கிராமப்புற மக்களின் மருத்துவத் தேவைகளை / மருத்துவர் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்கு 31/2 ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பை (Bachular in Rural Medicine and Surgery) மத்தியரசு அறிவித்துள்ளது. +2 அறிவியல் பாடங்களைப் பயின்ற தகுதிமிக்க கிராமப்புற மாணவர்களில் மாநிலத்திற்கு 50 பேர்கள் வீதம் ஆதஙந பயில தேர்வு செய்யப்படுவார்கள்.

31/2 ஆண்டு கல்வி முடிந்தபின் 5 ஆண்டு காலம் இம்மருத்துவர்கள் அனைவரும் ஊரகப் பகுதிகளில் மட்டுமே பணியாற்றுவார்கள். 5 ஆண்டு சேவைக்குப் பின்தான் நகர்புறத்தில் பணிபுரியலாம்; முதுநிலை பட்டம் பயிலலாம். 31/2 ஆண்டு ஆங்கில மருத்துவப் படிப்புக்கான பாடத்திட்டங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் உருவாக்கும். இதனை அங்கீகரித்துச் செயல்படுத்தக் கூடிய வகையில் மாநில அரசுகள் ஊரக மருத்துவக் கல்விக்கான தனி போர்டுகள் (State Borad Rural Medical Education / State Gramin Chikitsha Mandal) அமைக்க வேண்டும். வரும் கல்வியாண்டிலேயே இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்களும், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் Dr.கேதன்தேசாய் அவர்களும் அறிவித்துள்ளனர்.

பொதுநலச் சிந்தனையாளரான டாக்டர் மீனாட்சி கௌதம் அவர்கள் டெல்லி உயர்நீதி மன்றத்தில், “இந்தியாவில் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவைகள் மறுக்கப்பட்டிருப்பது மாபெரும் சமூக அநீதி”, என்று வழக்கு தொடுத்திருப்பதன் பிரதிபலிப்பாக மத்தியரசு இத்திட்டத்தை வெளியிட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.

இத்திட்ட அறிவிப்பு வெளியானவுடன் இந்திய மருத்துவ சங்கத்தினர் (IMA) இதனைக் கடுமையாக விமர்ச்சித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 5 1/2 ஆண்டு MBBS படிப்பையே 71/2 ஆண்டுகளாக உயர்த்த வேண்டிய காலகட்டத்தில், 31/2 ஆண்டு குறுகிய கால படிப்பு மூலம் தகுதியற்ற மருத்துவர் கூட்டம் உருவாக்கப்படும் என்றும், 31/2 ஆண்டு படித்த மருத்துவர்களும் கிராமங்களில் சேவை செய்ய விரும்பமாட்டார்கள் என்றும், ஊரக சுகாதார மையங்களின் உள் கட்டமைப்பு பெருக்கவும் விரிவுபடுத்தவும், மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்தித் தரவும் அரசு முன்வருமானால் ஙஆஆந டாக்டர்கள் கிராமப்புற மருத்துவ சேவைகளுக்கு தாமாகவே முன்வருவார்கள் என்றும் IMA கருத்துரைத்துள்ளது.

இதேபோல 31/2 ஆண்டு BRMS மருத்துவக்கல்வி குறித்து ஊடகங்களில் ஆதரித்தும், எதிர்த்தும் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. மத்தியரசின் இப்புதிய திட்டம் கீழ்க்கண்ட மாற்றங்களுடன் செயல்வடிவம் பெறுமானால் நிச்சயமான பயன்களைப் பெறமுடியும் என்பதில் சந்தேகமில்லை.

(1) நோய்கள், நோயாளிகள், மருத்துவ தேவைகள் என்பவை கிராமத்திற்கும் நகரத்திற்கும் தனித்தனியானவை அல்ல. இன்றுள்ள பல நகராட்சிகள் சில ஆண்டுகள் முன்பு வரை ஊராட்சிகளாய் இருந்தவையே. இன்றைய ஊராட்சிகள் நாளைய நகராட்சிகளாக கூடும். அப்போது BRMS டாக்டர்களின் பணி இடம் குறித்த கேள்வி எழும் எதிர்காலத்தில் ஆதிவாசிகளுக்கும், மலைவாழ்மக்களுக்கும் மட்டுமே மருத்துவ சேவையளிப்பவர்களாக இவர்கள் மாறவேண்டியிருக்கும். எனவே பூகோள ரீதியில் மருத்துவசேவைகளை வரையறுப்பது தர்க்கப் பொருத்தமற்றது.

