'நல்லா பாட்டு பாடுவியேக்கா'
உதட்டை சுழித்தாள்...
'ஸ்டேட் பஸ்ட்தானக்கா 12த்ல'
தலையை மட்டும் ஆட்டினாள்...
'பாஸ்கட் பால் செமையா விளாடுவீல்ல'
கண்களை அழுந்த மூடித் திறந்தாள்...
'ஆமா லவ் பண்ணீல்லக்கா என்னாச்சு'
கண்களைத் தவிர்த்தாள்....
'அகழ்வாராய்ச்சி படிக்கதான ஆசைப் பட்ட'
சரிந்து சோபாவில் அமர்ந்தவள்
சட்டென என் மடியில்
தலை சாய்த்து படுத்து விட்டாள்...
அறையெங்கும் நீண்ட
மௌனம்.....
இத்தனை வருடங்களுக்குப் பின்
இச்சந்திப்பும் உரையாடலும்
நடந்தேயிருக்க கூடாதோ
என்று சங்கடப்பட்ட கணத்தில்
என் தொடை நனைக்கத்
துவங்கியிருந்தது
என்றோ எங்கேயோ நின்றுவிட்ட
அவளின் காலத் துளிகள்...
- கவிஜி