“பாலு உங்க பேரு... ‘தேவர்’ நீங்க படிச்சி வாங்கிய பட்டமா?” ‘வேதம் புதிது’ படத்தில் வரும் இந்த வசனத்தை யாரும் எளிதில் மறக்க முடியாது. இந்த வசனத்திற்குப் பின்னால் ஒரு உண்மைச் சம்பவம் இருக்கிறது.

தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியையும் விட தஞ்சாவூர் தனித்துவமானது. அதிலும் பட்டுக் கோட்டை மற்றும் பேராவூரணி அதிலும் சிறப்பானது. பட்டுக்கோட்டையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற பெரியாரிய மற்றும் பொது வுடைமைத் தோழர்களும் நின்று களப்பணி செய்து மனித மாண்புகளை மீட்டெடுத்ததில் முக்கிய பங்காற்றி யவர்கள்.

அப்படிப்பட்ட எங்க ஊரில் அதாவது பேராவூரணியில் பெரியாரின் முற்போக்குக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு பெரியாரின் பெருந் தொண்டராக இருந்தவர் திரு. வி.எஸ்.குழந்தைத் தேவர் அன்றைய பேராவூரணியில் பெரும் பணக்காரராக அறியப்பட்டவர்.

பேராவூரணியை ஒட்டி இரண்டு கிராமங்களில் இராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட இரண்டு மடங்கள் இருக்கிறது. அதற்குப் பலஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள். அதை நிர்வகிக்க மடத்து அய்யர்கள் இன்றும் இருக்கிறார்கள். நிலம் ஓரளவு இப்போது கைமாறிப் போய் இருக்கிறது அல்லது போய் கொண்டு இருக்கிறது. இந்த மடத்தை நிர்வாகிப்பது காஞ்சி தலைமைப் பீடம். அதன் நிர்வாகத்தில் தான் இந்த மடங்கள் இயங்குகின்றன.

அப்படிப்பட்ட தென்னங்குடியில் உள்ள மடத்திற்கு இன்றைய ஜெயந்திரருக்கு முன்னால் இருந்த சந்திரசேகர சுவாமிகள் வந்திருந்தார். தென்னங்குடி மடத்திற்கு உட்பட்ட பகுதிகளைப் பல்லாக்கில் உட்கார்ந்து பார்வையிட்ட பின்பு அந்தப் பல்லாக்கைத் தென்னங்குடியில் இருந்து மாவடுக்குறிச்சி மடத்திற்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

இதைக் கேள்விப் பட்ட பெரியாரின் பெருந் தொண்டர் வி.எஸ்.குழந்தைதேவர் அவர்கள் மக்களைத் திரட்டிக் கொண்டு அவர்கள் வரும் வழியில் உள்ள ஆனந்தவள்ளி ஆற்றங்கரையில் மக்களுடன் உடகார்ந்துவிட்டார் ஒரு மனிதனை மற்ற மனிதர்கள் எப்படி பல்லாக்கில் சுமக்கலாம் இது சுயமரியாதை இல்லை என்று.

பல்லாக்கை நான்கு பேர் தூக்கி வர, பல்லாக்கின் முன்புறம் படை பரிவாளங்கள் வந்து கொண்டிருந்தது. முன்னாடி வந்தவர்களுக்குக் கூட்டத்தைப் பார்த்தவுடன் புரிந்துபோயிருந்தது. இது வி.எஸ்.குழந்தைத்தேவரின் வேலை என்று. வந்தவர்கள் தேவருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

இது மடத்தின் மரபு. காஞ்சிப் பெரியவாளைப் பல்லாக்கில் தான் தூக்கிச் செல்லவேண்டும் அதனால் பிரச்சனை பண்ணாமல் வழி விடுங்கள் என்று கேட்டார்கள்.

அதற்குத் தேவர் சொன்னார், “எங்க மரபில் செத்த பொணத்தைத் தான் நாங்க பல்லாக்கில் தூக்குவோம். அதுவும் எந்த ஊரில் செத்தாங்களோ அந்த ஊரிலையே புதச்சிடுவோம். அந்த ஊர்ப் பொணத்தை எங்க ஊர் வழியாக கொண்டு செல்ல விடமாட்டோம். அங்கேயே புதைச்சிடுங்க” என்று சொன்னாரே பார்க்கலாம். அதுவரை பல்லாக்கில் அமர்ந்திருந்த சந்திரசேகர சுவாமிகள் எந்த வார்த்தையும் பேசாமல் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார். பல்லாக்கு, தூக்கி எறியப்பட்டு நடந்து செல்ல வைத்தது எங்க ஊரு வரலாறு.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தொண்டர் ஒருவர் சுட்டிக்காட்ட, அவருக்குப் பின்னால் இருந்த தேவர் என்ற பட்டத்தை போடக்கூடாது என்றும் அழைக்கக் கூடாது என்று அன்பாகவும் அதே நேரம் கடுமையான உத்தரவு மூலம் கடைப்பிடித்து - தன் இறப்புவரை கொள்கைப் பிடிப்புடன் இருந்து வி.எஸ்.குழந்தையாகவே இறந்தார்.

இதைக் கேள்விப்பட்டு, இதனால் ஈர்க்கப் பட்ட பாரதிராஜா அவர்கள், தன் படத்தில் “பாலு... உங்க பேரு... ‘தேவர்’ நீங்க படிச்சி வாங்கிய பட்டமா” என்ற வசனத்தை வைத்தார். உண்மையில் குழந்தைத் தேவரின் பாதிப்புதான் பாலுத்தேவர்.

Pin It