ஹைதராபாத் மருத்துவர் பிரியாங்காவின் வன்புணர்வுக் கொலைக்கு குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் என்கவுண்ட்டரில் கொன்றிருக்கிறது காவல்துறை. பெண்ணைக் கலாச்சாரத்தின் குறியீடாகக் கருதுவதால் வன்புணர்வை அக்கலாச்சாரத்திற்கு உண்டாக்கப்பட்ட களங்கமாக மட்டுமே இச்சமூகம் கருதுகிறது. ஆனால் வன்புணர்வு என்பது கலாச்சாரக் களங்கமல்ல, அதுவும் வன்முறைதான். என்கவுண்ட்டர் என்பது நீதியல்ல, அதுவும் வன்முறைதான். ஏதோவொரு வகையில் எல்லோருமே வன்முறையின் ஆதரவாளர்களாக இருக்கும்போது, யாரோ ஒருசிலர் மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்? ஒரு வன்முறைக்கு மற்றொரு வன்முறையையே தீர்வாக்கி, அப்படியான தீர்வுகளைக் கொண்டாடித் தீர்க்கும், நாம் எப்படி பண்பட்ட மனிதச் சமூகமாக இருக்க முடியும்?

sexual assaultகொலை என்பது குற்றமெனில் அதை யார் நிகழ்த்தினாலும் குற்றமே. வன்புணர்ச்சி கொடூரமெனில் அதை யார் யாருக்கு இழைத்தாலும் கொடூரமே என்ற சமநீதி சாத்தியமற்ற சமூகத்தில் நாம் வாழ்கிறோம். குற்றவாளி யார், பாதிக்கப்படுகிறவர் யார் என்பதைப் பொறுத்தே பொதுச் சமூகத்தின் ஆதரவும், தண்டனையும் அமைகிறது. பிரியங்கா உயர் வகுப்பைச் சேர்ந்தவர். குற்றவாளிகள் லாரித் தொழிலாளர்கள், பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களே குற்றமிழைத்தவர்கள் என நீதிமன்றம் முடிவு செய்யும் முன்னரே சுட்டுத் தள்ளும் துணிச்சல் காவல் துறைக்கு அதனால்தான் வருகிறது. ஒருவேளை சர்வாதிகார நாட்டைப் போல இப்படித்தான் நீதி வழங்கப்படுமெனில் ஆதிக்க சாதியினரால் வன்புணர்வுக் கொலைக்கு ஆளாக்கப்பட்ட தலித் பெண்கள் ரோஜா, நந்தினி போன்றவர்களின் வன்புணர்வுக் கொலைக்கு அதே தண்டனையை காவல்துறை ஏன் வழங்கவில்லை? நாடெங்கும் நாள்தோறும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டு கொந்தளித்துக் கிடக்கும் பொதுச் சமூகத்தின் கூட்டு மனசாட்சியை ஆற்றுப்படுத்த ஒடுக்கப்பட்ட மக்களை வைத்துக் கொடுக்கப்படும் நரபலி இது. அவ்வளவே! ஆனால் அதே கூட்டு மனசாட்சி நம்புவதைப் போல, பாலியல் குற்றங் களைக் கட்டுப்படுத்த இப்படியான நரபலிகள் துரும்பளவு கூட உதவாது.

பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பண்பாட்டுக் குற்றம். எந்த பண்பாட்டுக் குற்றத்தையும் தண்டனைகளால் மட்டும் தடுத்து நிறுத்திவிடமுடியாது. உங்களில் பாவம் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் என்பதைப் போலச் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பரவி நிற்கும் குற்றம் இது. லாரி க்ளீனரானாலும் ஒரு பெண்ணைத் தாக்கி வன்புணர முடிகிறது; மத்திய அமைச்சரானாலும் பெண்ணை வீழ்த்தி சீரழிக்க முடிகிறது; பெற்ற தந்தையாலும் தன் மகளைச் சிதைத்துக் கொலை செய்ய முடிகிறது; சமூகப் போராளியும் நீதிபதியும் கூட அதே குற்றத்தில் ஈடுபட முடிகிறது.

