அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு (மார்ச் 2008 முதல் வாரத்தில்) தொடர்பாக வெளியான ஒரு செய்தி, பலரது புருவங்களை உயர்த்தியது. செய்தியின் சாரம் இதுதான் : திருநெல்வேலி மாவட்டம் முனீர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலவாசல் கிராமத்தில், 28 வயது பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவரது கணவரைக் கொன்று அருகிலுள்ள குளத்தில் வீசிவிட்டு, வாழைத் தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோது நால்வரில் ஒருவர் இறக்க, மற்றொரு நபர் அப்போது 15 வயதே நிரம்பியவராக இருந்ததால், இளஞ்சிறார் நீதிமன்றத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். மற்ற இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றத்திற்காகவும் (பிரிவு 376 இந்திய தண்டனைச் சட்டத்தின் படி) வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நபர் தலித்தாக இருந்ததால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 3 (2) (v) இன்படியும் 17.04.2007 அன்று விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(2)(v) என்பது, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நபர் பட்டியல் சாதியையோ, பழங்குடி இனத்தையோ சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அவருக்கெதிராக பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கத்தக்க இந்திய தண்டனைச் சட்டக் குற்றம் புரிந்தால், அவ்வன்கொடுமையாளருக்கு வாழ்நாள் தண்டனை வழங்க வழிவகுக்கிறது. இத்தண்டனையை எதிர்த்து மேற்படி இரு குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேல் முறையீட்டில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அவர்களிருவரையும் விடுதலை செய்து வழங்கிய தீர்ப்புதான் அது.

குற்றவாளிகளை விடுவிக்க உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கும் காரணம், பாதிக்கப்பட்ட பெண் தலித் என்ற செய்தியை, குற்றமிழைத்தவர்கள் அறிந்திருந்தனர் என்பதற்கான சாட்சியம் ஏதும் இல்லை என்பதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழான குற்றச்சாட்டிலிருந்து முதலில் விடுவிக்கப்பட்ட அக்குற்றவாளிகள், அவர்களின் வயது 23-க்கு கீழ் உள்ளதால் தமிழ் நாடு இளங்குற்றவாளிகள் சட்டப்பிரிவுகளின்படி தண்டனைக்குட்படுத்தப்பட முடியாது என்பதால் விடுவிக்கப்பட்டதாகவும் இத்தீர்ப்பு கூறுகிறது.

இதுபோன்ற தீர்ப்புகள் அரிதானவை அல்ல; வழக்கமான ஒன்றுதான். இத்தீர்ப்புக்குள் காணப்படும் சட்ட விவாதங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், புலன்விசாரணை அதிகாரியின் தவறு காரணமாகவே இதுபோன்ற தீர்ப்புகள் வெளிவர வாய்ப்பாகின்றன. எனவே, புலன்விசாரணை என்பது வழக்கை நிலைநிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி என்பதும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு குற்ற நிகழ்வு குறித்த தகவல் கிடைத்தவுடன் காவல்துறை அது குறித்த முதல் தகவல் அறிக்கையை எவ்வித காலதாமதமுமின்றி பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன், அவ்வழக்கைப் புலன் விசாரணை செய்யும் அதிகாரி தனது பணியை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைவது, அங்குள்ள சாட்சியங்களைக் கைப்பற்றுவது, குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் நபர்களைக் கைது செய்வது, சாட்சிகளை விசாரித்து வாக்குமூலங்கள் பதிவு செய்வது போன்றவை புலன்விசாரணை அதிகாரி செய்ய வேண்டிய முக்கியக் கடமைகள்.

இவ்வாறு புலன்விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று செயல்பட்டார் என்பதற்கான ஆவணங்கள் சிலவற்றை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையுடன் தாக்கல் செய்ய வேண்டும். அந்த ஆவணங்கள் மூலமே குற்ற நிகழ்வு நடைபெற்ற விதம் இன்னது என்பதை நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். இதைப் பொருத்தே ஒரு குற்ற நிகழ்வு உண்மையிலேயே நடைபெற்றதா என்பதை உறுதி செய்து அதில் பங்கேற்ற குற்றமிழைத்த நபர்களை நீதிமன்றம் தண்டிக்க முடியும்.

