சிதம்பரம் நடராஜன் கோயிலில் தேவாராம் பாடலாமா? பாடக்கூடாதா? இக்கோயில், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்திலா? பரம்பரை தீட்சிதர்கள் நிர்வாகத்திலா? "இந்து அறநிலையத் துறையின் கீழ் கூடாது' என்கிறார்கள் தீட்சிதர்கள்.
அவர்களுக்கு வக்காலத்து வாங்க வருகிறார், ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் சுப்பிரமணிய சாமி. "தீட்சிதர்களின் பொது நல' வழக்கில் தம்மையும் ஒரு பிரதிவாதியாக இணைத்துக் கொள்ளக் கோரி உயர் நீதிமன்றத்தை அவர் அணுகுகிறார். சென்னை உயர் நீதிமன்றமும் சாமியின் "பொது நலப்' பார்வையை கணக்கிலெடுத்து, தீட்சிதர்களின் மேல்முறையீட்டு வழக்கில் அவரை இணைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.
ஆனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 522 கல்லூரி விரிவுரையாளர் பின்னடைவுப் பணி யிடங்களை நிரப்பக் கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2006இல் தொடுத்த பொது நல வழக்கை (WP No. 40131/2006) விசாரித்த உயர் நீதிமன்றம் தனது தீர்ப்புரையில், "அரசுக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பும் பணி சார்ந்த பிரச்சினையில், ஓர் அரசியல் கட்சி பொது நல வழக்கைத் தொடர முடியாது'' எனக் கூறியது.
அண்மையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக் கல்லூரியில் சுமார் 170 மருத்துவர்கள்/துணை மருத்துவப் பணியாளர்கள் பணி நியமனத்தில் – பார்வைக் குறை யுடையோர், செவித்திறன் குறையுடையோர் மற்றும் உடல் குறையுடையோருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு தரவேண்டும் என இக்கட்டுரையாளர் தொடுத்த பொது நல வழக்கில் (WP No. 1880/2009) 30.1.2009 அன்று, "கல்லூரிப் பேராசிரியர் இயலாதோர் சார்பாக பொது நல வழக்கு தொடர முடியாது'' என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்கிறது.
சமூகத்தின் கடைக் கோடியில் இருந்தபடி இன்றைக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு அன்றாடம் ஆளாகிவரும் தலித் மக்களின் நலனுக்காக, மேம்பாட்டிற்காக; பார்வைக் குறையுடையோர், செவித்திறன் குறையுடையோர் மற்றும் உடல் குறையுடையோர் சார்பாக – சமூக அக்கறையும், விரிந்த பார்வையுமுடைய சமூக ஆர்வலர்கள் நீதிமன்றங்களை அணுகும்போது, அப்பொது நல வழக்குகள் தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்யப்படுவது, சமூக ஆர்வலர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது.
அஞ்சலட்டையில் எழுதப்பட்ட செய்தியைக்கூட பொது நல வழக்காக எடுத்துக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். நாளேடுகளில் வந்த செய்தியைக்கூட பொதுநல வழக்காக உச்ச நீதிமன்றம் எடுத்து நீதி வழங்கியுள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நீதிமன்றங்கள், நம்பிக்கைக்குரிய ஜனநாயகத் தூண்களாகவே செயல்பட வேண்டும். ஆனால், இடஒதுக்கீட்டிற்காகப் போராடும்போது, நீதிமன்றங்களை நாடினால், நமது நீதிமன்றங்கள் அப்பொது நல வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதிலும், அனுமதிப்பதிலும் – தத்தம் மனோநிலைக்கேற்ப நடந்து கொள்வது ஒன்றும் புதிதன்று.
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் முதன் முதலாக நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது, சென்னை மாகாணத்தில் அன்றைக்கு நடைமுறையில் இருந்த மாணவர் சேர்க்கையில் இனவாரி இடஒதுக்கீட்டு அரசாணைதான் (எண். 2208, நாள் : 16.6.1950). இவ்வரசாணை, அன்றைக்கு நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டு அரசாணையை (எண். 3437, பொதுத்துறை, நாள் : 21.11.1947) அடிப்படையாகக் கொண்டது.
இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் இனவாரி இடஒதுக்கீடு, சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்தது. அன்றைக்கு 14 புள்ளி இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. இதன்படி கீழ்க்கண்டவாறு அனைவரும் இடஒதுக்கீட்டைப் பெற்றனர் : பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் – 6; பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் – 2; பார்ப்பனர்கள் – 2; தலித்துகள் – 2; ஆங்கிலோ இந்தியர் மற்றும் இந்திய கிறித்துவர்கள் – 1; முஸ்லிம்கள் – 1
இவ்வாணையை எதிர்த்து 1950இல் வழக்குத் தொடுத்த பார்ப்பனரான திருமதி செண்பகம் துரைராசன், மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தவர் அல்லர்; எந்த வகையிலும் இவ்வரசாணையால் பாதிக்கப்பட்டவரும் அல்லர். இருப்பினும், அன்றைக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜமன்னார் தலைமையிலான பெஞ்ச், இந்த இடஒதுக்கீட்டு ஆணை அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவித்தது. உயர் நீதிமன்ற பெஞ்ச், திருமதி செண்பகம் துரைராசனுக்கு வழக்குத் தொடுக்க தகுதி உண்டா, இல்லையா (டூணிஞிதண் ண்tச்ணஞீடி) என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. இதனை, இத்தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றம் பின்வருமாறு தனது தீர்ப்புரையில் பதிவு செய்துள்ளது :
“From the affidavit filed in support of her petition, it does not appear that the petitioner had actually applied for admission in the Medical College. She states that an inquiry she came to know that she would not be admitted to the college as she belonged to the Brahmin community. No objection however was taken to the maintainability of her petition on the ground of absence of any actual application for admission made by her. On the contrary, we have been told that the State had agreed to reserve a seat for her, should her application before the High Court succeed. In the peculiar circumstances, we do not consider it necessary to pursue this matter any further. But we desire to guard ourselves against being understood as holding that we approve of a person who has not actually applied for admission into an educational institution coming to Court complaining of infringement of any fundamental right under article 29(2). The High Court by its judgement delivered on July 27, 1950, allowed this application of Srimathi Champakkam Dorairajan.
மேற்கூறியவாறு தனது கருத்தைப் பதிவு செய்த உச்ச நீதிமன்றம், அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, திருமதி செண்பகம் துரைராசனின் கோரிக்கையை ஏற்று, இடஒதுக்கீடு செல்லாது என அறிவித்தது.
இங்கே மிகச் சுருக்கமாக இடஒதுக்கீட்டு வரலாற்றை நினைவு கூரலாம். கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் இந்தியப் பகுதிகளை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தபோது, தமது நிர்வாகத்தில் குறிப்பாக அரசுப் பணியில் ஏகபோக மேலாதிக்கம் செலுத்தி வந்த சாதி இந்துக்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தது. 1853 ஆம் ஆண்டு அளவிலே பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கம் அரசுப் பணியில் இருந்தது தெரிய வந்தது. சென்னை மாகாணம், நெல்லூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை நிர்வாகம், ஒரே குடும்பத்தைச் சார்ந்த 49 பார்ப்பனர்களின் கையில்தான் அன்றைக்கு இருந்தது. இவர்களின் செல்வாக்கு மற்றும் குடும்பத் தொடர்புகள் காரணமாக இவர்களின் மோசடிகளையும் தவறுகளையும் கண்டுபிடித்துத் தண்டிக்கவோ, பொதுமக்களை இவர்களின் சுரண்டல்களிலிருந்து காப்பாற்றவோ அரசால் முடியாமல் போனது. இந்தப் பின்னணியில்தான் சென்னை மாகாண வருவாய் வாரியத்தின் நிலை ஆணை, 9.3.1854 அன்று (ஆணிச்ணூஞீண் குtச்ணஞீடிணஞ் Oணூஞீஞுணூ 128(2)/1854) பிறப்பிக்கப்பட்டது :
"மாவட்ட ஆட்சியர்கள், தத்தம் அதிகாரத்திற்குட்பட்ட சார்நிலைப் பணிகளில் செல்வாக்குள்ள ஒரு சில குடும்பங்களே ஆதிக்கம் செலுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், முக்கியமான பதவிகளில் பல சாதிகளையும் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டாட்சியர்களில் ஒரு பிரிவினர், பிராமணரல்லாதவராக இருத்தல் வேண்டும். அதுபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமையிலான இரண்டு வருவாய்த் துறைப் பணியாளர்கள், எப்போதுமே வேறு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.''
