அடேங்கப்பா! இந்தியா ரொம்பதான் முன்னேறிடுச்சுங்க. பின்ன! பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கலேன்னாகூட, ஒரு பெண்ணை ஜனாதிபதியாக்கும் அளவுக்கு துணிஞ்சுருக்கே?! ‘இல்லாத ஊருக்கு இலுப்பப் பூ சர்க்கரை' என்கிற கணக்கா நமக்கெல்லாம் பெருமைதான். அதனால, ஒட்டுமொத்த பெண் சமூகத்துக்கும் ஏதாவது பலன் கிடைக்குமா என்று கேட்டால், பதில் கிடைக்காதுங்க. அங்க டெல்லியில ஜனாதிபதி மாளிகைய ஒரு பெண் அலங்கரிச்சுட்டு இருக்காங்க. இங்க சேரியில தலித் பெண்கள் இன்னும் எல்லா மாதிரியான ஒடுக்குமுறைகளையும் அனுபவிச்சுக்கிட்டு வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்காங்க. அவங்க வாழ்க்கையில மாற்றம் என்பது ஒரு அர்த்தமில்லாத சொல். அவ்வளவே!

Chellammal
தலித் மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கொடுத்தா சமூக விடுதலை கிடைச்சுடும் என்கிற நல்ல (!) எண்ணத்தில் தலித் மக்கள் போட்டியிட, தனித் தொகுதிகள்கூட ஒதுக்கப்பட்டிருக்கு (கவனிக்க : ஒதுக்கப்பட்டுதான் இருக்கின்றன, சேர்க்கப்படவில்லை)! தலித் மக்களும் ஆவேசமாகப் போட்டியிட்டு, அந்த உரிமைக்காக தங்கள் உயிரையும்கூட தியாகம் செய்கிறார்கள். ஆனால், உயிர்கள்தான் பறி போய் கொண்டிருக்கின்றனவே ஒழிய, உரிமைகள் கைக்கு எட்டிய பாடில்லை.

விருதுநகர் மாவட்டம் பழைய அப்பனேரி பஞ்சாயத்துத் தலைவரான செல்லம்மாள் அவர்களின் அனுபவங்களை கேளுங்க. தலைவரானதுக்கு அப்புறம் சொந்த ஊர்ல, தன்னால ரோட்டுல சுதந்திரமா நடக்கக்கூட முடியல என்கிறார். ஏற்கனவே இதுபோல பஞ்சாயத்தில் போட்டியிட்ட தலித் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற முன்னுதாரணமும், தொடர்ச்சியான மிரட்டல்களும் அவரை எப்போதும் கலக்கத்திலேயே வைத்திருக்கின்றன. ஆனாலும் அவர் தலைவர்! இதுதான் பஞ்சாயத்து ராஜ்! இந்த சமூகமும் அரசும் தலித் மக்களை எந்த நிலையில் வைத்திருக்கின்றன என்பதை இந்தப் பேட்டி முழுக்கவும்; எந்த எல்லைவரை துரத்துகின்றன என்பதை பேட்டியின் முடிவிலும் செல்லம்மாள் கூறுகிறார்...

சந்திப்பு: மா. பொன்னுச்சாமி
புகைப்படங்கள்: மா. உமா

உங்களைப் பற்றி சொல்லுங்கம்மா...

எம் பேரு செல்லம்மாள். எனக்கு 45 வயசு ஆகுது. நான் பொறந்தது சங்கரன்கோவில் பக்கம் எலந்தகுளம். வாக்கப்பட்டது பழைய அப்பனேரி. எனக்கு ஒரு ஆம்பள புள்ள, பொம்பள புள்ள ஒண்ணு. பொம்பள புள்ள இறந்து போச்சு. எங்க வீட்டுக்காரர் தலையாரி வேலை பாத்தாரு. குழந்தைங்க சின்ன வயசா இருக்கும் போதே வீட்டுக்காரர் இறந்து போனாரு. 23 வருசமா இந்த ஊருலதான் நானும், என் பையனும் குடியிருக்கோம். என் பையன் பழைய பிரசிடெண்ட்டோடு தீப்பெட்டி ஆபிசுலதான் வேலை பாக்குறான். நான் கோவில்பட்டி கமலம்மாள் ஆஸ்பத்திரியிலதான் கக்கூஸ் கழுவுற வேலை பாத்தேன். 1500 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. ஏதோ துப்புரவு வேலை செஞ்சு குடும்பத்த ஓட்டிக்கிட்டிருந்தேன். ஆனா, நான் பிரசிடெண்ட் ஆவேன்னு கனவுலகூட நெனச்சுப் பாக்கல. இப்ப கொஞ்ச நாளா துப்புரவு வேலைக்குப் போகல.