புலன் விசாரணை அதிகாரி தயாரிக்க வேண்டிய ஆவணங்களும், அவற்றின் முக்கியத்துவமும் :

சம்பவ இடத்தின் வரைபடம் : குற்ற நிகழ்விடம் அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள புவியியல் பின்னணியைத் தெரிவிக்கும் ஆவணம் இது. பார்வை மகஜரில் விவரிக்கப்படும் சம்பவ இடம் குறித்த அனைத்துக் குறிப்புகளும் அவற்றிற்கும் கூடுதலான விவரங்களும் இவ்வரைபடத்தில் இருக்கும். சம்பவ இடம் அமைந்திருக்கும் திசை, அமைப்பு, சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளிடமிருந்து பெறப்படும் வாக்குமூலங்கள், சம்பவம் நிகழ்ந்த விதத்தை விளக்கும் வகையில் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சாட்சிகள் சம்பவத்தைக் கண்ணுற்றிருக்கக் கூடும் என்று நீதிமன்றம் ஏற்குமளவிற்கு அமைதல் வேண்டும்.

இதற்கு சம்பவ இடத்தின் வரைபடத்தில் குறிப்பிடப்படும் புவியியல் குறிப்புகளில் அவற்றின் நீளம், அகலம், தூரம் ஆகியவை குறிப்பிடப்படுதல் மிக அவசியம். பார்வை மகஜரும் வரைபடமும் ஒன்றையொன்று ஒத்திருத்தல் மிக மிக அவசியம். இவ்விரு ஆவணங்களுக்கிடையே முரண்பாடு ஏற்படுமானால், சம்பவம் நடைபெற்றதை நிரூபித்தல் மிகக் கடினமாகிவிடும் (‘மகஜர்' என்ற உருதுச் சொல்லை ‘குறிப்பு' எனத் தமிழ்ப்படுத்தலாம். எனினும் குற்றவியல் வழக்குகளில் இன்றளவும் மகஜர் என்றே குறிப்பிடப்பட்டும் வழங்கப்பட்டும் வருவதால், புரிதல் முரண்பாடு ஏற்படாமலிருக்க இங்கும் அவ்வாறே குறிப்பிடப்படுகிறது).

பார்வை மகஜர் : இது குற்ற நிகழ்விடம் எங்கு அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் வரைபடம் குறித்த விளக்க ஆவணமாகும். குற்ற நிகழ்விடம் குறித்த துல்லியமான தகவல்கள் இதில் பதிவு செய்யப்பட வேண்டும். சாட்சிகளின் வாக்குமூலங்களுக்கும் சம்பவ இடத்தின் விபரங்களுக்குமிடையே முரண்பாடு இருக்குமேயானால், குற்றம் நடந்ததாக நீதிமன்றம் நம்பும் வாய்ப்பு குறைந்து குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுவார்.

ஒரு குற்ற நிகழ்வு இரவு நேரத்தில் நடைபெற்றதாக இருக்கும் போது, அந்த நிகழ்வைக் கண்ணுற்ற சாட்சிகள் அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தான் குற்றம் புரிந்தனர் என்று கூறும்போது, அந்நிகழ்வை குறிப்பிட்ட சாட்சி பார்த்திருக்க முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள அந்நேரத்தில் சம்பவ இடத்தில் வெளிச்சம் இருந்ததா? அது குற்றம் இழைத்தவர்களை அடையாளம் காணுமளவிற்கு வாய்ப்பிருக்குமா? என்பது போன்றவற்றை நீதிமன்றம் கணக்கிலெடுக்க வேண்டும்.