இந்த நிலை ஆணையே பிற்காலத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணைகளுக்குத் தோற்றுவாயாகும். அரசுப் பணிகளில் அன்று பார்ப்பனர் அல்லாதோருக்குப் போதிய இடஒதுக்கீடு கோரி போராடிய அமைப்புகள் பல இருந்தன. அவை இடஒதுக்கீட்டைக் கோரி மனு அளித்தன :
1897இல் விஸ்வகுலோத்தரன் சங்கம், சென்னை மாநில ஆளுநரிடம் மனு அளித்தது (அரசாணை எண். 970, பொதுத்துறை நாள் : 20.7.1897) 1907இல் அஞ்சுமன் ஏ முபதீ அன்லே, இஸ்லாம் முகமதி கல்விச் சங்கம், சென்னை மாகாண முஸ்லிம் லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் வைஸ்ராயிடம் கூட்டாக கோரிக்கை மனு அளித்தன (அர சாணை எண். 263, பொதுத்துறை நாள் : 3.4.1907) 1913இல் மூன்று முஸ்லிம் சங்கங்கள் மற்றும் தென் இந்திய கத்தோலிக்க இந்தியர் சங்கம் சென்னை மாகாணத்திற்கு வைஸ்ராய் வந்தபோது மனு அளித்தன (அரசாணை எண். 1129, பொதுத்துறை நாள் : 8.9.1913).
1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக் கட்சி) உருவானது. 1920இல் நீதிக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு ஆதர வாக வருவாய்த் துறை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ள நிலை ஆணையை (128(2)/1854) வழுவாமல் நடைமுறைப் படுத்துவதற்கான தீர்மானம், சட்ட மன்றத்தில் 1921இல் நிறைவேற்றப்பட்டது. இனி அரசுத் துறையில் பணியமர்த்தப்படுபவர்கள் கீழ்க்கண்ட வகையில் இருத்தல் வேண்டும் என வரையறுத்தது :
1. பார்ப்பனர்கள் 2. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 3. இந்திய கிறித்துவர்கள் 4. முஸ்லிம்கள் 5. அய்ரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் 6. ஏனையோர் (அரசாணை எண். 613, பொதுத் துறை நாள் : 16.9.1921).
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணையில் (எண். 1071, பொதுத்துறை, நாள் : 4.11.1927) 12 பணியிடங்களை ஒதுக்கீட்டுப் புள்ளியாகவும், இப்பன்னிரெண்டு புள்ளிகளை முழுமையாக கீழ்க்கண்ட வகையில் ஒதுக்கீடு செய்யவும் வகை செய்தது : பார்ப்பனர் அல்லாதவர் – 5; பார்ப்பனர் – 2; ஆங்கிலோ இந்தியர்களும் கிறித்துவர்களும் – 2; இஸ்லாமியர்கள் – 2; தலித்துகள் – 1. இந்த ஒதுக்கீடே 20.11.1947 வரை நடைமுறையில் இருந்தது. 21.11.1947 அன்று இவ்வொதுக்கீடு, அரசாணை எண். 3437, பொதுத்துறை மூலம் சற்று மாற்றி அமைக்கப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட அரசாணையின்படி ஒதுக்கீட்டிற்கான மொத்தப் புள்ளிகள் 12இல் இருந்து 14 ஆக உயர்த்தப்பட்டன. அய்ந்து சமூகத்தினருக்கான ஒதுக்கீடு ஆறு சமூகத்தினருக்கென வரையறுக்கப்பட்டது : பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் – 6; பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் – 2; பார்ப்பனர்கள் – 2; தலித்துகள் – 2; ஆங்கிலோ இந்தியர்களும் கிறித்துவர்களும் – 1; இஸ்லாமியர்கள் – 1
இவ்வாறு இருந்து வந்த 100 சதவிகித இடஒதுக்கீடு, 1951இல் செண்பகம் துரைராசன் வழக்கால் இல்லாமல் போனது.
