கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் 47 ஆகம கோயில்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி யிருக்கிறார். அதற்கான பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சரே இந்தப் பெயர் பலகையை வெளியிட்டதன் வழியாக தமிழக அரசு இந்த தமிழ் வழிபாட்டு உரிமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை உணர்த்தியிருக்கிறது. இதற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் கோயில் “மயிலை கபாலீஸ்வரர் கோயில்” என்பது குறிப்பிடத்தக்கதாகும். அறிவிப்பு பலகையில் தமிழ் வழிபாடு நடத்த விரும்பும் பக்தர்கள் தமிழ் மந்திரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தமிழ் ஓதுவார் அலைபேசி எண் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சமஸ்கிருத மந்திரங்களை ஓதி வரும் பாலாஜி குருக்கள் நாங்களும் தமிழில் அர்ச்சனை செய்யத் தயார் என்று இப்போது அறிவித்திருக்கிறார். தமிழ் மறை ஓதூவோர்கள், எங்கே தங்கள் வருமானத்தை பறிப்பதோடு தங்களது பாரம்பரிய உரிமைக்குரிய இடத்தை பிடித்துக் கொண்டு விடுவார்களோ என்ற அச்சம் போலும் , இந்த அச்சத்தினால் இப்படி பேசுகிறார்கள் போல் இருக்கிறது. வடபழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு நாளும் நான்கு முறை பூஜை நடக்கிறது. அது வடமொழியிலான சமஸ்கிருதத்தில் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாலை பூஜை மட்டும் தமிழில் நடத்தி வருவதாகவும் வேத புரோகிதர்கள் தரப்பில் இப்போது கூறப்படுகிறது.

இது 60 ஆண்டு கால போராட்டம். தமிழ் வழிபாட்டு உரிமைக்காக பலரும் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள். தமிழிலும் வழிபாடு நடத்தப்படும் என்று கோயில்களில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. பிறகு படிப்படியாக அந்த அறிவிப்புப் பலகைகள் காணாமலே போய்விட்டன. 1971இல் திமுக அமைச்சரவையில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த 'கண்ணப்பன்' அவர்கள் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் வழிபாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். பிறகு சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் இதை வழி மொழிந்தார்.

1974இ ல் ஒரு புரட்சிகர அறிவிப்பை கலைஞர் வெளியிட்டார். சமஸ்கிருதத்தை கோயிலில் இருந்து Knockout செய்தார். தமிழில் மட்டுமே அர்ச்சனை என்ற அறிவிப்பை அறநிலையத்துறை வழியாக கலைஞர் வெளியிட்டார். அவ்வளவு தான், பூதேவர்கள் நாடே பற்றி எரிவது போல கூக்குரல் இட்டார்கள். ஆணை ஒரு வாரத்திற்குள்ளாகவே திரும்பப்பெறப்பட்டது என்பது கடந்த கால வரலாறு. 1980இல் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனும் தமிழ் வழிபாட்டுக்கு குரல் கொடுத்தவர் தான். ஆனாலும் பூதேவர்கள்,வேத புரோகிதர்களின் திட்டமிட்ட சதியால் தமிழில் ஒலி கோயிலுக்குள் கேட்கவே முடியவில்லை.

தில்லை நடராசர் கோயிலில் தீட்சதர்கள் தேவாரம் பாடிய வயது முதிர்ந்த ஆறுமுகனார் என்ற ஓதுவாரை ரவுடித்தனமாக தாக்கி இரத்தம் சிந்த சிந்த வெளியே இழுத்துப்போட்டார்கள். இறுதி மூச்சு வரை அந்த ஓதுவார் போராடி போராடி உயிர் நீர்த்தார். நடராசன் காதில் தேவார, திருவாசகம் கேட்பதே தீட்டு என்று கருவறைக்கு வெளியே ஒரு இடத்தில் தேவாரத்தைப் பாடிக் கொள் என்று தீட்சதர்கள் அனுமதித்தார்கள். அதற்கும் நீதிமன்ற போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது.

பக்தி உணர்வுள்ள தமிழர்கள் ஆதரவு தான் இதில் மிகவும் முக்கியம். தமிழில் வழிபாடு நடத்து, என்ற உணர்வை பக்தியில் மூழ்கியுள்ள தமிழர்கள் மொழி இன உணர்வோடு தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழக அரசு எடுக்கும் இந்த இயக்கம் வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்லும்.

