நாடாளுமன்றத்தில் 2018 - 2019 க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்ட சில விசயங்கள் சிறப்பாகப் புகழப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் அவைதான் பி.ஜே,பியின் தேர்தல் பிரச்சாரத்தில் முதலிடம் பிடிக்கும். அவற்றில் முதன்மையானது இன்ஸூரன்ஸ் திட்டம்.

இன்ஸ்யூரன்ஸ் திட்டம்

1. 10கோடி குடும்பங்களுக்கு ரூ.5,00,000 காப்பீடு என்னும் திட்டம். இது மக்கள் தொகையில் 40 ரூ அதாவது ஏறக்குறைய 50 கோடி பேருக்கு. இதற்கான செலவு ரூ.50,000 கோடி ஆகும்.

2. (அரசு மருத்துவமனைகளை மேம் படுத்தாமல்) இந்தப் பணம் அப்போலோ போன்ற கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகளுக்குத் தானே போகும்? அடுத்து எந்த இன்சூரன்ஸ் கம்பெனியிடம் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்பதை அதன் பெயரைப்பார்த்தாலே தெரியும் அதுவும் கார்ப்ப ரேட் கம்பெனி என்று. இதற்கான தொகை 50,000 கோடி.

3. அடுத்து பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் (De Investment) அரசுக்கான வருவாய் 80,000 கோடியிலிருந்து 1,00,000 கோடி வரை. இதில் கிடைக்கும் பணம்தான் நமக்கு இன்சூரன்ஸ் என்று கார்ப்பரேட்டுக்கு அள்ளி விடப்படும். மேலும் பொதுத்துறையை De Investment செய்வதால் அப் பொதுத் துறைகளும் கார்ப்பரேட் வசமாகும்.

4. இதில் இந்தியாவில் காப்பீட்டுத் துறையின் மதிப்பு 28,000 கோடி டாலராக உயரும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அதாவது நம் மதிப்புக்கு ரூ 16,80,000 கோடி. மேலும் அவர் கூறியதுதான் முக்கியமானது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு உயர்ந்திருப்பதைப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

5. இத்திட்டத்திற்கு அவர்கள் வைத்துக் கொண்ட பெயர் ‘நமோ கேர்’அல்லது ‘மோடி கேர்’.அதாவது அமெரிக்காவில் ஒபாமாவின் மக்களின் வரவேற்புக் குள்ளான திட்டத்திற்கு ‘ஒபாமா கேர்’ என்ற பெயரைக் காப்பி அடித்து வைத்துக் கொண்டது. ஒபாமா கேர் வெற்றி பெற்றதா தோற்றதா என்று தெரியாது ஆனால் மோடிகேர் வெற்றி பெறும் என்று நக்கல் வேறு.

6. ஒபாமாகேர் எனப்படும் திட்டமே கட்டுப் படியாகும் மருத்துவக் காப்பீடு ஆகும். அதாவது அனைத்து அமெரிக்கர்களும் வசதி படைத்தவர் களும் நடுத்தரக் குடும்பத்தினரும், ஏழைக் குடும்பத்தினருக்கும் கட்டுப்படியாகும் விலையில் மருத்துவக் காப்பீட்டை அளிப்பதாகும். பொதுச் மக்களுக்கு சலுகை அடிப்படையில் அதாவது வரிச் சலுகையாக அரசு ஆதரவிலான காப்பீட்டுத்திட்டம் வழங்கப்படும்.

7. ஒபாமா கேர் திட்டத்தில் 2.6 கோடி குழு மருத்துவக் காப்பீட்டுக்கு 4,200 கோடி டாலர் அதாவது நம் மதிப்பில் சுமார் ரூ2,52,000 கோடி யாகும். ஆனால் மோடிகேருக்கு ஒதுக்கப்பட்ட தொகையோ வெறும் ரூ.1800 கோடி. ஆனால் இத்திட்டம் செயல்பட ரூ.1,00,000 கோடி தேவைப் படும்

8. இதில் இன்னொரு கூத்து இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் 60% மத்திய அரசின் பங்காகவும் மீதமுள்ள 40% பங்கு மாநில அரசின் பங்காக இருக்கு மென்று சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபற்றி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதாகத் தெரியவில்லை.

9. ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மோடி கேர் நடைமுறைக்கு வந்தால் அத்திட்டங்களைத் தொடர வேண்டுமா? அல்லது கை விட வேண்டுமா? என்னவாகும் என்று தெரியவில்லை.

விவசாயிகளுக்கான திட்டம்

1. வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 1.5 மடங்கு உயர்வு. ஆனால் இது எப்படி வழங்கப்படும் என்று தெளிவாக இல்லை.

2. உரமானியம் என்பது செயற்கை உரத்தைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கானது. அப்படி யானால் அந்த மானியம் முழுக்க செயற்கை உர நிறுவனங்களுக்கே போய்ச்சேருமல்லவா! அவை யனைத்தும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுப் பெரு நிறுவனங்களேயாகும். இந்த மானியப்பணம் விவசாயிகளின் கைகளுக்குக் கூடச் செல்லாமல் அரசிடமிருந்து நேரடியாக அந்நிறுவனங்களுக்கே போய்ச் சேரும்.

3. விவசாயிகளுக்கு 11 இலட்சம் கோடி ருபாய் கடனுதவி என்பதில் கூட ஒரு நேர்மையில்லை. இந்தக் கடன் வங்கிகள் தரும் கடன். இதற்காக பட் ஜெட்டில் ஒன்றும் ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே கடந்த பட்ஜெட்டில் 10 இலட்சம் கோடி அறிவிக்கப் பட்டது. அது அறிவிப்பாகவே போய்விட்டது.

4. அப்படியே வங்கியில் வாங்கப்படும் கடனும் டிராக்டர் போன்ற பொருட்கள், அதாவது பெரு நிறுவனங்களின் பொருட்கள் வாங்கவே பயன்படும்,

5. உணவு பதப்படுத்தப்படும் திட்டத்திலும் இப்பெரு நிறுவனங்களே இம்மய்யங்கள் தொடங்க முடியும். எனவே இதற்கான பணமும் இவைகளுக்கே போய்ச் சேரும்

மற்ற திட்டங்கள்

1. அடிப்படைக் கட்டமைப்புக்குச் சுமார் 6 லட்சம் கோடி. இது பட்ஜெட்டில் 25%

2. இந்தக் கட்டமைப்பிற்கான முழுத் தொகையும் தனியார் பெருநிறுவனங்களிடமே (CORPORATE) ஒப்பந்தமிடப்பட்டுக் கொடுக்கப் படும்,

3. இந்தத் தனியார் துறைகளில் இடஒதுக்கீடே கிடையாது. இந்நிறுவனங்களில் பெரும் உயர் பதவிகளில் பெரும்பான்மையினர் பார்ப்பனரே.

4. இராணுவத்துக்குச் சுமார் 3 லட்சம் கோடி. இது பட்ஜெட்டில் 12%.

5. இப்பணத்தில் பெரும்பகுதி பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சென்றுவிடும்.

6. இதில் உள்நாட்டு நிறுவனங்கள் சில இருந்தாலும் அவற்றில் இடஒதுக்கீடே கிடையாது. அங்கு பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.

7. சாதாரண மக்கள் பயன்படுத்தும் தரைவழிப் போக்குவரத்து, இரயில்வே துறை, நீர் வழிப் போக்குவரத்து போன்றவற்றுக்கு அதிகநிதி ஒதுக்க வில்லை. அதற்கு மாறாக 1% க்கும் குறைவான மக்கள் பயன்படுத்தப்படும் விமானத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

8. பயணிகள் விமானத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.6000 கோடியில் 4000 கோடிக்கு இரண்டு மிக சொகுசு விமானங்கள் மட்டும் வாங்கப்படுகிறது. அது மோடி போன்றோர் ஊர்சுற்ற.

9. இறக்குமதிக்கு அதிகவரி என்று சொல்லப் பட்ட நிலையில் ஏற்றுமதிக்குச் சலுகைகள் எதுவும் சொல்லப்படவில்லை. அப்படியானால் இதன் பொருள் என்ன?