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் சாதியற்றவர்களாக இருந்த, இந்து வளையத்திற்குள் இல்லாத தலித்துகளை – இந்தியக் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்ட பட்டியல் சாதியினர் ஆணை (கூடஞு குஞிடஞுஞீதடூஞுஞீ இச்ண்tஞு Oணூஞீஞுணூ 1950), இடஒதுக்கீட்டு உரிமை பெற கட்டாயமாக இந்துக்களாகவே இருக்கும்படி செய்தது. குடியரசுத் தலைவரின் இவ்வாணைப்படி, இந்துக்களும் சீக்கியர்களுமே பட்டியல் சாதியினராகக் கருதப்படுவார்கள் என இறுதியாகவும் உறுதியாகவும் அரசு தீர்மானித்து விட்டது. இதன் காரணமாக, பாபாசாகேப் அம்பேத்கருடன் பவுத்தம் தழுவிய பத்து லட்சம் தலித்துகளும் இடஒதுக்கீட்டு உரிமையை இழந்தனர். சற்றேறக்குறைய 40 ஆண்டுகளாக பவுத்தம் தழுவிய தலித்துகளுக்கு, இடஒதுக்கீட்டு உரிமை இல்லாமல் போனது. வி.பி. சிங் பிரதமர் ஆன பின்னரே அவரது அரசு பவுத்த மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமை வழங்கி, அம்பேத்கரின் மதமாற்றத்தைப் போற்றியது.
இதற்கிடையே இந்து மதத்தைவிட்டு வெளியேறி பிற மதம் தழுவிய தலித்துகள் – மீண்டும் இந்து மதத்தைத் தழுவுகின்ற நிலையில், அவர்களுக்கும் இடஒதுக்கீட்டு உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. பிற மதத்திலிருந்து இந்து மதம் தழுவிய தலித்துகளின் இடஒதுக்கீட்டு உரிமை, உச்ச நீதிமன்றத்தால் பின்வரும் தீர்ப்புரைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது : சி.எம். ஆறுமுகம் எதிர் எஸ். ராஜகோபால் (19.12.1975); முதல்வர், குண்டூர் மருத்துவக் கல்லூரி எதிர் மோகன் ராவ் (6.4.1976)
இந்திய அரசமைப்புச் சட்டப்படி (பிரிவு 25) மத உரிமை என்பது, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. இந்தியாவில் எவரும், தாம் விரும்பும் எம்மதத்தையும் பின்பற்றலாம், வழிபடலாம், மாறலாம். ஆனால் இவ்வுரிமை மிகத் தந்திரமாக தலித்துகளுக்கு மட்டும் மறுக்கப்பட்டது; இன்றளவும் மறுக்கப்பட்டே வருகிறது. இந்தியாவில் மதம் தலித்துகளின் விருப்பம் சார்ந்த தேர்வாக இல்லாமல், அரசின் தேர்வாக மாற்றப்பட்டு விட்டது. ஆளும் பார்ப்பன, இந்து சாதி ஆட்சியாளர் கள், தலித்துகள் இந்து மதத்தில் இருந்தால் மட்டுமே நல உரிமைகள் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் என மாற்றிவிட்டனர். மதம் பொருளியல் மற்றும் வாழ்வியல் நிலைகளோடு பிணைக்கப்பட்டு விட்டது.
இச்சதியின் தொடக்கம்தான் 1950. இந்திய அரசமைப்புச் சட்டப்படி (பிரிவு 341, 342) குடியரசுத் தலைவரே தலித் மற்றும் பழங்குடியின மக்களை வரையறுத்து அறிவிக்கத் தகுதி உடையவர். அதன் அடிப்படையில்தான் ராஜேந்திர பிரசாத், இந்து மதத்தில் இருக்கும் தலித்துகளுக்கு மட்டுமே இடஒதுக்கீட்டு சலுகை உண்டு என்று அறிவித்தார். இவர் ஓர் இந்துத்துவ சிந்தனையாளர் என்பது கவனிக்கத்தக்கது. சீக்கியர்கள் இதில் விதிவிலக்குப் பெற்றனர். சீக்கிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனில், அம்மதம் பாதிப்புக்குள்ளாகும் அந்நிலை உருவானால், இந்திய இறையாண்மையை எங்களால் ஏற்க முடியாது என்றனர் சீக்கியத் தலைவர்கள். இதனால் தலித் சீக்கியருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் 1956இல் பவுத்தம் தழுவியபோது, தலித்துகள் பவுத்தத்திற்கு சென்றனர். அவருக்கு முன்னும் பின்னும் பல தலித்துகள் கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்களுக்கு சென்றனர். அவர்கள் அனைவருக்குமே இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. தலித்துகள் மீண்டும் இந்து மதத்திற்கே திரும்புவதாக இருந்தால், அவர்களுக்கு தாய் மதத்திலிருந்து பிரிந்து சென்றதற்கான தண்டனையாக