இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வின் மூலமே கட்டாயம் இருத்தல் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 28-4-16 அன்று மிகுந்த கண்டிப்பான முறையில் தீர்ப்பளித்துள்ளது. பொதுவாகவே வெகுமக்கள் தொடர் பான வழக்குகளில் மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் உயர்நீதித் துறை மதிப்பதில்லை.
மருத்துவப் படிப்பில் சேருவதற்குப் பொது நுழைவுத் தேர்வு என்கிற ஒற்றைவாயில் மட்டுமே உண்டு என்கிற உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு-கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு-தாய்மொழியில் படிக்கும் மாணவர்களுக்குப் பேரிடியாகும். உயர்கல்வியைப், பார்ப்பனர் மற்றும் பிற மேல்சாதியினரின்-நகர்ப்புற பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் முற்றுரிமையாக்குவதற்கான சூழ்ச்சியே இத்தீர்ப்பு.
ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றி, 1800 களுக்குப் பின் அனைவருக்குமான பொதுப் பள்ளி களைத் தொடங்குகின்றவரையில்-கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலோக, கல்வி, என்பது பார்ப்பனர்களின் முற்றுரிமையாக இந்துமத சாத்திரங்களின் பேரால் இருந்து வந்தது. 1850 முதல் 1950 வரையில் உயர்கல்வியைப் பார்ப்பனர்களும் மற்ற மேல்சாதியினர் மட்டுமே பெற்றுவந்தனர். அதன் பிறகுதான் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளின் மாணவர்களில் சிலர் உயர்கல்வியில் நுழையத் தொடங்கினர்.
1975-77 நெருக்கடி காலத் தின் காட்டுமிராண்டி ஆட்சியில் பார்ப்பன அதிகாரத் திமிர் பிடித்த இந்திராகாந்தி மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை பொது அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு சென்றார். பெயரளவில் நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உடையதுதான் பொது அதி காரப்பட்டியல். ஆனால் நடப்பில் நடுவண் அரசு வைத்ததே சட்டமாக இருக்கிறது.
மோடி அரசில் மக்கள் நலவாழ்வு அமைச்சராக உள்ள ஜே.பி.நட்டா பொது நுழைவுத் தேர்வு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு மைல்கல் என்று பாராட்டியிருக்கிறார் என்பதிலிருந்தே இத்தீர்ப்பு பார்ப்பன-மேல்சாதியினரின் நலனுக்கானது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு முன்பே மாநில அரசுகள் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூகளில் உள்ள மொத்த இடங்களில் 15 விழுக்காடு இடங்களை நடுவண் அரசு பறித்துக் கொண்டு, அந்த இடங்களுக்காக இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்திவருகிறது இத்தன்மையில் 1-5-16 அன்று, 1,040 மய்யங்களில் நடைபெறவுள்ள மருத்துவ பொதுத்தேர்வை எழுதுவதற்காக 6,67,637 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
2016-17 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக் குப் பொது நுழைவுத் தேர்வை நடத்தி முடிப்பதற்காக உச்ச நீதிமன்றமே வழிகாட்டி உள்ளது. 1-5-16 அன்று நடைபெறுவது முதல்கட்ட நுழைவுத் தேர்வு என்றும், இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வை சூலை 24 அன்று நடத்தவேண்டும் என்றும், இந்த இரு தேர்வுகளின் முடிவுகளை ஆகத்து 17 இல் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இக் கருத்துருவை நடுவண் அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் விகாஸ் சிங் முன்மொழிந்தார். எனவே இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்குப் பொது நுழை வுத் தேர்வு என்பது நடுவண் அரசும், உச்சநீதி மன்றமும் கூட்டாகத் தீட்டிய சதித்திட்டமாகும்.
பல மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல் லூரிகளும் உச்சநீதிமன்றத்தில் பொது நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்தனர். கல்வி பொது அதிகாரப் பட்டியலில் இருப்பதைக் காரணமாகக் கொண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இத்தகைய மக்கள் விரோத-தேசிய இனங்களை ஒடுக்குகின்ற தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
உலகில் உள்ள 193 நாடுகளில் நூற்றுக்கும் மேற் பட்ட நாடுகள் இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங் களின் மக்கள் தொகையை-5 கோடிக்கும் குறைவான மக்களைக் கொண்டவை. அத்தன்மையில் இந்தியா வில் உள்ள தேசிய இனங்களின் அடிப்படையிலான ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி நாடாக விளங்கக் கூடிய தகுதி உடையவை.
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் தாய்மொழியில் உயர் கல்வியைப் பெற உரிமை உண்டு. இந்த உரிமை உணர்வு முகிழ்க்காமல் தடுப்பதற்காக நடுவண் அரசு கையாளும் சூழ்ச்சித் திட்டங்களில் ஒன்றே-மருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்பது.
தற்போது ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன. இந் நிலையில் பொதுநுழைவுத் தேர்வை இம்மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? சி.பி.எஸ்.சி. கல்வி முறையில் பயின்ற மேட்டுக்குடிகளின் பிள்ளைகளால் மட்டுமே இந்த நுழைவுத் தேர்வை எழுத முடியும்.
நடுவண் அரசின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிட்டத்தட்ட கிணற்றில் போட்டகல் போல இருக்கிறது. தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு பெறும் மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவு இனிகானல் நீர்தானா? நடுவண் அரசு கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர் இடஒதுக்கீடும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.
உயர் கல்வியிலிருந்து ஒடுக்கப்பட்ட வகுப்பு மாண வர்களை விரட்ட வேண்டும் என்ற நடவடிக்கையால் தான் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். கன்னையா குமார் மீது தேசவிரோதச் சட்டம் பாய்கிறது.
பொது அதிகாரப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலில் சேர்த்திட எல்லா மாநிலங்களிலும் உள்ள மக்கள், கட்சி வேறுபாடு கருதாது போராட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இராசகோபாலாச்சாரி 1952இல் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும், 6000 கிராமப்புற பள்ளிகளை அன்றைய சென்னை மாகாணத்தில் மூடியபோதும்-1953இல் இராசகோபாலாச்சாரி கிராமப் புறத் தொடக்கப் பள்ளிகளில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோதும்-சென்னை மாகாணத்தில் கல்வியில் இடஒதுக்கீட்டுக்குச் சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோதும், பெரியார் தலைமையில் கட்சி வேறுபாடு பாராமல் எல்லோரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றதுபோல் இப் போது தமிழக மக்கள் தம் வீட்டுப் பிள்ளைகளின் உரிமைக்காகவேனும் பொது நுழைவுத் தேர்வு முறையை முறியடித்திட மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை உடனடியாக நடத்தவேண்டும்.
உச்சநீதிமன்றத்துக்கும், நடுவண் ஆட்சியாளர் களுக்கும் ஒரு கேள்வி! கொஞ்சங் கொஞ்சங்கமாக மாநில உரிமைகளைப் பறிப்பதை விட்டுவிட்டு, நேரு தலைமையில் இருந்த இந்தியத் தேசியவாதிகளால் வேண்டாவெறுப்பாக உருவாக்கப்பட்ட மொழிவழி மாநில அரசுகள் என்ற நிலையை அடியோடு ஒழித்து விட்டு, ‘ஏக இந்தியா (இந்து) அரசு’ என்கிற ஒற்றை அரசை ஏற்படுத்திவிடுங்கள்! இந்த முயற்சியில் நீங்கள் உடனே ஈடுபட்டால் தேசிய இனங்கள் விடுதலை பெறுவது விரைந்து நிறைவேறும். இதைத்தான் எதிர் பார்க்கிறோம்.