வன்கொடுமை நிகழ்வுகள் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் புலன் விசாரணை அதிகாரியான துணைக் காவல் கண்காணிப்பாளர், தனக்குப் பதில் தனக்குக் கீழே பணிபுரியும் அதிகாரியைக் கொண்டு புலன் விசாரணை மேற்கொள்வது பல நேர்வுகளில் நடைபெறுகின்றன. கிராமப்புறம் சார்ந்த இடங்களில் இதுபோன்ற சட்டமீறல்கள் நடைபெறுவதாகப் பதிவுகள் உள்ளன. இதைத் தவிர்க்க வேண்டுமெனில், குறிப்பிட்ட நாட்களுக்குள் புலன்விசாரணை அதிகாரி சம்பவ இடத்தைப் பார்வையிடவில்லை என்ற தகவலை மேலதிகாரியான காவல் துறை கண்காணிப்பாளர், அதற்கும் மேலுள்ள அதிகாரியான மண்டலக் காவல் இயக்குநர் ஆகியோருக்கு மனு அளித்து, புலன் விசாரணையை உடனடியாக மேற்கொள்ள ஆணையிடச் சொல்லி கேட்கலாம். அதேபோல, துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்கும் குறைந்த அளவிலான பதவி வகிக்கும் அதிகாரி செய்யும் புலன் விசாரணை வழக்கின் விசாரணையின் போது சிக்கல்கள் ஏற்படுமாதலால், இக்குறைபாட்டையும் உயர் காவல் அதிகாரிகளுக்கு மனு அளித்து தீர்வு நடவடிக்கைகள் கோரலாம்.

புலன் விசாரணை அதிகாரிகளின் தலித் விரோதப் போக்கின் வெளிப்பாடாக, வன்கொடுமை நிகழ்வின் முக்கிய சாட்சிகளை விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யாமல் விடுவது, வன்கொடுமையாளர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகும். இதுபோன்ற சூழலில், குறிப்பிட்ட முக்கிய கண்ணுற்ற சாட்சிகளின் வாக்குமூலத்தை ஓர் ஆணையுறுதி ஆணை (affidavit form) வடிவில் தொடர்புடைய சாட்சியே தயாரித்து தக்கவாறு நோட்டரி வழக்குரைஞரிடம் மேலொப்பம் (attestation) பெற்று புலன்விசாரணை அதிகாரிக்கு அனுப்பலாம். இதன் மூலம் புலன் விசாரணை அதிகாரி, குறிப்பிட்ட சாட்சியின் சாட்சியத்தை ஒதுக்கித் தள்ளுவதிலிருந்து தவிர்க்கலாம். அதன் நகலை மேலதிகாரிகளுக்கு அனுப்புவதும் கூட பயன் தரும்.

சில வகை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படாத போது புகார்தாரரையோ, அவரது சுற்றத்தினரையோ மிரட்டி மேல்நடவடிக்கை தொடரக் கூடாது என இடையூறு செய்ய வாய்ப்பு அதிகம். சாதி மேலாதிக்கம், நிலவுடைமை, பணபலம், அரசியல் செல்வாக்கு போன்றவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். இவற்றைத் தவிர்க்கவே கைது நடவடிக்கை அவசியம். ஆனால், கொடிய வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை புலன் விசாரணை அதிகாரி கைது செய்யாமல் விடுவதும், அவர்கள் உயர் நீதிமன்றத்தில் சாதகமான ஆணை பெறவும் வழிவகை செய்யப்படுகிறது. வன்கொடுமை நிகழ்ந்த குறிப்பிட்ட நியாயமான காலகட்டத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லையெனில், உயர் காவல் அதிகாரிகளுக்கு மனு அளித்து முறையிடலாம். கடமை தவறியதற்காக தொடர்புடைய புலன் விசாரணை அதிகாரி மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளச் சொல்லி கேட்கலாம்.

அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையெனில், தக்க ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை (ரிட்) மனு தாக்கல் செய்து நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரலாம். வன்கொடுமையின் தீவிரத்தைப் பொறுத்து, வன்கொடுமையாளரை புலன் விசாரணை அதிகாரி கைது செய்யாமல் விடுவது வழக்கை கடுமையாக பாதிக்கும் அம்சம் என்பதால், புலன் விசாரணை அதிகாரியின் உள்நோக்கம் கேள்விக்குரியதாகிவிடும். அந்நிலையில், புலன் விசாரணை சரியான திசையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், வழக்கை வலுப்படுத்த புலன் விசாரணையை வேறொரு அதிகாரிக்கோ, அமைப்புக்கோ மாற்றம் செய்து உத்தரவிடக் கோரி உயர்நீதி மன்றத்தை அணுகலாம். பல வழக்குகளில் இதுபோல் புலன் விசாரணை அதிகாரி / அமைப்பு மாற்றல் உத்தரவிடப்பட்டுள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து இருபதாண்டுகள் நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இச்சட்டத்தைப் பயன்படுத்தப்படக் கூடாது எனப் பல்வேறு தரப்பினரும் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களில் காவல் துறையினர் முதலிடம் வகிக்கின்றனர். இதற்கான காரணம் சாதியம் என்பது வெளிப்படையானதே. இதன் தொடர்ச்சியாகவே, வன்கொடுமைப் புகார் வரப்பெறும் சமயத்திலிருந்து அவர்கள் முட்டுக்கட்டை போடத் தொடங்கிவிடுகின்றனர். மீறி பதிவு செய்யப்படும் வழக்குகளையும் எவ்விதத்திலாவது வீணடிக்கும் மனப்பான்மை பரவிக்கிடக்கிறது. அவற்றில் ஒன்றுதான், வன்கொடுமைப்புகாரைப் பொய் என்று புலன் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வதாகும்.

இத்தகைய சூழலில், காவல் துறையும் நீதித்துறையும் முதல் தகவல் அளித்த நபருக்கு அறிவிப்பு அனுப்பி, புலன் விசாரணையின் முடிவை ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று காரணம் கேட்க வேண்டும். அவ்வாறு வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர் நீதித்துறை நடுவரிடம் ஆட்சேபனை மனு (Protest petition) அளித்து, வழக்கின் புலன் விசாரணை எவ்விதத்தில் முறைப்படி மேற்கொள்ளப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டி மறுபுலன் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரலாம். புலன் விசாரணை முடித்தபின் வன்கொடுமைச் சட்டப்பிரிவுகள் ஈர்க்கப்படவில்லை எனவும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் மட்டுமே ஈர்க்கப்படுவதாகவும் கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. அது போன்ற சூழலில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யவும் மனு செய்யலாம்.

இதுபோன்ற வழக்கொன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மதுரை மேலவளவு கிராமத்திற்கு அருகிலுள்ள ஊர் சென்னகரம்பட்டி. பல ஆண்டுகளாக கோயில் நிலத்தை ஆதிக்க சாதியினரான அம்பலத்தார் குத்தகைக்கு எடுத்து வருகின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகு தலித்துகள் கோயில் நிலத்தை குத்தகை எடுத்துவிட கோபமுற்ற அம்பலத்தார், தலித்துகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட வட்டாட்சியர் தலைமையிலான அமைதிக்குழு கூட்டம் 5.7.1992 அன்று நடைபெறுகிறது. தலித்துகள் அமைதிக்குழு கூட்டத்திற்கு வந்து காத்திருக்க, அம்பலத்தார் எவரும் வரவில்லை. காத்திருந்த தலித்துகளை வீட்டிற்கு செல்லச் சொல்ல, அவர்கள் மேலூரிலிருந்து ஊர் திரும்ப பேருந்தில் ஏறுகின்றனர். பேருந்தை வழிமறித்த அம்பலத்தாரின் ஆயுதக் கும்பல், இரு தலித்துகளை பேருந்துக்குள் வைத்து படுகொலை செய்கின்றனர். முதல் நாள் நடந்த தாக்குதலுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மேலூர் காவல் நிலையத்தினர், படுகொலை தொடர்பான புகார் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்கின்றனர்.

வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பவத்திற்கு அடிப்படைக் காரணம் சாதி பாகுபாடே என்பதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அம்மனுவை விசாரணை நீதிமன்றம் காலதாமதம் என்ற காரணத்திற்காக தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் சீராய்வு மனுவில் (Ctrl RC 768/2000 நாள் 17.4.2002) தீர்ப்பு வழங்கிய நீதிபதி கற்பக விநாயகம், பாதிக்கப்பட்டோர் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கை மறுபுலன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த பொருள் விளக்கத் தீர்ப்புகளில் இத்தீர்ப்பு முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது.