இதற்கு சம்பவ இடத்தில் வெளிச்சம் இருந்தது என்பதை நிலைநிறுத்த, அங்கிருக்கக்கூடிய மின்விளக்கு இருந்த இடம் பார்வை மகஜர் எனப்படும் இந்த ஆவணத்தில் தெளிவாகவும் தவறாமலும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், சம்பவ இடத்தில் இரவு நேரத்தில் குற்றமிழைத்தவர்களை அடையாளம் காண சாட்சிகளுக்கு வாய்ப்பில்லை என நீதிமன்றம் கருதி விடுவிக்கக்கூடும். இரவில் நிகழ்ந்த பெரும்பாலான கொலை வழக்குகளில் இந்த ஒரு சிறு பிழை விடுபடுதல் காரணமாகவே குற்றமிழைத்தவர்களை நீதிமன்றங்கள் விடுதலை செய்துள்ளன என்பதை கவனத்தில் கொண்டால், பார்வை மகஜரின் முக்கியத்துவத்தை உணரலாம். புலன்விசாரணை அதிகாரி பார்வை மகஜரை இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தயாரித்ததாக அவர்களின் கையொப்பம் பெற வேண்டுமாதலால், அச்சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போது தெளிவாக சாட்சியம் அளிக்க வேண்டும்.

கைப்பற்றுதல் மகஜர் : ஒரு குற்ற நிகழ்வு நடைபெற்றதாகத் தகவல் கிடைத்தவுடன் புலன் விசாரணை அதிகாரி குற்றநிகழ்விடம் நோக்கி உடனடியாக விரைந்தடைய வேண்டும் என்று சட்டம் கூறுவதன் காரணம், சம்பவ இடத்தில் சம்பவம் நடைபெற்ற விதம் குறித்து குறிப்புணர்த்தக் கிடைக்கக் கூடிய ஆதாரங்கள்தான். தடயம் எனப்படுவது குற்ற நிகழ்விடத்தில் குற்ற நிகழ்வின் தொடர்புடைய சான்றுப் பொருளாகும். ஒரு தற்கொலைச் சம்பவத்தில் தூக்கு மாட்டிக் கொண்ட கயிறோ, துணியோ, விஷபாட்டிலோ ஒரு முக்கிய சான்றுப் பொருள். ஒரு கொலை நிகழ்வில் கொலைக்குப் பயன்படுத்திய பொருள் அருவாள், கம்பு போன்ற எதுவும் கூட சான்றுப் பொருள்தான்.

அதேபோல், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் உடை போன்ற உடைமைகளும் கூட சான்றுப் பொருளாகலாம். இவற்றை உடனடியாகக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்து நடைபெற்ற சம்பவத்துடன் அச்சான்றுப் பொருளின் தொடர்பை உறுதி செய்து நீதிமன்றத்தில் அளிக்க வேண்டியது, புலன் விசாரணை அதிகாரியின் முக்கிய கடமையாகும். இதில் கவனக்குறைவு ஏதும் ஏற்படுமானால், அதுவும் வழக்கை நிரூபிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். கைப்பற்றுதல் மகஜரும் இரு சாட்சிகள் முன்னிலையில் புலன் விசாரணை அதிகாரியால் சான்றுப் பொருள் கைப்பற்றப்படும் இடத்திலேயே தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்படுதல் வேண்டும். சாட்சிக் கையொப்பமிடுவோர் நீதிமன்றத்தில் சாட்சியத்தின் போதுகவனக்குறைவாக இருந்தாலும், வழக்கின் உறுதி குலைந்து விடும்.

புகைப்படங்கள் : தற்கொலை, கொலை சந்தேக மரணம் போன்ற குற்ற நிகழ்வுகளில் இறந்தவர் காணப்படும் நிலை சம்பவம் குறித்த மிக முக்கிய சான்றாகும். எனவே, இது போன்ற நிகழ்வுகளில் சம்பவ இடத்தைப் புகைப்படம் எடுத்தல் என்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இறந்தவரின் உடலில் சம்பவத்தின் போது ஏற்பட்ட காயங்கள், அவற்றின் தன்மை குறித்து நீதிமன்றம் மதிப்பிட முடியும். இறந்தவரின் சடலக் கூறாய்வின்போது சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி சடலத்தின் மீது காணப்படும் காயங்கள் மற்றும் அவற்றின் தன்மை குறித்து தனது அறிக்கையில் குறிப்பிடுவார். எனவே, இத்தகைய புகைப்படங்களும் வழக்கில் சான்றாவணமாகக் கொள்ளப்படும்.