துப்புரவுப் பணி செஞ்சிகிட்டு இருந்த நீங்க எப்படி பஞ்சாயத்து தலைவி ஆனீங்க?

இந்த ஊருல 23 வருஷமா குடியிருந்தேன். என்னைப் பத்தி ஊர்ல அவ்வளவா தெரியாது. நான் பாட்டுக்கு கமலம்மாள் ஆஸ்பத்திரியில சுவீப்பர் வேலை பாத்துக் கிட்டிருந்தேன். எங்க ஊரு நாராயணசாமி நாயக்கருதான் பிரசிடெண்டா இருந்தாரு. ஆனா, இந்த வருசம் எங்க ஊருல குடும்பமாரும் போட்டிப் போட ஆரம்பிச்சாங்க. எங்க ஊரு ரவி நாயக்கருதான் குடும்பமார நிக்க வச்சாரு. ஆனா, அவங்களுக்குப் போட்டியா, பழைய பிரசிடெண்ட் நாராயணசாமி நாயக்கரு எங்க ஆளுகள நிக்கச் சொல்லி கேட்டாரு. ஆனா மருதன்கிணறு சேர்வாரன கொன்னது போல நம்மளையும் கொன்னுப்புடுவாங்கன்னு பயந்துகிட்டு யாரும் நிக்கல.

ஆனா கடைசியில என்னை நிக்கச் சொல்லி கேட்டாரு. உனக்கு என்ன ஆனாலும் நான் பாத்துக்கிறேன்னு சொன்னாரு. அதனால நான் போட்டிப் போட்டு எலக்சனுல நின்னேன். நைட்டுல ஆஸ்பத்திரியில துப்புரவு வேலை. பகல்லதான் எலக்சன் வேலை. ஒண்ணும் பிரச்சினை வராதுன்னு சொன்னாரு. சரின்னு நின்னேன். ஆனா, நாயக்கமாரும், குடும்பமாரும் என்னைய திட்டாத ஆளில்ல. ஒரு சக்கிலியப் பொம்பள எப்படி எங்கள எதிர்த்து நின்னு ஜெயிக்கிறான்னு பாத்துருவோமுன்னு சொல்லி மிரட்டுனாங்க. இதனால் நான் பயந்துகிட்டு முடுக்கலாம் குளத்துல இருந்துதான் வேலைக்கு வந்து போவேன். அப்படியிருந்தும் 200 ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்துல ஜெயிச்சுட்டேன்!

மலம் அள்ளக் கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போட்டிருக்கு, ஆனா நீங்க போறீங்க?

அதப்பத்தியெல்லாம் எனக்கு தெரியாது. சரி அரசாங்கம் தடை போட்டுறிச்சின்னா உடனே நிப்பாட்டிடாகளா? இல்லையே. இதே கோவில்பட்டி பஸ்டாண்டுல அள்ளத் தானே செய்யிறாக. கக்கூஸ் கழுவத்தான செய்யுறாக. அரசாங்கம் அப்படித்தான் சொல்லும். ஆனா செய்யுறத செஞ்சுகிட்டேதான் இருக்கோம். வயித்த கழுவ கக்கூஸ்ச கழுவிதான் ஆகணும். ஏதோ ஆஸ்பத்திரியில வேலை செய்யப் போயி அப்பப்ப டெலிவரி கேசு வரும். அப்ப அவுகளுக்கு துணிமணி துவச்சு, எல்லா வேலையும் செஞ்சா 300, 400 கிடைக்கும். அதுதான் பொழப்பு. சட்டம் வந்து எதுவுமே செய்யாது. அங்க அங்க மீட்டிங்கில பேசுவாங்க, பேப்பருல வரும். ஆனா எதுவுமே நடக்கலையே. இதெல்லாம் சும்மா. இவுக சட்டம் போட்டு நமக்கென்ன ஆவப் போகுது? துப்புரவு வேலைதான் நிம்மதி.

பிரசிடெண்ட் ஆன பிறகு உங்கள மரியாதையா நடத்துறாங்களா?

