•              ஆதி திராவிடர் - மாணவர்களுக்கான விடுதிகள், அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாமல் பராமரிப்பின்றி கிடப்பதை சீரமைத்திட வேண்டும். 

•              6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கல்வியைக் கட்டாயமாக்கும் சட்டம் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான விதிமுறைகளே இன்னும் தமிழ்நாட்டில் உருவாக்கப்படவில்லை. புதிய ஆட்சி அதற்கான விதிமுறைகளை உடனடியாக உருவாக்க வேண்டும். 

•              ஒவ்வொரு தனியார் பள்ளியும் அந்தப் பள்ளிக்கு அருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த வாய்ப்பு வசதிகளற்ற ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று மேற்கூறிய சட்டம் கூறுகிறது. “மேல்சாதி - பணக்கார குழந்தைகளோடு குப்பத்து கீழ்சாதி குழந்தைகள் சரிசமமாக உட்கார்ந்து எப்படி படிக்க முடியும்?” என்று அதே ஆதிக்கவாதிகள், நமது முப்பாட்டன் காலத்தில் எதிர்த்த பரம்பரை, இப்போதும் எதிர்க்கிறது. இந்த ஆதிக்கசக்திகளுக்கு எதிராக மக்களை அணி திரட்டி ‘வகுப்பறை சமத்துவத்தை’ உருவாக்க வேண்டும். அதை அமுல்படுத்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். 

•              அந்தந்தப் பகுதிகளில் அமைக்கப்படும் பள்ளிகளிலேயே அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற கல்வி முறைக்குப் பெயர் தான் ‘அருகாமைக் கல்வி’ (Neighbourhood Schools) பல அய்ரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இத்திட்டத்தை இங்கேயும் அமுல்படுத்தினால் பள்ளிகளின் ஏற்றத் தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். 

•              கல்விக்கான உரிமைகள் மாநில அரசுகளின் கீழ் இல்லை. 1976 ஆம் ஆண்டில் கல்வி உரிமையை, மாநில அரசுகளால் அதிகாரம் செலுத்த இயலாத - முடிவு எடுக்க இயலாத பொதுப் பட்டியலுக்கு மத்திய அரசு பறித்துச் சென்று விட்டது. 

•              மத்திய அரசால் தேசிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணையம் (NCHER) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதிலுமுள்ள பொறியியல் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் அதில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பள்ளிகளிலேயே மேல்நிலைக் கல்வியில் இந்தியா முழுவதற்கும் பொதுப் பாடத் திட்டம் வர உள்ளது. இதனால் தேசிய இனங்களின் உரிமையும், ஒடுக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையும் பறிபோகப் போகின்றன. 

•              மத்திய அரசின் அனுமதி பெற்று புற்றீசல் போல் தனியார் பல்கலைக்கழகங்கள் வரத்தொடங்கி விட்டன. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் கதவு திறந்து விடப்பட்டுவிட்டது. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை என்றும் கல்விக் கட்டணங்களை அந்நியர்களே நிர்ணயித்துக்ககொள்ளலாம் என்றும் கபில்சிபல் அறிவித்துவிட்டார். 

•              சட்டம் படித்தவர்கள், ‘அகில இந்திய நுழைவுத் தேர்வு’ எழுதி தேர்ச்சிப் பெற்ற பிறகே தொழில் நடத்த முடியும் என்ற மத்திய அரசின் திட்டம் சமூகநீதிக்குப் பெரும் தடையாகும். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுகளை ஒழித்ததால்தான் கிராமப்புற - ஏழை, எளிய மக்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மீண்டும் ஏதேனும் ஒரு வடிவில் நுழைவுத் தேர்வுகளைத் திணிப்பது கல்வியைப் பரவலாக்குவதற்கு எதிரான ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியேயாகும். 

•              மக்களின் வரிப் பணத்தில் பல்லாயிரம் கோடி செலவில் அய்.அய்.டி., அய்.அய்.எம்., ஏ.அய்.எம்.எஸ். போன்ற உயர் தொழில் நுட்பக்கல்வி நிறுவனங்கள், உயர்சாதியினரின் ‘அக்கிரகாரங்களாகவே’ செயல்படுகின்றன. அந்த நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 % இடஒதுக்கீடு செய்து, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த பிறகும், இடஒதுக்கீடுகள் மறுக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோருக்கு 22.5% இடஒதுக்கீடு இருப்பதாக சட்டம் சொன்னாலும் நடைமுறையில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மொத்தமான, முழுமையான இடங்கள் பூர்த்தியாக விடாமல் முறைகேடாக தடுத்து நிறுத்தும் சூழ்ச்சிகளை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. 

•              தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் அவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பாதி அளவுக்குக் கூட விண்ணப்பிக்கவில்லை என்று வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உயர் கல்வி பெறுவதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பின்தங்கியிருப்பதையே இது காட்டுகிறது. எனவே மராட்டிய மாநிலத்தைப் போல் அனைத்து அரசு மற்றும் தனியார் நடத்தும் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான முழுமையான கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். 

•              தனியார் கல்விக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த அரசு முன்வர வேண்டும். சென்னை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளியின் 11வது வகுப்பிற்கான கட்டணம் 11 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணம் குறித்த விவரங்களை பள்ளிகள் வெளிப்படையாக அறிவிக்காமல், ரகசியமாக வைத்துக் கொண்டு விருப்பம் போல் பணம் வசூலிக்கின்றன. இது தவிர, சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் கட்டணத்தை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ள நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு அனுமதித்துள்ளது. கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்கு இது மேலும் வழி வகுக்கும். அரசு இதில் தலையிட்டு, குறைந்த பட்சம் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையாவது இந்த ஆண்டு வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிக் காசோலைகள், வரைவோலைகள் மூலம் மட்டுமே கட்டணம் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும். 

6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தை (RTE 2009) உடனடியாக முழுமையாக அமுல்படுத்து! 

       தேசிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணையத்தை (NCHER) இழுத்துமூடு! 

       பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை படிப்புகளுக்கு அகில இந்திய அளவிலோ மாநில அளவிலோ பொது நுழைவுத் தேர்வுகளை நடத்தாதே! 

       சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வை ரத்து செய்! 

       மேல்நிலைக்கல்வியில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுக்குமான பொதுப்பாடத் திட்டம் என்ற பெயரில் இந்தி - பார்ப்பனர் - வடவர் ஆதிக்கங்களை நிலைநிறுத்தத் திட்டமிடாதே! 

       தாய்மொழிவழிக்கல்வியை வலியுறுத்தும் பொதுப்பள்ளி முறையை (Common School System) அமுல்படுத்து! அதற்கு முன்னோடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்து! 

       மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமை பெறுவதைத் தடைசெய்யும் க்ரீமிலேயர் முறையை ரத்துசெய்! 

       பொதுப்போட்டியில் வென்றுவரும் SC, ST, OBC மாணவர்களின் எண்ணிக்கையை இடஒதுக்கீட்டுக் கணக்கில் சேர்க்காதே! 

கல்வி அமைப்புகளை மதத்திலிருந்து விடுவித்து மதச் சார்பற்ற சூழலில் இயங்கச் செய்!               

***

கொளத்தூர் மணி, கோவை இராமக்கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் மற்றும் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்கும் 

கல்வி உரிமை மீட்பு மாநாடு 

06.08.11 : சேலம் : காலை 10.00 விஜயராகவாச்சாரி அரங்கம் 

கல்வித்துறையில் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளையை முறியடிப்போம்!

Pin It