காவல்படுத்துதலும் பிணை மறுக்கச் செய்தலும்: இனியன் கொலை வழக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இனியன். குடவாசல் ராசேந்திரன் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது குற்ற நடவடிக்கைகளில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பெரும்பான்மையானவை. சில ஆண்டுகளுக்கு முன்பு, திருவாரூர் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தர்மையன் என்னும் தலித், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பொன் சுந்தரம் என்பவரால் சாதி வெறியுடன் இழிவுபடுத்தப்படுகிறார். இதைத் தட்டிக் கேட்ட மற்ற தலித் மக்கள், கள்ளர் சமூகத்தினரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். இது தொடர்பான தலித் மக்களின் புகார் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அவர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. இது தொடர்பாக கள்ளர் சமூகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தலித் மக்கள் சாலை மறியல் போராட்டம் ஒன்றை இனியன் ஒருங்கிணைப்பில் மேற்கொள்கின்றனர்.

அப்போது குடவாசல் ராசேந்திரன் தலைமையில் கள்ளர் சமூகத்தினர் 75 பேர் கடும் தாக்குதல் தொடுக்க, 15 தலித் பெண்களும் 25 தலித் ஆண்களும் மோசமாக காயமடைகின்றனர். அதைத் தொடர்ந்து இனியன் மீது குடவாசல் ராசேந்திரன் கடுமையான முன் விரோதத்துடன் இருக்கிறார். குடவாசல் ராசேந்திரனால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக இனியன், தமிழக அரசின் உள் துறைச் செயலர் உட்பட பலருக்கு மனுச் செய்கிறார். இந்நிலையில் 18.1.2006 அன்று குடவாசல் நகர கடைவீதியில் இனியன் தன் மனைவி அமுதாவுடன் காலை 11 மணியளவில் சென்று கொண்டிருக்கும்போது, குடவாசல் ராசேந்திரன், அவரது மகன்கள் அரசன்கோவன், தென்கோவன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட ஒரு கும்பலால் ‘ஒரு பறையன் என்னை எதிர்க்கப்போயிற்றா' என்று கூறிக் கொண்டு, கொலைவெறியுடன் இனியன் கொடூரமான முறையில் சரமாரியாக அரிவாளால் உடல் முழுக்க வெட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

சம்பவம் நடைபெற்ற அரை மணிக்குள்ளாகவே அருகிலுள்ள காவல் நிலையத்தில் சம்பவத்தை நேரில் கண்ணுற்ற சாட்சியான அவரது மனைவி அமுதா, சம்பவம் குறித்து புகார் தருகிறார். கொலை குறித்த சட்டப்பிரிவுடன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழும் புகார் பதிவு செய்யப்படுகிறது. அப்புகாரில் தான் நேரடியாகக் கண்ட சம்பவத்தைக் குறிப்பிட்டதுடன் கொலை வெறிச் செயலில் ஈடுபட்ட நபர்களின் பெயர்களுடன் விவரத்தைத் தருகிறார். இருப்பினும் அக்குறிப்பிட்ட நபர்கள் சாதி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலம் பொருந்தியவர்களாகவும் இருந்த காரணத்தால், அப்பெயர் குறிப்பிட்ட நபர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. மாறாக, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்ட நபர்களில் இருந்தவர்கள் தவிர, மற்றவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்தது காவல் துறை ஆனால், உண்மைக் குற்றவாளிகளுக்கெதிராக ஒரு துரும்பும் அசையவில்லை.

உயர் நீதிமன்றத் தலையீடும் உத்தரவும்

இச்சூழலில் இவ்வழக்கின் புலன்விசாரணை, சட்டமுறைப்படி நடைபெறவில்லை; காவல் துறை குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறது என்று கூறி அமுதா சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அம்மனுவின் மீதான விசாரணையின்போதும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்குச் சாதகமாகவே செயல்பட்டது காவல் துறை. சம்பவம் குறித்து 27 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பான்மையினர் முதல் தகவல் அறிக்கையில், பெயர் சுட்டப்பட்ட குற்றவாளிகள் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதாகவும், ஒரு சிலர் மட்டுமே அவர்கள் கொலையில் ஈடுபட்டதாகச் சொன்னதாகக் கூறி, காவல் துறை முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்றது.