அடுத்து முக்கியமாக

1. தேசியப் பயிற்றுனர் திட்டத்தில் 2020 க்குள் 50 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்திறன் பயிற்சி அளிக்கப்படும். ஆனால் நம் நாட்டில் உள்ள நிலையோ தலை கீழ். வருடத்துக்கு சுமார் பத்திலிருந்து - பனிரெண்டு இலட்சம் பேர் தொழிற் கல்வி உட்பட படித்துவிட்டு வேலைக்காக கல்லூரி களை விட்டு வெளியே வருகின்றனர். ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

2. 11.02.2018 இல் (ஞாயிறன்று) நடைபெற்ற TNPSC தேர்வில் Grade- 2 வுக்கு 9,351 இடங்களுக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டோர் எத்தனை பேர் என்றால் பெண்கள் ஆண்கள் உட்பட 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள்.

3. “வேலை இழப்பு பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அறிகுறி” - இதைச் சொன்னவர் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

4. ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள் 2015 இல் 6,636 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது. ஆனால் 2016-இல் அது 3,450 ஆகக் குறைந்து 2017-இல் 2,870 மில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது. 2014-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகக் குறைந்து வரும் வேலை வாய்ப்பு, பணமதிப்பு நீக்கம், GST போன்றவற்றால் மீள முடியாத நிலையில் உள்ளது. மேலும் உற்பத்தித் துறை ஊதியமும் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்துவருகிறது என டீம் லீஸ் ஆய்வு கூறுகிறது.

5. கடந்த ஆண்டில் 40% வேலை இழப்பு உருவாகியுள்ளது என்கிறது புளூம்பெர்க் அறிக்கை. இதில் உள்ள ஹை லைட்டே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி 30% லிருந்து 25% ஆகக் குறைப்பு என்பது தான்.

ஆக நூற்றுக்கு தொண்ணுாறு சதவிகிதம் கார்ப்பரேட்டுகளுக்காகவே போடப்பட்ட பட்ஜெட் இது என்றால் மிகையில்லை. இதன் பயனாக கார்ப்பரேட்டுகளிடம் இவர்கள் வாங்கப் போகும் நிதியால் கார்ப்பரேட்டுகளுக்குத் தொல்லை வராமல் இருக்க, தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் என்னும் முறையைக் கொண்டு வந்துள்ளனர். மேம்போக்காகப் பார்த்தால் என்னவோ நன்கொடைக்கான வெளிப்படைத்தன்மைக்காகத் தான் என்று இருக்கும். ஆனால் இம்முறையில்,

1. யார் வேண்டுமானாலும் பாரதஸ்டேட் வங்கியில் இந்தத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு கொடையாக அளித்து விடலாம்.. இத்தொகை அரசியல் கட்சிகளின் வரவுக் கணக்கில் பற்று வைக்கப்படும். ஆனால் யார் கொடுத்தார்கள் என்ற பதிவு அதில் இடம் பெறாது.

இந்த ஏற்பாட்டால் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, வாக்காளர்கள் ஆகியோருக்குத் தெரியாமல் மறைத்தே வைக்கப்படும். இந்தப் பணம் எந்தக் கணக்கிலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டது எனபதை வங்கிகளில் உள்ள உயர் பொறுப்பில் உள்ள பார்ப்பன GM மற்றும் பார்ப்பன அதிகாரிகளாலும் இவர்களின் துணையோடு ஆளுங்கட்சி யாலும் மட்டுமே கண்டு பிடிக்க முடியும்.

2. ஒரு நிறுவனம் தனது லாபத்தில் அதிக பட்சமாக 7.5% அளவுக்கு மட்டுமே நிதி அளிக்க வேண்டும் என்ற உச்சவரம்பை நீக்கியுள்ளது. எனவே பெரிய நிறுவனங்கள் எத்தனை வேண்டுமானாலும் தொடங்கலாம்.

3. அடுத்ததாக அந்நிய நன்கொடைகள் முறைப் படுத்தல் சட்டமும் இதே போல திருத்தப்பட்டு வெளிநாட்டில் ஆதரவாளர்களைக் கொண்டுள்ள பார்ப்பனச் சார்பு அமைப்புகளுக்குச் சாதகமாக்கி யுள்ளது.

எனவே இந்த பட்ஜெட் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்காகத் தானே ஒழிய, மக்களுக்காக இல்லை.

Pin It