நாள்: 05.07.2014 சனிக்கிழமை

காலை 9.30 மணி

இடம்: இக்சா மையம், எழும்பூர், கன்னிமரா நூலகம் எதிரில், சென்னை - 5

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற வேலைத்திட்டத்தோடு கடந்த இரண்டாண்டு காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டுவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசும் அவரது கூட்டாளிகளும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

தருமபுரியில் நடத்திய கொடும் கொள்ளை அழித்தொழிப்பு வன்முறையை அடுத்து, தமிழ் நாடெங்கும் காதல் திருமண எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்த ராமதாஸ், தலித் மக்களுக்கு எதிராக பிற பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்புகளை ஒருங்கிணைப்பதில் தோல்வியடைந்து விட்ட போதிலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெற்றிருக்கும் 28 லட்சம் வாக்குகள் அவரை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.

தலித் மக்களுக்கு எதிரான, சாதிவெறி உணர்வை ஊட்டுவதன் மூலம் வன்னியர் சமூக மக்களை தனக்கு வாக்களிக்கச் செய்யமுடியும் என்ற அவரது ‘அரசியல் சூத்திரம்’ மீண்டும் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது.

இன்னும் 20 மாதங்களில் வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் இதே ‘அரசியல் சூழ்ச்சியை’ பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்பதை அவரது நகர்வுகள் தெளிவுபடுத்துகின்றன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக அவர் தொடுத்திருக்கும் வழக்கு அதன் வெளிப்பாடுதான்.

வழக்கின் முடிவு நாம் அறிந்ததுதான். தள்ளுபடியாகப் போகும் இந்த வழக்கைப் போன்றே பல வழக்குகளை வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சந்தித்துவிட்டது. ஆனாலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் ராமதாஸ். ராமதாசின் வேலைத்திட்டத்தில் அதாவது வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை விவாதப்பொருளாக்கும் அவரது வேலைத்திட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள, அதாவது ‘வழக்கில் தலையீடு செய்து விவாதிப்பது’ என சில தலித் தலைவர்கள் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள்.

இச்சூழ்நிலையில், வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் தமிழகத்தில் எந்த அளவில் செயல் படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம். கிடைத்திருக்கும் அரசு புள்ளி விபரங்களின் அடிப்படையில், ஒரு ஆண்டிற்கு தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் காவல் நிலையங்களில் பதிவாகும் மொத்த வழக்குகளில் 0.25 சதவிகித வழக்குகள் கூட வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவாகவில்லை.

சட்டம் நடைமுறைக்கு வந்து கால் நூற்றாண்டு காலம் ஆகிவிட்ட போதிலும், இப்படியரு சட்டம் இருப்பதைக்கூட 90 சதவிகித தலித் மக்கள் அறிந்திருக்கவில்லை. சட்டம் இருப்பதை அறிந்தவர்களும்கூட மக்களுக்கு உதவ முன்வருவதில்லை. பெரும்பாலான பாதிக்கப்பட்ட மக்கள், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் செல்லும்போது, அங்கு காவல்துறையினர் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் மக்கள் புகார் அளிக்கின்றனர்.

வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் பற்றி காவல்துறையினர் வாய் திறப்பதில்லை. இது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள்கூட மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்டவைகளாகும். உண்மையில், தமிழகத்தில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் தந்திரமான முறையில் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஆயினும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் என்ற ஒரு சட்டமே இருக்கக்கூடாது என்று, அதை ரத்துசெய்ய சாதியவாத சக்திகள் துடிப்புடன் செயலாற்றி வருகின்றன.

இச்சூழலில், மக்களின் மீது அக்கறையும், சமூக மாற்றத்தில் நம்பிக்கையும் கொண்டு களத்திலும் அறிவுத்தளத்திலும் செயல்பட்டுவரும் தோழர்கள் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு தலித் குடியிருப்பிலும் கொண்டுபோய் சேர்ப்பதற்கான வேலையை காலம் நமது தோள்களில் சுமத்தியுள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வையும் விரிவான பயிற்சியையும் மக்களுக்கு அளித்து, சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க மக்களைத் தயார்படுத்த வேண்டிய பணி நமது முன் விரிந்து நிற்கிறது. அளப்பரிய அப்பணியைச் செய்ய நம்மிடம் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்கவே இந்த தலித் களப்பணியாளர்கள் - வழக்கறிஞர்கள் - அறிவுஜீவிகள் சந்திப்பு.

விரிவான தகவல்களுடனும், சிந்தனைகளோடும் அவற்றை நடைமுறைப்படுத்த காலவரையறைகளுடன் கூடிய வேலைத்திட்டங்களோடும் பங்கெடுக்க உங்களை அழைக்கிறோம்.

சிந்தனைக்கும் ஆய்வுக்கும் சில குறிப்புகள் :

1. அறிவுத்திறனோடும், விவாதப் புலமையோடும், தன்னலமற்ற அர்ப்பணிப்போடும் களப்பணியாற்றி வரும் தோழர்கள், சமூக அக்கறை கொண்ட எழுத்தாளர்கள் - பத்திரிகையாளர்கள் மற்றும் மிகச்சிறந்த சட்ட அறிவும் சமூக மாற்றத்திற்கான வேட்கையும் கொண்ட வழக்கறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட மாநில அளவிலான மையப்படுத்தப்பட்ட, வன்கொடுமைத் தடுப்புச்சட்ட உயர் கண்காணிப்புக் குழுவை உருவாக்குவது. Vigilence on Implementation of Prevention of Atrocities Act (VIPAA) (உதாரணத்திற்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.)

2. வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் உள்ள கூறுகளை முழு அளவில் நடைமுறைப்படுத்த மத்திய மாநில அரசுகளுடன் விவாதிப்பது, நீதிமன்றங்களை அணுகுவது, வழக்குகளை கண்காணிப்பது, காவல்துறை உயர் அதிகாரிகளைச் சந்திப்பது, ஊடகங்களில் உரையாடுவது, வழக்கறிஞர்களுக்கு தொடர் பயிற்சிகளை அளிப்பது, கருத்தரங்குகள் மாநாடுகள் நடத்தி சட்ட செயலாக்கம் குறித்த விவாதத்தை எழுப்புவது, உயர்மட்ட அளவில் வன்கொடுமைகளுக்கு எதிராக உறுதியான சமரசமற்ற செயல்பாட்டை வெளிப்படுத்துவது போன்றவை
வன்கொடுமைத் தடுப்புச்சட்ட உயர் கண்காணிப்புக் குழுவின் முதன்மைப் பணிகளாக இருக்கும்.

3. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு களப்பணியாளர் - ஒரு எழுத்தாளர் - ஒரு வழக்கறிஞர் ஆகிய மூவரைக்கொண்ட மாவட்ட கண்காணிப்புக் குழுக்களை உருவாக்குவது. மக்களைத் திரட்ட,மக்களுக்கு வழி காட்ட - களப்பணியாளர்; வன்கொடுமைகளை ஆவணமாக்க, செய்தியாக்க பதிவுசெய்ய - எழுத்தாளர்; வழக்குகளைப் பதிவு செய்ய, கண்காணிக்க, காவல்துறையுடன் உரையாட வழக்கறிஞர் என மாவட்டக் குழு இணைந்து செயல்படுவது.

4. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தலித் குடியிருப்புகளில், வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் குறித்த பயிலரங்குகள் நடத்துவது, மாலை நேர தொடர் பயிற்சிகள் அளிப்பது, கலைக்குழுக்கள் மூலம் சட்டம் பற்றிய பரப்புரைகள் செய்வது, உடன் சட்டம் குறித்த சிறு சிறு துண்டறிக்கைகள் கையேடுகள், வழிகாட்டல் நெறிமுறைகள், புகார் தயாரிப்புக் குறிப்புகள் ஆகியவற்றை மக்களுக்கு அளிப்பது போன்ற பணிகளை மாநில மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள் இணைந்து மேற்கொள்வது.

5. பெண்கள், கல்லூரி மாணவர்கள் கொண்ட குழுக்களை உருவாக்கி வன்கொடுமை நடக்கும் போதும் அச்சுறுத்தல்கள் நிகழும்போதும் ஏற்படும் சூழல்களைக் கையாள்வதற்குத் தேவையான பயிற்சிகளை அளித்து தயார்படுத்துவது.

6. வன்கொடுமைத் தடுப்புச்சட்ட உயர் கண்காணிப்புக்குழுவைத் எந்த நேரத்திலும் மக்கள் தொடர்புகெள்ளும் வகையில் இணையத்தளம், ‘ஹெல்ப் லைன்’, ஆகியவற்றை உருவாக்குவது. ஒவ்வொரு கிராமத்திலும் வன்கொடுமைத் தடுப்புச்சட்ட உயர் கண்காணிப்புக்குழு விளம்பரப் பலகை நிறுவுவது.

7. வன்கொடுமைகளை ஆவணங்களாக்குவது, பதிவு செய்வது, பொதுசமூகத்திடம் அம்பலப்படுத்தி அதன் உணர்ச்சியை தட்டியெழுப்புவது.

8. மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை காப்பாற்ற வேண்டியது மக்களின் கடமை என்பதை மக்கள் உணரச் செய்யும் வகையில் நீண்ட கால தொடர் செயல்பாட்டை வெளிப்படுத்துவது.

9. போலி புகார்களையும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மேல் தங்குதடையின்று நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளையும் தடுத்த நிறுத்த மக்களைத் தயார்படுத்துவது.

10. நிலுவையிலிருக்கும் வன்கொடுமை வழக்குகளை கையிலெடுத்து நீதிமன்றங்களில் போராடுவது.

இவைகளையும் உங்களின் சிந்தனைகளையும் செயல் திட்டங்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிப்போம். இணைந்து செயல்படுவோம்!

தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் துணிவைப் பெற்ற மக்களே வேறு எதையும்விட பலமானவர்கள். அப்படிப்பட்ட பலத்தை நம் மக்களுக்கு உருவாக்குவோம்.

தொடர்புக்கும் ஆலோசனைகள் வழங்கவும்:

சத்தியசந்திரன் - 9080331950

யாக்கன் - 9884595489

ரஜினிகாந்த் - 9940560233

Pin It