ambedkar 266இந்திய மக்கள் தொகையில் கால்வாசி மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்கள் கோவிலில் நுழைய அனுமதி இல்லை, கோவில் அருகே இருக்கும் சாலையில் நடக்க அனுமதி இல்லை, பொதுக் குளத்தில் தண்ணீர் குடிக்க அனுமதி இல்லை, நல்ல உடை உடுத்த அனுமதி இல்லை, உணவகங்களில் உணவு அருந்த அனுமதி இல்லை, தேனீர்க் கடையில் இரட்டை குவளை முறை, தங்கும் விடுதிகளில் தாழ்த்தப்பட்டவருக்கு தங்க அனுமதி இல்லை என்று எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாகவே இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்து வந்தார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்கள் இந்துக்கள் அல்ல என்பதோடு தாழ்த்தப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல என்ற மனநிலையை, பார்ப்பனிய சாதியம் இம்மண்ணில் கட்டமைத்து இருந்தது.

பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் சில அடிப்படை மனித உரிமைகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அது சில இடங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் இந்தியாவில் பெரும்பகுதி தாழ்த்தப்பட்டோருக்கான உரிமை, நடைமுறையில் மறுக்கப்பட்டதாகவே இருந்தது.

அப்படி மறுக்கப்பட்ட உரிமைகளை, மீட்டெடுக்கும் முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டில் ஒரு சில இடங்களில் மேலெழுந்தன. அவற்றில் முக்கியமானது, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் 1927 ஆம் ஆண்டில் மராட்டியத்தில் மஹத் நகரில் நடந்த சவுதார் குளம், நீரருந்தும் போராட்டமாகும்.

ஏட்டளவில் மட்டுமே சட்டங்கள்:

பம்பாய் சட்டமன்றத்தில் 4-8-1923 அன்று எஸ்.கே. போலே ஒரு முக்கியமான தீர்மானம் கொண்டுவந்தார். அதன்படி "ஆறு, குளம், கிணறு, நீர்த்தேக்கம் முதலிய தண்ணீர் கிடைக்கக்கூடிய பொது இடங்களிலும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற பொது இடங்களிலும் தீண்டத்தகாதோர் பிரவேசிப்பதற்கு யாதொரு தடையும் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

பம்பாய் அரசு தன்னுடைய எல்லாத் துறைகளும் இந்தத் தீர்மானத்தைக் கடைபிடிக்க வேண்டும்" என்று ஆணை பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து மஹத் நகரசபை 1924ல் ‘ சவுதார் குளம் பொதுக்குளமாகும். இதன் தண்ணீரை, தீண்டத்தகாதவர்கள் உட்பட, அனைத்து மக்களும் சுதந்திரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. தீர்மானம் நிறைவேற்றி இருந்ததே தவிர அது நடைமுறைக்கு வரவில்லை.

அதை 1927 மார்ச் 19,20, தேதியில் மஹத் நகரில் நடந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, சவுதார் குளத்தில் நீரருந்தி, பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த தடையை உடைத்து, மஹத் நகரமன்ற தீர்மானத்தையும் தம் மக்களின் உரிமையையும் நிலைநாட்டினார் அம்பேத்கர்.

மனுஸ்மிருதி எரிப்பு

இதனிடையே மஹத் நகரசபை, தாழ்த்தப்பட்டவர்களை சவுகார் குளத்தில் தண்ணீர் அருந்த புழங்கவிடும் முந்தைய தீர்மானத்தை 1927ல் ஆகஸ்டு 4ல் ரத்து செய்தது.

சட்டத்தின்படி எல்லோருக்கும் சம உரிமை என்றாலும் சமூகத்தில் மனு ஸ்மிருதியின் ஆட்சியே நடக்கிறது என்பதை அம்பேத்கர் சொந்த அனுபவத்திலிருந்தும், வாசிப்பின் மூலமாகவும் அறிந்துகொண்டு சமூகத்தில் சமத்துவமின்மைக்கு கேடு விளைவிக்கும் மனுஸ்மிருதியை( “மனு ஸ்மிருதி தஹான் தின்”. ) 25.12.1927அன்று கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார்.

அம்பேத்கரின் மனு எதிர்ப்பை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக சாதி இந்துக்களால் பலவித நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. அதில் முக்கியமானது, மாநாட்டு நிகழ்ச்சி நடக்க இடம் கிடைக்க விடாமல் செய்தார்கள். சாதியவாதிகளின் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமியரான திரு.ஃபத்தேகன் தன் இடத்தை வழங்கி போராட்டத்திற்கு உதவி செய்தார்.

