கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இடஒதுக்கீட்டை ஒவ்வொரு கல்லாகப் பெயர்த்தெடுக்கிற முயற்சியை பாஜக மிகக் கவனமாக செய்து கொண்டே இருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சிக்காலம் முடியும் இத்தருவாயில், இடஒதுக்கீட்டை ஒரே அடியாக ஒழித்துக் கட்ட துணிந்திருக்கிறது பாஜக அரசு. உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதல் ஒன்றை கடந்த வாரம் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்டிருந்தது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நிரப்ப போதுமான ஆட்கள் இல்லாவிட்டால், அந்த இடங்களை பொதுப்பிரிவுக்கு (ஓ.சி.) மாற்றிக் கொள்ளலாம் என்பது அந்த அறிக்கை.

ஒன்றிய அரசு பணியிடங்களில் ஏற்கெனவே, பெரும்பான்மை இடங்களை பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்ஜாதியினரே ஆக்கிரமித்துக் கொள்ளும் போக்குதான் நிலவிக் கொண்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை அதிகரித்து சமூகத்தை சமத்துவமடையச் செய்ய வேண்டிய தேவைகள் இருக்கையில், இடஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேறும் முன்பே அதை ஒட்டுமொத்தமாக குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு பல்கலைக்கழக மானியக் குழு வரைவறிக்கையை திரும்பப் பெற்றிருக்கிறது. ஆனாலும் பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நடந்தவற்றை அசைபோட்டுப் பார்த்தால், பல்கலைக் கழக மானியக் குழு பின்வாங்கவில்லை, மீண்டும் பாய்வதற்கு காலத்தை எதிர்பார்த்துப் பதுங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்ணைக் கொண்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், நீட் தேர்வை கட்டாயமாக்கியது ஒன்றிய அரசு. நீட் தேர்வுதான் தகுதியான மாணவர்களை உருவாக்கும் என்ற வாதத்தையும் முன்வைத்தனர்.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானங்களுக்கும் இதுவரை ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ ஒப்புதல் தரவில்லை. நீதிமன்றங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராகவே வாதங்களை முன்வைக்கிறது ஒன்றிய அரசு. ஆனால் அதே நீட் தேர்வில் ஜீரோ பெர்சண்டைல் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம் என கடந்தாண்டு செப்டம்பரில் அறிவித்தது ஒன்றிய அரசு. 12 வருட பள்ளிப்படிப்புக்கு அர்த்தமில்லை, நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்ணுக்கு கீழ் எடுத்தாலும் சீட் உண்டு என்றால் உண்மையிலேயே அது தகுதித்தேர்வுதானா?

நீட் மட்டுமல்ல, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைத்து சின்னாபின்னமாக்க, உயர்ஜாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீட்டை (ews) வலிந்து கொடுத்தது பாஜக அரசு. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை கொடுக்கவில்லை என்பதற்காகவும் சேர்த்தே 1951-ஆம் ஆண்டில் ஒன்றிய சட்ட அமைச்சர் பதவியை புரட்சியாளர் அம்பேத்கர் ராஜினாமா செய்தார். அதன்பிறகு 1980-இல் மண்டல் கமிசன் அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்பும் கூட, 10 ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் ஆட்சியில்தான் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது. ஆனால் உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை யாரும் கேட்காமல், எந்த போராட்டமும் நடக்காமல், ஆணையங்கள் அமைத்து அறிக்கை பெறாமல் மூன்றே நாட்களில் நடைமுறைப்படுத்தியது பாஜக அரசு.

இன்னொருபக்கம் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வஞ்சித்தது பாஜக அரசு. இதனை நடைமுறைப்படுத்தக்கோரி திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தியபோது, எதிராக வாதாடவும் செய்தது பாஜக அரசு. பின்னர் திமுக அரசின் வாதங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரப்போகிறது என்பதை அறிந்து அவசர அவசரமாக, மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார் நரேந்திர மோடி. இந்தியா முழுமைக்கும் இருக்கிற எல்லா மாநிலங்களைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையையும் நிலைநாட்டியது திமுக அரசு.

நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதை தவிர்க்கும் விதமாக, முந்தைய அதிமுக ஆட்சி நீட்டை ஒழிக்கும்வரை மாற்று ஏற்பாடாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது. ஆனால் அந்த மசோதாவுக்கும் ஒன்றிய அரசின் ஏவலாளியான ஆளுநர் கையெழுத்திட மறுக்க, அரசிதழில் வெளியிட்டு நடைமுறைப்படுத்தியது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம்தானே என்ற பாகுபாடு இல்லாமல், அதை அனைத்து தொழிற்கல்விக்கும் விரிவுபடுத்திய திமுக அரசு, கட்டணச் செலவையும் ஏற்றுக் கொண்டது. ஆனால் நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலத்தின் ஒருமித்த குரலாய் அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவோ, திமுக எதிர்ப்பு அரசியலைத்தான் இதிலும் செய்து கொண்டிருக்கிறது.

அருகே உள்ள புதுச்சேரியிலும் முந்தைய நாராயணசாமி அரசு, இதேபோல 10% உள்இடஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுத்தபோது, அப்போதிருந்த ஆளுநர் முட்டுக்கட்டை போட்டார். நாராயணசாமி அரசின் முடிவு நீட் தேர்வின் நோக்கத்தை சிதைக்கிறது என்று நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தது பாஜக அரசு. இப்படி கடந்த 10 ஆண்டுகளாகவே பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டை சிதைக்கிற பணியை செய்து கொண்டே இருக்கிறது ஒன்றிய அரசு. அதன் நீட்சியாகத்தான் இடஒதுக்கீட்டை முற்றிலுமாக அழிக்கிற முயற்சியாக, இப்போது பல்கலைக்கழக மானியக் குழு ஒரு வரைவறிக்கையை வெளியிட்டு, எதிர்ப்புகளுக்குப் பின்னர் திரும்பப் பெற்றிருக்கிறது.

இது பாஜகவின் வழக்கமான “ஆழம் பார்க்கும் உத்தியே”. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி தொடர்ந்தால், இந்த வரைவறிக்கையை திரும்பவும் திணிக்கக்கூடிய பேராபத்து இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை முற்றிலுமாக அழித்தொழிக்க பாஜக துணிந்து விட்டது என்பதற்கான சமிக்ஞ்யே இது. ஒருபுறம் ராமர் கோயிலை காட்டி, இந்துக்களின் வாக்குகளை அள்ளிக்கொள்ளலாம் என கணக்குப் போட்டுக் கொண்டே, இன்னொருபுறம் இடஒதுக்கீட்டை நீக்கிவிட்டு பெரும்பான்மை இந்துக்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கப் பார்க்கிறது பாஜக என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்