பத்திராதிபருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷனை

குடியானவன்: அய்யா, பத்திராதிபரே! சில வக்கீல்கள் இரண்டு கக்ஷியிலும் பீஸ் வாங்குகிறார்களாமே, இது வாஸ்தவமா?

பத்திராதிபர் : ஏன் ? அதனால் என்ன தப்பிதம். ஒரு கக்ஷியில் பீஸ் வாங்கும்போது இரண்டு கக்ஷியில் வாங்கினாலென்ன? மூன்று கக்ஷியில் வாங்குகிற வக்கீல்கள் கூட இருக்கிறார்கள். அதனால் என்ன தப்பு?

குடியானவன்: மூன்று கக்ஷியென்றால் என்ன? எனக்கு தெரியவில்லையே.

பத்திராதிபர்: இது தெரியாதா? வாதி, பிரதிவாதி, சாட்சி ஆகிய மூன்று கட்சி.

குடியானவன்: சாட்சி எதற்காகக் கொடுப்பார்?

பத்திராதிபர்: சாட்சி திருடி இருப்பார், ஜெயிலுக்குப் போயிருப்பார், கடன்காரராயிருப்பார், பொய் சாட்சி சொல்லியிருப்பார், அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுத்திருப்பார், இந்த வக்கீலைப்பற்றி ஏதாவது பேசியிருப்பார். இவைகளையெல்லாம் கட்சிக்காரர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு பப்ளிக் கோர்ட்டில் அவமானப்படுத்தாமல் இருப்பதற்காக சாட்சிகளும் வக்கீலுக்குப் பணம் கொடுப்பதுண்டு.

குடியானவன்: இப்படி இரண்டு மூன்று பேரிடம் பணம் வாங்கினால் அது யோக்கியமாகுமா?

பத்திராதிபர்: ஏன்? ஒருவனிடம் வாங்குவது மாத்திரம் எப்படி யோக்கியமாகும்? அந்தப் பணமும் அக்கிரமமாகத்தானே வாங்குகிறார்கள். ஏதோ பொய்யோ, புளுகோ, பித்தலாட்டமோ, தந்திரமோ செய்து அவனுக்கு கேஸ் ஜெயித்து கொடுப்பதாகத்தானே வாங்குகிறார்கள். இது எப்படி யோக்கியமாகும்? அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஞாய விரோதமாய்த் தீர்ப்புச் செய்வதற்கும், வக்கீல்கள் பணம் வாங்கிக் கொண்டு ஞாய விரோதமாய்த் தீர்ப்புப் பெற பாடுபடுவதற்கும் வித்தியாசமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. வக்கீல் ஞாயப்படி பேசுவானேயானால் அது ஒழுங்குதான். அப்படியானால் வக்கீலே வேண்டியதில்லை. உள்ளதை கட்சிக்காரனே அதிகாரியிடம் சொன்னால் நியாயப்படி நடந்து விடுகிறது. வக்கீல் எதற்கு? ஒரு சமயம் சட்டம் எடுத்துக் காட்டுவதற்கு என்று சொல்லலாம். சட்டம் இரண்டு கட்சிக்கும்தான் அநுகூலமாயிருக்கிறது. வாதி வக்கீல் ஒரு மதராஸ் சட்ட புஸ்தகம் காட்டினால் பிரதிவாதி வக்கீலும் ஒரு கல்கத்தா சட்ட புஸ்தகம் காட்டுவார். அப்பீலுக்குப் போனால் அங்கே பம்பாய், அலஹாபாத் அல்லது வேறு சட்ட புஸ்தகங்கள். ஐகோர்ட்டுக்கு போனால் அங்கே சீமைப் புஸ்தகங்கள் காட்டப்படும். இதனால் வக்கீலுக்குப் பணம் கொடுப்பதில் லாபமென்ன? சில ஊர்களில் ஒருவருக்கொருவர் சண்டை வந்து விட்டால் ஒருவன் சில போக்கிரிகளுக்கு கள்ளு வாங்கிக் கொடுத்து மற்றவனை அடிக்கும்படி சொல்லுவதையும், அடிபட்டவன் அதே போக்கிரிகளுக்கு சாராயம் வாங்கிக்கொடுத்து முதலில் அடிக்கச் சொன்னவனையே திருப்பி அடிக்கச் சொல்லுவதையும் நாம் பார்க்கிறோமல்லவா? அதுபோல் தான் வக்கீல்கள் வைப்பதும். நான் பணம் கொடுத்தால் எனக்கு; நீ பணம் கொடுத்தால் உனக்கு; இரண்டு பேரும் பணம் கொடுத்தால் இரண்டு பேருக்கும். இதில் தப்பு என்ன?

