இயற்கை விவசாயத்தை அதிநுட்பத்துடன் பயன்படுத்த ஒரு செயற்கைக் கோளை விண்வெளியில் செலுத்துவதற்கான நேரத்தை குறிக்கிறது விண்வெளி ஆராய்ச்சி மையம். இதைத் தடுக்க சர்வதேச கூலிப்படை தயாராகும் பொழுது ஒரு நாள் பயிற்சிக்காக காட்டிற்குச் செல்லும் ஐந்து என்.சி.சி. மாணவிகளும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாளராகவும் செல்லும் வனக்காவலரும் கூலிப்படையின் முயற்சியை எவ்வாறு தடுத்து நிறுத்துகின்றனர் என்பதுதான் படத்தின் மையக் கருத்து.

பழங்குடி இன மக்களின் வாழ்க்கை, காடு குறித்த அவர்களின் ஞானம், வன இலாக்கா அதிகாரிகளின் கொடுமை, மேட்டுக்குடி வர்க்கத்தினரின் இயல்பு கலாச்சாரம், இடஒதுக்கீட்டில் வேலைக்கு வருபவர்கள் பற்றிய அவர்கள் பார்வை, இடஒதுக்கீட்டில் வேலைக்கு வருபவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம், சிறுபான்மையினரின் நாட்டுப்பற்று, உழைக்கும் வர்க்கக் காதல், பெண்ணுரிமை, கொரில்லா போர்முறையின் நுணுக்கங்கள், ஏகாதிபத்திய சதி, விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் இத்தனை செய்திகளையும் பிரச்சாரமாக இல்லாமல் கதையின் போக்கில் சொல்லிச்சென்றிருப்பது மிகுந்த பாராட்டுதற்குரியது.

சமூகத்தில் நிலவும் சூழ்நிலைகளை யதார்த்தமான படைப்பாக்கும்போது அவை உயிர்த்துடிப்பு மிக்கவையாக இருக்கின்றன என்பதற்கு திரைப்படமும் விதிவிலக்கல்ல.

கதையின் நாயகன் துருவன் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன். இடஒதுக்கீட்டின் மூலம் வேலைக்குச் சேர்ந்தவன் என்பதால் வன அதிகாரியால் பல முறை அவமானப்படுத்தலுக்குள்ளாகிறான். தலித் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களின் மீதான தங்களது வன்மத்தை பணியிடங்களில் அதிகார வர்க்கத்தினரான ஆதிக்க சாதியினர் எவ்வாறு தீர்த்துக் கொள்கின்றனர் என்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பழங்குடியின மக்களுக்கெதிராக வன அதிகாரிகள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதற்கும் வனச்சரகர் கணபதிராம் கதாபாத்திரம் சிறந்த உதாரணம்.

பொதுவுடைமைவாதியாக படத்தில வரும் வனக்காவலர் துருவன் ஒரு பொருள் உற்பத்தியாவதில உழைப்பின் முக்கியத்துவம் உபரி மதிப்பு மூலதனத்தின் சுரண்டல் மாச்க்சியம் என வகுப்பறையில் என்.சி.சி. மாணவிகளுக்கு நடத்தும் பாடம் அனைத்து மாணவர்களாலும் புரிந்துகொள்ளப்படவேண்டிய ஒன்று ஆகும். எங்களுக்கு இந்தப்பாடம் தேவையில்லை துப்பாக்கி எப்படி சுடுவது என்ற பாடம் நடத்துங்கள் என்று 5 மாணவிகள் கேட்கும்பொழுது ‘அரசியல் பொருளாதாரம் தெரியாமல் இனம் மொழி கலாச்சாரம் எதையும் காப்பாற்ற முடியாது’ என்ற துருவனின் பதிலில் மார்க்சியம் என்ற சமூக அறிவியலை புரிந்து கொள்ளவேண்டியதன் அவசியம் அழுத்தமாக உணர்த்தப்பட்டுள்ளது.

