கிராமப்புற மாணவர்களுக்கு பேரிடி!

தமிழக முதல்வர், நுழைவுத் தேர்வை ரத்து செய்து அறிவித்தவுடன் - தமிழ் நாட்டின் அனைத்துக் கட்சிகளும் கட்சி அரசியல்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரே குரலில் தமிழக முதல்வரின் முடிவை ஆதரித்தன (பா.ஜ.க. உட்பட). பிளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ‘நுழைவுத் தேர்வு’ எனும் தடைக் கல்லால், பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள், பெற்றோர்கள், மனம் மகிழ்ந்தனர்.

தமிழக அரசின் ரத்து ஆணையை எதிர்த்தவர்கள் பார்ப்பன ஏடுகளும் ஒரு சில மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டும் தான்!

ஆனால் - தமிழ்நாட்டு மக்களின் சமூகநீதி நீரோட்ட உணர்வுகளுக்கு எதிராக - உயர்நீதிமன்றம், தமிழக அரசு ஆணையை ரத்து செய்து விட்டது.

அரசு ஆணையால், மகிழ்ச்சிக் கடலில் மிதந்த லட்சோப லட்சம் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்கள்.

மீண்டும் - உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்வதால், பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் - சமூக நீதிக்கு எதிராகவே இருந்து வருவது தான் கடந்த கால வரலாறு.

1) 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம்

2) கிராமப்புற மாணவர்களுக்கான தனி இடஒதுக்கீடு ஆணை

3) 1 முதல் 8 ம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்கும் ஆணை

இவை எல்லாம், மேல் முறையீடு செய்த பிறகும், உச்சநீதி மன்றத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

நுழைவுத் தேர்வு ரத்து ஆணைக்கும் - அதே சோக முடிவு ஏற்பட்டுவிடக் கூடாது. எனவேதான், உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதைவிட, தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை வெளிப்படுத்திடும் வகையில் -

நுழைவுத் தேர்வு அரசாணையாக இல்லாமல் - சட்டமாக்கிட வேண்டும். அதற்காக சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி, ஒருமனதாக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றுவதே, சரியான முடிவாக இருக்கும் என்று வலியுறுத்துகிறோம்.

அரசியல் சட்டம் 14வது பிரிவு வலியுறுத்தும் ‘அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும்’ என்று கொள்கைக்கு எதிரானதாம், தமிழக அரசு ஆணை; உயர் நீதிமன்றம் கூறுகிறது!

எப்படி எதிரானதாகும் என்பதே நமது கேள்வி! வசதி படைத்த நகர்ப்புறத்து மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு பொருட் செலவில் தனியாகப் பயிற்சி பெற்று, மதிப்பெண்களை குவித்து, அதற்கான வாய்ப்பு வசதிகளற்ற கிராமப்புற ஏழை எளிய மக்களை, வீழ்த்துவது, எப்படி சமத்துவமாகும்? வாய்ப்பு வசதிகள் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகளைக் கவலையோடு பரிசீலித்து, அவர்கள் முன்னேற்றத்துக்குக் கை தூக்கிவிடும் முயற்சிகள் தான், சமத்துவத்தை நோக்கிய சரியான பயணமாகுமே தவிர, “மேட்டையும் - பள்ளத்தையும்” சமமாகவே கருத வேண்டும் என்பது சமத்துவமாகிட முடியாது!

‘மெட்ரிகுலேஷனிலும் - சி.பி.எஸ்.ஈ.’ யிலும் படிக்கும் சில ஆயிரம் மாணவர்களுக்காக பல லட்சம் மாணவர்களைப் பலி கடாவாக்க வேண்டும் என்பது எப்படி சமத்துவமாகும் என்று கேட்கிறோம்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, எடுக்கும் கொள்கை முடிவை - ஆளும் கட்சி - எதிர் கட்சி என்ற பேதமின்றி அனைத்துக் கட்சிகளாலும், பாராட்டி வரவேற்கப்பட்ட ஒரு ஆணையை நீதிமன்றங்கள் ரத்து செய்ய முடிகிறது என்றால், கொள்கைகளைத் தீர்மானிப்பது, நீதிமன்றமா? மக்கள் மன்றமா?

கண்டதேவி தேர்த் திரு விழாவில் தலித் மக்களை அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “சாதி முறை நமது சமுதாயத்தில் வேரூன்றி உள்ளது. இதை உடனடியாக ஒழிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஒழிக்க வேண்டும். அது வரை இரு பிரிவினரும் பொறுமை காட்ட வேண்டும்” என்று தலைமை நீதிபதி கூறியுள்ளதாக ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது.

