“எப்பக்கம் புகுந்துவிடும் இந்தி” என்கிற வீச்சான இலட்சிய முழக்கத்தோடு தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ஒட்டுமொத்த இந்தியத் துணைக் கண்டத்தையும் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. வெறும் அடையாளப் போராட்டத்தால் மட்டுமே உலகம் நம்மை ஏரிட்டுப் பார்த்திடவில்லை. பலரின் உயிரீகமே அதற்குக் காரணமாய் அமைந்தது. அது இந்தியைத் திணித்த ஆட்சியளர்களின் உறக்கத்தைக் கெடுத்த போராட்டம். அத்தகைய உணர்வுப் பெருக்கோடு விரட்டியடிக்கப்பட்ட இந்திதான் இன்று தமிழ் மண்ணில் தமிழர்களிடத்து குடிகொண்டிருந்த அந்நிய மோகத்தின் கரத்தைப் பற்றி, இந்தி மெல்லத் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது தான். ஆனால் உண்மை நிலை அதுவே!.

                தமிழ் மக்களின் மூளைப்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் ஆங்கில மோகம் ஒருபுறமிருக்க, இன்று நவீன நடுத்தர வர்க்கத்தினராக மாறிய படித்த பெற்றோர்கள் தங்கள் பிஞ்சுக் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பிலிருந்து மத்திய அரசின் பாடத்திட்டங்களை உள்ளடக்கிய “சி.பி.எஸ்.சி.” எனப்படும் பள்ளிகளில் சேர்த்து விடுவதையே குறிக்கோளாக் கொண்டு அலைகிறார்கள்.

                அத்தகைய பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டு வரை தமிழ் பாடமொழியாகக் கூட கிடையாது என்பது வேதனையான செய்தி. தற்போது தான் தமிழை ஒரு பாடமாகச் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது “சி.பி.எஸ்.சி.” நிர்வாகம். “தமிழை ஏன் தான் கொண்டுவந்தார்களோ?” என்று தனது தாய்மொழிக்கு எதிராகப் பேசும் மனநிலைக்கு அவனைக் உண்டாக்கியது யார்?.

                “ஓர் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், பலருக்கு பாடம் கற்பிப்பது எளிமையானதாகவும், ஒருசில மாணவர்களுக்கு கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்தது. குறிப்பிட்ட அந்த மாணவர்களின் கடந்த கால பின்னணியை அறிந்தபோது, அவர்கள் இளந்தளிர், (டுமுபு) Pசந முபு என்றழைக்கப்படும் மழலையர் பள்ளிகளில் சேர்ந்து பயின்றிருப்பது தெரியவந்தது. இவ்வாறாக தாய்மொழி ததும்ப பேசத்தொடங்கிய பருவத்திலேயே பிறமொழிப் பாடங்களை கற்பிப்பதன் விளைவே, குழந்தைகள் தாய்மொழியைக் கூட தவறின்றி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அறவே மறுக்கப்படுகிறது. ஆக, இத்தகைய மாணவர்களின் நிலை இரண்டும் கெட்டான் நிலையாகவே உள்ளது.

                “தாம் படிக்காத படிப்பை தம் குழந்தைகளாவது படித்திட வேண்டும்” என்கிற பெற்றோர்களின் அபிலாசைகளும், தாய்மொழி கற்றால், குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடுமோ என்ற அறியாமையும்தான் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் கொளுத்த நிலைக்கும், கொள்ளை இலாபத்திற்கும் காரணமாக அமைகிறது. மேலும் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்துவோர் பிற மொழிகளுக்கு எதிரானவர்கள் போன்ற கருத்து இன்றைய சமூகத்தின் பொதுப்புத்துகளில் ஊறிக்கிடக்கிறது. அவர்களின் பார்வை கோனலானது. தொடக்க கல்வியைத் தாய்மொழியிலும், இதர வகுப்புகளில் - மாணவர்களின் அறிவு முதிர்ச்சிக்கேற்ப தேசிய அளவிலான – பன்னாட்டு அளவிலான மொழிகளையும் தேவைக்கு ஏற்ப கற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்வதால் ஒன்றும் பிழையில்லை. தாய்மொழியை தெளிவுறக் கற்றுக்கொள்வதனூடகவே பிறமொழிகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படைப் புரிதலை ‘கற்றவர்கள் முதல் கைநாட்டுகள்’ வரை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.

