தில்லையில் சிவபக்தராக வழிபடச் சென்ற வள்ளலாரை - பார்ப்பனக் கும்பல் விரட்டி அடித்தது. வள்ளலாரின் ‘அருட்பாவை’ ஏற்க மறுத்து - ஆறுமுக நாவலரைக் கொண்டு ‘மருட்பா’ எழுதி வெளியிட்டு - வள்ளலார் மீது வழக்கும் தொடர்ந்தார்கள்.
சைவத்தின் பெயரால் - பார்ப்பனியம் இழைக்கும் அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்த வள்ளலார் 1872 இல் வடலூரில் உத்தர ஞான சிதம்பரம் என்ற சபையை நிறுவி, ஏழைகளுக்கு உணவு அளித்து பார்ப்பனச் சடங்குகளை விலக்கி, புதிய மார்க்கத்தை உருவாக்கினார். வள்ளலார் சபைக்குள் புகுந்த ஆடூர் சபாபதி குருக்கள் என்ற பார்ப்பனர் - முதலில் வள்ளலார் கொள்கையை ஏற்பது போல் நடித்து - அவரது மறைவுக்குப் பிறகு - வள்ளலார் நெறிக்கு மாறாக, வள்ளலார் சபையில் பார்ப்பனியத்தைப் புகுத்தினார்.
சிவலிங்க பூசை, பிரதோஷ வழிபாடு, பூணூல் அணிந்த அர்ச்சகர் என்று ‘பார்ப்பனியம்’ நுழைந்தது. அவரது வழி வந்த சபாநாத ஒளி பார்ப்பன இந்துத்துவா சக்திகளின் பேராதரவுடன் வள்ளலார் மார்க்கத்தைக் குழி தோண்டி புதைப்பதை எதிர்த்து முற்போக்காளர்கள் - பார்ப்பன எதிர்ப்பாளர்கள் போராடினார்கள். பெரியார் திராவிடர் கழகம் மற்றும் வள்ளலார் வழிவந்த உண்மைத் தோழர்களும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற அமைப்புகளும் இதை எதிர்த்துப் போராடின. கழக சார்பில் பல்லாயிரக்கணக்கில் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
கடந்த ஜன 27 ஆம் தேதி வடலூரில் வள்ளலார் சத்திய ஞான சபையில் நுழைந்துள்ள பார்ப்பன பூசகர் சபாநாத ஒளியை வெளியேற்றக் கோரி பெரியார் திராவிடர் கழகம் மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தியது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் பாலு (பு.மா.கி.மு.) வள்ளலார் தொண்டர் தி.பாலகுரு, வழக்கறிஞர் இராசு, சித்த மருத்துவர் சுப்பையன் ஆகியோர் உரையாற்றி, வள்ளலார் சபையிலிருந்து பார்ப்பன அர்ச்சகரை நீக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.
கழகம் முன் வைத்த கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. கடந்த மே 17 ஆம் தேதி தமிழக அரசின் அறநிலையத் துறை சபாநாத ஒளி சிவாச்சாரியாரை வெளியேற்ற உத்தரவிட்டது. பார்ப்பனர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வள்ளலார் நெறியின்படி மீண்டும் தொடங்கியுள்ளது.