தொன்னூறுகளின் தொடக்கத்தில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் ‘தலித் பண்பாட்டுப் பேரவை’ என்ற அமைப்பின் மூலம் தலித் அரசியல், தலித் கலை, தலித்பண்பாடு என்று பட்டிதொட்டிகள் எங்கும் கூட்டங்கள் நடத்தியும், சாதிய ஓடுக்குமுறைக்கெதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்தோம். இடதுசாரி இயக்கங்களிலிருந்து பெருவாரியாக தலித்துக்கள் இதில் திரண்டனர். குறிப்பாக நாகப்பட்டினம். திருத்துறைப்பூண்டியில் இந்த இயக்கம் மிக வலுவாகக் காலூன்றியிருந்தது. இயக்கத்தை வழிநடத்திய முக்கியப் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் சிவ. இராசேந்திரன். எழுத்தாளர் உஞ்சைஅரசன். கவிஞர் கந்தசாமி. நான் (அப்போது ராஜ. முருகுபாண்டியன்). இன்ன பிற இயக்கத்தோழர்கள். எங்களது பேரவைக்கு ஆதரவான தலித் கருத்தியல்களை பரப்ப எங்களுக்குப் பெரிதும் துணையாயிருந்த அறிஞர்கள் பேராசியர் அ. மார்க்ஸ். பேராசியர் கல்யாணி (இப்போது பிரபா கல்விமணி). தோழர் அரங்க. குணசேகரன். தோழர். இரா. திருமாவளவன் (தற்போது தொல். திருமாவளவன் - பொதுச் செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள்). மற்றும் மறைந்த பேரறிஞர் ஏ. பி. வள்ளிநாயகம் அவர்கள்.

எமது பெரும்பாலான நிகழ்வுகளில் அவர்கலந்து கொண்டர். ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் எனது கவிதை குறித்தோ உரை குறித்தோ விவாதிப்பார். அவைகளை நூலாக்க வேண்டும் என்பார். உங்களுடைய அறிவுத்திரட்டலுக்கு இன்னும் நிறைய நீங்கள் எழுதியிருக்கவேண்டும். எவ்வளவு தான் பேசினாலும் அவை காற்றோடு கலந்துவிடும். எழுத்து தான் நம்மை என்றும் அடையாளப்படுத்தும். கால காலத்திற்கும் நம்மைப் பேசவைப்பது நமது எழுத்துகள்தான் என்று எப்போது பார்த்தாலும் என்னை எழுதத் தூண்டிக் கொண்டேயிருந்தார்.

தலித் பண்பாட்டுப் பேரவை சிதைந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயக்கமென அடைக்கலமானோம். அண்ணன் வள்ளிநாயகம் மட்டும் எழுத்தில் சளைக்காமல் உழைத்தார். தலித் விடுதலைக்கான எல்லா நிகழ்வுகளிலும் அவர் ஒரு பார்வையாளராகவேனும் கலந்துகொண்டார். ஆறு மாதத்திற்கொருமுறையாவது எங்களது சந்திப்பு நிகழ்ந்துவிடும். சந்திக்கும்போதெல்லாம் எனது சின்னச் சின்னப் பதிவுகள் குறித்துப் பேசுவார். நானே மறந்து போன எனது கவிதைகளை நினைவூட்டுவார். என்னை நேசிப்பதற்கு இப்படி ஒரு நபரா என்று நினைத்துக்கொள்வேன். இயக்கங்கள் குறித்தெல்லாம் பேசிக்கொள்வோம். தலித் தலைவர்களிடத்தில் இருக்கும் நிறைகளையே பேசுவார். குறைகளைப் பேசமாட்டார். இயக்கங்கள் இன்னும் எவ்வளவு கூர்மையடையவேண்டும் என்றெல்லாம் வருத்தப்படுவார். தோழமை உறவை பெதெனப் போற்றினார்.

அவரது வாழ்க்கை குறித்து நானும் கேட்டுக்கொண்டதில்லை. அவரும் அவ்வளவு பெரிதாக சொல்லிக்கொண்டதும் இல்லை. ஆனால் பல முற்போக்கான அம்சங்களைக் கொண்டது அவரது வாழ்வு. தலித் சமூகத்தில் பிறந்து தன் கல்வியாலும் சிந்தனையாலும் தனக்கிணையான ஒரு தோழரை சாதி மறுப்புத்திருமணம் செய்துகொண்டவர். ஏ.பி. வள்ளி நாயகத்தின் துணைவி தோழர் ஓவியா ஆவார். ஓவியா பெரியாரியல் பயின்ற மிகச் சிறந்த பெண்ணியலாளர். சிறந்த பேச்சாளர். எழுத்தாளர். பெண்ணிய இயக்கங்களை உருவாக்கி வழிநடத்தியவர். மிக எளிய முறையில் இவர்களது திருமணம் நடந்தேறியது. சாதி ஒழிப்பில் இருவரும் கருத்தியல் ரீதியாக ஒன்றுபட்ட தம்பதியினர். இவர்களுக்கு ஜீவா என்றொரு மகன் உள்ளார். பல்வேறு போராட்டங்களின் மத்தியில் சமூகத்தின் ஒரு முன்மாதியான வாழ்வை வாழ்ந்து காட்டியவர்கள் இவர்கள். எவ்வளவு நெருக்கடியிலும் அவர் தளராமல் உறுதியாக இருந்தார்.

