பள்ளிப் பைகளுக்குள் கத்தியும், அறிவாளும்! மாணவர்களின் மூளைகளில் சாதி வெறியும், அதிகார மனநிலையும்!

எத்தனை கல்வி முன்னேற்றம் வந்தாலும், எத்தனை அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டாலும், சாதியை இழிவென்று கருகாத வரையில், நம் சமூகம் முன்னேறப் போவதில்லை!

நாங்குநேரி நிகழ்வால் நடுங்குகிறது நெஞ்சமெல்லாம்! சாதியின் பெயரால் சக மாணவனை, தங்கள் நண்பனை, இழிவு படுத்துவதும், அதற்கு நியாயம் கேட்டால், இரவு நேரத்தில் அவன் வீடு புகுந்து வெட்டுவதும் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமான செயல்கள்!

தடுக்க வந்த தங்கையையும் வெட்டி, தாத்தாவைத் தள்ளிவிட்டு அவர் மரணத்துக்கும் காரணமாகி, நாங்குநேரி என்னும் ஊருக்கே கெட்ட பெயரைத் தேடித் தந்திருக்கிறார்கள்.student with knifeவெட்டப்பட்ட சின்னத்துரை உயிர் பிழைப்பானா என்று தெரியவில்லை. இவர்கள் வாழ்க்கையும் இனி மிஞ்சப் போவதில்லை. இளைஞர்கள் ஆயிற்றே என்று கருணை காட்டுவது கூட இனி நியாயம் இல்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கடுமையான தண்டனைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட வேண்டும் என்பதே சரி!

இனிமேலாவது சாதியின் பெயரால் ஆயுதங்களைத் தூக்குகிறவர்களுக்கு, இவர்களுக்கு வழங்கப்படும் கடும் தண்டனை ஒரு பாடமாக அமையலாம்!

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று முதலமைச்சர் சொல்லி உள்ளார். செய்தாக வேண்டும்! அமைச்சர்களும் நேரில் சென்று பார்வையிட்டு இருக்கிறார்கள். சட்டத்தாலும், தண்டனையாலும் மட்டும் இந்தச் சமூகத்தை திருத்தி விட முடியாது. மக்கள் நெஞ்சங்களில், சாதி என்பது அடையாளமில்லை, அவமானம் என்னும் உணர்வை ஆழ விதைக்க வேண்டும்!

சாதி ஆதிக்கத்திற்கும், உணர்வுக்கும் எதிராகப் போராடி வந்த தமிழகத்தில், இப்போது சிலர் சாதிப் பெருமையையைக் “குடிப் பெருமை” என்று சொல்லி புதுப்பிக்க முனைகிறார்கள். அவர்களும் இது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்புலத்தில் ஒரு காரணமாக இருக்கின்றனர்.

இதனைப் பேராசிரியர் த. செயராமன், தன் சமூக வலைத்தளப் பதிவில், கீழ்காணுமாறு சுட்டி இருக்கிறார்:

“உன் சாதியைச் சொல், நீ தமிழரா இல்லையா என்று நான் கூறுகிறேன் என்றீர்கள். சாதிப் பெருமை பேசினீர்கள். சாதிகளாக வாழ்வோம் என்று மார் தட்டினீர்கள்! அது குடிப் பெருமை என்றீர்கள்”

என்கிறார் பேராசிரியர் செயராமன். இந்தப் போக்கும் இளைஞர்களிடம் சாதி உணர்வை வளர்க்கத் தொடங்கி இருக்கிறது என்பது உண்மை!

இந்தக் கொடுமையான சாதிவெறி இனியும் இந்த மண்ணில் தொடரக்கூடாது. நாம் நடுநிலையாளர்கள் என்று நழுவிப் போகக் கூடாது. பாதிக்கப்படும் பட்டியலின மக்களின் பக்கம் நிற்போம்! தீண்டாமையை வேரோடு சாய்ப்போம்! இழவெடுத்த இந்தச் சாதி இழிவு என்று ஒழியுமோ அன்று வரை அனைவரும் இணைந்து போராடுவோம்!!

- சுப.வீரபாண்டியன்

Pin It