"அடிமைப்பட்ட மனிதன் தன்னுடைய அடிமைத் தனத்தை உணர்வதே சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தின் முதல் படி. ஆனால், ஒரு மனிதனின் சுதந்திரம் மறைமுகமாக பறிக்கப்பட்டால், அவன் தன்னுடைய அடிமைத் தனத்தை உணராமல் இருக்கிறான். தீண்டாமை மறைமுகமான அடிமைத்தனமாகும். தீண்டத்தகாதவனிடம், "நீ சுதந்திரமானவன், உனக்கு ஒரு குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளும் உண்டு' என்று கூறி, அவன் எந்த லட்சியத்தையும் அடைய வாய்ப்பளிக்காத வகையில் கயிற்றை இறுக்குவது, கொடுமையான ஏமாற்று வேலையாகும்.'' 

- டாக்டர் அம்பேத்கர்

ஜாதி சங்கம் என்னும் அயோக்கியத்தனம்

நாட்டின் மிக முதன்மையான பிரச்சினையாக சாதியத்தையும், மதவெறியையும் குறிப்பிட்டுள்ளார், பிரதமர் மன்மோகன் சிங். வருண் காந்தி முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதையொட்டி, பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் இப்பிரச்சினையைத் தீர்க்க, இந்த அய்ந்து ஆண்டுகளில் பிரதமர் எந்த முன் முயற்சியையும் எடுக்கவில்லை. மதவெறி ஆபத்தானது எனினும் மதத்தை முன்னிறுத்தி, நூற்றுக்கணக்கான கட்சிகள் வெளிப்படையான பிரச்சாரங்களை மேற்கொண்டுதான் வருகின்றன. வருண் காந்தி ஒரு வேட்பாளர் என்பதால் இந்தளவுக்காவது இது குறித்த கண்டனங்கள் வருகின்றன. ஆனால், இந்து முன்னணி வகையறாக்கள் ஆண்டுதோறும் தெருமுனைகளில் இத்தகைய பிரச்சாரங்களை செய்கின்றனர். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் அரசு எடுப்பதில்லை! அது மட்டுமா, நாள்தோறும் புதுப்புது சாதி அமைப்புகளும், கட்சிகளும் தோன்றி வருகின்றன – சமூக நீதிக்குப் பெயர் பெற்ற தமிழ் நாட்டில்!

மார்ச் 8 அன்று, "அனைத்து முதலியார் வெள்ளாளர் பேரவை' சென்னையில் ஒரு பேரணியை நடத்தியது. செங்குந்தர், சேனைத் தலைவர் மற்றும் தங்களையும் வெள்ளாளர்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை. கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை, தற்பொழுது கொங்கு நாடு முன்னேற்றப் பேரவையாக மாறி, பா.ஜ.க.விடம் தேர்தல் கூட்டணிக்காக மனு போட்டிருக்கிறது. இந்நிலையில், நாமக்கல்லில் 22.3.09 அன்று இவ்வமைப்பின் இளைஞர் அணி மாநாட்டில், தங்களுக்கு வேலைவாய்ப்பில் மாநில அரசு 20 சதவிகிதமும், மய்ய அரசு 2 சதவிகிதமும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறது. அடுத்து "பார்க்கவ குல சங்கம்' பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

எஸ்.வி. சேகர் தொடங்கியிருக்கும் "தென்னிந்திய பிராமணர் சங்க அமைப்புக்கு' 7 சதவிகித தனி இடஒதுக்கீடு வேண்டுமாம்! இது தவிர, சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், வாண்டையாரின் முன்னேற்றக் கழகம், ஏ.சி. சண்முகத்தின் நீதிக்கட்சி என சாதிக் கட்சிகளின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. காலங்காலமாக அனைத்து வாய்ப்புகளும் முற்றாக மறுக்கப்பட்ட அருந்ததியர்களுக்கு மட்டுமே தனி ஒதுக்கீடு அளிப்பதில் நியாயமிருக்கிறது. ஆனால் சாதிப் பெருமை பேசி, மேலாதிக்கம் செலுத்த சாதிக் கட்சி தொடங்கி, தங்களின் குற்றவியல் நடவடிக்கைகளை மறைக்க – சாதி சங்கத்தையே அரசியல் கட்சியாகவும் மாற்றி – தனி ஒதுக்கீடு கேட்பது அயோக்கியத்தனமானது (இவர்களுக்கு உண்மையிலேயே அரசுப் பணியிடங்களில் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டிருக்கிறது எனில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட சங்கங்களாக அணிதிரண்டு கோரிக்கை எழுப்புவதுதானே நியாயம்). ஆனால், இத்தகைய ஜாதி அசி(ச)ங்கங்களுக்கு அரசியல் கட்சிகள் சிவப்புக் கம்பளம் விரித்து அரவணைக்கின்றன. மத அடையாளங்களை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வதைக் கண்டிக்கும் தேர்தல் ஆணையம், இத்தகைய ஜாதி சங்கங்களை மட்டும் எப்படி அனுமதிக்கின்றன?

