ஒவ்வொரு முறை சாதியப் படுகொலை நிகழும் போதும், 'இதுவே தமிழ்ச் சமூகத்தில் கடைசியாக நிகழும் படுகொலையாக இருக்க வேண்டும். இனிமேலாவது தமிழர்கள் தங்களுக்குள் உள்ள சாதிய முரண்பாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றுபடவேண்டும்' என்றுதான் தமிழர்களின் ஒற்றுமையை எதிர்பார்க்கும் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழனின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் சாதி, அவர்களை அவ்வாறு ‘தமிழர்கள் அனைவரும் சமம், அவர்களுக்குள் சாதி என்பதெல்லாம் கிடையாது, இது பார்ப்பனியத்தால் தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது’ என்று சாதியை ஒதுக்கிவிடும் நிலைக்கு விடுவதில்லை. சாதி ஒழிப்பு என்பது வாயால் மட்டுமே பேசிக் கொண்டுவர முடியும் ஒரு செயலாக நிச்சயம் இருக்க முடியாது என்பதைத்தான் ஒவ்வொரு சாதிய படுகொலையும் நமக்கு முகத்தில் அறைந்தார் போல உணர்த்திவிட்டுச் செல்கின்றது. உண்மையில் அப்பட்டமாக நடக்கும் சாதிய படுகொலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று மனதார விரும்புகின்றவர்கள் யாரும், வெற்று வார்த்தைகளால் ‘நீங்கள் அனைவரும் தமிழர்கள், உங்களுக்குள் சாதி என்பதெல்லாம் கிடையாது, அனைவரும் சமம்’ என்று சொல்லிவிட்டு பிரச்சினையை எளிதில் கடந்துவிட மாட்டார்கள்.

kachanatham dalit

கடந்த 28.05.2018 அன்று சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் அகமுடையார் சாதிவெறியர்களால் பள்ளர் சாதி மக்கள் 3 பேர் மிகக் கொடூரமான முறையில் வெட்டி, படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் ஐந்து பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். கொலை செய்யப்படும் அளவிற்கு அப்படி என்ன பெரிய குற்றத்தை பள்ளர் சாதி மக்கள் அகமுடையார் சாதி மக்களுக்கு செய்துவிட்டார்கள் என்று பார்த்தால், டீக் கடையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து பள்ளர் சாதியினர் சிலர் டீ குடித்திருக்கின்றார்கள். இந்தச் செயல் தன்னை ஆதிக்க சாதியாக கருதிக் கொள்ளும் அகமுடையார் சாதி வெறியர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 28/05/2018 அன்று இரவு, அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கும் போது 17 பேர் கொண்ட கும்பல் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு ஊருக்குள் புகுந்து நிராயுதபாணியாய் இருந்தவர்களை வெட்டிச் சாய்த்திருக்கின்றது. தூங்கிக் கொண்டிருப்பவர்களை வெட்டிக் கொல்வது, ஊரில் ஆண்கள் எல்லாம் வேலைக்குப் போன பின்னால் வந்து ஊரை எரிப்பது, தனியாக நிராயுதபாணியாய் இருப்பவர்களை கும்பலாக சேர்ந்து வெட்டிக் கொல்வது என்பதுதான் ஆதிக்கசாதி கோழைகள் தங்களின் வீரத்தை காட்டும் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகின்றது.

ஒவ்வொரு முறையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தங்களை ஆதிக்க சாதி என்று கருதிக்கொள்ளும் சாதிவெறியர்கள், அதிகார வர்க்கத்தின் துணையுடனேயே தாக்குதலை நடத்துகின்றார்கள். பெரும்பாலான சாதியக் கலவரங்கள் நன்கு திட்டமிடப்பட்டு, காவல்துறையின் ஆசியுடன் தான் நடத்தப்படுகின்றன. கச்சநத்தம் சாதியப் படுகொலையும் காவல்துறையின் ஆசியுடன் தான் நடத்தப்பட்டிருக்கின்றது. அகமுடையார் சாதிவெறியர்களால் பாதிக்கப்பட்ட பள்ளர் சாதி மக்கள், அகமுடையார் சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழையனூர் காவல்துறையில் புகார் கொடுத்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சாதிவெறியர்கள் படுகொலைகளை நிகழ்த்த அனுமதித்திருக்கின்றார்கள். காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர்கள் செல்வம் மற்றும் ஜானகிராமன் இருவரும் அகமுடையார் சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கின்றார்கள்.