                தாய்மொழிக் கல்விதான் சாதாரணமாக ஒரு குழந்தையினிடத்து ஆழமான சிந்தனைக் கண்ணோட்டத்தையும், சீரிய புரிதலையும் நெஞ்சத்தில் விதைக்கும். ஒரு மாந்த சமூகத்தின் கடந்த கால அசைவுகளையும், பண்பாட்டு நெறிமுறைகளையும், சமூகக் கடப்பாடுகளையும் உணர்ந்துகொள்ள தாய்மொழியே வழிவகை செய்யும். எனவே தான் அண்மையில் மறைவெய்திய அறிவியலாளர் அப்துல்கலாம் அவர்கள், “தாய்மொழிக் கல்வியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன் மூலம் ஆக்கப்பூர்வமான சிந்தனையைக் குழந்தையின் மத்தியில் கொண்டுவர முடியும்” என்று தனது உரையின் வாயிலாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அப்துல் கலாமைக் கொண்டாடும் நாம், அவரின் தாய்மொழி குறித்த சிந்தனையை உள்வாங்க மறுப்பது வேதனையானது; முரண்பாடானது.

                தாய்மொழிக் கல்வியை மறுக்கும் சில படித்தறிந்த பெருமக்கள், இலாவகமாக – பல மொழிகளை மாணவர்கள் அறிந்து கொள்வது நல்லது என ஆங்கில மொழிக்கு பல்லாக்குத் தூக்கி வருகிறார்கள். மெக்காலேயை பெங்களுருக்கும் ஊட்டிக்கும் முதுகில் தூக்கிச் சுமந்த நாம், இன்று மெக்காலே கொண்டுவந்த ஆங்கிலத்தை மூளையில் தூக்கிச் சுமக்கிறோம். ஐ.நா. அவையின் உறுப்பமைப்பான யுனெஸ்கோ “தாய்மொழிக் கல்வியை அடுத்ததாக வலியுறுத்துவதோடு பன்மொழிக் கல்வியை மாணவர்கள் பயிலலாம்” என்று தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. அதனை உலக நாடுகள் பலவும் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                “தாய்மொழிக்கும் மூளை வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு உண்டு” - இது உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய நரம்பியல் வல்லுநர் சுடானோ சுனோடா ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மை. இந்த பேருண்மையை அவர் போகிற போக்கில் பதிவு சொல்லிவிட்டுச் செல்லவில்லை. ஏதென்ஸ் நகரில் யுனெஸ்கோ அமைப்பு நடத்திய கல்வி தொடர்பான பன்னாட்டு ஆன்றோர்கள் - கல்வியாளர்கள் - பேராசிரியர்கள் நிறைந்த அவையில் அதனை அறிவித்திருக்கிறார்கள். 15 ஆண்டுகள் தீவிரமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் கண்ட உண்மை அது.

                ஆங்கில மொழியை அரியணையேற்றி நம் அன்னைத் தமிழை தாழ்வாரத்தில் கிடத்திவைக்கும் “அறிவார்ந்த சான்றோர்கள்” ஆங்கில மொழி கடந்து வந்த பாதையை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

                நாடு விடுதலையடைவதற்கு முந்தைய ஆங்கிலேய அரசின் கல்விக் கொள்ளையும், விடுதலைக்குப் பிந்திய 1952ல் அமைக்கப்பட்ட ப.இலட்சுமணசாமி (முதலியார்) ஆணையமும், 1964ல் நியமிக்கப்பட்ட கோத்தாரி ஆணையமும், 1986ல் வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கையும் தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழி கல்வியையே முன் மொழிந்தன.