படித்தவர்கள் படிக்காதவர்கள், ஏழைகள் பணக்காரர்கள், ஆட்சியாளர்கள் பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நீதிபதி கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள், அப்பாக்கள், கணவர்கள், தாத்தக்கள், மாமாக்கள், மகன்கள், நண்பர் கள் என ஒட்டுமொத்த ஆண் சமூகமுமே எத்தருணத்திலும் வேண்டுமானாலும் வன்புணர்ச்சியில் ஈடுபடும் தகுதியுடைய தாகவே (பொட்டென்ஷியல் ரேப்பிஸ்ட்ஸ்) இருக்கிறது. பெண்கள் வாழத் தகுதியற்றது என பெயர் பெற்ற ஒரு நாடு குறித்து இப்படி யானக் கருத்தை சொல்லத் தயங்க வேண்டி யதில்லை என்றே கருதுகிறேன்.

கடந்த ஆண்டு, தாமஸ் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு 193 நாடு களில் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் பெண்கள் வாழத் தகுதியே இல்லாத நாடாக இந்தியாவிற்கு முதலிடம் வழங்கியது. போர் நடக்கும் சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கூட நமக்குப் பின்னால்தான் இடம் பிடித்தன. அப்படியெனில் போர்ச் சூழலை விடவும் பெண்களுக்கெதிரான மோசமான ஒரு பண்பாட்டுச் சூழல் இங்கே நிலவுகிறது என்றே அர்த்தம். இந்தியாவின் பாலியல் வன்கொடுமைகள், கொடூரமான கலாச்சார பழக்கங்கள், பாலியல் அடிமைத்தனம், சுரண்டல் போன்ற வலுவானக் காரணங்களை இந்த ஆய்வு முன்வைத்தது. ஆனால் இந்திய அரசு அதை மறுத்து அறிக்கை விட்டதே தவிர, பிரச்னையை அங்கீகரித்து தீர்வைத் தேட முன்வரவில்லை. காரணம் இந்தியாவின் பண்பாடு என்பது இந்து மதப் பண்பாடு என்பதால். எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் பாலியல் பண்டமாகவே கருதுகிறான். பெண்ணை மையப்படுத்தியே பாலுறவு, பாலியல், பாலினம் குறித்து மிகவும் பிற் போக்கான கருத்தியல்கள் இங்கே வேரூன்றி யிருக்கின்றன. இந்தியப் பொதுப் புத்தி இரண்டு காரணங்களுக்காக வன்புணர்ச்சியை அங்கீகரிக்கிறது. முதலாவது கட்டுப்படுத்த முடியாத பாலுணர்வு.

ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணைக் கண்டு கட்டுக்கடங்காத பாலியல் வெறி தோன்றி விட்டால் அதற்கு அந்தப் பெண்ணே பொறுப்பு என்பதோடு பாலுணர்வுக்காக நிகழும் வன் புணர்ச்சிகளைப் புணர்ச்சியாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே கருதுகிறது. அவள் ஏன் சிரித்தாள், பார்த்தாள், பேசி னாள், அழகாக இருக்கிறாள், இவ்வாறு உடை அணிந்திருந்தாள் அல்லது ஆண் குடித்திருந் தான் இங்கே, பெண்ணின் விருப்பம் முக்கியமல்ல. ஆணுக்குப் பிடித்துவிட்டால் வன்புணர்ச்சிக் கலவி ஆகிவிடும். கிராமப் புறக் கட்டப் பஞ்சா யத்துகள் வன்புணர்ச்சியைப் புணர்ச்சியாகக் கருதிக் கெடுத்தவனையே பெருந்தன்மையோடு பெண்ணைக் கட்டிக் கொள்ளச் சொல்லி தீர்ப்பு சொல்வது, அதனால்தான்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், பாதிக்கப்பட்ட பெண் தன்னைச் சீரழித்தவ னோடு சமரசம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க அறிவுறுத்தி வன்புணர்ந்தவனைப் பிணையில் விட்டதற்கு இந்த உளவியலே காரணம். பெற்றோரும் பெரும்பாலும் குற்றவாளி சொந்தச் சாதியை சேர்ந்தவனாக இருக்கும் போது வன்புணர்ந்தவனே திருமணம் முடித்து பெண்ணுக்கு வாழ்க்கை அளிக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஆக, ஆணின் பாலியல் வெறிக்கான வன்புணர்ச்சியைச் சரியென இச்சமூகம் எல்லா நிலைகளிலும் அங்கீகரிக்கிறது என்பதே உண்மை.

