பெண் ஒரு வசீகரம். மரணம் வரை பெண் பற்றிய தேடல் இருந்து கொண்டே இருக்கும் என அவன் நினைத்தான். மெல்லிய சிறகு போலவும் பேரழுத்தமாகவும் அவள் என்றுமே ஒரு புதிர்தான். வினாடிக்கு வினாடி வேறு வேறு ரூபங்களாகி, அலைகழித்து சாகவும், உயிர்க்கவும், வாழவும் மாறி மாறி செய்பவள். மோகினி, சக்தி, பிடாரி, நீலி, தாய்... இன்னும் என்னென்னவோ. சிலசமயம் தான் முகம் பார்க்கும் கண்ணாடி பெண் எனத்தோன்றும் அவனுக்கு. தன் ஒவ்வொரு செயலும் நேராய் இருக்கும்வரை பிறழாது செல்லும் ஒரு கோடு. எங்கே அந்த இழை அறுபடுகிறது என்பது இன்று வரை அவனுக்கு புரியாத புதிர். ஒருவேளை அதுதான் தேடலின் வசீகரமோ என்னவோ. பெண்ணுடனான இந்த மரண அவஸ்தைக்கு தன்னை ஒரு பெண் போல உணர்வதே காரணம் எனத்தோன்றும். கடந்துசென்ற பெண்கள் அவனுள் ஒரு பெரும்துக்கமாக பதிந்து கிடந்தனர். அந்த துக்கங்கள் ஒன்று சேர்ந்து மேலெழுந்து அழுத்தும் போதெல்லாம் இந்த வாழ்வின் எல்லைக்கு மூச்சு முட்ட ஓடுவான். ஒரு பறவையாகி பறந்துவிட வேண்டுமாய் தவிப்பான்.

lady_288சகோதரிகளுடனும், கூட்டுகுடும்பத்தில் பேரிளம் பெண்களுடன் வளர்ந்ததால் பெண்ணின் ஒவ்வொரு வாசனையும் அறிந்திருந்தான். குளிக்கும் சோப்பு, மணக்கும் பவுடர், அரைபடும் பச்சை மருதாணி, ஆடைகளின் ஈரங்கள், மலர்ந்த, வாடிய மலர்கள். வெளி இடங்களிலோ, பிரயாணத்திலோ, ஒரு கூட்டத்திலோ கூட பெண்களின் பிரத்யேக வாசனைகள் அவர்களின் மனதுடன் சேர்ந்து ஒரு மெல்லிய கண்ணுக்கு புலனாகாத உணர்வாய் அவனை தழுவி செல்லும்.

  பெண்ணின் ஆரம்பம்தான் எவ்வளவு அழகு. சந்தோஷம். பொங்கிவரும் பேரன்பு. அன்பை அன்பிற்காக மட்டுமே பரவச்செய்யும் வெளி அது. ரத்தக்குழல்களில் பரவி, சுவாசமாய் மாறி, இந்த பூமியை புனிதமாக்கி, பார்க்கும் எல்லாமும் பரவசமாகும் ஆனந்தம். இதம் தரும் உலகம். இந்த உலகம்தான் எவ்வளவு பேரழகு அப்போது. கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஆதிக்கம் சேரும்போதுதான் ஆரம்பமாகின்றன மனவெளியின் ரணகளங்கள். எந்த உடன்படிக்கையும் இன்றி அன்பால் ஆரம்பிப்பதை அன்பால் மட்டுமே கொண்டு செல்ல ஏன் இந்த பெண்களுக்கு தெரிவதில்லை? சாட்டையை சொடுக்கி துரத்தி வீறும்போது எல்லாப்பெண்ணுக்கும் ஒரே முகம்தான். தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தாங்கள் தோற்று போகக்கூடாது என்று விதம் விதமாய் நிருபிக்கவும் தொடர்ந்து சிந்தப்படும் கண்ணீர்கள் அவனை பெரும் துக்கமாய் கவிழ்ந்து மூடும்.

கடவுள் பெண்ணை படைக்கும்போதே அன்புடன், கண்ணீரையும், ஆணை குற்ற உணர்வு கொள்ளச்செய்யும் அஸ்திரத்தையும் சேர்த்து படைத்துவிட்டான். அதுவரை வேறாய் இருந்த ஆளுமைகளை மாற்றிக்கொண்டு தன் கணக்குகளை பொய்ப்பித்து தன்னை இறுக்கிப்பிடித்து மூச்சு திணறச்செய்யும் அளவு  கடவுள் பெண்கள் விரும்பும் விதமாய் தன்னை ஏன் படைத்தான் என அவன் பலமுறை யோசித்துள்ளான். பெரும் துக்கமும் மரண வலியுமாய் பிரிந்தபின் நீண்ட இடைவெளிக்குப்பின் உன்னை போல மனிதனை சந்தித்ததேயில்லை என்று அவனின் பெண்கள் தரும் தரச்சான்றிதழ்கள் அவனை மேலும் வலிக்கச்செய்கிறது. சந்திக்கும் பெண்ணின் மனதின் அடி ஆழத்தை சட்டென தளும்ப செய்துவிடும் ஏதோ ஒன்று தன்னில் இருப்பது புரிந்தது அவனுக்கு.

ஆனால் அவர்களுடைய கோட்டுக்குள்  தன்னை வரைவதை அவன் வெறுத்தான். தான் உயர்ந்தவன் என்றும் தன்னளவு அவர்களால் எட்டமுடியவில்லை என்ற உளவியல் சிக்கல் ஏதேனும் இருக்குமோ என்று தன்னை விதம்விதமாய் சரிசெய்துகொண்டு அமைதி அடையச்செய்யும் முயற்சிகள் புரிய வைக்குமுடியாத கோமாளிக்கூத்தாகும்போதெல்லாம் அவன் துயரத்தின்  தனிமைக்கு சொல் இல்லை.

தன்னிடம் காலம் கொண்டு சேர்க்கும் பெண் எனும் தேவ வசீகரத்தை என்றும் அவன் ஆராதிக்கிறான்.

                         இதோ அவன் உங்களை புன்னகைத்தபடி கடந்து செல்கிறான். அவன் தன் சுயசரிதத்தை ஒருபோதும் பதியப்போவதில்லை. ஏனெனில் தன்வாழ்வின் மறக்க முடியா தருணங்களாய் நினைவில் வைத்து வாழும் அவனின் பெண்களுக்கு, அவன் அனுபவிக்கும் தனிமையை பரிசாக தர விரும்பாததால்.                              
                                                                                          
- இந்திரா பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It