தீண்டாமைக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருந்தும் - அந்த சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், சாதி வெறியர்களுக்கும், அவமதிக்கப்பட்டோருக்கும் சேர்த்து அறிவுரை கூறுகிறது நீதிமன்றம்! அரசியல் சட்டத்தின் 14வது பிரிவு கூறும் ‘சமத்துவம்’ இங்கே “பொறுமை”யோடு மவுனம் சாதிக்கிறது. கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் போது மட்டும், மேல்தட்டு, நகர்ப்புற, வசதி படைத்த மாணவர்களுக்காக, அரசியல் சட்டத்தின் 14வது பிரிவு கூறும் ‘சமத்துவம்’ - முன்மொழியப்படுகிறது.

‘சி.பி.எஸ்.ஈ.’யில் படிக்கும் சில ஆயிரம் மாணவர்களுக்காக, பல்லாயிரம் மாணவர்கள் பலிகடாவாக வேண்டுமா?

மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு, பொதுவான தேர்வை எழுதித்தானே மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள்? அதிலே வேறுபாடுகள் எதுவும் இல்லாத போது, அதிலே சேருவதற்கான அனுமதிக்காக ஒரு தனித் தேர்வு நடத்த வேண்டுமா?

நுழைவுத் தேர்விலே அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் எல்லாம், பொறியியல், மருத்துவப் பட்டப் படிப்பிலும் அதிக மதிப்பெண் பெறுகிறார்களா? இல்லையே!

நுழைவுத் தேர்வு - கிராமப்புற மாணவர்களை மேல்படிப்புக்குள் நுழையாமல் தடுக்கும் தேர்வாகவே இருக்கிறது.

கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் பறிகொடுத்து நிற்கிறது, கிராமப்புற ஏழை எளிய மாணவர் சமுதாயம்!.

உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்தது மாபெரும் தவறு என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசு கூறினார்

“அரசுக்கு இந்தத் தவறான ஆலோசனையை வழங்கியவர் யார்? அந்த ஆலோசகர்களின் உள் நோக்கம் என்ன என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அப்படி உள்நோக்கம் இருக்கிறது என்பது தெரியவந்தால், அந்தத் தவறான ஆலோசனைகளை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சலுகை செய்வது போல தோற்றத்தை உருவாக்கி, எந்தச் சலுகையும் கிடைக்காமல் செய்து விடுவது என்று காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்படுவதில் தவறு இருக்க முடியாது” என்று மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் போவதே சரி! 

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதால் பயனில்லை என்று, பா.ம.க. உட்படப் பலரும் வலியுறுத்திய நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மட்டும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததை வரவேற்று அறிக்கை விட்டிருந்தார்.

69 சதவீத இடஒதுக்கீட்டில், உச்சநீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து நீதிபதிகள் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்திய திருவாளர் வீரமணி, இப்போது, உச்ச நீதிமன்றத்தின் மீது திடீர் நம்பிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டது வியப்பைத் தருகிறது. நுழைவுத் தேர்வு ரத்துக்கான தனது ஆதரவு, ஏனைய கட்சிகளின் ஆதரவைவிட ‘பரிசுத்தமானது’ என்பதை முதல்வரிடம் காட்டிக் கொள்ளவேண்டும் என்ற துடிப்புதான், வீரமணியாரின் இந்தத் தடுமாற்றத்துக்குக் காரணமாக இருக்க முடியும்!

பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக் காலத் தடைவிதிக்க மறுத்த நிலையில், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில், நான்காம் தேதி காலை 11 மணியளவில் கோட்டை நோக்கிப் புறப்பட்டனர். சட்டசபையைக் கூட்டி, நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி, சட்டமாக்க வேண்டும் அல்லது தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பேரவைத் தலைவரிடம் மனு அளிக்க வந்தபோது, நேப்பியர் பாலம் அருகிலேயே, காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர்.

கடும் வாக்குவாதத்துக்குப் பிறகு, கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பேரவைத் தலைவர் அங்கு இல்லை; அதிகாரிகளும் சந்திக்க மறுத்தனர். பேரவைச் செயலாளர் அறைக்குள் உறுப்பினர்கள் எதிர்ப்பு முழக்கமிட்டு, வெளியேறி, செய்தியாளர்களிடம் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். அதற்குப் பிறகு பேரவைச் செயலாளர் வெ.ராசாராமன் அங்கு வந்து கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டார்.

Pin It