இந்திய ஆண்கள் வன்புணர்ச்சியை ஆபாசப் படக் காட்சிகளில் வருவதைப் போன்ற வன் கலவியாகவே கற்பனை செய்து கொள்கின் றனர். கூட்டு வன்புணர்ச்சி என்பதை கூட்டுக் கலவி என்பதாகப் புரிந்து கொள்கின்றனர். வன்புணர்வு பற்றி ஆண்கள் அடிக்கும் கமெண்ட்டுகள், ஜோக்குகளில் இது சர்வ சாதாரணமாக வெளிப்படும். ஆணின் பாலியல் ரீதியான எத்தகைய அத்து மீறலும் பெண்ணுக்கு இன்பத்தையே அளிக்கும், அதை ஆண்மை எனக் கருதி பெண் அனு பவிக்கவே செய்வாள் என்பதே சராசரி இந்திய ஆண்களின் மனநிலை. அரசாங்கம் வன்முறையற்ற வன்புணர்ச்சியைச் சட்டப் பூர்வமாக்க வேண்டும். ஆணின் பாலியல் கிளர்ச்சிகளைப் பெண்கள் நிராகரிக்கக் கூடாது. வன்புணர்ச்சிகளை எதிர்கொள்ள பெண்கள் ஆணுறையைக் கையிலெடுத்துச் செல்ல வேண்டும் என ஒரு திரைப்பட இயக்குனர் டேனியல் ஷ்ராவான் பரிந்துரைப்பது இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடுதான்.

தாக்குவது, கொலை செய்வது போன்ற செயல்கள் மட்டுமே வன்முறை. அதில்லாத வன்புணர்ச்சிகள் இருதரப்புக்குமே சுகத்தையே அளிக்கும் என்றே ஆண்கள் நம்புகின்றனர். வன்புணர்ச்சிகளுக்கான இரண்டாவது காரணம் கட்டவிழ்ந்த ஆதிக்க உணர்வு. முன்னதை விடவும் கொடூரமானது இது. பாலுணர்விற்காக நிகழ்த்தப்படும் வன்புணர்ச்சி களில் அதை வெறும் உடலுறவு என்பதாகச் சுருக்கும் அதே கூட்டம் ஆதிக்கத்தை நிலை நாட்ட வன்புணர்ச்சியைக் கொடூர ஆயுத மாகப் பயன்படுத்துவதையும் ஆதரிக்கிறது. அதாவது உயர்சாதி எனில் இந்நாடு பெண் களுக்கு வழங்கியிருக்கும் இடத்தை நினை வூட்டவோ, தாழ்த்தப்பட்ட சாதி எனில் சாதி அமைப்பின் விதிமுறைகளை நிலைநாட்ட வோ ஆண் வன்புணர்ச்சியைக் கையிலெடுக்க லாம். உதாரணங்கள் வேண்டுமா? நிர்பயாவை வல்லுறவு செய்து கொன்றவர்கள் இத்தேசத் துக்கு விடுத்த எச்சரிக்கை, இரவு நேரத்தில் ஒரு பெண் தனியாக ஓர் ஆணுடன் வெளி யில் சுற்றக் கூடாது என்பதுவே.

கயர்லாஞ்சியில் தலித் பெண்களைக் கூட்டு வன்புணர்வு செய்து கொன்றவர்கள் விடுத்த எச்சரிக்கை, சாதி விதிமுறையை மீறி கல்வி கற்கக் கூடாது என்பதுவே. இந்திய ஆண்கள் பாலுணர்வை விடவும் ஆதிக்க உணர்வால்தான் பெரும்பாலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். காரணம் பெண்ணடிமைத்தனம் மற்றும் சாதியம் இரண்டும்தான் இந்துமதப் பண்பாட்டின் ஆணிவேர். பெண்கள்தான் அதன் பாதுகாவ லர்கள். பெண்கள் மீது இவ்வளவு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டதற்கும் இவ்வளவு வன்முறைகள் நிகழ்த்தப்படுவதற்கும் காரணம் இந்து மதத்தின் சாதியைக காப்பாற்றும் சூழ்ச்சியே!

ஆதிக்க வெறிக்கான வன்புணர்ச்சிகளில் பிறப்புறுப்பில் மரக் கழிகளையும் இரும்புக் கம்பிகளையும் இறக்குவதைப் போன்ற விவரிக்க முடியா கொடூரங்களில் ஆண்கள் ஈடுபடுகின்றனர். நிர்பயாவும் கயர்லாஞ்சிப் பெண்களும் எப்படியெல்லாம் சிதைக்கப் பட்டார்கள் என்ற முழுமையானத் தகவல் களைத் தேடி பாருங்கள் அது வெறும் பாலியல் வெறியின் வெளிப்பாடு அல்ல. மனித வெறுப்பு வக்கிரத்தின் உச்சம்.