பஞ்சநாமா : அதேபோல, தற்கொலை, கொலை, சந்தேக மரணம் போன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட நபர் இறந்ததற்கான காரணம் இதுதான் என்று கண்ணியமிக்க நபர்களிடம் பெறப்படும் கருத்து அடங்கிய விபரங்கள்தான், பஞ்சநாமா எனப்படுவதாகும். இது சம்பவ இடத்திலிருந்து சடலத்தை அகற்றுவதற்கு முன்பு புலன்விசாரணை அதிகாரி தயாரிக்க வேண்டிய மிக முக்கியமான ஆவணமாகும். இந்த ஆவணதில் மேற்கூறிய 5 நபர்களும் கையொப்பமிட வேண்டும். அவர்களின் சாட்சியத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும்.

கைது மகஜர் : குற்ற சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்படும் நபரை சம்பவ இடத்திலோ, அல்லது வேறு எங்குமோ காவலுக்குட்படுத்தும் போது புலன் விசாரணை அதிகாரி தயாரிக்க வேண்டிய மற்றுமொரு ஆவணம் கைது மகஜராகும். இதுவும் இரு சாட்சிகள் முன்னிலையில் தயாரிக்கப்பட வேண்டும். கைது செய்யப்படும் நாள், நேரம், இடம், கைது செய்யப்படுபவரின் அடையாளம், தொடர்புடைய வழக்கு / குற்ற எண் போன்ற விபரங்கள் இதில் கண்டிருக்க வேண்டும். மகஜரில் குறிப்பிட்டுள்ள நாள், நேரம், இடம் போன்றவை தவறானவை என குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு நிரூபித்தால், மொத்த வழக்கையே அது பாதிக்கும்.

ஒப்புதல் வாக்குமூலம் : குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் நபர் எவ்விதத் தூண்டுதலும், அச்சுறுத்தலுமின்றி தானாகவே முன் வைத்த குற்றத்தை தான் புரிந்ததாக ஒப்புக் கொண்டு வழங்கும் வாக்குமூலமே ஒப்புதல் வாக்குமூலம். காவல் துறையினரிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை இந்திய சாட்சியம் சட்டம் சான்றுப் பொருட்கள் கைப்பற்றிய பொருண்மை குறித்த விஷயங்கள் தவிர ஏற்பதில்லை. ஒப்புதல் வாக்குமூலம் நீதித்துறை நடவர் முன்னிலையில் பெறப்பட்டால் மட்டுமே ஏற்கத்தக்கதாகிறது.

சாட்சிகளின் வாக்குமூலங்கள் : ஒரு குற்ற நிகழ்வின் கண்ணுற்ற சாட்சியங்களையும் மற்றவர்களையும் புலன் விசாரணை அதிகாரி விசாரித்து பெறும் வாக்குமூலங்களே இவை. இத்தகைய வாக்குமூலங்கள் பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கு அனுப்பப்படவேண்டும். இதன் மூலம் வாக்கு மூலங்களில் இடைச் செருகல்கள், அடித்தல் திருத்தங்கள் போன்றவை மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு எனினும், புலன் விசாரணை அதிகாரி பெரும்பாலான வழக்குகளில் இதை கடைப்பிடிப்பதில்லை. இதனால் பல வழக்குகள் வலுவிழந்து குற்றமிழைத்தவர்கள் விடுவிக்கப்பட்ட நேர்வுகளும் பல உண்டு. சாட்சிகளின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் கூறப்படும்போது தான் அது சாட்சியம் என்ற தகுதியைப் பெறுகிறது. அதனடிப்படையில்தான் வழக்கு தீர்மானிக்கப்படும்.

இவ்வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய புலன்விசாரணை முறைப்படி நடைபெறாதபோது, அந்நிலை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக அமைகிறது. சாதாரண குற்றவியல் வழக்குகளைவிட வன்கொடுமை வழக்குகளில் இப்புலன்விசாரணை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனில், அது வன்கொடுமையாளர்களுக்குச் சாதகமாக முடிவதுடன் தொடர் வன்கொடுமைகள் புரிய ஊக்குவிப்பதாகவும் அமைகிறது. எனவே, வன்கொடுமை வழக்குகளில் புலன்விசாரணை அதிகாரி செய்யக்கூடிய குளறுபடிகள், அவற்றைக் களையும் முறைகள் ஆகியவற்றைப்
பார்ப்போம்.

-காயங்கள் தொடரும்

Pin It