periyar 480சிலப்பதிகாரத்தில், 'கண்ணகி என்ற பெண் மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள் கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றி எரிகிறது!' என்று எழுதியிருப்பதுடன் இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறுகிறார்கள்!

இன்று எந்த ஒரு பெண்ணாவது - அவள் எவ்வளவு தான் கற்புடைய கன்னிகையாயிருந்த போதிலும் - இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா? எங்காவது இம்மாதிரி காரியம் நடந்திருக்க முடியுமா? நடக்குமா? அந்தச் சமயத்திலும் அவள் தீய்க்கு ஆணையிடுகிறாள், 'பார்ப்பனர்களை'த் தவிர்த்து, மற்றவர்களை அழித்து விடு என்று! பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுகிறவள், தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்!

அவளது கற்புக்கு மற்றோர் எடுத்துக்காட்டாக சொல்லப்படுவது தன் கணவனான கோவலன், மாதவி என்ற ஒரு தாசியோடு கூடிக் குலாவியிருந்த காலத்து அவன் தன்னைப் புறக்கணித்து விட்டு தன்னைத் தேடி தன் வீட்டுக்கு வராமலிருந்தும் கூட, அவன் கஷ்டப்படுகிறான் என்றறிந்து, அவனுக்காக வேண்டித் தனது விலையுயர்ந்த ஆபரணங்களையும், சேலைகளையும் மாதவி வீட்டுக்கு அனுப்பி வைத்தாள் என்பதாகும்.

இத்தகைய முட்டாள்தனமான கற்பு எங்களாவது சிறந்த வீரத் தமிழ்ப் பண்பாகுமா? தமிழ்ப் பண்பு இத்தகைய கற்பையா தமிழ் மக்களுக்குப் போதித்து இருக்கிறது? உண்மை தமிழச்சியானால் அவள் ஒன்று மாதவி வீடேறி அந்தக் கோவலனைக் கட்டி இழுத்து வந்திருக்க வேண்டும். அல்லது அவனை அவன் விருப்பப்படியே விட்டு விட்டுத் தான் வேறொரு ஆடவனை மணந்திருக்க வேண்டும். அது தனக்கு விருப்பமில்லையானால் சும்மாவாவது இருக்க வேண்டும். இதை எல்லாம் செய்வதை விட்டு தன் கணவன், மேலும் ஒரு தாசியோடு கூடிக் குலாவிக் கொண்டிருக்கட்டும் என்று தன் நகையையும், சேலையையும் அந்தத் தாசிக்கு அனுப்பி வைப்பதா தமிழ்ப் பண்பு? இல்லை; இல்லை.

இது பெண் ஆணுக்கு அடிமை என்ற ஆரியக் கருத்தைத் தமிழர்களிடையே புகுத்துவதற்காகத் தமிழன் கையைக் கொண்டே எழுதச் செய்யப்பட்ட ஒரு பித்தலாட்டக் கதையே. இதை நம் பண்டிதர்கள் இன்னும் உணராது அய்ம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகச் சிறப்பித்துக் கூறுகிறார்களே! இது சரியா?

சிறப்பு வாய்ந்த தமிழ் நூல்கள் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட தமிழர் பண்பை எடுத்துக்காட்டக் கூடிய தனித் தமிழ் நூல்களை எல்லாம் ஓரளவுக்கு இந்துமதக் கடவுளும், பெருமளவுக்கு ஆரிய சூழ்ச்சியால், ஆடி ஆற்றுப் பெருக்கின் போது பழம் சுவடிகளுடன் நதிப் பெருக்கில் இடும் மூடப் பழக்கமும் கொள்ளை கொண்டு விட்டன. எஞ்சி நின்ற ஒன்றிரண்டும் ஆரியத்திற்கு எதிர்ப்பாயிருப்பதால் அவற்றிற்கும் மக்களிடையே செல்வாக்கு ஏற்படாமல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழில் ஆரியம் புகுந்ததால் தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்து விட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி, கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை. ஓர் எடிசன் தோன்றவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?

-------------------------------------

தந்தை பெரியார் அவர்கள் 'மொழி' என்னும் பொருள் குறித்தும், "எழுத்து"என்னும் பொருள் குறித்தும் அரசினர் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் 20-ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றிய விரிவுரைகளின் தொகுப்பு.--"விடுதலை", 05.01.1968

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It