மீண்டும் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்படாதிருந்தது. இத்தகைய முரண்பாடுமிக்க அரசு நிலைப்பாடு, தலித் அரசு ஊழியர்களிடையே ஒரு கண்ணாடிச் சுவரை உருவாக்கியிருந்தது. அது வன்மச் சுவரும் கூட. தலித்துகளில் இந்து மதத்தில் இருப்போர், மதம் மாறி பிறகு இந்து மதம் திரும்பிய தலித்துகளுக்கு எதிராக, பொய்ப் புகார்களை அரசுக்கு அனுப்பி இடைஞ்சல்களை செய்து கொண்டிருந்தனர். தலித் அல்லாதராலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்திய உணவுக் கழகத்தில் போலி சாதிச் சான்றிதழின் அடிப்படையில், ஆதிதிராவிடருக்கான இடஒதுக்கீட்டில் பணியமர்த்தப்பட்ட சுவீகரதாஸ் என்பவரின் சாதிச் சான்று மெய்த்தன்மை தொடர்பாக, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றத்தில் முடிவடைந்த வழக்கில் இறுதியாக வழங்கப்பட்ட தீர்ப்புரையில், "கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த ஆதிதிராவிடர்கள் இந்து மதம் தழுவினால், அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கும் இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது'' என்று சொல்லப்பட்டது (இத்தீர்ப்புரை சுவீகரதாசுக்கு மட்டுமே பொருந்தும்).
ஆனால் இந்துத்துவ சிந்தனையாளர்கள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அலுவலர்களாகப் பணியாற்றுவதன் விளைவாக, "சுவீகரதாஸ் எதிர் இந்திய உணவுக் கழகம்' வழக்கில் கூறப்பட்ட தீர்ப்புரையை மேற்கோள் காட்டி, இந்து மதம் தழுவிய கிறித்துவ தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை 19.9.2000 அன்று வெளிவந்த அரசுக் கடிதம் எண். 81 (ஆதி திராவிடர் நலத்துறை) மூலம் மறுத்தது, பா.ஜ.க. கூட்டணியில் இருந்த தி.மு.க. அரசு. இதை "தி.மு.க. அரசின் தலித் விரோத அரசாணை' என "தலித் முரசு' (மார்ச், 2001) கண்டித்தது.
இவ்வரசுக் கடிதம் வெளியிடப்பட்ட நாள் முதல் 1.1.2009 வரை, சுமார் ஒன்பது ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கான தலித் அலுவலர்கள் வேலையிழந்தனர். ஆதிதிராவிடர் சாதிச் சான்று இவர்களுக்கு மறுக்கப்பட்டது. இவர்களைப் பற்றி எந்த தலித் கட்சியும் தலைவர்களும் கவலைப்படவில்லை. பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு நடத்த மல்லுக்கட்டி டெல்லிக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் பறக்கும் அரசு அதிகாரிகளும், கட்சிகளும் தங்கள் சுட்டு விரலைக்கூட தலித்துகள் பலருடைய வாழ்வாதாரப் பிரச்சினையில் அசைக்கவில்லை. இதனை எதிர்த்து அரசுக்கு எழுதிய முறையீடுகளும் அரசின் குப்பைக் கூடைகளில் விழுந்து கிடந்தன! தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் அனைத்து ஆணைகளையும் கடிதங்களையும் நிர்மூலமாக்கும் ஜெயலலிதாகூட, அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது முந்தைய கருணாநிதி அரசு பிறப்பித்த இவ்வாணையை சிரமேற்கொண்டு, நீதிபதி அசோக்குமாருக்கு எதிராக ஏவிவிட்டது, அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை.
வெகுநாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த சுவீகரதாஸ் தீர்ப்புரை, கோலப்பன், இ.ஆ.ப. அவர்களால்தான் உயிர்ப்பிக்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராகப் பதவி வகித்திருந்த அவர், 19.9.2000 அன்று ஒரு விளக்கக் கடிதத்தை (எண்.81) இத்தீர்ப்பினை ஒட்டி வெளியிட்டார். 2001 – 2002இல் சிவகாமி, இ.ஆ.ப. இந்த அரசுக் கடிதத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதாக ஆணை வெளியிட்டார். ஆனால் அது அப்போதைய தலைமைச் செயலாளர் சங்கரின் மறு உத்தர வால் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்காக சிவகாமி துறை மாற்றம் செய்யப்பட்டு, அ.இ.அ.தி.மு.க. அரசால் பழிவாங்கப்பட்டார்.