படுகொலைக்குப் பின்னால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடிய பிறகே இந்த இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் இவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கச்சநத்தம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சாதிவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பழையனூர் காவல்நிலையத்தில் குற்ற எண் 32/2018 பிரிவுகள் 147,148,294(b),324,307,302 இ.த.ச மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 பிரிவுகள்3(1)(r),(s),3(2)(va) ஆகியவற்றின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறை சாதியப் படுகொலைகள் நிகழும் போதும், அதில் சம்மந்தப்பட்ட சாதிவெறியர்களை அம்பலப்படுத்துவதும் , சாதிவெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அரசை வற்புறுத்துவது மட்டுமே போதுமானதாக சில அமைப்புகளுக்கு இருக்கின்றன. அதைத் தாண்டி சமூகத்தில் இருந்து சாதியை ஒழிப்பதற்கு எடுக்க வேண்டிய அடிப்படையான முன்னெடுப்புகள் பற்றி, சாதிவெறிக்கு எதிராக மார்தட்டும் வாய்ச்சவடால் பேர்வழிகள் யோசிப்பதில்லை. கச்சநத்தம் கிராமத்தில் அகமுடையார் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செய்துள்ளார்.

'சாதியால் பிளவுபட்டிருக்கும் தமிழர்கள் சாதியை மறந்து ஒன்றுபடவேண்டும், தமிழர்கள் மொழியின் அடிப்படையில் ஒரு தேசிய இனமாக உருவாக வேண்டும்' என்று சீமான் உட்பட பல தமிழ்த்தேசியவாதிகள் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றனர். கச்சநத்தம் சாதியப் படுகொலைக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்த இவர்களில் பலர், கடந்த காலங்களில் நடந்த சாதி ஆணவப் படுகொலைகள் பலவற்றுக்கு கருத்து கூட தெரிவிக்காதவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதுவே அகமுடையார் சாதிப் பெண்ணை பள்ளர்சாதி ஆண் திருமணம் செய்துகொண்டதால் இந்தப் படுகொலைகள் நிகழ்ந்திருந்தால், மேற்படி தமிழ்த்தேசியவாதிகள் இந்நேரம் வேறு ஒரு பிரச்சினையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்திருப்பார்கள். தற்போது நடந்த சாதியப் படுகொலைகள் அடிப்படையில் அகமுடையார் சாதிவெறியர்கள் தங்களை பிறப்பின் அடிப்படையில் மேம்பட்டவர்களாகவும், பள்ளர்சாதி மக்களை பிறப்பின் அடிப்படையில் மிகக் கீழானவர்களாகவும், அதனால் அவர்கள் தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற பார்ப்பனிய கொழுப்பில் நடத்தப்பட்டதாகும். இதைக் கண்டிப்பதும், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதும் அடிப்படையில் மேற்படி தமிழ்த்தேசியவாதிகளுக்குப் பிரச்சினை அற்ற செயலாகும். அது அவர்கள் விரும்பும் தமிழ்த் தேசியத்தை வளர்க்க நிச்சயம் உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பெரியாரை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியவாதிகளும், பெரியாரை மறுக்கும் தமிழ்த் தேசியவாதிகளும் மாறுபடும் புள்ளியை கச்சநத்தம் படுகொலை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கின்றது. பெரியாரை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் கச்சநத்தம் படுகொலைக்கு மட்டும் அல்லாமல், இளவரசன், கோகுல்ராஜ் , உடுமலை சங்கர் என தமிழகத்தில் நடந்த அத்தனை சாதிய ஆணவப் படுகொலைக்கும் களத்தில் இறங்கி போராடி இருக்கின்றார்கள், அப்பொழுதெல்லாம் மேற்படி தமிழ்த்தேசிய குழாம் அதைப் பற்றி வாயே திறந்ததில்லை. காரணம் பெரியாரை மறுக்கும் தமிழ்த் தேசியத்தில் சாதி இருக்கும், ஆனால் சாதிவெறிதான் இருக்கக்கூடாது. ஆனால் பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழ்த்தேசியத்தில் சாதியே இருக்கக் கூடாது என்பதுதான் அடிப்படை. அதனால் தான் புறமண திருமணத்திற்கு எதிராக இந்தச் சாதிய சமூகம் கடைபிடிக்கும் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும் பெரியாரிய இயக்கங்கள் எதிர்வினை ஆற்றுகின்றன. இந்திய சமூகத்தில் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், தீவிரமாக புறமண முறையை நடைமுறைப்படுத்துவதும் , பார்ப்பனிய சடங்குகளையும், அதன் மேலாண்மையையும் கேள்விக்கு உட்படுத்தி அழித்தொழிப்பதையும் பெரியாரிய இயக்கங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றன. ஆனால் பெரியாரை ஏற்றுகொள்ளாத மேற்படி தமிழ்த்தேசிய குழாமைச் சார்ந்தவர்கள் ஒருபோதும் சாதிஒழிப்பு என்பது புறமண முறையால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