எனினும் குற்றச்செயலைக் கண்ணுற்ற சாட்சி குற்றச்செயலை புரிந்தவர்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் அவர்களில் ஒருவரைக்கூட கைது செய்யாமல் அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் காவல் துறை செயல்பட்டது மிகப்பெரும் தவறு. எனவே, இப்படிப்பட்ட காவல் துறையினர் இவ்வழக்கை மேற்கொண்டு புலனாய்வு செய்ய அனுமதிப்பது நியாயத்திற்கு உகந்ததல்ல என்று கூறி இவ்வழக்கின் புலன் விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் 21.3.2006 அன்று உத்தரவிட்டது. இவ்வகையில், ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பது புலனாகும்.

காவல்படுத்துதலின் வகைகள்

ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்படும் நபர் காவல் துறையினரால் சட்டப்படி காவலுக்குட்படுத்தப்படும் போது, அந்நபர் நீதித்துறை நடுவர் முன்பு அவர் அவ்வாறு கைது செய்யப்பட 24 மணி நேரத்திற்குள் முன்னிலைப்படுத்தப்படவேண்டும். இது, காவல் துறையினரின் அரசமைப்புச் சட்டக் கடமையாகும்.அப்போது நீதித்துறை நடுவர், அந்நபரை நீதிமன்றக் காவலுக்குட்படுத்துவார். புலன் விசாரணை அதிகாரி தனது புலன் விசாரணை தேவைப்படின், அந்நபரை காவல் துறைக் காவலுக்கு உட்படுத்த வேண்டுமெனில், அதற்குரிய காரணத்தை மனுசெய்து நீதித்துறை நடுவரிடம் உத்தரவு பெறலாம்.

இவ்வாறு நீதிமன்றக் காவலில் உள்ள நபர் நீதி மன்றத்தை அணுகி தன்னைப் பிணையில் விடுவிக்கக் கோரி மனு செய்யலாம். குற்றம் சாட்டப்படும் நபர் மீதான குற்றம் அரசுத் தரப்பில் அய்யந்திரிபுற நிரூபிக்கப்படும் வரையில், அந்நபர் குற்றமற்றவராகக் கருதப்படுவேண்டும் என்று சட்டம் கருதுவதால், குற்றம் சாட்டப்படும் நபருக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு பிணை வழங்க வேண்டும் என்பது விதியாகவும், குற்றத்தின் தன்மை கொடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவரின் முன் குற்ற வரலாற்றைக் கவனத்தில் கொண்டும் பிணை மறுக்கப்படுவது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும் என்பது, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள சட்டக் கோட்பாடாகும்.

எதிர்பார்ப்புப் பிணையும் தடையும்

இந்நாட்டுக் காவல் துறையினரின் செயல்பாடு குறித்து உள்ள நியாயமான நம்பிக்கையின்மை சட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதால், எதிர்பார்ப்புப் பிணை என்ற ஒரு தீர்வழியை சட்டம் வழங்கியுள்ளது. இது பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நபருக்குரிய சட்ட உரிமையாகும்.

ஆனால் வன்கொடுமை வழக்குகளைப் பொருத்தவரையில், இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றங்களும் பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றங்களாதலால் (வன்கொடுமைக் குற்றங்கள் அனைத்தும் ஆறு மாதங்கள் முதல் அய்ந்து ஆண்டுகள் வரையிலான தண்டனைக்குரியவை என்பதால், இதில் எதிர்பார்ப்புப் பிணை என்ற ஒரு தீர்வழி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 18இன்படி சந்தேகத்திற்கிடமளிக்காதவகையில் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சட்டப்பிரிவு அளித்துள்ள பாதுகாப்பை பலவீனப்படுத்தும் விதத்தில் உயர் நீதிமன்றங்களில் எதிர்பார்ப்புப் பிணையைவிட பல மடங்கு சாதகமான உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. இது, முழுக்க முழுக்க சட்டவிரோதமானதாகும். இச்சட்டவிரோத உத்தரவுகள் குறித்த விரிவான ஒரு கட்டுரை ‘தலித் முரசு' 2007 இதழில் (‘வன்கொடுமை வழக்குகள் சந்திக்கும் வன்கொடுமை') வெளிவந்துள்ளது.

காவல் படுத்துதலின் அவசியம்

ஒரு வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை புலன்விசாரணை அதிகாரி உடனடியாகக் கைது செய்ய வேண்டிய மிக மிக அவசியமானதாகும். ஆனால், பெரும்பான்மையான வன்கொடுமை வழக்குகளில் கைது என்ற ஒரு அத்தியாவசிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளன. சாதியம் இதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. அதேபோல் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அரசியல் மற்றும் பொருளாதார பலம் காரணமாகவும் கைது நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக, வன்கொடுமையாளர்களுக்கு அனைத்து விதத்திலும் சட்டத்தை மீறி ஒத்துழைப்பு அளிப்பதே நடைபெறுகிறது.

