பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார். கரிவரதசாமி போன்றோரும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். ஆசிரியராக இருந்த பெரியார், சட்டப்படியான உரிமை வழங்கும் வெளியீட்டாளர் உரிமையை தம்மிடம் வைத்துக் கொண்டது இல்லை. இதை பதில் மனுவில் நாம் சுட்டிக்காட்டியிருப்பதை கேலி செய்கிறது ‘விடுதலை’! பெரியாருக்கு நம்மை எதிரானவர்களாக தங்களது கழகத்தினரிடையே சித்தரிக்க முயற்சி செய்கிறது; அதெல்லாம் இருக்கட்டும்!

பெரியாரின் நூல்களை தாங்கள் மட்டுமே வெளியிட வேண்டும்; பெரியார் திராவிடர் கழகம் வெளியிட தடை போட வேண்டும்; 15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடுப்பவர்கள் பெரியாரின் எதிரிகளா? அல்லது - பெரியாரின் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு தடைகளைக் கடந்து களத்தில் நிற்கும், பெரியார் திராவிடர் கழகம் பெரியாருக்கு எதிரியா? இதுதான் இப்போது மக்கள் மன்றத்தின் முன் உள்ள கேள்வி!

வழக்கு மனுவில் தன்னை ‘இந்து’ என்ற அடையாளத்தோடு, மனுதாக்கல் செய்து கொண்ட “தமிழர் தலைவர்” பெரியாருக்கு உரிமை கொண்டாடுவதை தமிழர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கி.வீரமணிக்கு ஆதரவாக தஞ்சை ரத்தினகிரி உயர்நீதிமன்றத்தில் மனு

‘குடி அரசு’ பத்திரிகையை வெளியிடும் உரிமை கி.வீரமணிக்கு மட்டுமே உண்டு என்றும், திருச்சியில் 1983 இல் ‘குடிஅரசு’ பத்திரிகைகளிலிருந்து பெரியார் எழுத்து பேச்சுகளைத் தொகுத்து, தமது தலைமையிலான குழு வீரமணியிடம் ஒப்படைத்துவிட்டது என்றும், எனவே கி.வீரமணி தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு தஞ்சை இரத்தினகிரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரும் தன்னை ‘இந்து’ என்றே கூறியுள்ளார்.

நாட்டுடைமையாக்கிட குரல் கொடுத்தோர்!

பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று இதுவரை குரல் கொடுத்த தலைவர்கள்:

1. மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன்
2. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
3. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு
4. மதுரை ஆதினகர்த்தர்.

Pin It