அவர்களின் தமிழ்த்தேசியமே சாதியின் மீது தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. சாதி ஒழிப்பைப் பற்றி பேசுபவன் புறமண முறையைப் பற்றியோ, பார்ப்பனிய சடங்குகளையும், அதை நியாயப்படுத்தும் பார்ப்பனிய இலக்கியங்களை அழித்தொழிப்பதைப் பற்றியோ பேசவில்லை என்றால், அவன் நிச்சயம் பார்ப்பனியத்தின் கைக்கூலியாகத்தான் இருப்பான். மேற்படி தமிழ்த்தேசிய குழாம்கள் எப்போதாவது புறமண திருமண முறையை ஆதரித்துப் பேசி இருக்கின்றார்களா? இல்லை குறைந்தபட்சம் தமிழர்களை சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தும் புராணக் குப்பைகளை அம்பலப்படுத்தி இருக்கின்றார்களா? ஒரு போதும் செய்ததில்லை. இவர்கள் ஆரிய பார்ப்பனியத்துக்குப் பதில் தமிழ்ப் பார்ப்பனியத்தையும், ஆரிய மூடநம்பிக்கைகளுக்குப் பதில் தமிழ் மூடநம்பிக்கையையும் தான் கட்டமைக்க முயன்றார்கள், இன்றும் முயன்று வருகின்றார்கள். இவர்களிடம் சாதி ஒழிப்புக்கான எந்த உருப்படியான திட்டமும் இல்லை என்பதுதான் உண்மை. சாதியை வைத்து தமிழன், தமிழன் அல்லாதவன் என்று கட்டமைக்கும் இவர்களிடம் அப்படியான திட்டம் இல்லாதது ஆச்சரிப்படுவதற்கில்லைதான்.

கச்சநத்தம் படுகொலை தொடர்பாக சீமான் மனம் வருந்தி கொடுத்த பேட்டியில், “சாதியப் படுகொலை செய்யப்பட்ட மூவரின் இறுதி நிகழ்வில் நாங்கள் பெரும் மனவலியோடும் துயரம்தோய்ந்த இதயத்தோடும் நின்று கொண்டிருக்கிறோம். இதுபோன்ற கொடும்நிகழ்வுகள் இனிவருங்காலங்களில் தமிழகத்தில் நடைபெறக்கூடாது; வருங்காலப் பிள்ளைகள் காயங்களோடும் கண்ணீரோடும் பேசும் எங்கள் வார்த்தைகளை நீங்கள் உள்வாங்கிக்கொண்டு சாதிய மத உணர்ச்சியிலிருந்து மீண்டு, தமிழர் என்கிற தேசிய இனவுணர்வுக்குள் திரண்டு, ஒருதாய் பிள்ளைகளாக நாம் ஒன்றிணைந்து வாழவேண்டிய காலத் தேவை, ஒரு வரலாற்றுக்கடமை நமக்கு கையளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு குறிப்படும் சீமான் அதற்காக என்ன உருப்படியான திட்டம் வைத்திருக்கின்றார்? எப்படி தமிழர்களை சாதியின் பிடியில் இருந்தும், மதத்தின் பிடியில் இருந்தும் மீட்டெடுக்கப் போகின்றார்? பெரியாரை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் சாதியை ஒழிக்க புறமண திருமணத்தையும், மதத்தை ஒழிக்க அதன் அடிப்படையான சடங்குகளையும், அதை நியாயப்படுத்தும் புனித நூல்களை அழித்தொழிப்பதையும் வழியாகக் காட்டுகின்றார்கள். சீமான் எதைக் காட்டுகின்றார்? சீமானிடம் மட்டுமில்லை, பெரியாரை ஏற்றுக்கொள்ளாத மற்ற தமிழ்த்தேசிய குழாமிடமும் எந்தத் திட்டமும் இல்லை என்பதுதான் உண்மை. இவர்கள் அனைவரும் வாய்ச்சவடால் பேர்வழிகள். பார்ப்பனியத்தை நெஞ்சுரத்தோடு எதிர்க்கத் திராணியற்ற கோழைகள், அதற்கு மறைமுகமாக சேவகம் செய்பவர்கள்.

சீமானும் மற்ற தமிழ்த் தேசிய குழாமைச் சேர்ந்தவர்களும் உண்மையிலேயே கச்சநத்தம் படுகொலை சம்பவங்கள் போன்று இனி தமிழ்ச் சமூகத்தில் நடக்காமல் இருக்க வேண்டும் என விரும்பினால், அவர்கள் வெளிப்படையாக சாதி ஒழிப்புக்கான, மத ஒழிப்புக்கான திட்டத்தை வெளியிட வேண்டும். அப்படி இல்லாமல் வெற்று வார்த்தை ஜாலங்களால் சாதியையும், மதத்தையும் ஒழித்துவிடுவேன் எனச் சொன்னால் அது காற்றில் கம்பு சுற்றும் செயலாகத்தான் இருக்க முடியும். மேலும் தமிழ்த்தேசியம் பேசும் தோழர்களை விமர்சிக்கும் அதே வேளையில், கச்சநத்தம் படுகொலையில் தங்களை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டாதாய் ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் திராவிட அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு எந்த வகையிலும் மேம்பட்டதாய் இல்லை என்பதையும், இன்னும் சொல்லப் போனால் சாதியை ஒழிக்க வேண்டும் என்று அங்கு வந்த அமீர், ராம், வெற்றிமாறன் போன்றவர்களுக்கு இருந்த உணர்வு கூட இவர்களுக்கு இல்லை என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

- செ.கார்கி

Pin It