குடியானவன்: அப்படியானால் வக்கீல்கள் இரண்டு கட்சியிலும் பணம் வாங்கக்கூடாது என்று சர்க்கார் சட்டமிருக்கிறதே, அதென்ன?

பத்திராதிபர்: சர்க்கார் சட்டத்தைப் பற்றி கவலைப்படாதே. அதே சட்டத்தில் வக்கீல்கள் தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாய் எதுவும் பேசலாம் என்றிருக்கிறதே பார்த்தாயா? அல்லாமலும் இந்த கூட்டத்தில் இருந்துதானே சர்க்காரார் முனி சீப்பு முதல் ஐகோர்ட்டு ஜட்ஜு வரையிலும் பொருக்கி எடுக்கிறார்கள் என்பதும் அவர்கள்தான் இந்த சட்டத்தை நிறைவேற்றுகிறவர்கள் என்பதும் உனக்குத் தெரியாதா?

குடியானவன்: அப்படியானால் எப்படித்தான் நியாயம் கண்டு பிடிக்கிறது?

பத்திராதிபர்: நியாயம் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற கவலை யாருக்கு இருக்கிறது என்று நினைக்கிறாய். வக்கீலுக்கும் இல்லை; அதிகாரிக்கும் இல்லை; சர்க்காருக்கும் இல்லை. சர்க்காரார் வக்கீலைக் கொண்டு சட்டம் செய்திருக்கிறார்கள். அந்த வக்கீல்களைக் கொண்டுதான் நிறைவேற்றுகிறார்கள். அந்த சட்டபடி எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒருவன் மற்றவனுக்குப் பணம் கொடுக்க வேண்டும்; கோர்ட்டில் பிராது செய்தால் கொடுத்தவன் கொடுத்ததாய்ச் சொல்லுகிறான். வாங்கினவன் வாங்கினதாய் ஒப்புக்கொள்ளுகிறான். ஆனால் சட்டப்படி கொடுக்க வேண்டியதில்லையென்றாய்விடுகிறது. அதுபோலவே ஒருவன் மற்றொருவனைக் கொன்று விடுகிறான். செத்துப் போனதும் நிஜம், கொன்றதும் நிஜம். ஆனால் அவன் சட்டப்படி சாகவில்லை, சட்டபடி ருஜுவாகவில்லை, ருஜுவானாலும் சட்டப்படி கொலை அல்ல என்று தீர்மானமாகி விடுகிறது. இவைகளைப் பார்த்ததில்லையா? கோர்ட்டு என்றால் (லா கோர்ட்டு) சட்டகோர்ட்டு தானே? சட்டப்படி உண்டா? இல்லையா ? என்று தானே பார்க்கிறார்கள். நியாயக் கோர்ட்டு அல்லவே! நியாயப்படி செய்தாரா இல்லையா? என்று பார்ப்பதில்லையே. ஆதலால் வக்கீல்களைப் பற்றியும் குற்றம் சொல்லாதே; அதிகாரிகளைப் பற்றியும் குற்றம் சொல்லாதே; சர்க்காரைப் பற்றியும் குற்றம் சொல்லாதே; இதற்கெல்லாம் ஆதாரமாயிருக்கிற அய்யமாரைப் பற்றி வேண்டுமானால் சொல்லிக் கொள். இல்லாவிட்டால், இதெல்லாம் தெரிந்தும் மறுபடியும் உனக்குப் புத்தி வருவதில்லையே.ஆதலால் உன்னையே வேண்டு மானால் சொல்லிக்கொள்.

குடியானவன்: அப்படியானால் கோர்ட்டுக்குப் போவதே சுத்தப் பயித்தியக்காரத்தனம்தான் என்றுபடுகிறது. கடன் வாங்கினவனே தின்றாலும் பரவாயில்லை. அவனிடத்தில் வசூல் செய்வதாய் நினைத்துக் கொண்டு அநியாயமாய் வக்கீலுக்கும், சர்க்காருக்கும், உத்தியோகஸ்தர்களுக்கும் அழுவது புத்தியில்லாத்தனம்தான் என்றும்படுகிறது. இதற்கு ஏதாவது வழியில்லையா?

