விபச்சாரம் செய்தனர் என்பது அன்றைய காலகட்டத்தில் பெண்களின் அவலநிலைக்கு எடுத்துக்காட்டு.

கோவிலை முன்வைத்து நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி நரசிம்மலு நாயுடு குறிப்பிடும் சில தகவல்கள் கவனத்திற்குரியன. அவை  பின்வருமாறு:

யாத்திரைக்காரர் கார்த்திகை மாதம் சுமார் 12 மைல் சுற்றளவுள்ள கோவர்த்தன மலையைச் சுற்றி தண்டாவதி பரிகர்மா என்ற உற்சவத்தைக் கொண்டாடுகின்றனர். பூர்வ ஜன்மத்தில் செய்த பாவத்தைப் போக்கிட தரையில் கீழே விழுந்து கோடு கிழித்த பிறகு அந்தக் கோட்டிலிருந்து மறுகோடுவரை தண்டால் செய்கின்றனர். இப்படியே இடைவிடாமல் ஒரு வாரம் செய்து மலையை வலம் வருகின்றனர். இத்தகைய  கஷ்டமான பிரார்த்தனையைச் செய்திட முடியாத பணக்காரர்கள், அங்கிருக்கிற பிராமணர்களுக்கு ரூ.50 அல்லது 100 கொடுத்துத் தங்களுக்குப் பிரதிநிதியாகச் செய்யச் சொல்லி தங்கள் பாவத்தைப் போக்கிட முயலுகிறார்கள்.

பூரி கோவில் ரத உற்சவத்தின்போது, சிலர் மூட பக்தியினால் ரதச் சக்கரத்தின் முன்னர் விழுந்து சாகிறார்கள். அப்படி இறக்கிறவர்கள் நேராக வைகுண்டம் போகிறார்கள்.

கயிலாசம் புத்த மதத்தினருக்கு முக்கியமான புண்ணிய ஸ்தலமாகும். புத்த மத சந்நியாசிகள் மலையின்மேல் ஆசிரமங்களில் இருந்து தியானம் செய்கின்றனர்.

கைலாய மலையைச் சுற்றிவருகிற யாத்திரைக்காரர், வழியில் இருக்கிற பாவபுண்ணிய ஸ்தம்பம் என்னும் கல்லில் வெண்ணெயைத் தடவி அதில் தமது தலைமயிரையும் ஆடும் பல்லையும் பிடுங்கி ஒட்டி வைக்கிறார்கள்.

இமய மலையில் இருக்கிற கேதார்நாத் கோவிலுக்கு அருகில் மஹாபந்த் என்ற மலைச் சிகரம் இருக்கிறது. இந்த இடத்தில் முன்னர் பஞ்சபாண்டவர்கள் தங்கித் தவம்செய்து, வைகுண்டம் போனார்கள் என்பது ஐதீகம். இன்றைக்குக்கூட குஜராத்திலிருந்தும், வங்காளத்தில் இருந்தும் வருகிற யாத்திரைக்காரர்களில் சிலர் சிகரத்தின் உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்கள் பூதவுடலுடன் பரமபதம் அடைவதாக நம்புகின்றனர். அந்த இடத்தின் பெயர் பையரவஜம்பு.

பண்டரிபுரத்தை அடுத்திருக்கிற நாடுகளில் விதவைத் திருமணம் இல்லாமையினால் அங்கே வசிக்கிற பாலிய விதவைகள் கர்ப்பமடைந்தால், பண்டரிபுரத்திற்கு யாத்திரை போவதாக வந்து குழந்தையைப் பெற்றெடுத்து எரித்துக் கொல்வது வழக்கமாக இருக்கிறது.

நரசிம்மலு நாயுடுவின் உரைநடை மொழியானது பல இடங்களில் கவித்துவமாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, புண்ணிய ஸ்தலமென்று கருதப்படுகிற இடங்களில் அவர் செய்துள்ள பிரார்த்தனைகள் உருக்கமாக அமைந்துள்ளன. யமுனை நதிக்கரையில் செய்த பிரார்த்தனையில் இருந்து சில பகுதிகள்: ஓ அழகிய யமுனா நதியே! உனது அழகை என்னவென்று புகழ்ந்து கொண்டாடுவோம். காளிதாசன், பவபூதி, தண்டி முதலான கவிராஜர்களும், வித்துவான்களும், இரசமஞ்சரி, இரசபிரகரணாதி, சிங்கார அலங்கார கர்த்தர்களும் தியாகராஜாதி ஆந்திர பாகவதோத்தமர்களும் நின்னைப் புகழ்ந்தது இன்றுதான் பிரத்தியக்ஷமாயிற்று.

இந்திர நீல வர்ணமும், இரம்பை, மேனகை முதலான அப்ஸ்ர ஸ்திரீகளுடைய மேனிகளைப் போலவும், இடைக்கிடை மின்னற்கொடிகளைப் போல மின்னி இரமணீயமாகப் பிரகாசிக்கும் நினது சுந்தரத் தன்மையை எப்படி எமது நாவால் பாடியாடிக் கொண்டாடுவம்? நினது மணலோ மின்னும் மணிகளோடு மஹமலைப்போல மெத்தன வாயும், மினிட்டுக்கு ஓர் வர்ணமாக மின்னி மோஹதாபங் கொள்ளச் செய்கின்றன. ஓ மோஹன சுந்தரி!... காசி, கங்கை, ஆக்ரா, பிருந்தாவனம், பண்டரிபுரம், டில்லி போன்ற இடங்களில் நரசிம்மலு நாயுடு சொல்லியிருக்கிற பிரார்த்தனைகள் அவருடைய பக்தி மொழியின் அழுத்தமான வெளிப்பாடுகள். பனாரிஸ்(காசி) பட்சிகளுடன் பிரம்மோபாசியின் (நமது)  சல்லாபனை (அலங்கார கற்பனை) என்ற தலைப்பில் புறாவுடனும் பஞ்சவர்ணக்கிளியுடனும் பேசுவதாக எழுதியுள்ள புனைகதையானது, நரசிம்ம நாயுடுவின் கற்பனை வளத்திற்கும் மொழியாளுகைக்கும் சான்றாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் அரசியல், சமூக, சமயச்  சூழலையும் நிகழ்வுகளையும் அறிந்திட நரசிம்மலு நாயுடுவின் பயண நூல் பெரிதும் உதவுகிறது. இந்த நூலைத் தமிழர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

(1913 ஆம் ஆண்டில் நரசிம்மலு நாயுடு பதிப்பித்த ஆரியர் திவ்ய தேச யாத்திரையின் சரித்திரம் நூலின் மறு அச்சாக்கம், தற்சமயம் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் மூலம் பிரசுரமாகியுள்ளது. விலை ரூ.600).

Pin It