சாகச் செய்வானைச் சாகச் செய்யாமல் சாகலாமா?

தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு, என்.எஸ்.எஸ்.சார்பாக உழவாரப் பணி செய்யச் சென்றனர், பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள். மார்ச் 2 முதல் எட்டுவரை நடைபெற்ற முகாமில் மூன்றாம் தேதி வரை எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் ஆறாம் தேதியன்று கல்லூரியில் படிக்கும் இரு தலித் மாணவிகள், இப்பணிக்காக கோயிலுக்குச் சென்றதுதான் பிரச்சனை.

பாதிப்புக்குள்ளான தலித் மாணவி தேன்மொழியே கூறுகிறார்: "கோயில் பணிக்குச் சென்ற 100 மாணவிகளில் 30 மாணவிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் வெளியூர் என்பதால் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆறாம் தேதியன்று நாங்கள் சென்றபோது, பூசை செய்து கொண்டிருந்த மூர்த்தி குருக்கள் எங்களைப் பார்த்து, "அபசாரம்' அபசாரம்' கீழ்சாதிக்கார நாய்களெல்லாம் எதுக்கு கோயிலுக்குள்ளே வந்தீங்க? உங்க கால் பட்ட தீட்டை எதை ஊத்திக் கழுவுறது? மரியாதையா உங்களோட வந்திருக்கிற கீழ்சாதிப் பிள்ளைகளையும் கூட்டிண்டு வெளியே ஓடுங்கோ' என்று விரட்டினார். இதைக் கேள்விப்பட்டு வந்த ஊர் முக்கியஸ்தர்களும், இளைஞர்களும் "கீழ்ஜாதி நாய்களா' எங்க கோயிலுக்குள்ள நுழையனும்னு எத்தனை நாளா திட்டம் போட்டீங்க? என்று திட்டி வெளியே தள்ளிவிட்டார்கள். அவமானத்தால் செத்துவிடலாம் போலிருந்தது'' ("குமுதம் ரிப்போர்ட்டர்', 22.3.2009).

இதைக் கண்டித்து சி.பி.எம். கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முருகானந்தம், "ஒரத்த நாட்டில் உள்ள 58 பஞ்சாயத்துலயும் இதே நிலைமைதான். தலித்துகள் யாரையும் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. எனவே, கோயிலிலிருந்து மாணவிகளை வெளியேற்றியதைக் கண்டித்து கலெக்டரிடமும், டி.எஸ்.பி.யிடமும் மனு கொடுத்திருக்கிறோம்'' என்றார். அந்த கலெக்டரும், டி.எஸ்.பி.யுமே கோயில் கருவறைக்குள் இன்றுவரை நுழைய முடியாது என்பதுதான் சட்டப்படியான நிலை. இதில் கோயில் குருக்கள் மீது என்ன பெரிய நடவடிக்கை எடுத்துவிடப் போகிறார்கள்? ஒரு வன்கொடுமைக்கு இணையான பாதிப்பை சந்தித்த மாணவி தேன்மொழிக்கு ஏற்பட்ட அவமானம், ஒட்டுமொத்த சமூகத்திற்கே ஏற்பட்ட அவமானம்தான். இதற்காக நாம் ஏன் சாக வேண்டும்? இதற்கு மூல காரணமான இந்து மதத்தைத்தான் சாகடிக்க வேண்டும்! தேன்மொழிக்கு ஏற்பட்ட அவமானத்தை தமக்கானதாக உணர்கின்றவர்கள், கும்பல் கும்பலாக இம்மதத்தை விட்டொழிப்பதன் மூலம்தான் அது சாத்தியமாகும்.

