சமீபத்தில் திரும்ப திரும்ப பார்க்கும் - கேட்கும் பாடலாக இது இருப்பது திரையில் பூத்த காதல் மொழியாக உணர்கிறேன். பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கச் செய்யும் பவள சிற்பங்களாக காதலனும் காதலியும். பணத்தோட்டத்தில் மனம் வளர்த்த இதயங்களின் ஆடலும் பாடலும் ரசனையின் உச்சம். என்ன இருக்கிறது என்று ஆராய்ந்த பிறகும் இந்தப் பாடலின் மெய் மயக்கம் தீரவில்லை. ஓயாமல் மேல் விழும் சொற்களில் நனைந்து தவித்த பிறகும் ஒளியாய் தவழும் மொழியும் அதற்கே காத்திருக்கிறது.

mgr saroja deviசரோஜாதேவி... கார் பக்கம் நின்று காத்திருக்கிறார். காதலியைக் காண ஓடோடி வரும் தலைவர் கார்மீது தாவி.... படுத்து பாடல் ஆரம்பிக்க போகும் தாளத்தை காதலின் தலையில் புதுக்கவிதை போல தட்டித் தொடங்குகிறார்.

எதிர்பாராமல் தலை மேல் பட்ட விரல்கள் கொண்ட படபடப்பில் ஓஹ்... என்ன நடக்குது என்ற தவிப்புடன் கூடிய ஒரு சின்ன திகிலோடு வேகமாய் திரும்ப... அந்த நொடியே பாடல் தொடங்கி விடுகிறது. பாடல் மட்டுமா... நமக்குள் பரவசமும் தான். சட்டென இதயமே பாடுவது போல... அப்படி ஓர் அதிர்வு.

"பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா"

அட வந்தது தட்டியது எல்லாம் நம்மாளு என்ற ஆசுவாசத்தில்.. கூடவே உள்ளிருக்கும் காதலெல்லாம் முகத்தில் தாவி தவழ்ந்து.. வைத்த கண் வாங்காமல் பார்க்க... அவர் அடுத்தடுத்த வரியில் அதகளம் செய்ய ஆரம்பித்திருப்பார்.

"கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய்..."

இந்த ஹோய் -ல் தலைவரின் முகம் பார்க்க வேண்டுமே. ஹா.. அதுவும் க்ளோஸ் ஷாட். காதலில் இருப்பவரின் களங்கமில்லாத முகத்தை காண்கிறோம். அவரே பாடுவது போல இருக்கிறது. பாடியது TMS என்றால் நம்புவதற்கில்லை.

காதலன் மொழி கணீர் என்றால்... காதலி மொழி மட்டும் என்ன சும்மாவா. கவிதை பேசி கூடவே விழிகளைக் கூட்டிக்கொண்டு காதல் பேசாதா. காதலின் புன்னகையில் புருவமும் பேசுகிறது. காதலியின் பூ நகையில் நாணமும் பேசுகிறது. இருவருக்கும் பாடும் மொழி தமிழ் என்றாலும்... ரகசிய மொழி ஒன்று ஊடுபாவுவதை உணர உணர திரைமொழி காதலில் மிதக்கிறது.

"பாடுவது கவியா இல்லை
பாரி வள்ளல் மகனா"

முதல் வரி ஓடையாக ஓடுகிறது. அடுத்த வரி றெக்கை கொண்டு தாவுகிறதே.

"பாடுவது கவியா இல்லை
பாரிவள்ளல் மகனா"

பாரிவள்ளல் மகனா இந்த காதலன்... எனக் கேட்கும் தொனியிலேயே... தோகை விரித்தாடும் காதலின் மாய வனம். வெட்கம் கலந்த வெண்ணை உருளும் மொழி இது. கண்ணதாசனுக்கு காதல் தாசன் என்றும் பெயர். ஏறி விட்ட வரிகளின் வேகம் அப்படியே மடி சாய்வது போல இறங்கும் தருணத்தில் வந்து விழும் வரி... கிறங்கடிக்கிறது.

"சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா ஹோய்.."

செந்தமிழர் நிலவா... என்ன ஒரு நோக்கு. நமக்கான நிலவு எப்படி இருக்கும் என்றால் அது காதலின்பால் பூத்திருக்கும் என்றபடியே அவர் தரும் பாவனையும் அதற்கு அவர் தரும் தோரணையும் சட்டகத்துக்கு ஜோடனை. ரசிக விழிகளுக்கோ திரை பிரார்த்தனை.

இந்த முறை 'ஹோய்' அந்தம்மாவின் பக்கமிருந்து அது ஒரு தினுசாக வந்து விழும். இந்த முதல் ஹோய் -ல் இருக்கும் மெல்லிய நாண நடனத்தை காதல் கொண்ட கண்கள் அறியும். காதலுக்கென்ற பார்வை... பாட்டுக்கென்ற பாவனை... உடன் நடிப்பது தலைவர் என்ற ஆலாபனை என முக மொழியில் நொடிக்கு ஒரு பூ மலர தெரிந்த நாயகி. நோகாமல் வந்தமரும் அழகு. ஆராதிக்காமல் என்ன செய்ய.

"பாடுவது கவியா இல்லை பாரிவள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்...."