இப்படியான ஒரு பண்பாட்டுக் குற்றத்தைத் தனிநபர்க் குற்றமாகக் கருதிக் கொடூர தண்டனை களால் சரிசெய்துவிட முடியுமா, என்பதுதான் நம்மை நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. என்கவுண்ட்டரில் கொல்லக் கொல்ல இவர்கள் முளைத்து வரு வார்கள். ஏனெனில் இச்சமூகம் ஒவ்வொரு ஆணையும் அவ்வாறே உற்பத்தி செய்கிறது. நவீன உடைகளை அணிவது, தனியாக இருப்பது, இரவில் பயணிப்பது, சகஜமாகப் பழகுவது, சிரித்துப் பேசுவது, மது அருந்து வது, வேலைக்குப் போவது, காதலிப்பது, மனைவி யாக இருப்பது, எதிர்க்க முடியாமல் இருப் பது, ஒப்பனை செய்து கொள்வது என ஒரு பெண்ணின் எல்லாச் சூழல்களையும் ஆண் வன் புணர்ச்சிக்கான வாய்ப்பாகவே கருதும் வகை யிலேயே அவன் வளர்த்தெடுக்கப்படுகிறான்.

வன்புணர்ச்சி சார்ந்து இங்கே பல வகையான மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. இச்சமூகம் ஆணுக்கான சாதகங்களை எப்படியெல்லாம் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதற்கு இவையே உதாரணம் : ஒரு பெண் ணின் சம்மதமில்லாமல் அவளை வன்புணர முடியாது; தன் மீதான வன்புணர்ச்சியை ஒரு பெண் நினைத்தால் தடுத்துக் கொள்ள முடியும்; கோபப்படும், துணிவான அல்லது சுதந்தரமான பெண்களை வன்புணர்ச்சியால் தான் அடக்க முடியும்; வன்புணர்ச்சிக்குப் பின்னர் ஒரு பெண்ணின் ஆசை அடங்கி விடுகிறது; பெரும்பாலான பெண்கள் தாம் வன்புணரப்பட வேண்டுமென ரகசியமாக விரும்புகின்றனர்; வன்புணர்ச்சியின்போது ஒரு பெண் கடைசி நிமிடம் வரை போராட வேண்டும், இல்லையெனில் அதை அவள் விரும்பியதாக ஆகும்; புணர்ச்சி இன்பத்திற் காகவே ஆண்கள் வன்புணர்ச்சியில் ஈடுபடு கின்றனர்; வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டவர் குற்றவுணர்ச்சி கொள்ளவேண்டும்; தான் பழகிய அல்லது ஏற்கனவே உடலுறவு வைத்துக் கொண்ட ஒருவரால் பெண் வன் புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டால் அது தவறில்லை; கணவனின் கட்டாய உறவு வன் புணர்ச்சியல்ல; ஒரு பெண் வேண்டாம் என மறுப்பது, வேண்டும் என்றே பொருள்படும்; வன்புணர்ச்சி அந்நியர்களால் மட்டுமே நடக்கிறது. குடும்பத்தினர் அப்படியான செயல் களில் ஈடுபடுவதில்லை; வன்புணரப்பட்டது தெரிந்தால் பெண்ணின்/குடும்ப கவுரவம் பாதிக்கப்படும்.

இப்படியாக, வன்புணர்ச்சியை முழுவதுமாக நியாயப்படுத்தும் ஒரு சமூக அமைப்பை நாம் கொண்டிருக்கிறோம். இந்த இந்து மத சாதிய சமூக அமைப்பை சரி செய்யாமல் குற்றவாளிகளைக் கல்லால் அடித்துக் கொன்றாலும், மாறுகால் மாறுகை வாங்னாலும், என்கவுண்ட்டரில் கொன் றாலும் நம்மால் பாலியல் குற்றங்களைத் தடுக்கவே முடியாது. நிர்பயா, பிரியங்காவைப் போல யாரென்றே தெரியாதவர்களால் நிகழும் குற்றங்கள் மிகக் குறைவு. அதாவது 93 விழுக்காடு பாலியல் குற்றங்கள் குடும்ப உறுப்பினர், குடும்ப நண்பர்கள், முதலாளி, பக்கத்து வீட்டுக்காரர், பிரிந்து சென்ற கணவர் போன்ற தெரிந்தவர்களாலேயே நடக்கிறது. அவர்கள் எல்லோரையும் சுட்டுத் தள்ளி விடலாமா? குற்றவாளி என்பவன் நம்மில் ஒருவனாக, நம்மைப் போன்றவனாக இருக்கும் போது குறிப்பாகச் சொந்தக்காரனாகவும் சொந்தச் சாதிக்காரனாகவும் இருந்தால் நம்முடைய கோபம் மென்மையாகி விடுகிறது. குற்றவாளிகள் அந்நியர்களாகவும் எளியவர்களாகவும் இருந்து பாதிக்கப்படும் பெண் படித்தவராகவும் குறிப்பாக ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராகவும் ஆகும் போதுதான் வன்புணர்ச்சி ஒரு கொடூரமான செயலாகப் பொதுப் புத்திக்கு எட்டுகிறது. இவ்வகை யான குற்றங்கள்தான் பரபரப்பான செய்தி யாகவும் மாறுகின்றன.