மதம் மாறும் அடிப்படை உரிமையை இந்தக் கடிதம் மறுக்கிறது. இந்து மதத்திலிருந்து பிற மதம் தழுவியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற இந்து வெறி சிந்தனையையும் இந்த அரசுக் கடிதம் உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த அரசுக் கடிதத்தைச் செல்லத்தக்கதன்று என அறிவிக்கக் கோரி இக்கட்டுரையாளர் 2002இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார் (WP No.14769/02). இப்பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், அரசுக் கடிதத்திற்கு இடைக்காலத் தடையை விதித்தது. நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கோரியது. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குச் சென்ற தலித் மக்கள் மீண்டும் அம்மதத்துக்கே திரும்புவராயின், எவ்வகையில் அவர் இடஒதுக்கீட்டு உரிமையை துய்க்கத் தகுதியற்றவராவர் என நீதிமன்றம் அரசிடம் கேட்டது.
அய்ந்து ஆண்டுகள் கழித்து 13.4.2007 அன்று உயர் நீதிமன்றம் அரசுக் கடிதத்தில் (எண். 81, நாள் : 19.9.2000) இந்து மதம் தழுவும் கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த தலித் பிள்ளைகளுக்கு, ஆதிதிராவிடர்களுக்குரிய சலுகையும் உரிமையும் இல்லை என்ற பகுதியை செல்லாது என அறிவித்ததுடன், இது தொடர்பாக புதிய விளக்கக் கடிதத்தினை மாவட்ட ஆட்சியர்களுக்கு – இத்தீர்ப்பாணை கிடைத்த இரண்டு மாதங்களுக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது. ஒருவருடைய சாதி நிலை என்பது, அவர் சார்ந்திருக்கும் சாதிக் குழுவால் தீர்மானிக்கப்படுகிற ஒன்றாகும். இவ்விஷயத்தில் அரசோ, நீதிமன்றமோ செய்வதற்கு ஏதுமில்லை. சாதியை நிர்ணயிப்பது அச்சாதியைச் சார்ந்த அங்கத்தினர்களே எனக்கூறி, அரசு விளக்கக் கடிதத்தினை செல்லாது என அறிவித்ததோடு புதிய விளக்கக் கடிதத்தினை வெளியிடவும் அரசுக்கு உத்தரவிட்டது.
இத்தீர்ப்புரை வழங்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 20 மாதங்கள் வரை, அரசு விளக்கக் கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்பதால், கட்டுரையாளர் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர அறிவிப்புக் கடிதம் அனுப்பினார். இவ்வழக்கிலிருந்து விலக எண்ணிய அரசு 2.1.2009 அன்று, ஓர் அரசாணையை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, கிறித்துவப் பெற்றோர்களுக்குப் பிறந்த ஒரு ஆதிதிராவிடர் பின்னாளில் இந்து, சீக்கியம், பவுத்த மதங்களுக்கு மாறினால் அவர்களும் இடஒதுக்கீட்டு உரிமையை அனுபவிக்கலாம் என்று கூறுகிறது.
– எந்தவித சமூகப் பொறுப்பும், அக்கறையுமற்ற உயர் அரசு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட ஒரு கடிதம், ஆயிரக்கணக்கான தலித் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்திருக்கிறது. ஓர் அரசுக் கடிதத்தை செல்லாததாக்க, 9 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது! ஆனால் இடஒதுக்கீட்டுப் பயனாளிகளோ, தங்கள் சகோதரர்கள் படும் இன்னல்களைக் கண்டும் "சோற்றாலடித்த பிண்டங்க'ளாகவே இருந்தனர். இந்த 9 ஆண்டுகளில் மும்முறை ஆளுங்கட்சியினருடன் கூட்டணி வைத்திருந்த தலித் கட்சிகள், இக்கடிதத்தை திரும்பப் பெறக் கோரி அரசை இறுதிவரை நிர்பந்திக்கவே இல்லை. மாறாக, அடுத்த அரசியல் அதிகார வேட்டைக்கு அவை தயாராகி விட்டன. பாதிப்பிற்குள்ளாகும் தலித்துகளும் இழந்த உரிமைகளை மீட்க போராடுவதற்கு பதில், தேர்தல் புதைகுழிக்குள் விழ தயாராகி விட்டனர்!