ஹோயில் ஒரு ஏற்றம் இறக்கம் கிறக்கம் என அடுத்தடுத்து அசத்தி விட்டு வாய் முழுக்க மௌனமாய் சிரிக்கும் அழகு... சும்மாவா சொன்னார்கள். கண்ணழகி... கன்னடத்து பைங்கிளி என்று. எம் ஜி ஆர் சரோஜா தேவி என்றால் திரை பத்திக்கும் என்றதை சின்ன வயதில் திரை கட்டி பார்த்த அத்தனை படங்களிலும் பார்த்திருக்கிறேன். இப்போது உணர்கிறேன். ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்....சொல்லி அழுந்த கண்கள் மூடி திறக்கும் தருணத்தில் திரையில் நொடியில் ஓவியம் உருவானது போல நம்பலாம். அதுவும் 'சேரனுக்கு உறவா' பாடி விட்டு உள்ளுக்குள் ஒரு வெட்க சிரிப்பை உணர்ந்தபடியே... ' செந்தமிழர் நிலவா' என போகும் போது மதி மயங்கும் நமக்கு.

ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு பிஜிஎம் க்கு இனிஷியல் செய்யும் இருவரையும் அள்ளிக் கொள்ளலாம். அழகின் தீபாராதனை அணையா சுடராய் இங்கே இருவருக்கும் சமர்ப்பணம்.

பல பாவனைகளை முகத்தில் பரவ விட்டு... அப்படியே வாயில் விரலை வைத்து யோசிக்கிறாராம். சிறுபிள்ளைத்தனமான குறும்புகளை அவர் செய்தால் ரசிக்கலாம். வில்லனுக்கும் பிடித்த நாயகன் அல்லவா. சட்டென சின்ன சிரிப்பில் முத்துப்பற்கள் தெரிய... பாடலின் அடுத்த வரிகள் காதலனின் இதயத்தில் இருந்து கிளம்புகின்றன.

"கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா"

ஊஞ்சலும் பாவனையுமாக கன்னம் தொடும் தூரிகையாக காதலின் சுழல் காதலர்களுக்கு மலர்.

"கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா
இல்லை கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா"

"வில்லேந்தும் காவலன்தானா
வேல்விழியாள் காதலன்தானா
வில்லேந்தும் காவலன்தானா
வேல்விழியாள் காதலன்தானா"

முகம் விரிந்து விழி விரிந்து மொழி மலர அடுத்தடுத்த வரிகளை அடுக்கி விட்டு...

"சொல்லாமல் சொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் காவலன்தானா"

என்று முடித்து கண்கள் மூடி பாடியதை மனதுக்குள் அனுபவிக்கும் பாவத்தில் தீரா பருவம் கொள்ளலாம். அதில் நீர் மேல் ஊஞ்சல் கொண்ட சிலை... பாடும் என்றே நம்பலாம். அழுத்தமும் அதே நேரம் அதில் இருக்கும் இலகுவுமாக பெருங்கண்கள் விரிந்து மலர் கணைகள் ஆகி... பிறகு சிறு வெட்கம் பூத்து துளிர் வண்ணம் பூசி... "கோட்டை கட்டும் காவலன்தானா" என்று முடிகையில் நமக்கு சிறு புன்னகை சித்தத்திலும்.

"மன்னாதி மன்னர்கள்
கூடும் மாளிகையா
உள்ளம் வண்டாட்டம் மாதர்கள்
கூடும் மண்டபமா.. ஹோய்..."

அவர் படத்தின் தலைப்பையே அவருக்கு பொருத்தமாக முதல் வரியில் சூட்டியதும்... அடுத்த வரியில் வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபத்தை அவரின் உள்ளத்தில் நிரப்பியதும் நாயகன் அறிந்து நயம் சேர்ப்பது.

"செண்டாடும் சேயிழைதானா
தெய்வீகக் காதலிதானா
செண்டாடும் சேயிழைதானா
தெய்வீகக் காதலிதானா"

கண்கள் மயங்க காதல் ததும்ப காதலியின் அருகே படுத்தபடியே மெய்ம்மறந்து மன விருந்து உண்ணும் நிலையில் வந்து விழும் வரிகள்... வசீகர துளிகள்.

"செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா"

இசை இறங்கி ஏறி அப்படி வந்து நிற்கையில் விஸ்வநாதன் ராமமூர்த்தியை கொஞ்சம் அந்தப்பக்கம் போங்கப்பா என்று சொல்ல தோன்றினாலும்... இதயத்திற்குள் புகுந்து காதலையே இசைக்க தெரிந்த ஞானிகள். கும்பிடுகிறோம்.

பாடுவது கவியா இல்லை
பாரிவள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்

சுசீலாவின் குரலுக்கு முகம் பூத்த தருணங்கள் மொட்டு மொட்டாய் மடல் மடலாய். நாணம் கொண்டு கருப்பு வெள்ளையிலும் சிவக்க தேவிக்கு தெரிந்திருக்கிறது.
அதுவும் அந்த ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்....ஹையோ என குரல்வளையை சுற்றிய மலர்க்கொடி போல நம்பத் தோன்றுகிறது.

பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய்..."

கடைசி ஹோய் - விடுவாரா தலைவர்... தன் பாணியில் தகிக்க விட்டு... அந்தம்மா ஹஹஹஹ ஹஹஹா எனும் போது காதல் போதையில் 'ஹோய்..ஹோய்' சொல்வாரே... ஹா ஹா... அந்தம்மா சிரித்துக்கொண்டே "லலலல ல ல லா" "ஹஹஹஹ ஹஹஹா" என்று ஓட பின்னாலேயே காதல் கொண்ட கால்களின் ஓட்டமும் நடையுமாக சென்று கையைப்பற்றி நிறுத்தி காதலியைத் திருப்ப....

திரை மூடி விடுகிறது. நமக்குள் பாடலின் வெளி திறந்து கொள்கிறது.

பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா

பாடுவது கவியா இல்லை
பாரிவள்ளல் மகனா

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.