நான் துப்புரவு வேலை செய்யும் போதாவது எந்தப் பிரச்சினையும் இல்லாம இருந்தேன். ஆனா நான் பிரசிடெண்ட் ஆனது இங்க யாருக்கும் பிடிக்கல. எப்படி ஒரு பொட்டச்சி அதுவும் சக்கிலிச்சி நம்ம ஊரு பிரசிடெண்ட் ஆகலாமுன்னு பேச ஆரம்பிச்சாங்க. நான் பிரசிடெண்ட் ஆகறதுக்கு முன்னால எல்லாரையும் சாமி, முதலாளினுதான் கூப்பிடுவேன். இப்பவும் அப்படிதான் கூப்பிடுறேன். கூப்பிடணும். அது இங்குள்ள கட்டுப்பாடு. ஆனா, இந்த ஊருல சின்னப் பிள்ளையிலிருந்து பெரியாளு வரைக்கும் என்ன செல்லம்மான்னு பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. எனக்குன்னு எந்த மரியாதையும் கிடையாது. நான் சொல்றத யாரும் கேட்க மாட்டாங்க. பிரசிடெண்ட் ஆன பிறகு சேர்ல உட்காரக் கூடாது. நின்னுதான் பேசனுமுன்னு சொன்னாங்க. தாசில்தார், கலெக்டரு சொன்ன பிறகுதான் சேர்லயே உட்காருவேன். வெளியூர்ல என்ன தலைவின்னு கூப்பிட்டாலும் உள்ளூர்ல பேர் சொல்லிதான் கூப்பிடுவாங்க. வார்டு மெம்பருங்க, வைஸ் பிரிசிடெண்ட் எல்லாருமே பேரு வச்சி, வா, போன்னுதான் கூப்பிடுவாங்க. அவுங்கள எதிர்த்து எதுவுமே பேச முடியாது.

நீங்க பிரசிடெண்ட் ஆகி என்னென்ன திட்டம் நிறைவேற்றி இருக்கீங்க?

நான் பிரசிடெண்ட ஆகி 9 மாசம் ஆகுது. இதுவரைக்கும் இந்த பஞ்சாயத்துக்கு ஒண்ணுமே செய்யல. எதுவுமே என்ன செய்ய விடல. எல்லாம் அவுக அதிகாரம்தான். நான் எதுவும் செய்ய முடியாது. வைஸ் பிரசிடெண்டும், வார்டு மெம்பரும் எல்லாம் கூட்டு சேர்ந்துகிடுவாக. நான் எது சொன்னாலும் எடுபடாது. ஏன்னா சக்கிலிச்சி சொல்லி நான் கேட்கவான்னு, பேசுவாங்க. இந்த 9 மாசத்துல என்னுடைய வேலை காலையில ஆபிசு வந்தா கணக்குபுள்ள வர்ற வரைக்கும் காத்திருப்பேன். அப்புறம் ஏதாவது ரசீது, பிறப்பு, இறப்பு கையெழுத்து கேட்டு வருவாங்க.

அந்த கணக்குபுள்ள போடச் சொல்ற இடத்துல கையெழுத்த போடுவேன். அம்புட்டுதான். நான் கையெழுத்து போட்ட பிறகு வைஸ் பிரசிடென்ட்டுகிட்ட கையெழுத்து வாங்க நான்தான் அலையணும். அவ்வளவு சீக்கிரமா அவர் போடமாட்டாரு. பஞ்சாயத்து தோட்டி வேலை செய்றவங்களுக்கு சம்பள பில்லுக்கு செக்குல நான் கையெழுத்துப் போட்டேன். ஆனா மூணு மாசமா வைஸ் பிரசிடென்ட் கையெழுத்தே போடல. அவர எதிர்த்துப் பேச முடியாது.

நம்ம நாட்டுல ஒரு பெண்தான் ஜனாதிபதியா இருக்காங்க, நீங்க அதே மாதிரி உங்க அதிகாரத்த பயன்படுத்தலையா?

அந்தம்மா செய்யலாம். அவுக என்ன சாதியோ, யாரு கண்டா. ஆனா நாம பிரசிடெண்ட் ஆகி இந்த இடிஞ்ச வீடு, மிஞ்சிப்போனா கமலம்மாள் ஆஸ்பத்திரி கக்கூஸ். அதவிட்டா வேற பொழப்பு இல்ல. அதிகாரம் எல்லாம் உசந்த சாதிக்காரங்களுக்குதான். நமக்கு இல்ல. என்ன ஏதுன்னு எதுவுமே எதிர்த்துப் பேச முடியாது. எதிர்த்து கேள்வி கேட்டதுக்காகத்தான் ஜக்கனையும், சேர்வாரனையும் கொன்னுட்டாங்களே. ஆம்பளைகளுக்கே இந்த நிலமை. நம்ம பொம்பள. ஆம்பள துணை கிடையாது. எனக்குன்னு எந்த சப்போர்ட்டும் கிடையாது. என் மகன்தான் எனக்கு துணை.