                தனியார் ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் பள்ளிகளை புற்றீசல் போல திறப்பதற்கு அனுமதி கொடுத்த அரசு அதனைக் கட்டுக்குள் வைப்பதற்கு மாறாக, தௌக்க அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கி, குறுக்குச் சால் ஒட்டும் பணியை செய்துவருகிறது அரசு. நடப்பு ஆண்டுகளில் அதனை விரிவுபடுத்தப்படும் பணிகள் வேறு.

                இந்த நேரத்தில் நாம் அயலக நாடுகளின் தாய்மொழிக் கல்வி குறித்த செயல்பாடுகளை, விசாலப் பார்வையால் கூர்ந்து நோக்க வேண்டியிருக்கிறது.

                கண்டுபிடிப்புகளின் சொர்க்க பூமியாக விளங்கும் ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் தாய்மொழிக்கல்விக்கு முதன்மை கொடுத்து, ஆங்கிலத்தை ஒரு மொழி என்ற அளவிலேயே கற்கின்றார்கள்.

                இசுரேல் நாடு உருவாகி இன்றைக்கு 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்நாடு உருவானதும் அவர்கள் செய்த முதல் பணியாக அறிவியல், மருத்துவம் அனைத்தையும் தங்கள் தாய்மொழியில் கொண்டு வந்தார்கள். இன்று அந்நாடு உலகளவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவு வளர்ந்து நிற்கிறது.

                மேலும் அயர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தாய்மொழிக்கல்வியே சிறப்பாகப் போதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆங்கிலம் படிக்கும் குழந்தைகளிடம் கணிதம், அறிவியல், மொழியியல் அறிவுத்திறன் குறித்த மதிப்பீடு நடத்தப்பட்டது. 73 நாடுகளின் குழந்தைகள் இவ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதில் இந்தியா 72வது இடத்தைப் பெற்றது. இதிலிருந்து இந்தியாவில் தாய்மொழியில்லாத ஆங்கிலம் பயிலும் குழந்தைகளின் அறிவுத்திறன் இலட்சணத்தை அறியலாம். ஆங்கிலம் அறிவென்ற அறியாமையில் இருந்த விடுபடாதவரை நம் மாணவர்களின் அறிவுத்திறன் அதலபாதாளத்தை நோக்கியே பாயும் என்பது திண்ணம்.

                நம் நாட்டின் சமச்சீர் கல்வி வந்துவிட்டதாய் ஆர்ப்பரித்தோம். ஆனால், சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., மெட்ரிக்குலேசன் போன்ற நிலவுகின்ற பல்வகைப்பாடத்திட்டங்கள் நம் குழந்தைகளுக்கு வர்க்க பேதத்தை விதைத்து வருவதோடு, அந்நிய மொழித்திணிப்பையும் ஆரவாரமின்றி செய்துவருகிறது. இது நம் தமிழகச் சூழலில் சமச்சீரற்ற கல்விமுறையே இன்னும் நீடித்து வருகின்றன என்பதற்கான சான்றாதாரங்கள். மேற்கண்ட சமச்சீர் கல்வி விரோத கல்விமுறையை இரத்து செய்ய வேண்டும்.

                மொழி என்பது வெறும் பரிமாற்றக் கருவி மட்டுமல்ல. தேசிய இனங்களின் ஆதார சுருதியே மொழிதான். இதனை வரலாற்றுத் தொன்மைமிக்க தமிழ்த்தேசிய இனத்தின் குடிமக்கள் யாவரும் உணர்ந்து, அதற்கேற்ப தம் குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்வியை நீக்கமுற புகட்ட முனைய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

தங்க.செங்கதிர்