நோய்களுக்கு 3 அடுக்கு சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. அ) Primary Health Care (நோய் வராமல் தடுக்க, அடிப்படை மருத்துவ சிகிச்சை வழங்க) ஆ) Secondary Health Care (இரண்டாம் நிலை நோய்களுக்கு சிகிச்சை அளிக்க) இ) Tertiary Care (முற்றிய நிலையிலும், சிக்கலான நோய்நிலைகளிலும் ஆபரேசன் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ள)

இவற்றில் அடிப்படை மருத்துவ தேவைகளை (Primary Health Care) நிறைவு செய்தால் 70 சதவீத நோய்கள் முறியடிக்கப்பட்டுவிடும் என உலக நல நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்பின் Secondary Health Care மற்றும் Tertiary Care சுமைகள் குறைந்துவிடும். இன்று சாதாரண நோய்களுக்குக் கூட சிறப்பு நிபுணர்களை நாடுகின்றனர். (அம்மி கொத்த சிற்பி எதற்கு?)

ஆக, அடிப்படை மருத்துவ தேவைகளுக்கான குறுகிய கால டாக்டர் படிப்புதான் இந்தியாவின் இன்றைய தேவையே தவிர, ‘ஊரக மருத்துவ சேவைஎன்றோ நகர்சார் மருத்துவ சேவைஎன்றோ வகைப்படுத்துதல் பொருந்தாது. மேலும் ஒரு மருத்துவர் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ மட்டும்தான் சேவையாற்ற வேண்டும் என்பது மருத்துவரின் அடிப்படை உரிமையை மறுக்கும் அநீதியாக அமையும்.

(2) குறுகிய கால டாக்டர் பயிற்சிக்கு சிறந்த முன்மாதிரி நாடாக கியூபா திகழ்கிறது.      மருத்துவத்துறை சாதனைகளில் அமெரிக்காவையும் விஞ்சி நிற்கிறது. அலோபதியும், அக்குப்பங்சர் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவமுறைகளும்   இணைந்த ஒருங்கிணைந்த மருத்துவக் கல்வியை கியூபா நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுபோல, அடிப்படை மருத்துவம் சார்ந்த ஆங்கில மருத்துவம் ஓர் ஆண்டும், இந்திய மருத்துவங்கள் ஓர் ஆண்டும், ஹோமியோபதி & அக்குப்பங்சர் ஓர் ஆண்டும், 6 மாத கால (Intership) உள் பயிற்சியும் அளிக்கலாம்.

(3) ஆங்கில மருத்துக்கல்விக்கு மட்டுமே 31/2 ஆண்டு தேவை என மத்திய அரசு கருதுமானால், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் & யோகா போன்ற ஆயுஷ் மருத்துவ முறைகளிலும் 31/2 ஆண்டு மருத்துவப்பட்ட படிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

கடந்த கால அனுபவங்களை ஆய்வு செய்தால் அடிப்படை மருத்துவ தேவைகளை ஆங்கில மருத்துவ முறையால் பூர்த்திசெய்ய இயலாது என்பதையும் மாற்றுமருத்துவங்களே இதற்குத் தகுதியானவை என்பதையும் அறியமுடியும்.

இந்த மூன்று முக்கிய அம்சங்களை மத்தியரசு தீவிரமாக பரீசீலிப்பதோடு அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆயுஷ் பட்டதாரி மருத்துவர்களுக்கும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாற்று மருத்துவர்களுக்கும்     பாரம்பரிய மருத்துவர் களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இக்கோரிக்கைகளின் உள்ளார்ந்த அவசியங்களை இந்திய மருத்துவ முறைகள் சார்ந்த அமைப்புகளும், பொதுமக்களும் மத்தியரசிடம் வலியுறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

-அன்புடன், ஆசிரியர்

Pin It