‘குடிஅரசு’ வழக்கு அக்.15 இல் விசாரணைக்கு வருகிறது -

பெரியாரின் ‘குடிஅரசு’ எழுத்து, பேச்சுகளை வெளியிட வீரமணி மட்டுமே உரிமை கோர முடியாது என்று உயாநீதிமன்ற நீதிபதி சந்துரு - வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் கி.வீரமணி உடனே வழக்கை மேல்முறையீடு செய்து தீர்ப்புக்கு இடைக்காலத் தடையை பெற்றார். தடையை தொடர்ந்து நீடிக்கச் செய்து வழக்கை விசாரணைக்கே வரவிடாமல் தடுக்கும் முயற்சிகளில் கி.வீரமணி, தமது வழக்கறிஞர் மூலம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மேல்முறையீட்டு விசாரணை, நீதிபதிகள் சொக்கலிங்கம், சுப்பையா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தவுடன் வழக்கைத் தள்ளிப் போட முடிவு செய்தார். இறுதி முயற்சியாக நீதிபதி சொக்கலிங்கம் அவர்களின் தங்கை மகனான சண்முகசுந்தரம் என்ற வழக்கறிஞரை வைத்து வழக்கை நடத்த திட்டமிட்டார்கள்.

வழக்கு மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் வீரசேகரனுக்கு பதிலாக நீதிபதியின் மருமகன் சண்முகசுந்தரம் வழக்கை நடத்துவார் என்று எழுத்து பூர்வமாக நீதிமன்றத்துக்கு வீரமணி தெரிவித்தார். நெருங்கிய உறவினர்கள் வாதாடும் வழக்கை நீதிபதிகள் வழமையாக விசாரிக்க மறுத்து, வேறு நீதிபதிகளிடம் மாற்றி விடுவார்கள். எனவே நீதிபதியே விசாரணையிலிருந்து விடுவித்துக் கொள்வார் என்று வீரமணி, சூழ்ச்சியாக திட்டமிட்டார். அவரது ‘பார்ப்பனிய சூழ்ச்சி’ மீண்டும் தவிடு பொடியானது.

இது பற்றிய செய்தி விவரம்:

‘குடிஅரசு’ வழக்கு அக்டோபர் 6 ஆம் தேதி நீதிபதிகள் சொக்கலிங்கம் - சுப்பையா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் பகல் 11.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. கழக சார்பில் வழக்க றிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோ ஆகியோர் நேர் நின்றார்கள். விசாரணையின் தொடக்கத்திலேயே நீதிபதி, “வழக்கில் கி.வீரமணியின் சார்பில் வழக்கு தாக்கல் செய்த வழக்கறிஞர் மாற்றப்பட்டு, என்னுடைய மருமகனையே வழக்கறிஞராக்கி யுள்ளார். எனவே மரபுப்படி நான், இதை விசாரிப்பது முறையாகாது” என்று கூறினார். “இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” என்றும் நீதிபதி கேட்டார்.

கழக வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, இதற்கு தமது கருத்தை முன் வைத்தார். “இந்த வழக்கு - தங்களின் கீழ் விசாரணைக்கு வரக்கூடாது என்ற நோக்கத் துடனேயே வழக்கு தொடர்ந்தவர்கள் செயல்படு கிறார்கள். செப்டம்பர் 2 ஆம் தேதி தங்கள் முன் இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது (வீரமணி தரப்பினர்) தங்களது மூத்த வழக்கறிஞருக்கு உடல்நலமில்லை என்று கூறி, வழக்கை தள்ளி வைக்கக் கோரினர். நீங்கள் வழக்கை செப். 17 ஆம் தேதி தள்ளி வைத்தீர்கள். செப்டம்பர் 17 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அவர்களின் மூத்த வழக்கறிஞர் ஊரில் இல்லை என்று கூறி மீண்டும் வழக்கை தள்ளி வைக்க கோரினர். அப்போதே நீங்கள், மீண்டும் மீண்டும் வழக்கை தள்ளி வைக்கக் கோருவது முறையல்ல. இறுதியாக அக்டோபர் 6 ஆம் தேதி தள்ளி வைக்கிறேன் என்றும், அப்போதும் விசாரணைக்கு தயாராகாமல் தள்ளி வைக்கக் கோரினால், மனுவை தள்ளுபடி செய்து விடுவதாக கூறி தள்ளி வைத்தீர்கள். இடையில் அக்டோபர் முதல்தேதிக்குப் பிறகு வழக்கை விசாரிக்கும் அமர்வு நீதிபதிகள் மாற்றப்பட்டு விடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். அப்படி ஏதும் நிகழாததால் - இப்போது, தங்களது உறவுக்காரரான மருமகனையே தங்களுக்கான வழக்கறிஞராக தங்கள் முன் நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

மரபுப்படி நீங்கள் வழக்கை நடத்த மாட்டீர்கள் என்பதே அவர்களின் நோக்கமாகும். எங்களைப் பொறுத்த வரை நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தாங்கள் வழங்கும் தீர்ப்பு நீதியின் அடிப்படையிலே தான் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். இந்த பூமியில் தங்கள் மீது செல் வாக்கை செலுத்தி, நீதியை வளைக்கக்கூடிய சக்தி எவருக்குமில்லை என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும்.

எனவே இந்த வழக்கை நீங்களே விசாரிப்பதில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இன்று நீங்கள் விசாரிக்க இயலவில்லையானால், நாளைகூட விசாரணைக்கு ஏற்கலாம்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி, “வழக்கை நான் நடத்துவதை விரும்பாததினால்தான், இப்படி செயல்படுகிறார்கள் என்பதை கடந்த முறை வாதிட்ட உங்களின் வழக்கறிஞரேகூட, இதே மன்றத்தில் கூறினார். நீங்கள் கூறுவது உண்மைதான். என்னை எந்த செல்வாக்கினாலும் மாற்றிவிட முடியாது. இந்த வழக்கை நானே விசாரிக்கிறேன். அக். 15 ஆம் தேதி வழக்கை தள்ளி வைக்கிறேன்” என்று அறிவித்தார்.

வழக்கை இந்த அமர்வு நீதிபதிகளிடமிருந்து மாற்றி விடுவதற்கு வீரமணி போட்ட சூழ்ச்சி திட்டம், தோற்றது. மீண்டும் இதே அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Pin It