காவல் துறையின் மெத்தனம்

குற்றம் சாட்டப்பட்டவர் பிணை அல்லது எதிர்பார்ப்புப் பிணை மனு தாக்கல் செய்யும்போது, காவல் துறையினர் குறிப்பிட்ட வன்கொடுமை தொடர்பான குறிப்பான விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து அல்லது எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து, அம்மனுவை ஆட்சேபணை செய்வதற்குப் பதிலாக, இந்நிலையிலும் ஒத்துழைப்பு தரப்படுவது குற்றம் சாட்டப்பட்டவர் பிணை அல்லது எதிர்பார்ப்புப் பிணை மிக எளிதில் பெற ஏதுவாகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஒன்றுள்ளது. ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வது அவசியமா, கைது செய்யலாமா, கூடாதா என்பது அக்குற்றத்தைப் புலன்விசாரணை செய்யும் அதிகாரியின் உளத் தேர்விற்குட்பட்டதாகும். அதில், நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு சூழ்நிலைகளில் கூறியுள்ளது.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, புலன்விசாரணை அதிகாரிகள் வன்கொடுமையாளர்களைக் கைது செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இச்சூழல் வன்கொடுமையினால் பாதிக்கப்படுவோரை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. எனவே, வன்கொடுமையினால் பாதிக்கப்படுவோர் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யக்கோரி எந்த நீதிமன்றத்தையும் அணுக முடியாத அவலநிலை உள்ளது.

காவல்படுத்தச் செய்தல்

எனினும் பாதிக்கப்பட்டோரும், அவர்களுக்கு துணை நிற்போரும் சோர்ந்துவிட வேண்டியதில்லை. காவல் துறை உயர் அதிகாரிகளையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாவட்ட ஆட்சியர் போன்ற வருவாய்த் துறை அதிகாரிகளையும் எழுத்துப்பூர்வமான முறையில் அணுகி, காவல் துறையைச் சேர்ந்த புலன்விசாரணை அதிகாரிக்கு அழுத்தம் தருவதன் மூலமே வன்கொடுமையாளர்களைக் கைது செய்ய வைக்க முடியும். இது தனிநபர் நடவடிக்கையாக இல்லாமல், ஒரு கூட்டு நடவடிக்கையாகச் செய்தல் வேண்டும். இதனைத் தொடர்ந்து அப்போதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட வன்கொடுமை தொடர்பான செய்திகளைத் திரட்டி ஒரு தெளிவான துண்டறிக்கையோ, சிறுவெளியீடோ வெளிக்கொணர்ந்து காவல் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியோரின் அலட்சிய மனப்போக்கை வெளிப்படுத்தும் விதமாக பொது மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதன் மூலம் போதிய அழுத்தம் தர முடியும். இதன்மூலம் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்து சிறை செய்ய வைக்க இயலும்.

வன்கொடுமையின் தீவிரம் மற்றும் பாதிப்பின் தன்மையைப் பொருத்து இந்நடவடிக்கையை வலியுறுத்திப் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றையும் சமூகச் செயல்பாட்டாளர்கள் நடத்தலாம்.

பிணையை எதிர்த்தல்

அடுத்தகட்டமாக, வன்கொடுமையாளர்கள் நீதிமன்றத்தை அணுகி பிணை மனு தாக்கல் செய்யும்போது, பாதிக்கப்பட்டவர் சார்பாக தகுதி வாய்ந்த வழக்குரைஞரை நியமித்து அப்பிணை மனுவில் ஓர் இடையீட்டு மனு தாக்கல் செய்து வன்கொடுமையாளரின் பிணை மனுவை ஆட்சேபணை செய்ய வேண்டும். எந்தளவிற்கு ஆட்சேபணை வழக்குத் தகுதியின் அடிப்படையில் செய்யப்படுகிறதோ, அந்தளவிற்கு வன்கொடுமையாளரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் வன்கொடுமை நிகழ்வுகள் மீண்டும் நிகழ்த்தப்படாத வண்ணம் தவிர்க்க முடியும்.

காயங்கள் தொடரும்

Pin It