பயிற்சி கொடுக்கும் பொழுது துருவனை கிண்டலடித்தல், துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது விரல்கள் தவறுதலாக படும்போது அருவருப்புடன் தடுத்தல், உணவு பரிமாறும்பொழுது அவன் கைபடும் உணவை உண்ண மறுத்தல், பாலியல் குற்றம் சுமத்தி தண்டனை பெற்றுக்கொடுத்தல், பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவன் எங்களுக்கு பயிற்சியாளனாக வேண்டாம் என மனுப்போடுதல் போன்ற செயல்களை செய்துகொண்டிருக்கும் அந்த ஐந்து மாணவிகளின் (ஒருவர் மட்டும் சம்மதிக்காமல்) செயல்கள் மூலம் மேல்தட்டு வர்க்க ஆதிக்க மனோபாவம் கலாச்சாரம் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. காட்டிற்குச் செல்லும் வழியில் மாணவிகள் காண்டம் வாங்குவதும் மேல்தட்டுவர்க்கத்தில் கலாச்சாரம் எவ்வாறு சீரழிந்து வருகிறது என்பதன் குறியீடுதான்.

இந்த ஐந்து மாணவிகளில் நான்கு பேர் தமிழை ஒரு பாடமாகக் கூட பள்ளியில் படிக்காதவர்கள் என்று காட்டுவதன் மூலம் தமிழ் மொழி புறக்கணிப்பு, ஆங்கில மோகம் ஆகியவை இன்றைய உயர் மத்தியதரக் குடும்பங்களின் மனோபாவம் என்ற யதார்த்தம் பதிவு செய்ய்பபட்டுள்ளது. ஆங்கில வழி பள்ளிகளில தமிழில் பேசினால் தண்டனை என்ற கொடுமை தற்போதும் நிலவி வருவதற்கு பரந்தளவில் எதிர்ப்புகள் இல்லை என்பதன் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.

அஜீதா என்னும் மாணவி இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவள் என்பது மட்டுமல்லாமல் அவள் தந்தை டெய்லர் என்பதன் மூலம் அவள் உழைக்கும் வர்க்கத்தைச் சர்ந்தவள் என்பதும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நான்கு மாணவிகளும் துருவனுடன் வெறுப்புடன் நடந்துகொள்ளும் பொழுது இவள் மட்டும் காதல் கொள்வதை வர்க்கப்பின்னணியுடன் எடுத்துக்காட்டியிருப்பது யதார்தத்தின் உச்சகட்டம். இன்றைய இந்திய முஸ்லீம்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்ற பிரச்சாரத்தை காவிப்படையினர் செய்துகொண்டிருக்கும் வேளையில அந்நிய சக்திகளுக்கு எதிரான நாட்டைக்காக்கும் போராட்டத்தில் உயிரை இழக்கும் இரண்டு மாணவிகளில் ஒருவர் முஸ்லீம் என்று காட்டியிருபது மட்டுமல்லாமல் அவள் பெற்றோர்கள் அஜிதா இறந்தது கவலையாக இருந்தாலும் நாட்டிற்காக உயிர்விட்டிருக்கிறாள் என்பது பெருமையாக இருப்பதாகக் கூறுவது காவிப்படையினரின் மதவெறிப் பிரச்சாரத்துக்கு பதில் கூறுவது போல் உள்ளது.

என்.சி.சி. பயிற்சியின் ஒரு பகுதியாக கருவேல மரங்களை வெட்டிச் சாய்க்க துருவன் ஆணையிடும்பொழுது துப்பாக்கி சுட பயிற்சி கொடுப்பீங்கனா மரத்தை வெட்டச் சொல்றீங்களே என்ற ஒரு மாணவி கேட்பதற்கு விவசாயத்திற்கு ஆபத்து விளைவிப்பதையெல்லாம் களையெடுக்க வேணடும் என்றும் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்காமல் வல்லரசாக முடியாது என்றும் துருவன் பதில் கூறுவது விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் விவசாயத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்காமல பாதுகாப்புச்செலவுகளுக்கு அதிக நிதி ஒதுக்கும இன்றைய மத்திய அரசின் கொள்கையின் மீதான நேரடியான விமர்சனமாக உள்ளது பாராட்டத்தக்கது. மேலும் இந்த இடத்தில் மரபீணி மாற்றுப் பயிர்களுக்கு எதிராகவும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் விவசாய நிலங்கள் மலடாகி வருவதையும் பேசியிருப்பது காலத்திற்குப் பொருத்தமானதாக உள்ளது.