25.12.1927இல் மனுஸ்மிருதியை கொளுத்தும் போராட்டத்தில் தலைமை உரையாற்றிய அம்பேத்கர் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நாகரிகமற்றவையாகவும், இழிவினும் இழிவானையாகவும் உள்ளன. இதை கணக்கில் எடுத்துக் கொண்டு இக்கூட்டம் மனுஸ்மிருதியை மிக வன்மையாக கண்டிப்பதோடு, அதன் குறியீடாக மனுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்த தீர்மானிக்கிறது என்றார்.

அதன்படி மனு ஸ்மிருதியை எரிப்பதற்காக வேள்வி (pyre) ஒன்று உருவாக்கப்பட்டது. வேள்விக் குழி என்பதைவிட சவக்குழி என்று சொல்வது பொருத்தமாகும். ஏனெனில் அது ஆறு அங்குல ஆழமும் ஒன்றரை அடி சதுரமும் கொண்ட அளவில் தோண்டப்பட்டு, மரக்கட்டைத் துண்டுகளால் நிரப்பப்பட்டது.

அதன் நான்கு மூலைகளிலும் கீழ்கண்ட சொற்களைத் தாங்கிய பதாகைகள் நிறுத்தப்பட்டன.

  1. “மனு ஸ்மிருதி சி தஹான் பூமி”, அதாவது மனு ஸ்மிருதிக்கான தகனம்.
  2. தீண்டாமையை அழியுங்கள்.
  3. பார்ப்பனியத்தை அடக்கம் செய்யுங்கள்.

டிசம்பர் 25, அன்று மாலை, மாநாட்டில் அம்பேத்கரின் பார்ப்பன நண்பரான கங்காதர் நீல்காந்த் சஹஸ்த்ரபுதே முதலாவதாகவும், பின்னர் தீண்டத்தகாதவர்களின் தலைவரான பி.என்.ராஜபோஜ் இரண்டாவதாகவும் மனு ஸ்மிருதியை எரிப்பதற்கான தீர்மானத்தை முன்னெடுத்தனர்.

அதன்பிறகு, மனு ஸ்மிருதி என்ற நூல் வேள்வியில் எரிக்கப்பட்டது. கங்காதர் மற்றும் ஐந்து- ஆறு தலித் சாதுக்கள் இதைச் செய்து முடித்தனர்.

மனுஸ்மிருதி எரிப்புக்கு பிறகு பேசிய அம்பேத்கர்,

"வருண அமைப்பு இருக்கும் வரை பார்ப்பனர்களின் ஆதிக்கம் உறுதி செய்யப்படுகிறது. குடிநீர் அல்லது கோயில் நுழைவுக்கான உரிமையை பெறுவதோ அல்லது சம பந்திக்கான தடைகளை அகற்றுவதோ மட்டுமல்ல சமூகத்தில் சமத்துவமின்மையை ஆதரிக்கும் வர்ணாசிரம முறையை நொறுக்குவதே நம் இயக்கத்தின் நோக்கம். ஒன்றை எரிப்பது என்பது அது குறிப்பிடுகின்ற கருத்தை எதிர்த்து, பதிவு செய்வதாகும். இதன் மூலம், தன்னுடைய நடத்தையை மாற்றிக்கொள்ளாத நபர் வெட்கப்படுவார் என்று கருதுகிறேன்" என்றார்.

வழக்கொழிந்து விட்டதா மனுதர்மம்?

மஹத்தில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டதைக் கண்டித்த சனாதனிகள் காலவழக்கொழிந்துப் போனதை எரிக்க வேண்டுமா என்று கொக்கரித்தார்கள்.

அதாவது இன்று, 2020இல், திருமாவளவன் மனுஸ்மிருதி பெண்களை இழிவுபடுத்துகிறது என்று சொன்னதைக் கேட்டு(அ) திரித்து காலவழக்கொழிந்துப் போன மனுஸ்மிருதியை ஏன் விமர்சிக்கிறார் என்று கொந்தளித்த இன்றைய பிஜேபி சங்கிகள் பேசியதையே அன்று அம்பேத்கர் எரித்தபோதும் சனாதன சங்கிகள் பேசினார்கள்.

சனாதன சங்கிகள் மனுவுக்கு ஆதரவாக கொந்தளிப்பதே மனுவின் இருப்பை உணர்த்துகிறது என அன்று அம்பேத்கர் சொன்னார். அது இன்றும் உண்மை என்பது திருமாவளவன் விடயதில் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

- அய்யனார்

Pin It