மற்றபடி நாள்தோறும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் யாருக்குமே ஒரு பொருட் டல்ல. பெண்களுக்கெதிரான வன்முறை களைத் தடுத்து நிறுத்த வேண்டு மெனில் ஆணே உயர்ந்தவன் என்ற கருத்தாக்கத்தை நாம் உடைத்தாக வேண்டும். பெண் கருக் கொலை தொடங்கி பாலியல் வன்கொடு மைகள் வரை பெண்களுக்கு எதிரான அத்தனை வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டு வரத் தண்டனைகள் உதவாது. ஆனால் அதை எப்படிச் சாத்தியப்படுத்து வது? பெண்களுக்குச் சுதந்திரத்தைக் கற்பித்த வீடுகள் ஆண்களுக்குச் சமத்துவத்தைப் போதிக்கவில்லை என்பதே நம் தோல்வி. ஆண்களைப் பண்படுத்தும் வகையில் வீடு களை நாம் தயார்ப்படுத்தவில்லை. நமது சமத்துவ நடவடிக்கைகள் பெண்களோடும் தெருக்களோடும் நின்றுவிட்டன. உண்மையில் பண்படுத்தப்பட வேண்டியது ஆண்களும் ஆண் மையக் குடும்பங்களும்!

இங்கே சாமானியர்களுக்கென ஏதேனும் சமூகப் பங்களிப்பு இருக்குமெனில் அது நல்ல மனிதர்களைக் குடும்பங்கள் வழியாக உருவாக்கி நல்ல குடிமக்களாகக் சமூகத்திற்கு அளிப்பதே. ஆனால் கெடுவாய்ப்பாக ஆண் மகன் என்ற பெயரில் குற்றவாளிகளையே நமது வீடுகள் உற்பத்தி செய்கின்றன. கருக் கொலை, பாலியல் சீண்டல், குடும்ப வன் முறை, வரதட்சணைக் கொடுமை, மனைவி யை அடித்தல், ஏமாற்றுதல், பாலியல் வன் கொடுமை எனப் பெரும்பாலான இந்திய ஆண்கள் பெண்ணுக்கெதிரான ஏதேனும் ஒரு குற்றத்திலாவது அங்கமாக இருக்கின்றனர் என நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆண் களை அப்படியானவர்களாக குடும்பங்களே தயார் செய்கின்றன. இங்கே இவ்வளவு வன்புணர்ச்சிகள் அரங்கேறுகின்றன. எந்தப் பெற்றோராவது தன்மகன்களிடம் அது குறித்து விவாதித்து இருப்பார்களா? அவ ஒழுக்கமா இருந்திருக்க மாட்டா. எதுக்கு அந்நேரத்துக்கு வெளியில போகணும்? என்று பாதிக்கப்பட்டப் பெண்கள் மேல் பழியைப் போட்டுப் பேசுகிறவர்களே இங்கே அதிகம். பாலியல் குற்றம் என்றதும் எல்லோரும் பாதிக்கப்பட்டப் பெண்ணாகவே தன்னை கற்பனை செய்து கொள்கின்றனர். நம் வீட்டுப் பெண்ணுக்கு நேர்ந்துவிட்டால்... என அச்சப் பட்டு கொடூர தண்டனைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நம் வீட்டுப் பையன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுவிட்டால்... என்ற சிந்தனை அவர்களுக்கு வருவதே இல்லை. கொல்லப்படுபவர்கள் நம் மகள்கள் எனில், கொலையைச் செய்ப வர்கள் நம் மகன்களாகத் தானே இருக்க முடியும்?