‘எதைக் கத்துக்கிட்டாலும் எதைப்படிச்சாலும் சர்வதேச அரசியலைப் படிங்க. பொதுவுடைமை அரசியலை விட சிறந்தது வேறு எதுவுமே இல்லை’ என்று துருவன் தன்னுடைய மாணவிகளுக்கு அறிவுறுத்துவதாக பேசும் வசனங்களின் வாசனையைக் கூட தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் இதுவரை நுகர்ந்திருக்க மாட்டார்கள். இடைவேளைக்குப் பின் துருவன் ஆயுதம் ஏந்தி போராட முடிவெடுக்கும் பொழுது பொதுவுடைமைவாதிகள் என்றால் ஆயுதப்போராட்டக்காரர்கள் என்ற கற்பிதம் உருவாகக்கூடாது என்பதற்காக அவன் மூலமாகவே ‘உலகில் எந்த மூலையிலும் கண்ணிவெடிகள் புதைக்கக் கூடாது என்பதுதான் என் கொள்கை’ என்ற வசனத்தையும் பேசவைத்து ‘பொதுவுடைமையாளர்கள் வன்மைமுறை விரும்பிகள் அல்ல’ என்ற சரியான பார்வையும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம்.

வெளிநாட்டுச் சதிகளை முறியடித்த பின் ‘காடு மலை மீது உங்களுக்கு இருந்த அனுபவம் நாட்டு மக்கள் மீது உங்களுக்கு இருந்த அக்கறை இதனால்தான் சாதிக்க முடிஞ்சது’ என மாணவி ஒருத்தி துருவனிடம் கூறும் பொழுது ‘நீங்க இல்லைன்னா இதை செய்திருக்க முடியாது. உங்க சக்தியும் தியாகமும் இல்லைன்னா இதை சாதித்திருக்க முடியாது’ என்று துருவன் பேசுவதன் மூலம் பொதுவுடைமைவாதிகள் எந்த ஒரு வெற்றிக்கும் அல்லது தோல்விக்கும் தனிநபரை பொறுப்பாக்க மாட்டார்கள் என்பதனையும் அந்த வெற்றி அல்லது தோல்வி அமைப்புக்கே கூட்டு முயற்சிக்கே என்று கருதும் அவர்களின் ஸ்தாபன செயல்பாட்டு முறையும் விளக்கப்பட்டுள்ளது.

துருவன் மேல் அதிகாரியால் அவமானப்படுத்தப்படும் ஒவ்வொரு காட்சியிலும் அவனுக்கு ஆதரவாக பேசுவதாக கன்னியாஸ்திரியைக் காட்டியிருப்பது ஒடுக்கப்பட்ட மக்களிடம் கிருத்துவம் ஆதரவாக இருந்தது என்பதற்கான மிச்சசொச்சங்களாக இருக்கலாம். மேலும் மாணவிகள் துப்பாக்கி ஏந்திப் போராடுவது படமாக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும் பொழுது தெலுங்கான போராட்டங்களில் பெண்களின வீரச்செயல் பற்றி படித்ததன் கற்பனையாக்கம் நினைவுக்கு வருகிறது. பழங்குடியின மக்கள் வனச்சரகருக்கு இலவசமாக பழங்களை கொடுக்கவரும் காட்சி கு. சின்னப்ப பாரதியின் சங்கம் நாவலில் அவர்களுடைய வாழ்நிலை பற்றி எழுதியிருப்பது கண்முன் வருகிறது.

தமிழ் சினிமா இதுவரை பேச மறந்த பேச மறுத்த பல செய்திகளை இத்திரைப்படம் பேசியிருக்கிறது. கதை திரைக்கதை எழுதி இயக்கம் செய்திருக்கும் திரு.எஸ்.பி.ஜெகநாதன் மிகுந்த பாராட்டுதலுக்குரியவர்.

- சிவசு.முகிலன்
Pin It