கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டுப் பெண்கள், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எவ்வளவு வேகமாக முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே, திராவிட மாடலின் சாதனைக்கு சாட்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் எழுத்தறிவு இல்லாத இளம்பெண்கள் 15 முதல் 24 வயது வரை 2.93% இருக்கிறார்கள். (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்) இதில் கேரளா மட்டும்தான் நம்மை விட முன்னேறி இருக்கிறது. அங்கு எழுத்தறிவு இல்லாத இளம்பெண்கள் 0.09% மட்டும்தான். ஆனால், பீகாரில் 36.2%, ராஜஸ்தானில் 28.7%, ஜார்கண்டில் 28.64%, உத்திரப் பிரதேசத்தில் 24.22%, மத்திய பிரதேசத்தில் 22.39%, குஜராத்தில் 15% என வட இந்தியாவின் பல இந்தி பேசும் மாநிலங்களில் இரட்டை இலக்கங்களில்தான் நிலைமை இருக்கிறது.

தமிழ்நாட்டில் பெண்கள் எழுத்தறிவு அதிகம் பெற்றிருப்பதற்கு பள்ளிக்கூடங்கள் அதிகமாக கட்டப்பட்டிருப்பது மட்டுமே காரணம் அல்ல. முதல் காரணம் வறுமை ஒழிப்பு. அண்ணாவின் ஆட்சிக்காலம் தொட்டு, வறுமை ஒழிப்பில் திராவிட ஆட்சியாளர்கள் பெரிதும் அக்கறை காட்டினர். ஒன்றிய அரசிடம் கேட்டு கேட்டுப் பார்த்தும், போதுமான அரிசியை கொடுக்க மறுக்கவே, நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தொடங்கி, நேரடி கொள்முதலுக்கு வித்திட்டார் கலைஞர். கொள்முதல் செய்த அரிசியை வீடுதோறும் கொண்டுசேர்க்க நியாய விலைக் கடைகளை ஏற்படுத்தினார். பின்னர் வந்த எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நியாய விலைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. தமிழ்நாட்டைப் போல பலமான பொது விநியோகக் கட்டமைப்பு இந்தியாவில் இப்போதும் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

அதன் பலன் பலருக்கும் தெரிவதில்லை. 2016 ல் இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமானோர் மிகக் கடுமையான வறுமையில் இருந்தார்கள். பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பல வட மாநிலங்களின் வறுமைக்கோட்டு நிலை, சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் பின் தங்கியிருக்கும் சில ஆப்ரிக்க நாடுகளுக்கு இணையாக இருந்தது. ஆனால் ரஷ்யா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற பல நாடுகளைக் காட்டிலும் தமிழ்நாடு வறுமைக் கோட்டு நிலையில் மேம்பட்டு இருப்பதாக 2012-இல் வெளியான உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது. ஆக, வறுமையை ஒழிக்க தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் கொடுத்த பங்களிப்பு பலனைக் கொடுத்திருக்கிறது.anna periyar and karunanidhiபள்ளிகளில் மதிய உணவு கொடுத்ததும் மாணவர் சேர்க்கை அதிகரிக்க மற்றொரு முக்கியக் காரணம் என்றே கூறலாம். பெண்கள் படிக்க செல்ல வேண்டுமானால் மாதவிடாய் கால சுகாதார வசதிகள் கிடைப்பது அவசியம். menstrual hygiene மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்திரப் பிரதேசம், அசாம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்களில், சரிபாதி பேருக்கு மாதவிடாய் கால சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. 2018-இல் ‘திசு வயர்’ இணைய ஊடகத்தில் வந்த ஒரு கட்டுரையில், அங்கெல்லாம் இளம்பெண்கள் இன்னும் மாதவிடாய் காலத்தில் துணியையே அதிக அளவில் பயன்படுத்துவதாகக் கூறுகிறது. அதுமட்டுமல்ல, பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் இடைநிற்க வேண்டியதாகி விடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 90%-க்கும் அதிகமான மாணவிகள் நாப்கின் பயன்படுத்துகிறார்கள். பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் இருக்கின்றன. அதனால் தமிழ்நாட்டு இளம்பெண்கள் மாதவிடாய் காலங்களை சுகாதாரமாக பேணுகிறார்கள். அரசே இலவசமாக நாப்கின் வழங்குவதால் இடைநிற்றலுக்கு இங்கு இது காரணமே கிடையாது.

அதனால்தான் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 48.6 சதவீதமாக உள்ளது. சண்டிகர், புதுச்சேரி, கேரளா போன்ற 3 சிறிய மாநிலங்கள் மட்டும்தான் நம்மை விட மேம்பட்டு இருக்கின்றன. அதுவும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் இவை. 2021-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமலேயே பாஜக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இப்போது கணக்கெடுப்பு நடத்தி தரவுகள் வெளியிடப்பட்டால் தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் நிச்சயம் 50% -ஐ தாண்டும்.

வேலைவாய்ப்பை எடுத்துக் கொண்டாலும், இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகவே இருக்கிறது. “கடன் வாங்குவதில் கலங்காத பெண்கள்” என்ற ஒரு தலைப்பில் மார்ச் 8-ஆம் தேதி தினமலர் நாளேட்டில் ஒரு செய்தி வந்தது. தலைப்பைப் பார்க்கும்போது எதிர்மறையான செய்தி போலத் தெரியலாம். வீட்டுக்கடன், வாகனக்கடன் வாங்குவதில் தமிழ்நாட்டு பெண்கள் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். முதலிடத்தில் மகாராஷ்டிரா பெண்கள் இருக்கிறார்கள். தனிநபர் கடன் வாங்குவதில் தமிழ்நாட்டுப் பெண்கள் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இதுதான் அந்த செய்தி. ’கிரிப் ஹைமார்க்’ என்ற கடன் தரவுகள் நிறுவனத்தின் பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு ஆங்கில ஊடகங்களிலும் இச்செய்தி வெளியாகியிருந்தது.

மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு தமிழ்நாட்டுப் பெண்கள் பொறுப்பில்லாமல் இப்படி கடன் வாங்குகிறார்களே என்று தோணலாம். ஆனால் யார் கடன் வாங்குவார்கள்? தன்னால் கடனை அடைக்க முடியும் என்ற திறன் உள்ளவர்கள், அதற்கான வருமானம் இருப்பவர்கள்தான் கடன் வாங்குவார்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள், அதனால் துணிந்து கடன் வாங்குகிறார்கள்.

ஆக கல்வி, வேலை, சமூகம் என அனைத்து தளங்களிலும் பெண்களின் வளர்ச்சியில் இந்த நூற்றாண்டில் திராவிட இயக்கம் அழுத்தமான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறது. அதனால் இந்தியாவில் தனித்துவமான பெண்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவாகியிருக்கிறது. இன்னும் அடைய வேண்டிய இலக்குகள் ஏராளம் இருக்கலாம், ஆனால் மற்ற மாநிலங்கள் இன்னும் பல ஆண்டுகள் கழித்து அடையப் போகிற இலக்கை இப்போதே கொடுத்திருப்பது ”திராவிட மாடல்”. அதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டியதும், அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி பயணப்பட வேண்டியதும் நமது கடமை.

(12.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற “அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரையின் சென்ற இதழ்த் தொடர்ச்சி.)

- ரம்யா

Pin It