திராவிட இயக்கம் தமிழை வளர்க்கவே இல்லை என்று முழங்கி வரும் சில தமிழ் தேசிய குழுக்களும் இருக்கின்றன. அவர்கள் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்று ஒரு அறிக்கை கூட வெளியிட விரும்பாத 'தாராள சிந்தனையாளர்களாவே' இருக்கிறார்கள்.

“ஆம் நாங்கள் அசுரர்கள் இராவணன் பரம்பரையினர்”

திருச்சியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டியபின் தம்மை ‘அசுரன், இராவணன்' வாரிசாக பெருமையுடன் கலைஞர் பின்வருமாறு தெளிவுபடுத்தினார்.

‘நாங்கள் அசுரர்களாக இருப்பதில் பெருமைப்படுகிறோம் ; நாங்கள் இராவணின் பரம்பரை’ என்று கலைஞர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நீதிக்கட்சித் தலைவர் சுந்தர ராவ் (நாயுடு) சிலையைத் திறந்து வைத்து பெரியார் திடலில் கலைஞர் பேசுகையில் குறிப்பிட்டதாவது.

“நேற்றைய தினம் ஒரு பத்திரிக்கை யில் ஒரு சிலை திறப்பு விழா குறித்த அறிவிப்பில் தி.மு.க என்ற ‘அசுரன்’ என்று அக்கட்சியின் தலைவர் குறிப் பிட்டிருந்தார். உண்மை இப்போதா வது எங்களை நாட்டுக்குப் புரிய வைத்தார்களே என்பதில் மகிழ்ச்சி. மறைமலை அடிகள் போன்றோர் எல்லாம் ஆராய்ந்து தந்த கருத்துப்படி, அசுரர்கள் சுறா பானத்தை மறுக்கக் கூடியவர்கள். ‘சுரர்கள்’ சுராபானம் அருந்தக் கூடியவர்கள். அசுரர்கள் எந்த தியாகத்துக்கும் தயாரானவர்கள். திருப்பாற் கடலிலே இருக்கிற அமிர் தத்தை எடுப்பதற்காக மேருமலையை மத்தாக்கி, வாசுகி என்ற பெரிய பாம்பை கயிறாக்கி, அந்தப் பாம்பினுடைய தலையை (கோழைகளாகிய) அசுரர்கள் பிடித்துக் கொண்டு அந்த பாம்பினுடைய வாலை ‘வீரர்களான’(?) தேவர்கள் பிடித்துக் கொண்டு திருப்பாற்கடலை கடைந்து, அதிலிருந்து புறப்பட்ட அமிர்தத்தை அசுரர்களுக்கு கொடுக்காமல் தேவர்கள் உண்டு மகிழ்ந்தார்கள் என்பது புராணம். இது அவர்களே சொல்லி வைத்த புராணம், விஷ முள்ள பாம்பின் தலையைப் பிடித்து அமிர்தத்தை எடுத்துக் கொடுத்த அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை. வாலைப் பிடித்த அந்த ‘விருது வீரர் களுக்கு’ தான் கிடைத்தது என்று கூறுகிறது, புராணம். எனவே நாங்கள் அசுரர்களாக இருப்பதில் பெருமைப்படுகிறோம், சுரர்களான தேவர் கள் இப்போது வெளியே வந்து தங்களை யார் என்று அடையாளம் காட்டி கொண்டதில் மகிழ்ச்சி. இரக்க மற்ற அரக்கன் இராவணன் என்று கம்பர் எழுதினார். அந்தக் கம்பரையே நீதிமன்றத்தில் நிற்க வைத்து இராவணன் இரக்கமற்ற அரக்கனா என்று வாதாடும். ‘நீதி தேவன் மயக்கம்’ நாடகத்தை எழுதியவர் அண்ணா. எனவே அந்த இராவணன் பரம்பரை யினர் நாங்கள்”     - கலைஞர் (விடுதலை 19.01.1990)

குறிப்பு: நீதிக்கட்சித் தலைவர் சுந்தரராவ் (நாயுடு) பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் பின்னி மில் வேலை நிறுத்தத்தின்போது வடசென்னையில் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு உடைமைகள் சூறையாடப்பட்டபோது அம் மக்களோடு இணைந்து - மறு வாழ்வுப் பணிகளில் அர்ப் பணித்தார். அவரது சிலை எழுப்பூரில் நிறுவப்பட்டுள்ளது.  அதை கலைஞர் திறந்தார்.

- விடுதலை இராசேந்திரன்