இப்ப வரைக்கும் எனக்கு எதிர்ப்புதான். தண்ணி பிரச்சனையை பத்திப் பேசுனா உன் வேலைய மட்டும் பாருன்னு கோவத்தோடு பேசுறாங்க. ஊருக்குள்ள எங்கயும் நிக்க முடியாது, பேச முடியாது. எனக்கும், என் மகனுக்கும் பாதுகாப்பு இல்ல. வைஸ் பிரசிடெண்ட், வார்டு மெம்பராலத்தான் பிரச்சனையே. அதனால இப்ப சொந்த ஊருல இருக்க முடியல. பயந்துகிட்டு பழைய பிரசிடெண்ட்டோட தீப்பட்டி ஆபிசுல கடைசி ரூம்லதான் குடியிருக்கோம். ஏதாவது மீட்டீங்கின்னா சொல்லி விடுவாங்க.

துப்புரவு வேலை செஞ்சதுக்கும், பஞ்சாயத்து பிரசிடெண்ட் ஆனதுக்கும் என்ன வித்தியாசம்?

துப்புரவு வேலை பார்க்கும்போது கை நிறைய சம்பளம் கிடைச்சது. நான் உண்டு என் வேல உண்டுன்னு இருந்தேன். யாரும் என்ன பகச்சுகில. ஆனா பிரசிடெண்ட் ஆன பிறகு குடிக்க கஞ்சியில்ல. நிம்மதியான தூக்கமில்ல. ரோட்டுல சுதந்திரமா நடக்க முடியல. சொல்லப்போனா சொந்த ஊருல குடியிருக்க முடியல. ஏன்டா பிரசிடெண்ட் ஆகுனோமுன்னு யோசிச்சுப் பாக்குறேன். ஊருக்கு நல்லது செய்யுறதுக்காக வேண்டி பிரசிடெண்ட் ஆனேன். என்னால எதுவுமே செய்ய முடியல. காரணம் தாழ்ந்த சாதி. உசந்த சாதிக்காரங்க செஞ்சாத்தான் ஏத்துக்கிருவாங்க. நம்ம செஞ்சா ஏத்துக்கிற மாட்டாங்க.

ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது. என்னதான் தாழ்ந்த சாதி பதவிக்கு வந்தாலும் ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு தெரியுது. நீங்க எல்லாமே செய்யலாமுன்னு சொல்றதெல்லாம் சும்மா வாய்ப் பேச்சுதான். சக்கிலிய சாதியில பொறந்து அப்படியே சொல்றத கேட்டு நடந்தாத்தான் உயிரோடு வாழ முடியும். ‘குமுதம்' புக்குலகூட என் படத்த போட்டு எழுதியிருந்தாங்க. எல்லா இடத்துலயும் மாரியாதையா நடத்துறாங்க, எல்லா நிகழ்ச்சிக்கும் கூப்பிடுறாங்கன்னு. ஆனா அது மாதிரி எந்த மரியாதையும் எனக்கில்ல. நான் ஒரு டம்மி. கையெழுத்துக்காகத்தான் என்னை பிரசிடென்ட்டா ஆக்கியிருக்காங்க.

உங்க எதிர்காலத் திட்டம் என்ன?

கலைஞர் மகன் ஸ்டாலின் வந்து மீட்டிங் போட்டிருந்தார். போயிருந்தோம். அங்க பிரசிடெண்டுக்கெல்லாம் அடையாள அட்டை கொடுத்தாரு. அட்டை கொடுத்து என்ன புண்ணியம்? இங்க ஒரு திட்டமும் நடக்கல. அங்க இங்க மீட்டிங், கூட்டமுன்னு கூப்பிட்டுப் போறாங்க. ஆனா எதுவுமே பேச முடியல. எனக்குன்னு எந்த சம்பளமும் கிடையாது. 300 ரூபா எதுக்காகும்? செலவுக்கில்ல. கஞ்சிக்கே பணமில்ல. இந்தப் பதவியில இருந்து எந்தப் பயனும் கிடையாது. அதனால இந்தப் பதவியே வேண்டாமுன்னு முடிவு பண்ணிட்டேன். கமலம்மாள் ஆஸ்பத்திரியில மேல ஒரு மாடி கட்டி முடிக்கப் போறாங்களாம். திரும்ப வேலைக்கு கூப்பிட்டிருக்காங்க. அதனால பழையபடி கக்கூஸ் கழுவுற வேலைக்கே போகப் போறேன்!
Pin It