பத்திராதிபர்: வழியென்ன? வக்கீல்கள் ஒழிய வேண்டும். அவர்கள் ஒழிந்தால் முதலாவது சர்க்காரார் யோக்கியமாய் நடப்பார்கள்; ஜனங்களும் யோக்கியமாய் நடப்பார்கள்; நாட்டில் அக்கிரமம் அதிகமாய் நடக்காது.

குடியானவன்: அப்படியானால் பிறகு யேன் சர்க்காரார் வருஷத்துக்கு வருஷம் வக்கீல்களையும் கோர்ட்டுகளையும் அதிகப்படுத்திக் கொண்டே வருகிறார்கள்?

பத்திராதிபர்: நமது நாட்டில் பார்ப்பனர் என்று ஒரு ஜாதியிருக்கிறது. அதுதான் நமது அய்யர்மார்கள். அவர்களுக்கு உடலில் பலம் இல்லை; பாடுபட்டுத் தின்னக் கையாலாகாது; தலைமுறை தலைமுறையாய் ஊரார் முதலைத் தின்றே வழக்கம்; அதுவும் நகத்தில் அழுக்குப்படாமல் அதிகாரம் பண்ணியே தின்னுகிற பேர்வழிகள். அத்துடன் அவர்களுக்கு, கொஞ்சம் தந்திரமும் தெரியும். அதற்கேற்றாற்போல் நமக்கு வாய்த்த சர்க்காரோ சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அய்யமாரை விட ஒன்னாம் நெம்பர் பேர் வழிகள். அய்யமாராவது இங்கேயே தின்று கழித்து விடுகிறார்கள். சர்க்காரோ மூட்டை கட்டிக் கொண்டு போகிற ஆசாமிகள். இவர்கள் இரண்டு பேருக்கும் அநுகூலமான ஒரு பிழைப்பு வேண்டுமானால் கூட்டுக் கொள்ளை அடிப்பது போல் இருக்க வேண்டும். ஆதலால் அதற்கேற்றது இந்த வக்கீல் பிழைப்பும் கோர்ட்டுகளுந்தான். அதனால்தான் சர்க்காரும் இதை வளர்த்துக் கொண்டே போகிறார்கள்.

குடியானவன்: சர்க்காரும் பார்ப்பாரும் பிழைக்க நமது ஜனங்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறதா? இது என்ன சர்க்கார்? இது என்ன பார்ப்பார்? இவர்கள் பிழைக்க நாம் கெடுகிறதா? இத்தனை அநியாயமா?

பத்திராதிபர்: இதுதானா பெரிய அநியாயம்; கள்ளுக்கடை, சாராயக் கடையைப் பார். கள்ளு உற்பத்தி செய்வது நாம், விற்பது நாம், குடிப்பது நாம், குடி கெடுவது நாம், இதனால் பிழைப்பது வக்கீல் என்கிற அய்யமாரும், சர்க்காரும், அவர்கள் உத்தியோகஸ்தர்களும் தானே. இவ்வளவு பணமும் இவர்கள் தானே பங்குபோட்டுக் கொள்ளுகிறார்கள்.

குடியானவன்: இதற்கு என்னதான் செய்வது?

பத்திராதிபர்: என்ன செய்தாலும் முடியாது. மகாத்மா காந்தி சொன்னபடி செய்வதுதான் இதற்கு மருந்து.

குடியானவன்:மகாத்மா காந்தி இப்பொழுது வர வர என்னமோ வழ வழ என்று போய் விட்டார் என்று சொல்லிக் கொள்ளுகிறார்களே!.

பத்திராதிபர்: இப்பொழுது வழவழ என்று இருந்தால் உனக்கென்ன? முன் அவர் சொன்னதும் எழுதினதும் அப்படியேதான் இருக்கிறது. இப்பொழுது அதில் ஒன்றும் எவருக்கும் சந்தேகமில்லை. ஆதலால் அந்தப்படி நடங்கள்.

குடியானவன்: அதெல்லாம் உங்களைப் போலொத்தவர்கள் தான் நடத்தி வைக்க வேண்டும். நாங்களாக நடப்பதென்றால் ஆகக்கூடிய காரியமல்ல.

பத்திராதிபர்: ஆகட்டும். இப்பொழுது என்னமோ இன்னும் 6, 7 மாதத்திற்கு நாட்டில் அயோக்கியர்களுக்கு கொஞ்சம் செல்வாக்கு அதிகமாக இருக்கும். பின்னால் எல்லாம் சரிபட்டுப் போகும். பிறகு நீங்களாகவே நடந்து கொள்ளுவீர்கள். சரி போய் வாருங்கள்.

(குடி அரசு - உரையாடல் - 09.05.1926)

Pin It