எழுத்துத்துறையில் அறிஞர் ஏ.பி. வள்ளிநாயகத்தின் பணி வேறொருவரால் இட்டு நிரப்பமுடியாதது. தலித் மக்களின் விடுதலைக்காக பாடுபட்டு உயிர்நீத்த போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிற பணியை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார். கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிமுடித்துள்ளார். அடிமைகளின் தலைவர் அய்யன்காளி, தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம். கிருஷ்ணசாமி, சமநீதிப்போராளி இமானுவேல்சேகரன். பூலான் தேவிக்குமுன் ராம்காளி; முன்னி, நமது தலைவர்கள் எல்.சி. குருசாமி. எம்.எம் ஜெகந்நாதன். உரிமைப் போராளி ரெட்டமலை சீனிவாசனார் போன்ற தலைவர்களது வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களது சிந்தனைகளையும், கூடுதலாக அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மற்றும் பௌத்தம் தொடர்பான நூல்களையும் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு நூலை எழுதிமுடிக்கவும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சி வியப்பை அளிப்பதாக உள்ளது. ஒரு ஆய்வு மாணவருக்குரிய ஆர்வத்தோடும். ஒரு வரலாற்றாசியனுக்கே உரிய ஆதாரத் திரட்டுதலோடும். ஒரு சமூகப் போராளிக்குரிய தத்துவப் புரிதலோடும் ஒவ்வொரு நூலையும் அவர் எழுதி முடித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான தரவுகளோடும் அது தொடர்புடைய நூற்றுக்கணக்கான நூல்களின் வாசிப்புத் திரட்சியோடும் அதற்கான தரவுகளைத் திரட்ட நாடு முழுவதும் அவர் அலைந்து திரிந்து பலரையும் நேர்காணல் செய்து பல நூலகங்களில் பல நாட்கள் செலவிட்டு அவர் வாழ்வின் சிந்தனையின் பெரும் பகுதியை எழுத்தாக்கி தலித் விடுதலைக்கு விதையாக இந்நூல்களை விட்டுச் சென்றிருக்கிறார்.

வெளிக்கொண்டுவரப்படாத பல தலித் போராளிகளின் வாழ்க்கையையும் அவரது சிந்தனைகளையும் திரட்டுகிற பணியில் அவர் தொடர்ந்து தொய்வின்றி செயல்பட்டார். எல்லாம் அவருடைய மறைவால் நின்றுவிட்டது. கடந்த மார்ச் 17ஆம் தேதி மதுரையில் நடந்த தலித் கலைவிழாவில் அவரை இறுதியாகப் பார்த்தேன். நானும் அய்யா எக்ஸ்ரே மாணிக்கமும் அறிஞர் ஏ. பி. வள்ளிநாயகமும் அந்த இரவில் மிக நீண்டநேரம் உரையாடிக்கொண்டே உணவருந்தினோம். அந்தக் கணங்களில்கூட என்னை நிறைய எழுதவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அலட்டிக்கொள்ளாத அவரது அறிவாற்றலும். குழப்பிவிடாத அவரது மொழியாற்றலும். மார்க்சீய நெறியிலான அவரது ஆய்வுமுறையும் (Methodology) தலித் எழுத்தாளர்கள் பலரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். அவருடைய எழுத்துப் பணியைப் பாராட்டி தலித் ஆதார மய்யம் அவருக்கு 'விடுதலை வேர்கள்’ விருதை வழங்கி அணி செய்திருக்கிறது.

கடந்த மாதம் 15 முதல் 30 வரை மகாராஷ்ட்ராவில் எனது குடும்பத்தினரோடு நான் சுற்றுப்பயணத்திலிருந்தேன். அண்ணல் அம்பேத்கர் பொதுக்குளத்தில் நீரெடுத்த போராட்டத்தையடுத்து, மனுதர்மத்தை நெருப்பிலிட்டுக் கொளுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க மகாட் சௌதார் குளத்தைப் பார்வையிட்டு வந்து எமது உறவினர் டாக்டர் மலர்விழி எட்வின் அவர்களது வீட்டில் அம்பேத்கர் போராட்டம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோதுதான் நண்பர். இரா. அரசெழிலன் (நாளைவிடியும் ஆசியர் திருச்சி) அறிஞர் வள்ளிநாயகம் அவர்களது மறைவை கைபேசியில் செய்தியாக அனுப்பியிருந்தார். (29.05.07) இருபது ஆண்டு கால நட்பு திடீரென மறைந்த துயரம். மேலும் அவரது இறுதிச்சடங்கில்கூடக் கலந்துகொள்ள இயலாத சூழலில் மனம் நிறைய கனத்துக்கிடக்கிறது. தலித் விடுதலை வரலாற்றில் கல்வெட்டாய் நிற்கும் அவரது எழுத்துகள்தாம் அவரது குடும்பத்தினரையும் தோழமை உறவுகளையும் தேற்றவேண்டும்.
Pin It