பெண்கள் மீது நடக்கும் சமூகப் பண் பாட்டுக் குற்றங்களைப் பெரும்பாலும் குடும்பங்களே நிகழ்த்துகின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆணாதிக்கக் குடும்ப அமைப்பில் பாலியல், பாலினம், பாலுறவு குறித்த அறிவெல்லாம் குழந்தை களுக்குக் குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு எப்படிக் கிடைக்கும்? வழிவழியாகக் கடத்தப் படும் மூடநம்பிக்கைகள் மற்றும் ஆபாசப் படங்கள் மூலம் தவறான பாலியல் அறிவே இச்சமூகத்தில் கரைபுரண்டு ஓடுகிறது. செல் போன், லேப்டாப், பைக், கார் என பிள்ளை கள் எது கேட்டாலும் வாங்கித் தரும் பெற் றோர் குழந்தைகள் குற்றவாளியாகவோ பாதிக் கப்பட்டவராகவோ ஆகிவிடாமல் தடுக்கும் பாலியல் அறிவை வளர்த்தெடுப் பது பற்றி எவ்வித கவலையும் கொள்வ தில்லை.

இருபதாண்டுகளுக்கு முன்னர் பள்ளிப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்க எடுக்கப்பட்ட தீவிரமான முன்னெடுப்புகளைத் தடுத்து நிறுத்தியதில் பெற்றோருக்குப் பெரும்பங்கு உண்டு. செக்ஸ் எப்படி வச்சுக்கணும்னு சொல்லித் தருவாங்களாம்” என்ற வதந்தியால் அந்த முயற்சியில் மண்ணைப் போட்டு மூடினார்கள். டேனியல் போன்றவர்களுக்கு பாலியல் அறிவு கிடைக்குமானால் கலவிக்கும் வன்புணர்ச்சிக்குமான வேறுபாடு புரிந்திருக்கும் என நிச்சயமாகச் சொல்லலாம். உண்மையில், தம் பிள்ளைகளின் பாதுகாப்பிலும் வன்முறை யற்ற எதிர்காலத் தலைமுறையிலும் அக்கறை கொண்ட பெற்றோர் பாலியல் கல்வியைப் போராடிப் பாடத் திட்டத்தில் சேர்த்திருக்க வேண்டும். செக்ஸ் எஜுகேஷன் என்ற வார்த் தையில் பிரச்சனை என்றால் லைப் எஜுகே ஷன் என மாற்றிக் கொள்ளலாம். பாலியல் அறிவு, உடல் பற்றின புரிதல், பாலின சமத்துவம், பாலுணர்வைக் கையாளுதல், ஆரோக்கிய மானப் பாலுறவு என நிஜமாகவே இவை யாவும் வாழ்க்கைக் கல்விதான்.

பெற்றோரால் இந்த விஷயங்களைக் குழந்தைகளிடம் பேச முடியாது. காரணம் மனத்தடை, அறியாமை மற்றும் போதாமை. ஆக, பள்ளிகளைத் தவிர நமக்கு வேறு களம் இல்லை. மனிதரைப் பண்படுத்தும் சரியான பருவமும் அதுவே. பள்ளியில் கல்வியாகக் கற்கும்போது குழந்தையின் மூளையை மட்டுமல்ல வீடுகளையும் அதன் வழியே சமூகத்தையும் அது பண்படுத்தும். பாலியல் கல்வியை அர்ப்பணிப்போடு செயல்படுத்திய பல நாடுகளில் அது நல்ல பலன்களை அளித்திருக்கிறது என்பதே இதற்கான ஆதாரம். பண்பாட்டுக் குற்றமாக வேரூன்றியிருக்கும் பாலியல் தாக்குதல்களையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுத்து நிறுத்த வேண்டுமானால் தொலைநோக்குப் பார்வை யோடு நாம் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். அதில் முக்கியமானது, இனியும் தாமதப்படுத்தாமல் பாலியல் கல்வியைப் பாடத் திட்டத்தில் கட்டாயமாக்குவது. தெருவில் கிடக்கும் சமத்துவக் கருத்தியலை வீடுகளுக்குள் சேர்க்க அதுவொன்றுதான் வழி. பாலின சமத்துவம் பற்றி கற்றறிந்த தலைமுறையை உருவாக்கும்போது நாம் விரும்பும் பண்பாட்டு மாற்றம் பின்னர், தானே நடந்தேறும்.

(இந்து தமிழ் திசையில் வெளிவந்த, "பாலியல் வன்கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது" என்ற கட்டுரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்.)

- ஜெயராணி

Pin It