சிரிக்காதீங்க...

இயலாதோரை இழிவுபடுத்தும் திரைப்படங்களைக் கண்டித்து 21.3.2009 அன்று சென்னையில் "தமிழ் நாடு இயலாதோர் சங்கம்' சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்தகைய திரைப்படங்களை கண்டிப்பதோடு, குறிப்பாக நகைச்சுவை என்ற பெயரில் இயலாதோரை நம் வீட்டிற்குள்ளேயே வந்து இழிவுபடுத்தும் ("காமெடி டைம்') காட்சிகளை – 24 மணி நேரமும் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளையும் தண்டிக்க வேண்டும். இதைக் கூச்சமின்றி ரசிக்கும் மக்களை என்ன செய்வது?

(குஜராத் இனப்படுகொலையில் நரேந்திர மோடியின் மதவெறி நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியவர் அம்மாநில போலிஸ் டி.ஜி.பி. ஆர்.பி. சிறீகுமார் அவர்கள். அவர் அண்மையில்"மலையாள மனோரமா' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியை "உயிர்மை' (மார்ச் 2009) இதழ் மொழிபெயர்த்து 23 பக்கங்களில் பதிவு செய்துள்ளது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. பொது வாழ்க்கையில் நேர்மை, நாணயம் பற்றிப் பேசுகின்றவர்கள் இம்முழு பேட்டியையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.)

"அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஒழிக''

"என்னுடன் பணியாற்றுகின்றவர்களில் பலர் என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பது, "சார்! எதுக்காக நீங்க மோடியுடன் சண்டை போடுறீங்க?' என்று. எனக்கும் மோடிக்கும் இழுபறிச் சண்டை ஒன்றும் நடக்கவில்லை. முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, கருவைக் குத்திக் கிழிப்பதை நேரில் கண்ட என்னால் பொறுக்க முடியவில்லை. குஜராத் கலவரத்திற்குப் பிறகு நீதி, நியாயத்தையும், சட்ட ஒழுங்கையும் தலைகீழாகப் புரட்டினார்கள். நான் இதை எல்லாம் நேர்மையுடன் எழுதிக் கொடுத்தேன். அவ்வளவுதான். "மோடி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தும் எதற்காக இதைச் செய்தீங்க?' என்றனர் சிலர். உன்னை அய்.பி.எஸ். பெற வைத்தும், எதற்காக இந்த மடத்தனத்தை செய்தாய் என்பதுதான் இந்த உரையாடலின் பச்சையான அர்த்தம்! எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இந்த அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான். எங்குதான் அவர்கள் நெஞ்சுரத்துடன் எழுந்து நின்று அழுத்தமாக தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்? அவர்கள் தன்னலம் கொண்ட சுகவாச காரியக்காரர்களாக மாறி இருக்கிறார்கள். அதனால்தான் அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ்.–கள் ஆட்சியாளர்களை "காக்கா' பிடிக்கிறார்கள்.

பிரித்தாளும் சூழ்ச்சி முழுமை அடைந்து கொண்டிருக்கிறது; குஜராத்தின் பல்வேறு நகரங்களில் – முஸ்லிம் ஏரியா, இந்து ஏரியா என்று! என்னிடம் பல்வேறு முஸ்லிம் சகோதரர்கள் மதிப்புடனும் அன்புடனும் சொல்வதுண்டு : "நீங்க பெரிய ரிஸ்க் எடுத்தீங்க.' இருந்தும் என்ன பயன்? குஜராத் கலகக் காலம் எனக்கு துன்பியல் காலமாக இருந்தது. உண்மையில் கூடுதல் டி.ஜி.பி. (உளவுப் பிரிவு) என்ற பதவியில் இருந்து நான்கு வாக்குமூலங்களும், ஏராளமான அறிக்கைகளும் கொடுத்ததன் வாயிலாக, எனது "கேரியரை' நாசப்படுத்திக் கொண்டேன் என்றாலும், ஒரு மனிதன் என்ற நிலையில் பெரு மகிழ்ச்சியை நான் அனுபவித்தேன். அனுபவிக்கிறேன். நான் செய்ய வேண்டியவற்றை செய்து விட்டேன். என் மனசாட்சி எனக்கு நேராக ஒருபோதும் துப்பாக்கியை நீட்டாது.''

Pin It